திருமுறைகள்

ஜீவகாருண்ய ஒழுக்கம் - 1


சிவமயம்

திருச்சிற்றம்பலம்

2. சுத்த சன்மார்க்கத்தின் முதற் சாதனமாகிய

ஜீவகாருண்ய ஒழுக்கம்

முதற் பிரிவு


ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு
உலகத்தில் மனிதப்பிறப்பைப் பெற்றுக்கொண்டவர்கள் இந்தப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்மலாபத்தைக் காலமுள்ள போதே அறிந்து அடையவேண்டும்.

அந்த ஆன்மலாபம் எதுவென்று அறியவேண்டில்:- எல்லா அண்டங்களையும், எல்லாப் புவனங்களையும், எல்லாப் பொருள்களையும், எல்லாச் சீவர்களையும், எல்லா ஒழுக்கங்களையும், எல்லாப் பயன்களையுந் தமது பூரண இயற்கை விளக்கமாகிய அருட்சத்தியால் தோன்றி விளங்க விளக்கஞ் செய்விக்கின்ற இயற்கை உண்மை வடிவினராகிய கடவுளின் பூரண இயற்கை இன்பத்தைப் பெற்று எக்காலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும், எவ்வளவும் தடைபடாமல் வாழ்கின்ற ஒப்பற்ற பெரியவாழ்வே இந்த மனிதப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்மலாபமென்று உண்மையாக அறியவேண்டும்.

இயற்கை இன்பத்தைப் பெற்றுத் தடைபடாமல் வாழ்கின்ற அந்தப் பெரியவாழ்வை எதனால் அடையக்கூடுமென்று அறியவேண்டில்:- கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருளைக் கொண்டே அடையக்கூடும் என்றறிய வேண்டும்.

கடவுளின் இயற்கைவிளக்கமாகிய அருளை எதனாற் பெறக்கூடுமென்று அறியவேண்டில்:- சீவகாருணிய ஒழுக்கத்தினால் கடவுள் அருளைப் பெறக்கூடுமல்லது வேறெந்த வழியாலும் சிறிதும் பெறக்கூடாது என்று உறுதியாக அறிதல் வேண்டும்.

கடவுள் அருளைச் சீவகாருணிய ஒழுக்கத்தினால் பெறக் கூடுமல்லது வேறெந்த வழியாலும் பெறக்கூடா தென்பது எப்படி என்னில்:- அருளென்பது கடவுள் தயவு, கடவுளியற்கை விளக்கம். சீவகாருணிய மென்பது சீவர்கள் தயவு, சீவர்கள் ஆன்ம இயற்கை விளக்கம். இதனால் தயவைக் கொண்டு தயவைப் பெறுதலும் விளக்கத்தைக் கொண்டு விளக்கத்தைப் பெறுதலுங் கூடும். வேறொன்றினால் பெறக்கூடாமை அனுபவமாகலின், சீவகாருணியத்தைக் கொண்டு அருளைப் பெறுதல் கூடும்; வேறொன்றினாலும் பெறக்கூடாமை நிச்சயம். இதற்கு வேறு பிரமாணம் வேண்டாமென்றறிய வேண்டும்.

அருளைப் பெறுவதற்குச் சீவகாருணியமே வழியாதலால், ஞான வழி என்பதும் சன்மார்க்கம் என்பதும் சீவகாருணிய ஒழுக்கம் என்றும், அஞ்ஞான வழி என்பதும் துன்மார்க்கம் என்பதும் சீவ காருணிய ஒழுக்கமில்லாமை என்றும் அறியப்படும். சீவகாருணியம் விளங்கும்போது அறிவும் அன்பும் உடனாக நின்று விளங்கும்; அதனால் உபகாரசத்தி விளங்கும்; அந்த உபகாரசத்தியால் எல்லா நன்மைகளுந் தோன்றும். சீவகாருணியம் மறையும்போது அறிவும் அன்பும் உடனாக மறையும்; அதனால் உபகாரசத்தி மறையும்; உபகாரசத்தி மறையவே எல்லாத் தீமைகளுந் தோன்றும். ஆகலின் புண்ணிய மென்பது சீவகாருணியமொன்றே என்றும், பாவமென்பது சீவகாருணிய மில்லாமையொன்றே என்றும் அறியப்படும்.

சீவகாருணிய ஒழுக்கத்தினால் வரும் விளக்கமே கடவுள் விளக்கமென்றும், சீவகாருணிய ஒழுக்கத்தினால் வரும் இன்பமே கடவுள் இன்பமென்றும், இவ்விளக்கத்தையும் இன்பத்தையும் பலகால்கண்டு அனுபவித்துப் பூர்த்தியடைந்த சாத்தியர்களே சீவன் முத்தரென்றும், அவர்களே கடவுளை அறிவால் அறிந்து கடவுள்மயம் ஆவார்கள் என்றும் சத்தியமாக அறிய வேண்டும்.

ஆனால், சீவகாருணிய ஒழுக்கமென்பது என்னெனில்:- சீவர்களுக்குச் சீவர்கள் விஷயமாக உண்டாகின்ற ஆன்ம உருக்கத்தைக் கொண்டு தெய்வவழிபாடு செய்து வாழ்தலென்று அறிய வேண்டும்.

சீவர்கள் விஷயமாக ஆன்ம உருக்கம் எப்போது உண்டாகுமெனில்:- சீவர்கள் பசி, தாகம், பிணி, இச்சை, எளிமை, பயம், கொலை இவைகளால் துக்கத்தை அனுபவிக்கக் கண்டபோதாயினும் கேட்ட போதாயினும் இவ்வாறு உண்டாகுமென்று அறிந்த போதாயினும் ஆன்ம உருக்கம் உண்டாகுமென்று அறிய வேண்டும்.

சீவகாருணியம் உண்டாவதற்கு உரிமை எது என்னில்:- சீவர்களெல்லாம் ஒரு தன்மையாகிய இயற்கையுண்மை ஏகதேசங்களாய்ச் சர்வசக்தியுடைய கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டபடியால், ஓருரிமையுள்ள சகோதரர்களேயாவர் சகோதரர்களுள் ஒருவர் ஒரு ஆபத்தால் துக்கப்படுகின்றபோதும், துக்கப்படுவாரென்று அறிந்தபோதும் அவரைத் தமது சகோதரரென்று கண்ட மற்றொரு சகோதரருக்கு உருக்கமுண்டாவது சகோதர உரிமையாகலின், ஒரு சீவன் துக்கத்தை அனுபவிக்கக் கண்டபோதும், துக்கப்படுமென் றறிந்த போதும் மற்றொரு சீவனுக்கு உருக்கமுண்டாவது பழைய ஆன்ம உரிமை யென்று அறிய வேண்டும்.

சீவர்கள் துக்கப் படுகின்றதைக் கண்டபோதும், சிலர் சீவகாருணியமில்லாமல் கடினசித்தர்களாயிருக்கின்றார்கள்; இவர்களுக்குச் சகோதர உரிமை இல்லாமற்போவது ஏனெனில்:- துக்கப்படுகின்றவரைத் தமது சகோதரரென்றும் துக்கப்படுகின்றாரென்றும் துக்கப்படுவாரென்றும் அறியத்தக்க ஆன்ம அறிவு என்கிற கண்ணானது அஞ்ஞானகாசத்தால் மிகவும் ஒளி மழுங்கினபடியாலும், அவைகளுக்கு உபகாரமாகக் கொண்ட மனம் முதலான உபநயனங்களாகிய கண்ணாடிகளும் பிரகாச பிரதிபலிதமில்லாமல் தடிப்புள்ளவைகளாக இருந்த படியாலும் கண்டறியக் கூடாமையாயிற்று. அதனால், சகோதர உரிமையிருந்தும் சீவகாருணியம் உண்டாகாம லிருந்ததென் றறிய வேண்டும். இதனால் சீவகாருணியமுள்ளவர் ஆன்ம திருஷ்டி விளக்கமுள்ளவரென்றறியப்படும்.

சீவர்களுக்குப் பசி தாகம் பயம் முதலியவற்றால் வருந் துன்பங்களெல்லாம் மனம் கண் முதலிய கரணேந்திரிய அனுபவங்களல்லது, ஆன்ம அனுபவங்களல்ல; அதனாற் சீவகாருணியங் கொள்வதில் விசேஷ பிரயோசனம் இல்லையே என்னில்:- இந்தத் தூலதேகத்தில் சீவனாக இருக்கிற ஆன்மாவும் அறிவுக்கறிவாயிருக்கிற கடவுள் இயற்கை விளக்கமுந் தவிர, கரணம் இந்திரியம் முதலிய மற்றவைகளெல்லாம் கருவிகளாகிய தத்துவசடங்களே யல்லது சித்துக்களல்ல. ஆகலில் சுகதுக்கங்களைச் சடங்கள் அனுபவிக்க அறியா. செம்மண் சந்தோஷ’த்தது துக்கித்தது என்று சொல்லப்படாது. அதுபோல், மனஞ் சந்தோஷ’த்தது துக்கித்தது என்று சொல்லப்படாது. செம்மண்ணினால் தேகவாழ்க்கைக்கு வீடுகட்டிக்கொள்வது போல, மன முதலான கரணேந்திரியங்களால் சீவவாழ்க்கைக்குக் கடவுளால் கட்டிக் கொடுக்கப்பட்ட தேகம் ஒரு சிறிய வீடாகும். இன்பதுன்பங்களை வீட்டிலிருக்கின்றவன் அனுபவிப்பானல்லது, வீடு அனுபவிக்கமாட்டாது. அன்றியும் காசத்தினால் ஒளி மழுங்கப்பட்டு உபநயனங்களாகிய கண்ணாடிகளால் பார்க்கின்ற கண்கள் துன்ப விஷயத்தைக் கண்டபோது, அக்கண்கள் நீர்சொரியுமே யல்லது, கண்ணாடி நீர் சொரிய மாட்டாது. ஆகலில் ஆன்ம திருஷ்டிக்கு உபநயனங்களாக இருக்கின்ற மனம் முதலான கருவிகள் சுகதுக்கங்களை அனுபவிக்க மாட்டா; ஆன்மாவே அனுபவிக்குமென்று அறியவேண்டும்.

ஒரு சீவனுக்குச் சுகம் நேரிட்டபோது மனம் மகிழ்கின்றது; துக்கம் நேரிட்டபோது மனம் தளர்கின்றது; ஆகலில், சுகதுக்கங்களை அம்மனம் அனுபவிப்பதாக அறியப்படாதோ என்னில்:- அறியப் படாது. பளிங்கினாற் செய்த வீட்டினுள் இருக்கின்ற வீட்டுத் தலைவனுடைய தேகவிளக்கமும் தேகச் சோர்வும் அந்தப் பளிங்கு வீட்டில் பிரதிபலித்துப் புறத்தில் தோன்றுவது போலும், கண்களின் மலர்ச்சியும் சோர்வும் அக்கண்களிலிட்ட உபநயனங்களில் பிரதிபலித்துப் புறத்தில் தோன்றுவது போலும், சுகதுக்கங்களால் ஆன்மாவுக்கு உண்டாகிற மகிழ்ச்சியும் தளர்வும் மனம் முதலான கரணேந்திரியங்களில் பிரதிபலித்துப் புறத்தில் தோன்றுகின்றன. ஆகலில் சுகதுக்கங்கள் ஆன்மாவுக்கே அனுபவமென்றும், சுகதுக்கங்களை அறிந்தனுபவிப்பதற்குக் கரணேந்திரியங்கள் ஆன்மாவுக்கு உபகாரக் கருவிகளாகுமென்று அறிய வேண்டியது.

கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட சீவர்களில் அனேகர் பசி, தாகம், பயம் முதலியவற்றால் மிகவும் துன்பப்படுகின்றது என்னெனில்:- முன் தேகத்தில் சீவகாருணிய ஒழுக்கத்தை விரும்பாமல் கடின சித்தர்களாகித் துன்மார்க்கத்தில் நடந்த சீவர்களாதலால், கடவுள் விதித்த அருளாக்கினைப் படி பசி, தாகம், பயம் முதலியவற்றால் மிகவுந் துன்பப் படுகிறார்கள் என்றறிய வேண்டும்.

முன்தேகம் உண்டென்பது எப்படி யென்னில்:- ஒரு வீட்டில் குடிக்கூலி கொடுத்துக் குடித்தனஞ் செய்யவந்த சமுசாரி அதற்குமுன் வேறொரு வீட்டில் குடிக்கூலி கொடுத்துக் குடித்தனஞ் செய்திருந்தானல்லது வீடில்லாமல் குடித்தனஞ் செய்யமாட்டா னென்றும், இப்போது வந்த வீட்டிலும் கலகம் நேரிட்டால் பின்னும் வேறொரு வீட்டில் குடிபோவான் என்றும் அறிவது போல்; இந்த தேகத்தில் ஆகாரக் கூலி கொடுத்துக் குடியிருக்க வந்த சிவன் இதற்கு முன்னும் வேறொரு தேகத்தில் அந்தக் கூலியைக் கொடுத்துச் சீவித்திருந்தானல்லது தேகமில்லால் சீவித்திருக்க மாட்டானென்றும் துணிய வேண்டும். ஆதலால், முன்னும் பின்னும் சீவர்களுக்குத் தேகங்கள் நேரிடும் என்றறியவேண்டும்.

சீவர்கள் முன்தேகத்தில் செய்த பாவகர்மங்கள் இந்தத் தேகத்திலும் வருமென்பது எப்படியென்னில்:- ஒரு சமுசாரி முன் குடித்தனஞ் செய்திருந்த வீட்டில் தன் தலைவன் கட்டளைப்படி நடவாமல் துன்மார்க்கர்களை வருவித்து அவர்களோடு கூடிப் பழகியிருந்தானானால், அந்தச் சமுசாரி அந்த வீட்டைவிட்டு வேறொரு வீட்டில் குடிவந்த காலத்திலும் அந்தத் துன்மார்க்கர்கள் இந்த வீட்டிலும் வந்து அவனுடன் பழக்கஞ் செய்வார்கள். அதுபோல், ஒரு சீவன் முன் குடியிருந்த தேகத்தில் கடவுள் கட்டளைப்படி நடவாமல் துன்மார்க்கத்தாற் பாவகர்மங்களை விரும்பிச் செய்திருந்தானானால், அந்தச் சீவன் வேறொரு தேகத்தில் வந்தபோதும் அந்தப் பாவகர்மங்கள் இப்போது வந்த தேகத்திலும் வந்து அந்தச் சீவனைச் சேருமென் றறிய வேண்டும்.

முன் பிறப்பில் சீவகாருணிய ஒழுக்கத்தை விட்டுத் துன்மார்க்கத்தில் நடந்த சீவர்களை இந்தப் பிறப்பில் பசி தாகம் பயம் முதலிய வற்றால் துக்கப்படச் செய்வது கடவுள் அருளாக்கினை நியதியென்றால், அந்தச் சீவர்கள் விஷயத்தில் காருணியம் வைத்து ஆகாரம் முதலியவை கொடுத்து அவர்கள் துக்கத்தை மாற்றுவது கடவுள் அருளாக்கினைக்கு விரோதமாகாதோ என்னில்:- ஆகாது. அரசன் தன் கட்டளைக்கு முழுதும் விரோதித்து, கால்களுக்கு விலங்கிடப் பட்டுச் சிறைச்சாலையில் இருக்கின்ற பெரிய குற்றவாளிகளுக்கும் தன் சேவகர்களைக் கொண்டு ஆகாரங்கொடுப்பிக்கின்றான். அதுபோல், கடவுள் தம் கட்டளைக்கு முழுதும் விரோதித்துப் பலவகையால் பந்தஞ் செய்யப்பட்டு நரகத்திலிருக்கின்ற பாவிகளுக்கும் தம் பரிவார தேவர்களைக் கொண்டு ஆகாரங் கொடுப்பிக் கின்றார். அரசன் தன் கட்டளைப் படி நடவாமல் வேறுபட்ட சாதாரண குற்றமுடையவர்களைத் தன்னாலவர்கள் பெறத்தக்க லாபத்தைப் பெறவொட் டாமல் உத்தியோகத்தினின்றும் நீக்கி அவர்களுக்கு நல்லறிவு வருவிக்கின்ற நிமித்தம் அவ்விடத்தைவிட்டு வேறிடங்களில் வெளிப்படுத்துகின்றான். அவர்கள் உத்தியோக மிழந்தபடியால், சுகபோஜன முதலிய போகங்களை இழந்து ஊர்ப்புறங்களிற் போய் ஆகாரம் முதலியவை குறித்து அலைந்து வருந்துகின்ற போது, தயவுள்ளவர்கள் கண்டு ஆகார முதலியவை கொடுக்கின்றார்கள். அதை அரசன் கேட்ட காலத்திலும் கண்ட காலத்திலும் கொடுத்தவர்களை இரக்கமுள்ள நல்ல சமுசாரிகளென்று சந்தோஷ’த்து உபசரிக்கின்றானே யல்லது கோபிக்கின்றானில்லை. அதுபோல், கடவுள் தம் கட்டளைப்படி நடவாத சாதாரண குற்றமுடைய சீவர்களைத் தமது சத்தியால் அவர்கள் பெறத்தக்க சுகங்களைப் பெறவொட்டாமல் தாம் கொடுத்த சௌக்கிய புவனபோகங்களை விடுவித்து, அந்தச் சீவர்களுக்கு நல்லறிவு வருவிக்கும் நிமித்தம் அந்தத் தேகத்தினின்றும் நீக்கி வேறொரு தேகத்தில் விடுகின்றார். அந்தச் சீவர்கள் சௌக்கிய புவன போகங்களை இழந்தபடியால், சௌக்கிய போஜன முதலியவற்றை இழந்து வேறு வேறிடங்களில் ஆகார முதலியவை இல்லாமல் வருந்தும்போது, தயவுள்ளவர்கள் அந்த வருத்தத்தைக் கண்டு ஆகார முதலியவை கொடுத்தால் அப்படிக் கொடுத்தவர்களை நல்ல இரக்கமுள்ளவர்கள் மேன்மேலுஞ் சுகத்தையடையக் கடவார்களென்று சந்தோஷ’த்து உபசரிப்பாரல்லது கோபிக்கமாட்டார். ஆதலால், கடவுள் அருளாக்கினைக்குச் சீவர்களிடத்துச் சீவர்கள் காருணியம் வைப்பதே சம்மதவென்று உண்மையாக அறியவேண்டும்.

இந்தச் சீவகாருணியத்தால் இகலோக ஒழுக்கம் வழங்குகின்றது. சீவகாருணிய மில்லையாகில், இகலோக ஒழுக்க மெவ்வளவும் வழங்கமாட்டாதென்று அறியவேண்டும். எப்படியென்னில்:- சீவகாருணிய மல்லாதபோது அறிவும் அன்புந் தோன்றா; அவை தோன்றாதபோது கண்ணோட்டமும் ஒருமையும் உபகாரமும் விளங்கா; அவை விளங்காதபோது வலியசீவர்களால் எளிய சீவர்களொழுக்கம் பொறாமை முதலானவைகளால் தடைப்பட்டழிந்து போம். பின்பு வலியசீவர்கள் ஒழுக்கங்களும் தாமச ஒழுக்கங்களாகி ஒருவ ரொழுக்கத்தால் மற்றொருவரொழுக்கம் மதத்தினால் சோர்ந்தவிடதில் மாறுபட்டழிந்து போம். சீவகாருணிய ஒழுக்கஞ் சிறிது மில்லாத புலி சிங்கம் முதலிய மிருகங்கள் வழங்குகின்ற காட்டில் இகலோக ஒழுக்கம் வழங்கவேயில்லை அது போல் சீவகாருணிய மில்லாத மனிதர்கள் வழங்குமிடத்திலும் இகலோக ஒழுக்கம் வழங்கவே மாட்டாதென் றறியவேண்டும்.

பரலோக ஒழுக்கமுஞ் சீவகாருணியத்தால் வழங்குகின்றது. அது இல்லையாயின் பரலோக ஒழுக்கமும் வழங்கமாட்டாது. எப்படியென்னில்;- சீவகாருணியமில்லாத போது அருள்விளக்கந் தோன்றாது. அது தோன்றாதபோது கடவுள் நிலை கைகூடாது. அது கூடாதபோது முத்தியின்பம் ஒருவரும் அடையமாட்டார்கள். அடையாத பட்சத்தில் பரலோக ஒழுக்கம் வழங்கவே மாட்டாதென் றறியவேண்டும்.

சீவகாருணிய ஒழுக்கம் மிகவும் வழங்காமையால் துன்மார்க்கப் பிறவியே பெருகி, எங்கும் புல்லொழுக்கங்களே வழங்குகின்றன. எப்படியென்னில்:- சீவகாருணிய மில்லாத கடின சித்தர்க ளெல்லாம் அவரவர் கடின செய்கைக்குத் தக்கபடி, சிலர் நரகவாசிகளாகவும், சிலர் சமுத்திரவாசிகளாகவும், சிலர் ஆரணியவாசிகளாகவும், சிலர் புலி, கரடி, சிங்கம், யாளி, யானை, கடமை, கடா, பன்றி, நாய், பூனை, முதலிய துஷ்ட மிருகங்களாகவும், சிலர் பாம்பு, தேள் முதலிய விஷசெந்துக்களாகவும், சிலர் முதலை சுறா முதலிய கடின செந்துக்களாகவும் சிலர் காக்கை கழுகு முதலிய பக்ஷி சண்டாளங்களாகவும், சிலர் எட்டி கள்ளி முதலிய அசுத்த தாவரங்களாகவும் பிறந்திருக்கின்றார்கள். ஆதலால், புல்லொழுக்கங்களே மிகவும் வழங்குகின்றன என்றறிய வேண்டும்.

சீவகாருணியம். கடவுளருளைப் பெறுவதற்கு முக்கிய சாதனமென்பது மல்லாமல் அந்த அருளின் ஏகதேச விளக்க மென்றும் அறிய வேண்டும். சீவகாருணியம் ஆன்மாக்களின் இயற்கைவிளக்கம் ஆதலால், அந்த இயற்கைவிளக்கமில்லாத சீவர்களுக்குக் கடவுள் விளக்கம் அகத்திலும் புறத்திலும் வெளிப்படவே மாட்டாது.

சீவகாருணியத்திற்கு முக்கியமான லக்ஷியம் எதுவென்னில்:- ஆன்மாக்களெல்லாம் இயற்கைஉண்மை ஏகதேசங்களாகவும், இயற்கை விளக்கமாகிய அருள் அறிவுக்கறிவாய் விளங்குதற்கு ஒற்றுமை உரிமை இடங்களாயும் இருக்கின்றன என்றும், அந்த ஆன்மாக்கள் சீவர்களாகி அதிகரிப்பதற்குப் பூதகாரிய தேகங்களே உரிமையாக இருக்கின்றன என்றும், அந்தத் தேகங்களில் ஆன்மாக்கள் சீவர்களாகி அதிகரியாவிடில் ஆன்ம விளக்கம் மறைபடுமென்றும், அதனால் அருள்விளக்கம் வெளிப்படாதென்றும், அப்போது மூடமுண்டாகுமென்றும், அதுவே ஆன்மாக்களுக்குப் பந்தமாகுமென்றும், அது பற்றி அவசியம் பூதகாரிய தேகம் வேண்டுமென்றும், பூதகாரிய தேகங்களுக்கு மாயை முதற்காரணமாதலால் அந்த மாயையின் விகற்ப ஜாலங்களாகிய பசி, தாகம், பிணி, இச்சை, எளிமை, பயம், கொலை என்பவைகளால் அந்தத் தேகங்களுக்கு அடிக்கடி அபாயங்கள் நேரிடுமென்றும், அப்படி அபாயங்கள் நேரிடாமல் கரணேந்திரிய சகாயங்களைப் பெற்ற தம் மறிவைக் கொண்டு சர்வ ஜாக்கிரதையோடு முயற்சிசெய்து தடுத்துக் கொள்வதற்குத் தக்க வல்லப சுதந்திரம் சீவர்களுக்கு அருளாற் கொடுக்கப்பட்ட தென்றும், அந்தச் சுதந்திரத்தைக் கொண்டு சீவர்களெல்லாம் தேகங்களிலிருந்து அபாயங்களை நீக்கி ஆன்மலாபத்தைப் பெறுதற்கு முயற்சி செய்யக் கடவரென்றும், ஊழ் வகையாலும் அஜாக்கிரதையாலும் பசி, தாகம், பிணி, இச்சை, எளிமை, பயம், கொலை என்பவைகளால் வரும் அபாயங்களை நிவர்த்தி செய்து கொள்ளமாட்டாமல் வருந்துகின்ற சீவர்கள் விஷயத்தில் அவைகளை நிவர்த்தி செய்விக்க வேண்டுமென்றும், அப்படி நிவர்த்தி செய்விப்பதில் பசியினால் வருந் துன்பமுங் கொலையினால் வருந் துன்பமுந் தவிர மற்றவைகளால் வருந் துன்பங்களை மாற்றுவது அபரசீவகாருணிய மாதலால் இவ்வுலக இன்பத்தை மாத்திரம் சிறிதுண்டுபண்ணுமென்றும், பசியினால் வருந்துன்பத்தையும் கொலையினால் வருந்துன்பத்தையும் நிவர்த்தி செய்விப்பது பரசீவகாருணிய மாதலால் இவ்வுலக இன்பங்களையும் அளவிறந்த சித்தியின்பங்களையும் எக்காலத்து மழியாத முத்தியின்பத்தையும் அருளாலடையப்படுமென்றும், ஊழ்வகையாலும் அஜாக்கிரதையாலும் அன்னிய சீவர்களுக்கு நேரிடுகிற அபாயங்களை நிவர்த்தி செய்விப்பதற்குத் தக்க சுதந்தரமும் அறிவு மிருந்தும் அவ்வாறு செய்யாமல் வஞ்சித்தவர்களுக்கு இவ்வுலக இன்பத்தோடு மோக்ஷ இன்பத்தை யனுபவிக்கின்ற சுதந்தரம் அருளாலடையப் படுவதில்லை யென்றும் தற்காலத்தில் அனுபவிக்கின்ற புவன போக சுதந்தரங்களையும் இழந்து விடுவரென்றும் கடவுள் வேதத்தில் விதித்திருக்கின்றபடியால்; ஊழ்வகையாலும் அஜாக்கிரதையாலும் பசி கொலையென்பவைகளால் வரும் அபாயங்களை நிவர்த்தி செய்துகொள்ளத் தக்க அறிவும் சுதந்தரமுமில்லாத சீவர்கள் விஷயத்தில் அவைகளை நிவர்த்தி செய்விக்கத்தக்க அறிவும் சுதந்திரமுள்ள சீவர்கள் வஞ்சியாமல் தயவினால் நிவர்த்தி செய்விப்பதே சீவகாருணியத்திற்கு முக்கியமான லட்சியமென்றும், அதில் சத்தியமாக நம்பிக்கை வைத்துப் பசித்த சீவர்களுக்கு ஆகாரத்தால் பசி நீக்கியும், கொலைப்படும் சீவர்களுக்குச் செய்வகையால் கொலை நீக்கியும், திருப்தி இன்பத்தை உண்டுபண்ணுவதே மேலான பிரயோசன மென்றும் அறியவேண்டும்.

பசி, கொலை, பிணி, தாகம், எளிமை, பயம், இச்சை என்பவைகளால் வரும் அபாயங்களை நிவர்த்தி செய்விப்பது விதியாகவிருக்கவும், இவ்விடத்துப் பசியினால் கொலையினாலும் வரும் அபாயங்களை மாத்திரம் நிவர்த்தி செய்விப்பது விசேஷமென்று குறித்தது என்னென்றறிய வேண்டில்:- சீவகாருணிய ஒழுக்கத்தில் அபரசீவகாருணிய மென்றும் பரசீவகாருணியமென்றும் இருவகையாம். அவற்றில் பசிநீக்கலும் கொலைநீக்கலும் பரசீவகாருணிய மாதலால் விசேஷமாகக் குறிக்கப்பட்டதென்றறிய வேண்டும். அன்றியும் பசியினால் வருந்துகின்ற சீவர்களுக்குப் பசியை நிவர்த்தி செய்விக்கின்ற தயவுடையவர்கள் தாகம் நீங்குதற்குத் தண்­ர் கொடாமலிரார்கள். தண்­ர் கொடுப்பது பிரயாசமுமல்ல. தண்­ர் ஏரி குளம் கால்வாய் முதலான இடத்து மிருக்கின்றது. தாகத்தால், மாற்றிக் கொள்ளத்தக்க ஏகதேச அபாயம் நேரிடுமேயல்லது, அதனால் தேகத்திற்கு ஆனி நேரிடாது; பசியினால் மாற்றிக் கொள்ளக்கூடாத கெடுதி தேகத்திற்கு நேரிடும். பசியினால் வருந் துன்பத்தை நிவர்த்தி செய்விக்கத் தக்க தயவுடையவருக்குப் பிணியினால் வருந்துன்பத்தை நிவர்த்தி செய்விப்பதற்கு தயவுண்டாகாம லிராது. பசி மிகுதியினாலேயே பிணிகள் விருத்தியாகின்றன. ஆகாரப் பக்குவங்களாலேயே அப்பிணிகள் நீங்குகின்றன. பிணிகளுக்கு வேறு மருந்து கொடுப்பினும், பத்திய ஆகாரமே தேகம் நிற்பதற்கு அவசியமான ஆதாரமாயிருக்கின்றது. பிணியோடு தேகத்தை நெடுநாள் வைத்திருக்கக் கூடும். ஒரு நாளாகிலும் ஆகாரமில்லாமல் தேகத்தை வைத்திருக்கக் கூடாது. பசித்தவர்களுக்கு ஆகாரத்தால் பசி நீக்குவிக்கின்ற தயவுடையவர்களுக்கு, இச்சையால் வருந் துன்பங்களை நீக்குவிப்பதற்குத் தயவு வராமலிராது. சீவர்களுக்கு உள்ளபடி பசி நேரிடுமாகில் ஆகாரத்திலல்லது மற்றொன்றிலும் இச்சையே இராது. ஆகாரங் கிடைக்கில் உண்டு பசி தீர்ந்தவர் தம் இச்சையைச் சிறிய முயற்சிகளால் முடித்துக் கொள்ளவுங்கூடும்; அல்லது சமாதானஞ் செய்து கொள்ளவுங்கூடும்; இச்சையோடு பல நாள் தேகத்தை வைத்திருக்கலாம்; பசியோடு ஒரு நாளும் வைத்திருக்க முடியாது. பசித்த சீவர்களுக்கு ஆகாரத்தால் பசியை நிவர்த்தி செய்விக்கின்ற தயவுள்ளவர்களுக்குச் சுதந்தர மற்ற சீவர்களது எளிமையை நீக்கத் தயவுவராமலிராது. பசியினால் வருந்துகின்ற எளிமைக்கு மேற்பட்ட எளிமையே இல்லை. எளிமையைச் சில நாள் சென்று மாற்றிக் கொள்ளக் கூடும்; பசியை அவ்வாறு மாற்றிக்கொள்ளக் கூடாது. எளிமையோடு தேகத்தை வைத்திருக்கக் கூடும்; பசியோடு வைத்திருக்க முடியாது. பசியை நிவர்த்தி செய்விக்கின்ற தயவுடையவருக்குப் பயத்தை நிவர்த்தி செய்விப்பதில் தயவு வராமலிராது. பசியினால் வரும் பயத்திற்கும் கொலையினால் வரும் பயத்திற்கும் மேற்பட்ட பயமேயில்லை. பயத்தை உபாயத்தால் நீக்கிக் கொள்ளக்கூடும்; பசியை உபாயத்தால் நீக்கிக்கொள்ளக் கூடாது. பயத்தோடு தேகத்தை வைத்திருக்கலாம்; பசியோடு வைத்திருக்கப்படாது. பசியினால் வரும் அவத்தைகளுந் துன்பங்களும் கொலையினால் வரும் அவத்தைகளுந் துன்பங்களும் தம்முள் ஒத்திருக்கின்றன ஆகலால், பசியினால் வருந் துன்பத்தையும் கொலையினால் வருந்துன்பத்தையும் நிவர்த்தி செய்விப்பதே சீவகாருணியத்திற்கு முக்கிய வட்சிய மென்றறிய வேண்டும்.

பசியினால் வருந் துன்பத்தை நீக்குதலும் கொலையினால் வருந்துன்பத்தை நீக்குதலும் சீவகாருண்யத்திற்கு முக்கிய லக்ஷியமாக இருக்கவும், இவ்விடத்தில் பசிநீக்குதலை மாத்திரம் அடிக்கடி வலியுறுத்துவது என்னெனில்:- ஒரு சீவன் பசியினால் கொல்லப்படு மென்பதை யறிந்து காருணியத்தால் பசியை நீக்கி உயிர், பிழைக்கும்படி செய்பவர் வேறுவகையால் உயிர்க்கொலை நேரிட்டால் அதற்கிரங்கி அந்தக் கொலையால் வருந் துன்பத்தை நிவர்த்தி செய்யாமலிரார்கள். கொலையால் வருந்துன்பத்தை நிவர்த்தி செய்யாதவர்கள் பசியால் வருந்துன்பத்தையும் நிவர்த்தி செய்விக்கத்தக்க தயவுடையவர்க ளாகார்கள். பசியால் வருங் கொலையை ஆகாரத்தாலன்றி வேறு வகையால் நிவர்த்தி செய்விக்கப்படாது; பகை முதலியவற்றால் வருங்கொலையை அநேக உபாயத்தால் நிவர்த்தி செய்விக்கக் கூடுமாதலால், கொலையால் வருந்துன்பத்தைப் பசியால் வருந்துன்பத்திலமைத்து அடிக்கடி வலியுறுத்துகின்றதென்றறிய வேண்டும்.

அன்றியும், தாகத்தால் வருந்துகின்றவரும், பிணியால் வருந்துகின்றவரும், இச்சையால் வருந்துகின்றவரும், எளிமையால் வருந்துகின்றவரும், பயத்தால் வருந்துகின்றவரும் பசிவருத்த முண்டாகும்போது அவ்வவ் வருத்தங்களை யெல்லாம் மறந்து பசிவருத்தம் மேற்பட்டு, ஆகாரந்தேட முயற்சி செய்கின்றார்கள். அன்றி, அரசன் ஆக்கினையால் கொலைக்குற்றம் பற்றிக் கொலை செய்ய விதிக்கப்பட்ட குற்றவாளியும் பசிவந்தபோது தன் பயத்தையும் துன்பத்தையும் மறந்து அந்தப் பசியை மாற்றிக் கொள்ள முயலுகிறான். வைத்தியரால் தாம் இறந்துவிடுவது நிச்சயமென்று தெரிந்துகொண்ட வியாதியாளரும் மூப்பாளரும் பசிவந்தபோது தமது துன்பத்தை மறந்து பசிநீக்க முயலுகின்றார்கள். பசிக்குத் தயவினால் ஆகாரங் கொடுக்கத் துணிந்தவன் வேறு வகையால் சீவர்கள் இம்சைப் பட்டழிவதற்குச் சம்மதிக்கவே மாட்டான்; ஆகலினும் பசியால் வருந்துன்பத்தை நிவர்த்தி செய்விக்கிற தருமத்தை அடிக்கடி வலியுறுத்துவதென் றறியவேண்டும்.

பசியினால் வருங் கெடுதி எல்லாச் சீவர்களுக்குந் தேகநாசஞ் செய்வது உண்மையானால், எல்லாச் சீவர்கள் பசியையு மறிந்து நிவர்த்தி செய்விக்க வேண்டும்; அப்படி நிவர்த்தி செய்விக்கத் தொடங்கில் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட தேவர் மனிதர் நரகர் மிருகம் பறவை ஊர்வன தாவரம் என்கிற இவ்வெழுவகைப் பட்ட அளவிறந்த பேதங்களுடைய சீவர்களது பசியை யறிந்து நீக்குவது அசாத்தியமாகுமே யென்னில்:- தேவர்கள் மனித சுதந்திரத்தினும் மேற்பட்ட சுதந்தரமுடையவர்களாய்த் தங்களுக்கு நேரிட்ட பசியைத் தங்கள் முயற்சியினாலேயே மாற்றிக் கொள்ளத் தக்க வல்லபமுடையவர்க ளாதலால் அவர்கள் பசியைக் குறித்து மற்றவர்கள் யோசிப்பது அவசியமல்ல வென்றும் தேவர்க
ளுக்கும் பசி நேர்ந்தால் துன்பமுண்டாகுமே யென்று இரங்குவது மாத்திரம் அவசியமென்றும்; நரகர் நாம் பசியாற்றுவிக்கத் தக்க இடங்களில் இல்லாமல் வேறிடங்களி லிருக்கின்ற படியாலும், நரகர் பசிக்குத் தண்டனைப் பரிவாரங்களால் பசியாற்றுவித்தலாலும், நரகர் பசியைக் குறித்து யோசிப்பது அவசியமல்லவென்றும், நரகரும் பசி நேரிடில் வருந்துவார்களேயென்று இரங்குவது மாத்திரம் அவசிவமென்றும்; ஊழ்வகையினால் சிறிதுஞ் சுதந்தர மில்லாத மரம் புல் முதலிய தாவரங்களில் மனிதர் தங்கள் வாழ்க்கைக்குச் சகாயமாகத் தங்கள் முயற்சியால் விளைவிக்கின்ற தாவர வர்க்கங்களுக்குப் பசி குறித்து நீர் விடுவது அவசிய மென்றும், மற்றைத் தாவரவர்க்கங்களெல்லாம் அருள் நியதியின்படி ஆகாரங் கொடுப்பிக்க உயிர்த்திருக்கின்றனவாதலால் அவைகளுக்கெல்லாம் பசியறிந்து ஆகாரங் கொடுப்பது நமது சுதந்தரமல்ல கடவுள் சுதந்தரமென்றும், அவை குறித்து யோசிப்பது அவசியமல்ல வென்றும், ஆகாரமில்லாவிடில் வருந்துமே யென்று இரங்குதல் மாத்திரம் அவசியமென்றும்; நிலத்திலும் நீரிலும் ஊருகின்ற உயிர்களுக்கும் பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் அவ்வவற்றின் ஊழ்வகைக்குத் தக்கபடி அருள் நியதி ஆகாரங் கொடுப்பிக்க உண்டு பசியாறுகின்றன வென்றும், அவ்வவைகளுக்குத் தக்க ஆகாரம் அறிந்து கொடுப்பது நமது சுதந்தரமல்ல கடவுள் சுதந்தர மென்றும், அவைகளில் மனிதர் வாழ்க்கைக்குச் சகாயமாகத் தங்கள் சுதந்தரத்தால் சம்பாதித்துக் கொள்ளுகின்ற பசு எருது எருமைகடா ஆடு குதிரை முதலிய சில மிருகங்களுக்கு ஆகாரங் கொடுத்துப் பசியாற்றுதல் அவசியமென்றும்; மனிதர்களில் ஆண்மக்கள் பெண்மக்கள் என்றிருவகைப்பட்ட எல்லா மனிதர்களுக்கும் பசியால் வரும் நஷ்டங்களும் துன்பங்களும் பசி நிவர்த்தியால் வரும் லாபங்களும் இன்பங்களும் பொதுவில் ஒரு தன்மையாயிருந்தாலும், பசியால் வரும் நஷ்டங்களையுந் துன்பங்களையும் மன முதலான அந்தக்கரண விருத்தியினாலும் கண் முதலான இந்திரியங்களாலும் மிகவும் அறிந்து கொள்கின்ற ஆன்ம அறிவு ஒத்திருத்தலாலும், மனிதர்களுக்கு ஊழ்வகையினால் அருள் நியதியின்படி கொடுப்பிக்கின்ற ஆகாரமட்டில் சீவித்துத் தேகத்தை வைத்திருக்கக் கூடாமையாலும், தங்கள் முயற்சியாலும் அறிவாலும் சுதந்தரத்தாலும் சம்பாதிக்கின்ற, ஆகாமிய ஆகாரத்தாலும் பசியை நீக்கித் தேகத்தை வைத்திருக்க வேண்டுமாதலாலும், ஆகாயமியத்தால் சம்பாதிக்கின்ற சீவசுதந்தரமுள்ள மனிதர்களுக்கு அருளால் மிகவுங் கொடுக்கப்பட்ட படியாலும்! ஊழ்வகையால் ஆகாரம் நேரிடாமல் பசித்து வருந்தும்படியாகவும்; அந்தப் பசியை நீக்கும் நிமித்தம் ஒருவரையொருவர் எதிர்பார்க்கும் படியாகவும்; அவர் தயவினால் ஆகாரங் கொடுத்து அப்பசியை நீக்கி அவரை நன்முயற்சியிற் செலுத்தவும் ஆகாரங் கொடுத்தவர் சித்திமுத்திகளை யடையவும் அருள் நியதியாக விதிக்கப்பட்ட படியாலும், மனிததேகம் மற்றச் சீவதேகம்போல இலேசிலே எடுக்கக் கூடாதாகலாலும், மனித தேகத்தில் ஆன்மவிளக்கமும் அருள் விளக்கமும் மிகவும் விளங்குதலாலும், இந்த மனித தேகம் போனால் மீளவும் இந்தத் தேகம்வருமென்கிற நிச்சய மில்லாமையாலும், இந்த மனித தேகம் முத்தியின்பம் பெறுதற்கே எடுத்த தேகமாதலாலும், இந்த மனிததேக மாத்திரமே முதற் சிருஷ்டி தொடங்கிக் கடவுள் சம்மதத்தால் சிருஷ்டிக்கப்பட்ட உயர்ந்த அறிவையுடைய தேகமாதலாலும், மனிதர்கள் மாத்திரம் பசியாற்றுவிக்கின்ற சீவகாருணிய விதியைப் பொதுவில் அவசியம் உறுதியாகப் பிடிக்கவேண்டுமென்றும் கடவுள் விதித்திருக்கின்ற படியால், பசியை ஆகாரத்தினால் நிவர்த்தி செய்விக்கின்ற சீவகாருணிய ஒழுக்கம் மனிதர்களிடத்தே பெரும்பான்மை நடத்த வேண்டுமென்று அறிய வேண்டும்.

ஊழ்வகைக்குத் தக்கபடி மிருகம் பறவை முதலிய சீவர்களுக்கு அருளால் நியதி ஆகார மாத்திரம் இருக்க மனிதர்களுக்கு மாத்திரம் ஊழ்நியதி ஆகாரத்தோடு ஆகாமிய முயற்சி ஆகாரமும் வேண்டுவது அவசிய மென்றது எப்படி யென்னில்:- மனிதர்கள் பிராரத்தப்படி நியதி ஆகாரத்தைப் புசித்துப் பிராரத்த அனுபவத்தை நீக்கிக் கொண்டு, ஆகாமியத்தால் முயற்சி ஆகாரத்தைப் புசித்துக் கரணேந்திரிய தேகத்தை வலுவுள்ளதாகச் செய்து கொண்டு, சன்மார்க்க சாதனத்தை அனுசரித்துச் சித்தி முத்தி இன்பங்களைப் பெறக்கடவரென்று கடவுள் விதித்திருக்கின்றபடியால், மனிதர்களுக்குப் பிராரத்த ஆகாரமும் ஆகாமிய முயற்சி ஆகாரமும் அவசியம் வேண்டுமென்று அறியவேண்டும். மிருகம் பட்சி ஊர்வன தாவரம் என்கிற சீவதேகங்கள் தண்டனை நிமித்தம் விதித்த தேகங்களாதலால், பிராரத்த ஆகாரம் கடவுள் விதித்த வண்ணம் அருட்சத்தியால் தடைபடாமல் கொடுக்கப் படுமாகலில், ஆகாமிய ஆகாரம் சம்பாதிக்க வேண்டாமென் றறிய வேண்டும்.

ஆனால் சீவகாருணியம் எல்லாச் சீவர்களுக்கும் பொதுவென்று முதலில் குறிக்கப்பட்டது என்ன எனில்:- சீவகாருணிய ஒழுக்கத்தில் முக்கியமாக எல்லா மனிதர்களுக்கும் பொதுவில் பசியினால் வருந்துன்பத்தை நிவர்த்தி செய்து ஆகாரத்தினால் திருப்தி இன்பத்தை உண்டுபண்ண வேண்டு மென்றும், பசியைப்போல் வேறு வகையினால் சீவகொலை நேரிடுவதானால் அந்தச் சீவகொலையைத் தம்மாற் கூடிய வரையில் எவ்விதத்திலாயினும் தடை செய்து உயிர் பெறுவித்துச் சந்தோஷ’ப்பிக்க வேண்டுமென்றும், பிணி பயம் முதலிய மற்ற ஏதுக்களால் சீவர்களுக்குத் துன்பம் நேரிடில் அத்துன்பங்கள் தங்களால் நீக்கத்தக்கவை களாகில் நீக்கவேண்டுமென்றும், மிருகம் பறவை ஊர்வன தாவரம் முதலியன சீவர்களிடத்துப் பயத்தினால் வருந் துன்பத்தையும் கொலையினால் வருந் துன்பத்தையும் எவ்விதத்தும் நிவர்த்தி செய்ய வேண்டுமென்றும், அவற்றுள் துஷ்ட சீவர்களிடத்தும் சிறிது பயத்தினால் வருந் துன்பம் மாத்திரமே யல்லது கொலையினால் வருந்துன்பங்களைச் செய்யப்படாதென்றும், இவ்வகை முழுதும் சீவ காருணியமேயாதலால் எல்லா உயிர்களிடத்தும் சீவ காருணியம் வேண்டுமென்று கடவுளால் ஆணைசெய்ததென் றறியவேண்டும்.

மனிதர்கள் தங்கள் வாழ்க்கைக்குச் சகாயமாகச் சம்பாதிக்கின்ற உயிர்களில் சில உயிர்கள் தாமச ஆகாரமாகிய மாமிச ஆகாரஞ் செய்வதானால், அவைகளுக்குப் பசியாற்றுவிக்கும்போது அந்த ஆகாரத்தைக் கொடுத்து ஆற்றுவிக்கப்படாதோ என்னில்:- ஒரு சீவனைக் கொன்று ஒரு சீவனுக்கு மாமிசத்தால் பசியாற்றுதல் சீவகாருணிய ஒழுக்கமே யல்லவென்றும், கடவுள் சம்மதமும் அல்லவென்றும், இவைகட்கு முழு விரோதமென்றும் அறியவேண்டும். எல்லாச் சீவர்களும் இயற்கையுண்மை ஏகதேசங்களாகிக் கடவுள் இயற்கை விளக்கமாகிய அருளுக்கு இடமாக இருக்கின்றபடியாலும், கடவுள் இயற்கை விளக்கம் மாறுபடும் போது சீவத் தன்மை இல்லாதபடியாலும், கடவுளியற்கை விளக்கமும் ஜீவனியற்கை விளக்கமும் ஒன்றோடொன்று மாறுபடாதாகலாலும், கடவுளியற்கை விளக்கமுஞ் சீவன் இயற்கைவிளக்கமும் அந்தந்தத் தேகங்களினும் விளங்குகின்ற படியாலும், ஒரு சீவனை வதைத்து அதனால் மற்றொரு சீவனுக்குப் பசியாற்றுதல் சீவகாருணிய ஒழுக்கத்திற்கு முழு விரோதமென்றே அறியவேண்டும்.

புலி சிங்கம் முதலிய மிருகங்கள் மற்றொரு சீவனைக் கொன்று தின்று தாமச ஆகாரத்தால் பசியாற்றித் திருப்தி இன்பத்தை யடைந்து சந்தோஷ’க்கின்றன; அந்தச் சந்தோஷம் கடவுளியற்கை விளக்க ஏக தேசமும் சீவன் இயற்கைவிளக்க நிறைவும் என்று கொள்ளக்கூடாதோ என்னில்:- கூடாது. தாமச ஆகாரத்தால் பூரண சத்துவமாகிய கடவுளியற்கைவிளக்க ஏகதேசமும் ஏகதேச சத்துவமாகிய ஆன்ம இயற்கைவிளக்கமும் விளங்கா; இருளால் ஒளி விளங்காதது போல். இதைத் தாமச ஆகாரமென்பது. என்னையெனில்:- கடவுள் விளக்கம் வெளிப்படாதபடி ஆன்ம விளக்கத்தை மறைத்த இம்சை ஆகாரமாதலால் தாமச ஆகாரமாயிற்று. இந்த ஆகாரத்தால் வந்த திருப்தி யின்பமாகிய சந்தோஷ விளக்கம் எதனுடைய விளக்கமென்னில்:- அனாதி பசுகரணமாயாவிளக்கம் என்று அறியவேண்டும். பசு வென்பது என்னை? ஆணவம் மாயை கன்மம் என்கிற மும்மல பந்தத்தால் ஒன்றுபட்டு அறிவிழந்த ஆன்மாவையே பசு வென்பது. அப்பசுவிற்கு விளக்கந் தோன்றுவது எப்படியென்னில்:- சூரியனை மறைத்த மேகவண்ணத்திலுள்ள இருளினிடத்தும் சூரியப்பிரகாச விசேஷந் தோன்றுதலால் அவ்விருளும் விளக்கமாக வழங்குகின்றது. அது போல், அசுத்தமாயாகரணங்களும் தாமச குணமும் இருள் வண்ணமுடைய வாயினும் தம்மால் மறைக்கப்பட்ட பரசீவவிளக்க விசேஷத்தால் அசுத்தமாயாகரணமும் தாமசகுணமும் விளக்கமாக வழங்குகின்றன. இதனால், தாமச ஆகாரத்தில் வரும் விளக்கம் அசுத்தமாயாகரண விளக்கமே என்றறியவேண்டும்.

ஆனால் மரம் புல் நெல் முதலான தாவரங்களும் உயிராகவே சொல்லப்படுகின்றனவே, அவைகளை இம்சைசெய்து ஆகாரமாகக் கொண்டால் அவை தாமச ஆகார மல்லவோ, அதனால் வந்த சந்தோஷம் அசுத்த மனோகரண சந்தோஷமல்லவோ என்னில்:- மரம் புல் நெல் முதலான தாவரங்களும் உயிர்கள்தான். அவைகளை இம்சைசெய்து ஆகாரங்கொண்டால் அது ஏகதேச தாமச ஆகாரந்தான். அந்த ஆகாரத்தால் வந்த சந்தோஷமும் அசுத்தாகரண சந்தோஷந்தான். ஆனாலும் அப்படியல்ல. மரம் புல் நெல் முதலான சீவர்கள் பரிசமென்கிற ஓரறிவையுடைய சீவர்களாதலாலும், அவ்வுடம்பில் சீவவிளக்கம் ஒருசார் விளங்குதலாலும், அவ்வுயிர்கள் தோன்றும் வித்துக்களும் மற்ற வித்துக்கள் போல் சயமாதலாலும், அவ்வித்துக்களை நாமே விதைத்து உயிர் விளைவு செய்யக்கூடுமாதலாலும், அவ்வுயிர்களை வேறுசெய்யாமல் அவ்வுயிர்களினிடத்து உயிரில்லாமல் உயிர் தோன்றற்கிடமான சடங்களாகத் தோன்றிய வித்துக்களையும் காய்களையும் கனிகளையும் பூக்களையும் கிழங்குகளையும் தழைகளையும் ஆகாரங்களாகக் கொள்வதேயன்றி அவ்வுயிருள்ள முதல்களை ஆகாரமாகக் கொள்ளாதபடியாலும், அவைகளில் வித்து காய் கனி முதலானவை கொள்ளும்போது சுக்கிலம் நகம் ரோமம் முதலிய வைகளை வாங்கும் போது இம்சை உண்டாகாமை போல் இம்சை உண்டாகாத படியாலும், தாவர வர்க்கங்களுக்கு மன முதலான அந்தக் கரணங்கள் விருத்தி யில்லாதபடியாலும் அது உயிர்க்கொலையுமல்ல; துன்ப முண்டுபண்ணுவது மல்ல; அதனால் அது சீவகாருணிய விரோதமாகாது. அந்த ஆகாரத்தால் வந்த சந்தோஷமும் சீவவிளக்க சகிதமான கடவுள் விளக்கமேயாகு மென்று அறியவேண்டும்

மர முதலிய தாவங்களில் தோன்றிய வித்துக்களை இனி உயிரேறுதற் கிடமாகிய சடங்க ளென்பது எப்படியென்னில்:- வித்துக்களில் சீவனிருந்தால் நிலத்தில் விதையா முன்னமே விளைய வேண்டும்; நிலத்தில் விதைத்த காலத்தும் சில வித்துக்கள் விளையாமலே யிருக்கின்றன. அன்றியும் வித்தென்பது காரணம். இந்தக் காரணம் உடம்பு தோன்றுதற்கே யென்று சிறு பிள்ளைகளாலும் அறியப்படும். அன்றி உயிர் நித்தியம், உடம்பு அநித்தியம்; நித்தியமான உயிர் காரணம் வேண்டாது; அநித்தியமாகிய உடம்பே காரணம் வேண்டும். ஆகலில் வித்துக்களைச் சடமென்றறிய வேண்டும். ஆனால் வித்துக்களிடத்து ஆன்மாக்கள் ஏறுவது எப்படி யென்னில்:- நிலத்திற் கலந்த வித்திற்கு நீர்விடில் அந்த நீரின் வழியாகக் கடவுள் அருள் நியதியின்படி ஆன்மாக்கள் அணுத் தேகத்தோடு கூடி நிலத்திற் சென்று அந்நிலத்தின் பக்குவ சத்தியோடு கலந்து வித்துக்களினிடமாகச் செல்கின்றன வென்று அறிய வேண்டும்.

முளைகளையே பிடுங்கப்படா தென்று சிலர் சொல்கின்றார்கள்; வித்து காய் இலை முதலியவைகளைப் புசிக்கலாமென்று சொல்வதெப்படி யென்னில்:- வித்து நிலத்திற் படிந்தபின் நீர் வழியாக ஆன்மாவானது சென்று பக்குவ சத்தியிற் கலந்து வித்திலேறி முளைத்தபடியால், முளையானது வித்து காய் முதலியவைகளைப் போலச் சடமல்ல. ஆகலால், முளைகளைப் பிடுங்கப்படாதென்பது உண்மையென்று அறிய வேண்டும்.

வித்து காய் கனி முதலியவற்றில் உயிர்க்கொலை இல்லாவிடினும் நகம் ரோமம் சுக்கிலம் முதலியவற்றிலிருக்கிற அசுத்தமாவதில்லையோ என்னில்:- தத்துவவிருத்தியும் தாது விருத்தியும் இல்லாதபடியால் அசுத்தமுமில்லை.

ஆகலில் மரம் புல் நெல் முதலியவைகளின் வித்து காய் கனி தழை முதலியவற்றைப் புசிப்பது சீவகாருணிய விரோதமல்ல என்றறிய வேண்டும்.

மாமிச ஆகாரம் புலி முதலாகிய துட்ட மிருகங்களுக்கு நியதி ஆகார மல்லவோ என்றறிய வேண்டில்:- அது அவ்வுயிர்களுக்குச் சிருஷ்டி நியதி ஆகார மல்ல; பரம்பரை வழக்கத்தாற் பெற்ற ஆகாரமாமென் றறியவேண்டும். ஆகலில், அதை நிவர்த்தி செய்வித்துச் சத்துவ ஆகாரங்களைப் புசிக்கும்படி செய்யவுங் கூடும்; ஒரு சீலமுடையவன் கிரகத்தில் வழங்குகின்ற பூனைக்கும் நாய்க்கும் வேறிடங்களிற் போய் அசுத்த ஆகாரங்கொள்ளாமல் காவல் செய்து அடிநாள் தொடங்கிச் சுத்த ஆகார வழக்கமே செய்விக்கின்றான்; அவைகள் அவைகளைப் புசித்து உயிர் வழங்கி வருகின்றன. அப்படியே புலி சிங்கம் முதலிய துட்டவர்க்கங்களையும் மேல்நின்று சுத்த ஆகாரத்தில் பழக்குவாரில்லாமையால் அசுத்தாகாரங்களைப் பழக்கத்தாற் புசிக்கின்றனவென் றறியலாம்.

ஆகலில், ஒரு சீவனைக்கொன்று மற்றொரு சீவனுக்குப் பசியாற்றுவித்தல் கடவுளருளுக்குச் சம்மதமுமல்ல, சீவகாருணிய ஒழுக்கமுமல்ல என்று சத்தியமாக அறியவேண்டும்.

இந்தச் சீவகாருணிய மென்கின்ற சாதனத்தில் சாத்தியமாகின்ற இன்பம் அபர இன்பமென்றும் பரஇன்பமென்றும் இருவகைப்படும்.

இச்சை முதலியவைகளைப் பற்றி உண்டாகின்ற துன்பத்தை நிவர்த்தி செய்விப்பதில் வரும் இன்பம் அபர இன்பமாகும். அவை இம்மையில் அனுபவிக்கின்ற இன்பங்களில் சிலவென்றறிய வேண்டும். அவை எவையென்னில்:- உடுப்பதற்கு வஸ்திரமில்லாமலும், இருப்பதற்கு இடமில்லாமலும், உழுவதற்கு நிலமில்லாமலும், பொருந்துவதற்கு மனைவியில்லாமலும், விரும்பியபடி செய்வதற்குப் பொருள் முதலிய வேறு வேறு கருவிகளில்லாமலும் துன்பப்படுகின்ற சீவர்கள் விஷயத்தில் சீவகாருணியந் தோன்றி, உடுப்பதற்கு வஸ்திரம், இருப்பதற்கு இடம், உழுவதற்கு நிலம், பொருந்துவதற்குப் பெண், விரும்பியபடி செய்வதற்குப் பொருள் முதலானவை கொடுத்தபோது, பெற்குக்கொண்டவர்களுக்கு உள்ளிருந்து முகத்தினிடமாகத் தோன்றுகின்ற இன்ப விளக்கமும், அந்த இன்பத்தைக் கண்டு கொடுத்தவர்களுக்கு உண்டாகின்ற இன்ப விளக்கமும் கடவுள்கரணத்தில் ஏகதேசமும் சீவகரணத்திற் பூரணமுமாகத் தோன்றுகின்றவை யாகலால் அது அபர இன்பமென் றறியவேண்டும்.

அன்றி, தன் வத்திரம் தாழ்ந்ததாகவும் அன்னியன் வத்திரம் உயர்ந்ததாகவும் கண்டு அதில் ஆசை வைத்து வருந்துகின்ற வருத்தமும் கண்டால், காருண்யம் வேண்டாவோ என்னில்:-

பசியினால் வருந் துன்பத்தை நிவர்த்தி செய்விப்பதில் வருமின்பம் பரஇன்பமாகும். அவை இம்மையில் போகசித்திகளாலும் யோகசித்திகளாலும் ஞானசித்திகளாலும் வருகின்ற இன்பங்களும் முடிவில் அனுபவிக்கப்படும் மோட்ச இன்பமும் ஆகுமென்றறியவேண்டும். உண்பதற்கு ஆகாரமில்லாமல் சோர்வடைந்த சீவர்களுக்குச் சீவகாருணியத்தால் ஆகாரங் கொடுக்க உண்டு பசி நீங்கிய தருணத்தில், அந்தச் சீவர்களுக்கு அகத்தினிடத்தும் முகத்தினிடத்தும் தழைந்து பொங்கித் ததும்புகின்ற இன்பமும், அது கண்டபோது கொடுத்தவர்களுக்கு அகத்திலும் முகத்திலும் அவ்வாறுண்டாகின்ற இன்பமும், ஆன்ம சகிதமாகிய கடவுள் கரணத்திற் பூரணமாகத் தோன்றுகின்றவை யாகலால், பர இன்பமென்றது என்றறிய வேண்டும்.

வஸ்திரம், இடம், நிலம், பெண், பொருள் முதலானவைகள் இல்லாமல் துன்பப்படுகின்றவர்கள், அத்துன்பங்களை மனஎழுச்சியால் சகித்துக்கொண்டு உயிர்தரித்துத் தங்களாற் செய்யக்கூடிய முயற்சியைச் செய்யக்கூடும். பசியினால் துன்பம் நேரிட்டபோது மனஎழுச்சியால் அத்துன்பத்தைச் சகித்துக்கொள்ளக் கூடாது. சகிக்கத் தொடங்கில் உயிரிழந்து விடுவார்கள். பசி நேரிட்டபோது பெற்றவர்கள் பிள்ளைகளை விற்றும், பிள்ளைகள் பெற்றவர்களை விற்றும், மனைவியைப் புருடன் விற்றும், புருடனை மனைவி விற்றும், அந்தப் பசியினால் வருந்துன்பத்தை மாற்றிக் கொள்ளத் துணிவார்களென்றால், அன்னியமாகிய வீடு, மாடு, நிலம், உடைமை முதலியவைகளை விற்றுப் பசியை நீக்கிக் கொள்வர்களென்பது சொல்லவேண்டுவதில்லை. உலக முழுதும் ஆளுகின்ற சக்கரவர்த்தியாகிய அரசனும் பசிநேரிட்டபோது தனது அதிகார உயர்ச்சி முழுதும் விட்டுத் தாழ்ந்த வார்த்தைகளால் 'பசி நேரிட்டது, என்ன செய்வது!' என்று அருகிலிருக்கின்ற அமைச்சர்களிடத்துக் குறை சொல்லுகிறான். பகைவரால் எறியப்பட்டு மார்பிலுருவிய பாணத்தையுங் கையாற் பிடித்துக்கொண்டு எதிரிட்ட பகைவரையெல்லாம் அஞ்சாது ஒரு நிமிஷத்தில் வெல்லத்தக்க சுத்த வீரரும் பசி நேரிட்டபோது, சௌகரியத்தை யிழந்து பசிக்கஞ்சிப் பக்கத்தில் நிற்கின்றவரைப் பார்த்து 'இளைப்பு வருமே' சண்டை எப்படிச் செய்வது!' என்று முறையிடுகின்றார்கள். இவ்வுலக போகங்களோடு இந்திரபோக முதலிய போகங்களையும் துரும்பாக வெறுத்து முற்றும் துறந்து அறிவையறிந்து அனுபவம் விளங்கிய ஞானிகளும், இந்திரியங்களை அடக்கி மனோலயஞ்செய்து உண்மை நிட்டையிலிருக்கின்ற யோகிகளும், இறந்தோரையும் எழுப்பத்தக்க அளவிறந்த மகத்துவங்கள் விளங்கிய சித்தர்களும், முனிவர்களும், தவசிகளும் பசி நேரிட்டபோது தங்கள் தங்கள் அனுபவலட்சியங்களை விட்டு அடுத்த ஊரை நோக்கிப் பலிக்கு வருகின்றார்கள்; பலி நேராதபோது நிலை கலங்குகின்றார்கள். சொற்பனத்தில் ஓர் இழிவு வரினும் அதுகுறித்து உயிர்விடத்தக்க மானிகளும் பசி நேரிட்டபோது, சொல்லத் தகாதவரிடத்துஞ் சொல்லி மானங் குலைகின்றார்கள். சாதி சமய ஆசாரங்களில் அழுத்தமுடைய ஆசாரியர்களும் பசி வந்தபோது, ஆசாரத்தை மறந்து ஆகாரத்திற்கு எதிர்பார்க்கின்றார்கள். கல்வி கேள்விகளில் நிரம்பி அறிதற்கரிய நுட்பங்களை யறிந்து செய்தற்கரிய செய்கைகளைச் செய்து முடிக்கவல்லவர்களும் பசி நேரிட்டபோது, அறிவுங் கருத்தும் அழிந்து தடுமாறுகின்றார்கள். இராப்பகல் தோன்றாது புணர்ச்சி இன்பத்திற் பொங்குகின்ற காமிகளும் பசி நேரிட்டபோது, புணர்ச்சியை மறந்து காமத்தைக் கசந்து கலங்குகின்றார்கள். நாமே பெரியவர் நமக்குமேற் பெரியவரில்லை யென்று இறுமாப்படைகின்ற அகங்காரிகளும் பசி நேரிட்டபோது, அகங்காரங் குலைந்து ஆகாரங்கொடுப்பவரைப் பெரியவராகப் புகழ்கின்றார்கள். ஒருவகைக் காரியங்களில் அனேக வகைகளாக உபசரிக்கச் செய்கின்ற டம்பர்களும் பசி நேரிட்டபோது, டம்பத்தை இழந்து மயங்குகின்றார்கள். இவரிவர் இப்படி இப்படியானால் ஒருவகை ஆதாரமுமில்லாத ஏழைகள் பசி நேரிட்டபோது என்ன பாடு படார்கள்! அந்தக் காலத்தில் அந்த ஏழைகளுக்கு ஆகாரங்கிடைத்தால் எப்படிப்பட்ட சந்தோஷமுண்டாகும்! அந்தச் சந்தோஷத்தைத் தோற்றுவித்தவர்களுக்கு எப்படிப்பட்ட லாபங் கிடைக்கும்! இப்படிப்பட்டதென்று சொல்லுதற்கும் அருமை என்றறிய வேண்டும்.

சீவர்களுக்குப் பசி அதிகரித்த காலத்தில் சீவஅறிவு விளக்கமில்லாமல் மயங்குகின்றது - அது மயங்கவே அறிவுக்கறிவாகிய கடவுள் விளக்கம் மறைபடுகின்றது - அது மறையவே புருடதத்துவம் சோர்ந்து விடுகின்றது - அது சோரவே பிரகிருதிதத்துவம் மழுங்குகின்றது - அது மழுங்கவே, குணங்களெல்லாம் பேதப்படுகின்றன - மனம் தடுமாறிச் சிதறுகின்றது - புத்தி கெடுகின்றது - சித்தம் கலங்குகின்றது - அகங்காரம் அழிகின்றது - பிராணன் சுழல்கின்றது - பூதங்களெல்லாம் புழுங்குகின்றன - வாத பித்த சிலேட்டுமங்கள் நிலை மாறுகின்றன - கண் பஞ்சடைந்து குழிந்து போகின்றது - காது கும்மென்று செவிடுபடுகின்றது - நா உலர்ந்து வறளுகின்றது - நாசி குழைந்து அழல்கின்றது - தோல் மெலிந்து ஸ்மரணை கெடுகின்றது - கை கால் சோர்ந்து துவளுகின்றன - வாக்குத் தொனிமாறிக் குளறுகின்றது - பற்கள் தளருகின்றன - மலசலவழி வெதும்புகின்றது - மேனி கருகுகின்றது - ரோமம் வெறிக்கின்றது - நரம்புகள் குழைந்து நைகின்றன - நாடிகள் கட்டுவிட்டுக் குழைகின்றன - எலும்புகள் கருகிப் பூட்டுகள் நெக்குவிடுகின்றன - இருதயம் வேகின்றது - மூளை சுருங்குகின்றது - சுக்கிலம் வெதும்பி வற்றுகின்றது - ஈரல் கரைகின்றது - இரத்தமும் சலமும் சுவறுகின்றன - மாமிசம் குழைந்து தன்மை கெடுகின்றது - வயிறு பகீரென்றெரிகின்றது - தாப சோபங்கள் மேன்மேலும் உண்டாகின்றன - உயிரிழந்து விடுவதற்கு மிகவுஞ் சமீபித்த அடையாளங்களும் அனுபவங்களும் மேன்மேலும் தோன்றுகின்றன. பசியினால் இவ்வளவு அவத்தைகளும் தோன்றுவது சீவர்களுக்கெல்லாம் பொதுவாகவேயிருக்கின்றது.

இவ்வளவு அவத்தைகளும் ஆகாரங் கிடைத்தபோது உண்டு பசி நீங்க நீங்குகின்றன. அப்போது தத்துவங்களெல்லாம் தழைத்து உள்ளங் குளிர்ந்து அறிவு விளங்கி அகத்திலும் முகத்திலும் சீவர்களையும் கடவுள்களையுந் துளும்பி ஒப்பில்லாத திருப்தியின்பம் உண்டாகின்றது. இப்படிப்பட்ட இன்பத்தை உண்டுபண்ணுகின்ற புண்ணியத்துக்கு எந்தப் புண்ணியத்தை இணையென்று சொல்லலாம்? இந்தப் புண்ணியத்தைச் செய்கின்ற புண்ணியர்களை எந்தத் தெய்வத்துக்குச் சரியென்று சொல்லலாம்? எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாகிய கடவுளம்சமென்றே சத்தியமாக அறியவேண்டும். இதனால் நரக வேதனை சனனவேதனை மரண வேதனை என்கின்ற மூன்று வேதனைகளுங் கூடி முடிந்த வேதனையே பசிவேதனை என்றும், அகம் புறம் நடு கீழ் மேல் பக்கம் என்கிற எவ்விடத்தும் நிறைந்து எக்காலத்தும் வேறுபடாத மோக்ஷ இன்பமே ஆகாரத்தினாலுண்டாகும் திருப்தியின்பம் என்றும் அறியப்படும்.

பசியில்லாவிடில் சீவர்கள் ஆகாரங் குறித்து ஒருவரையொருவர் எதிர்பார்க்க மாட்டார்கள்; எதிர்பாராத பக்ஷத்தில் உபகாரச் செய்கை தோன்றாது. அது தோன்றாதபோது சீவகாருணியம் விளங்காது; அது விளங்காதபோது கடவுளருள் கிடைக்க மாட்டாது. ஆகலால், பசியும் கடவுளாற் கொடுக்கப்பட்ட ஓர் உபகாரக் கருவியென்றே அறியவேண்டும்.

பசியினால் துன்பப்படுகின்றவர்கள் ஆகாரத்தைக் கண்ட காலத்தில் அடைகின்ற சந்தோஷமும் தாய், பிதா, பெண்டு, பிள்ளை, காணி, பூமி, பொன், மணி முதலானவைகளைக் கண்ட காலத்திலும் அடையார்களாயின், ஆகாரம் உண்ட காலத்தில் உண்டாகும் சந்தோஷம் எப்படிப்பட்டதாக இருக்கும்? ஆகலால் இந்த ஆகாரத்தின் சொரூப ரூப சுபாவங்களும் கடவுளருளின் ஏகதேச சொரூப ரூப சுபாவங்களாகவே அறியவேண்டும்.

பசி என்கிற நெருப்பானது ஏழைகள் தேகத்தினுள் பற்றி எரிகின்ற போது ஆகாரத்தால் அவிக்கின்றதுதான் சீவகாருணியம் - பசி என்கிற விஷக்காற்றானது ஏழைகள் அறிவாகிய விளக்கை அவிக்கின்ற தருணத்தில் ஆகாரங்கொடுத்து அவியாமல் ஏற்றுகின்றதே சீவகாருணியம் - கடவுளியற்கை விளக்கத்திற்கு இடமாகிய சீவதேகங்களென்கிற ஆலயங்கள் பசியினால் பாழாகுந் தருணத்தில் ஆகாரங் கொடுத்து அவ்வாலயங்களை விளக்கஞ் செய்விப்பதே சீவகாருணியம் - கடவுள் இன்பத்தைப் பெறுகின்ற நிமித்தம் தேகங்களிலிருந்து குடித்தனஞ் செய்கின்ற சீவரது தத்துவக் குடும்ப முழுதும் பசியினால் நிலை தடுமாறி அழியுந் தருணத்தில் ஆகாரங்கொடுத்து அக்குடும்ப முழுதும் நிலைபெறச் செய்வதே சீவகாருணியம் - பசி என்கிற புலியானது ஏழை உயிர்களைப் பாய்ந்து கொல்லத் தொடங்குந் தருணத்தில் அப்புலியைக் கொன்று அவ்வுயிரை இரட்சிப்பதே சீவகாருணியம் - பசி என்கிற விஷம் தலைக்கேறிச் சீவர் மயங்குந் தருணத்தில் ஆகாரத்தால் அவ்விஷத்தை இறக்கி மயக்கந் தெளியச் செய்வதே சீவகாருணியம் - பசி என்கிற கொடுமையாகிய தேள் வயிற்றிற் புகுந்து கொட்டுகின்றபோது கடுப்பேறிக் கலங்குகின்ற ஏழைகளுக்கு ஆகாரத்தால் அக்கடுப்பை மாற்றிக் கலக்கத்தைத் தீர்ப்பதே சீவகாருணியம் - 'நேற்று இராப்பகல் முழுதும் நம்மை அரைப்பங்கு கொன்றுதின்ற பசியென்கிற பாவி இன்றும் வருமே! இதற்கு என்ன செய்வோம்!' என்று ஏக்கங் கொள்கின்ற ஏழைச் சீவர்களது ஏக்கத்தை நீக்குவதுதான் சீவகாருணியம் - 'வெயிலேறிப் போகின்றதே, இனிப் பசியென்கிற வேதனை வந்து சம்பவிக்குமே! இந்த விதி வசத்திற்கு என்ன செய்வது!' என்று தேனில் விழுந்த ஈயைப்போல, திகைக்கின்ற ஏழைச் சீவர்களுடைய திகைப்பை நீக்குவதுதான் சீவகாருணியம் - 'இருட்டிப் போகின்றதே, இனி ஆகாரங் குறித்து எங்கே போவோம்! யாரைக் கேட்போம்! என்ன செய்வோம்!' என்ற விசாரத்தில் அழுந்திய ஏழைச் சீவர்களது விசாரத்தை மாற்றுவதே சீவகாருணியம் - 'நடந்து நடந்து காலுஞ் சோர்ந்தது, கேட்டுக்கேட்டு வாயுஞ் சோர்ந்தது, நினைத்து நினைத்து மனமுஞ் சோர்ந்து இனி இப்பாவி வயிற்றுக் கென்ன செய்வோம்!' என்று கண்­ர் வடிக்கின்ற ஏழைகளுக்கு ஆகாரங் கொடுத்துக் கண்­ரை மாற்றுவதே சீவகாருணியம் - 'பகற்போதும் போய்விட்டது, பசியும் வருத்துகின்றது, வேறிடங்களிற் போக வெட்கந் தடுக்கின்றது, வாய் திறந்து கேட்க மானம் வலிக்கின்றது, வயிறு எரிகின்றது, உயிரை விடுவதற்கும் உபாயந் தெரியவில்லை; இவ்வுடம்பை ஏன் எடுத்தோம்!' என்று மனமும் முகமும் சோர்ந்து சொல்வதற்கு நாவெழாமல் உற்பாத சொப்பனங் கண்ட ஊமையைப் போல் மனம் மறுகுகின்ற மானிகளாகிய சீவர்களுக்கு ஆகாரங்கொடுத்து மானத்தைக் காப்பதுவே சீவகாருணியம் - 'நாம் முன் பிறப்பில் பசித்தவர்கள் பசிக் குறிப்பறிந்து பசியை நீக்கியிருந்தால், இப்பிறப்பில் நமது பசிக்குறிப்பறிந்து பசியை நீக்குவதற்குப் பிறிதொருவர் நேர்வார்; அப்போது அப்படி நாம் செய்ததில்லை, இப்போது நமக்கிப்படிச் செய்வாருமில்லை' என்று விவகரித்துக்கொண்டு தூக்கம் பிடியாமல் துக்கப்படுகின்ற ஏழைச் சீவர்களுக்கு ஆகாரங் கொடுத்துத் துக்கத்தை நீக்கித் தூக்கம் பிடிக்க வைப்பதே சீவகாருணியம். தேக முழுதும் நரம்புகள் தோன்றப் பசியினால் இளைத்து உயிரொடுங்கி மூர்ச்சை மூடிய காலத்தும் அயலாரைக் கேட்பது துணியாமற் கடவுளை நினைத்து நினைத்து நெருப்பிற் படுத்து நித்திரை செய்யத் தொடங்குவாரைப் போல், அடிவயிற்றிற் கொடிய பசி நெருப்பை வைத்துப் படுக்கத் தொடங்குகின்ற விவேகி களுக்கு ஆகாரங் கொடுத்து அந்தப் பசி நெருப்பை ஆற்றுவதே சீவகாருணியம் - 'நேற்றுப் பட்டினி கிடந்தது போல் இன்றும் பட்டினி கிடப்பது எப்படி? நாம் பாலிய வசத்தால் இன்றும் பட்டினி கிடக்கத் துணிவோ மாயினும் பட்டினி சகியாத நமது ஏழை மனைவி வயிற்றுக்கு யாது செய்வோம்? இவள் பசியைக் குறிப்பதும் பெரிதல்ல, வார்த்திப திசையால் மிகவுஞ் சோர்ந்த நமது தாய் தந்தைகள் இன்றும் பட்டினி கிடந்தால் இறந்து விடுவார்களே! இதற்கென்ன செய்வோம்? பசியினால் அழுதழுது களைத்த நமது புத்திரர்களது சோர்ந்த முகத்தை எப்படிப் பார்ப்போம்?' என்று எண்ணி எண்ணிக் கொல்லன் உலையிலூத மூண்ட நெருப்பைப் போல், பசி நெருப்பும் பயநெருப்பும் விசாரநெருப்பும் உள்ளே மூண்டபடியிருக்கக் கன்னப்புடையில் கைகளை வைத்துக் கொண்டு கண்களில் நீர் கலங்க வருந்துகின்ற ஏழைகளுக்கு ஆகாரங் கொடுத்து வருத்தத்தை மாற்றுவதே சீவகாருணியம் - 'கண் கை கால் முதலிய உறுப்புக்களிற் குறைவில்லாதவர்களாகி ஆகாரஞ் சம்பாதிக்கத் தக்க சக்தி யுள்ளவர்களும் பசியால் வருந்தி இதோ படுத்திருக்கின்றார்கள்; குருடும் செவிடும் ஊமையும் முடமுமாக விருக்கின்ற நமக்கு ஆகாரம் எந்த வழியாற் கிடைக்கும்! பசி எப்படி நீங்கும்!' என்று தனித்தனி நினைத்து நினைத்துத் துக்கப்படுகின்ற ஏழைகளுக்கு ஆகாரங் கொடுத்துத் துக்கத்தை நீக்குவதே சீவகாருணியம் - பசியினால் வருந்துகின்றவர்கள் எந்தத் தேசத்தாராயினும் எந்தச் சமயத்தாராயினும் எந்தச் சாதியாராயினும் எந்தச் செய்கையாராயினும் அவர்கள் தேச ஒழுக்கம், சமய ஒழுக்கம், சாதி ஒழுக்கம், செய்கை ஒழுக்கம் முதலானவைகளைப் போதித்து விசாரியாமல், எல்லாச் சீவர்களிடத்தும் கடவுள் விளக்கம் பொதுவாக விளங்குவதை அறிந்து பொதுவாகப் பார்த்து அவரவர் ஒழுக்கத்திற்குத் தக்கபடி அவர்கள் பசியை நிவர்த்தி செய்விப்பதே சீவகாருணியம் - சன்மார்க்க ஒழுக்கத்திற்கு ஒத்த சத்துவ ஆகாரத்தால் பசிநிவர்த்தி செய்து கொள்ளத் தக்க மிருகம் பறவை ஊர்வன தாவரம் என்கின்ற உயிர்களுக்குப் பசிவந்தபோது பசிநிவர்த்தி செய்விப்பதே சீவகாருணியம்.

பசியை நிவர்த்தி செய்துகொள்ளத் தக்க புவனபோக சுதந்தரங்களைப் பெறுதற்குரிய அறிவிருந்தும் பூர்வகர்மத்தாலும் அஜாக்கிரதையாலும் அச்சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்ளாமல் பசியினால் வருந்துகின்ற சீவர்களுக்கு ஆகாரங் கொடுத்து அந்த பசி வருத்தத்தை நீக்கித் திருப்தியின்பத்தை உண்டு பண்ணுவதற்குக் காரணமாகிய சீவகாருணியம் என்கின்ற திறவுகோலைக் கொண்டுதான் மோட்சமாகிய மேல்வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே புகுந்து எக்காலத்தும் அழியாத இன்பத்தை அனுபவித்து வாழவேண்டும். ஆகலில், சீவகாருணிய மென்கின்ற மோட்ச வீட்டுத் திறவுகோலைக் காலமுள்ள போதே சம்பாதித்துக்கொண்ட சமுசாரிகள் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கிற சாதன சகாயங்களை வேண்டாமல், எக்காலத்தும் அடையாத இன்ப வீட்டை அடைந்து அவ்வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே புகுந்து நித்திய முத்தர்களாய் வாழ்வார்கள்.

புண்ணியபூமிகளை வலஞ்செய்தல், புண்ணியதீர்த்தங்களிலாடல், புண்ணியதலங்களில் வசித்தல், புண்ணியமூர்த்திகளைத் தரிசித்தல், தோத்திரஞ்செய்தல், ஜெபஞ்செய்தல், விரதஞ்செய்தல், யாகஞ்செய்தல், பூசைசெய்தல் முதலிய சரியை கிரியைகளைச் செய்கின்ற விரதிகளும் பத்தர்களும் இருடிகளும், உணவை நீக்கி உறக்கத்தை விட்டு விஷயச்சார்புகளைத் துறந்து இந்திரியங்களை அடக்கி மனோலயஞ் செய்து யோகத்திலிருக்கின்ற யோகிகளும், அளவிறந்த சித்தியின்பங்களைப் பெற்ற சித்தர்களும், நித்தியா நித்தியங்களை அறிந்து எல்லாப் பற்றுக்களையும் துறந்து பிரமானுபவத்தைப் பெற்ற ஞானிகளும், சீவகாருணியம் என்கிற திறவுகோலைச் சம்பாதித்துக் கொள்ளாதவர்களானால், மோட்ச மென்கிற மேல்வீட்டிற்கு முன்னும் பின்னுமாக ஏறிச் சமீபத்திற் காத்திருந்து மீளவும் அத்திறவுகோலைச் சம்பாதிக்கத் திரும்புவார்களல்லது, கதவைத் திறந்து உள்ளே புகுந்து இன்பத்தை அடைந்து வாழமாட்டார்க ளென்று உண்மையாக அறியவேண்டும். இதனால், அறிவு விளங்கிய சீவர்களுக்கெல்லாம் சீவகாருணியமே கடவுள் வழிபாடு என்றும் அறியப்படும்.

அன்றியும், சீவகாருணிய ஒழுக்கத்தை உடையவர்களாகி அருந்தல் பொருந்தல் முதலிய பிரபஞ்ச போகங்களை அனுபவிக்கின்ற சமுசாரிகளெல்லாம் சர்வசக்தியுடைய கடவுளருளுக்கு முழுதும் பாத்திரமாவார்கள். சீவகாருணிய ஒழுக்கமில்லாமல் ஞானம், யோகம், தவம், விரதம், ஜெபம், தியானம் முதலியவைகளைச் செய்கின்றவர்கள் கடவுளருளுக்குச் சிறிதும் பாத்திரமாகார்கள். அவர்களை ஆன்மவிளக்கமுள்ளவர்களாகவும் நினைக்கப்படாது. சீவகாருணிய மில்லாது செய்யப்படுகிற செய்கைக ளெல்லாம் பிரயோஜன மில்லாத மாயாசாலச் செய்கைகளே யாகுமென்று அறியவேண்டும்.

எல்லாச் சீவர்களும் கடவுள் இயற்கையுண்மை ஏகதேசங்களாதலாலும் அவரவர் இடங்களிற் கடவுள் அருள்விளக்கம் விளங்குதலாலும், சமுசாரிகளுள் தமது தாய் தந்தை புணர்ந்தோர் மக்கள் துணைவர் முதலிய குடும்ப மட்டில் பசியாற்றிக் கொள்ளத் தக்க அற்பசக்தியுள்ள சமுசாரிகள் தாய் பிதா மக்கள் துணைவர் முதலிய குடும்பத்தாரைப் பசியினாற் பரிதபிக்க விட்டு அயலார்க்குப் பசியாற்றத் தொடங்குதலும், தம்மிடத்துப் பசித்து வந்த அயலாரை அந்தப் பசியால் பரிதபிக்க விட்டுத் தம் குடும்பத்தார் பசியை யாற்றத் தொடங்குதலும், கடவுளருளுக்குச் சம்மதமல்ல. ஆதலால், தமது குடும்பச் செலவைக் கூடியமட்டில் சிக்கனஞ் செய்து இருதிறத்தார் பசியும் நீக்குதல் வேண்டுமென்றும்; அற்பசத்தியினுங் குறைபட்டுத் தமது குடும்பம் மட்டிலும் பசியாற்றுவிப்பதற்குப் பிரயாசையால் மிகச் சிறிய முயற்சியுடைய சமுசாரிகள் தமது குடும்ப மட்டிலாவது பசியாற்றுவித்துக் கொண்டு, தம்மிடத்துப் பசித்துவந்த அயலார் விஷயத்தில் மிகவும் தயவுடையவர்களாகி அவர் பசியை மற்றொருவரைக் கொண்டாவது ஆற்றுவிப்பதற்குத் தக்க முயற்சி யெடுத்துக் கொள்ளவேண்டு மென்றும்; இயல்புள்ள பிரபல சமுசாரிகள் தங்கள் தங்கள் வருவாய்க்குத் தக்கவரையில் தாய், பிதா, புணர்ந்தோர், மக்கள், துணைவர், உறவினர், சினேகர், அதிதிகள், பெரியர், அடிமைகள், அயலார், பகைவர் முதலியவர்களுக்கும், தமது குடும்பத்திற்குச் சகாயமாகத் தேடிய பசு, எருது, எருமை, ஆடு, குதிரை, தாவர முதலிய பிராணிகளுக்கும், பசியை ஆற்றுவித்துத் திருப்தியின்பத்தை உண்டுபண்ண வேண்டுமென்றும்; விவாகம் புத்திரப்பேறு தெய்வம் படைத்தல் முதலிய பலவகைச் செய்கைகளில் வேறு வேறு சடங்குகளும் வேறு வேறு வினோதங்களும் வேறு வேறு பெருமைப்பாடுகளும் குறித்துப் பொருட் செலவு செய்தலை அமைத்து, விவாக முதலிய அந்தந்தச் செய்கைகளிலும் பசித்த சீவர்களுக்குப் பசியை ஆற்றுவித்து இன்பத்தை யுண்டுபண்ணுகின்ற சிறப்பினையே செய்யவேண்டுமென்றும், அப்படிச் செய்யில் பசித்தவர் பசி நீங்கி அடைந்த இன்பத்திலும் அனேக மடங்கு அதிகமான இன்பத்தைத் தாம் அடைவார்களென்றும் சத்தியமாக அறியவேண்டும்.

சமுசாரிகள் விவாக முதலிய விசேஷ காரியங்களில் பந்தலை அலங்கரித்தும், அவ்விடத்தில் வேறு வேறு சடங்குகளைச் செய்வித்தும், ஆடல் பாடல் வரிசை ஊர்வலம் முதலிய வினோதங்களையும் அப்பவர்க்கம் சித்திரான்னம் முதலிய பெருமைப்பாடுகளையும் நடத்தியும், எக்களிப்பில் அழுந்தியிருக்குந் தருணத்தில் பசித்த ஏழைகள் முகத்தைப் பார்க்கவும் சம்மதிக்கவில்லை. இப்படிப்பட்ட சந்தோஷ காலத்தில் தமக்காயினும் தமது மக்கள் துணைவர் முதலியோர்க்காயினும் ஒவ்வோர் ஆபத்து நேரிடுகின்றது. அப்போது அவ்வளவு சந்தோஷத்தையும் இழந்து துக்கப்படுகிறார்கள். இப்படித் துக்கப்படும்போது அலங்காரஞ் செய்த பந்தலும், சங்கல்ப விகல்பமான சடங்குகளும் ஆடல் பாடல் வாத்தியம் வரிசை ஊர்வலம் முதலிய வினோதங்களும் அப்பவர்க்கம் சித்திரான்னம் முதலிய பெருமைப்பாடுகளும் அந்த ஆபத்தைத் தடைசெய்யக் கண்டதில்லை. அந்தச் சுபகாரியத்தில் உள்ளபடியே பசித்த சீவர்களுக்கு ஆகாரங் கொடுத்துப் பசியை நீக்கி அவர்கள் அகத்திலும் முகத்திலும் கடவுள் விளக்கத்தையும் கடவுளின்பத்தையும் வெளிப்படச் செய்திருந்தார்களானால், அந்த விளக்கமும் இன்பமும் அத்தருணத்தில் நேரிட்ட ஆபத்தை நீக்கி விளக்கத்தையும் இன்பத்தையும் சத்தியமாக உண்டுபண்ணுமல்லவா? ஆகலில் விவாக முதலிய விசேஷச் செய்கைகளிலும் தங்கள் தங்கள் தரத்திற்கு ஒத்தபடி பசித்தவர்களது பசியை ஆற்றுவித்துத் திருப்தியின்பத்தை உண்டுபண்ணுவது முக்கியமென் றறியவேண்டும். சூலை குன்மம் குஷ்டம் முதலிய தீராத வியாதிகளால் வருந்துகின்ற சமுசாரிகள் தங்கள் தரத்திற்கு ஒத்தபடி பசித்தவர்களுக்குப் பசி யாற்றுவிப்பதே விரதமாக அனுசரித்தார்களானால், அந்தச் சீவகாருணிய அனுசரிப்பே நல்ல மருந்தாக அந்த வியாதிகளை நிவர்த்தி செய்து, விசேஷ சௌக்கியத்தை உண்டு
பண்ணுமென்பது உண்மை. பல நாள் சந்ததி யில்லாமல் பலபல விரதங்களைச் செய்து வருந்துகின்ற சமுசாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளது பசியை ஆற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்தச் சீவகாருண்ய அனுசரிப்பு நல்ல அறிவுள்ள சந்ததியை உண்டுபண்ணு மென்பது உண்மை. அற்ப வயதென்று குறிப்பினால் அறிந்துகொண்டு இறந்து போவதற்கு அஞ்சி விசாரப்படுகின்ற சமுசாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளுக்குப் பசியை ஆற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்த சீவகாருணிய அனுசரிப்பு தீர்க்காயுளை உண்டுபண்ணுமென்பது உண்மை. கல்வி அறிவு செல்வம் போகம் முதலியவைகளைக் குறித்து வருந்துகின்ற சமுசாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளுக்குப் பசியாற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்தச் சீவகாருணிய அனுசரிப்பு கல்வி அறிவு செல்வம் போகம் முதலானவைகளை உண்டு பண்ணுமென்பது உண்மை.

பசித்தவர்களுக்குப் பசியாற்றுவிப்பதே விரதமாகக் கொண்ட சீவகாருணிய முள்ள சமுசாரிகளுக்குக் கோடையில் வெயிலும் வருத்தாது, மண்ணும் சூடு செய்யாது - பெருமழை, பெருங்காற்று, பெரும்பனி, பேரிடி, பெருநெருப்பு முதலிய உற்பாதங்களும் துன்பம் செய்விக்கமாட்டா - விடூசிகை* விஷக்காற்று விஷசுரம் முதலிய அசாத்திய பிணிகளுமுண்டாகா - அந்தச் சீவகாருணியமுள்ள சமுசாரிகள் ஆற்று வெள்ளத்தாலும் கள்ளர்களாலும் விரோதிகளாலும் கலக்கப்படார்கள் - அரசர்களாலும் தெய்வங்களாலும் அவமதிக்கப்படார்கள் - சீவகாருணிய முள்ள சமுசாரிகளது விளைநிலத்தில் பிரயாசை யில்லாமலே விளைவு மேன்மேலும் உண்டாகும் - வியாபரத்தில் தடையில்லாமல் லாபங்களும், உத்தியோகத்திற் கெடுதியில்லாத மேன்மையும் உண்டாகும் - சுற்றங்களாலும் அடிமைகளாலும் சூழப்படுவார்கள் - துஷ்டமிருகங்களாலும் துஷ்ட ஜந்துக்களாலும் துஷ்டப் பிசாசுகளாலும் துஷ்ட தெய்வங்களாலும் பயஞ்செய்யப்படார்கள் - சீவகாருணியமுள்ள சமுசாரிகளுக்கு எப்படிப்பட்ட ஆபத்துக்களும் அஜாக்கிரதையினாலும் ஊழ்வகையினாலும் சத்தியமாக வராது.

பசித்தவர்களுக்குப் பசியாற்றுவித்து இன்பத்தை உண்டு பண்ணுகின்ற சீவகாருண்ய ஒழுக்கமாகிய மேலான விரதமானது தேவர்கள், மனிதர்கள், பிரமசாரிகள், சமுசாரிகள், தவசிகள், சந்நியாசிகள், ஆண்சாதியர், பெண்சாதியர், வார்த்திபர், வாலிபர், உயர்ந்தோர், தாழ்ந்தோர் முதலிய யாவராலும் அவசியம் செய்யத்தக்க தென்பது கடவுளாணை யென்றறிய வேண்டும்.

பசித்தவர்க்குப் பசியை நீக்குகின்ற விஷயத்தில் புருஷனைப் பெண்சாதி தடுத்தாலும், பெண்சாதியைப் புருஷன் தடுத்தாலும், பிள்ளைகளைத் தந்தை தடுத்தாலும், தந்தையைப் பிள்ளைகள் தடுத்தாலும், சீஷரை ஆசாரியர் தடுத்தாலும், அடியாரை ஆண்டவன் தடுத்தாலும், குடிகளை அரசன் தடுத்தாலும் அந்தத் தடைகளால் சிறிதுந் தடைபடாமல் அவரவர் செய்த நன்மை தீமைகள் அவரவரைச் சேருமல்லது வேரிடத்திற் போகா வென்பதை உண்மையாக நம்பிச் சீவகாருணிய ஒழுக்கத்தை நடத்தவேண்டுமென்றும் அறியவேண்டும்.

உள்ளபடி பசியால் வருந்துகின்ற சீவர்களுக்கு ஆகாரங்கொடுக்க நினைத்தபோது, நினைத்த புண்ணியரது மனம் வேறு பற்றுக்களை விட்டுச் சுத்தக் கரணமாகி நினைத்தபடியால், அந்தப் புண்ணியர்களை யோகிகளென்றே உண்மையாக அறியவேண்டும். ஆகாரங் கொடுக்க நினைத்தபடி உபசரித்துக் கொடுக்கும்போது, அவருண்ணுவது தாமுண்ணுவதாக அறிந்து களிக்கின்ற படியால், ஞானிகளென்றே உண்மையாக அறியவேண்டும். ஆகாரங்கொடுக்க உண்டு பசி தீர்ந்தவர்களுக்கு அத்தருணத்தில் ஆன்மாவின் உள்ளும் புறத்தும் கீழும் மேலும் நடுவும் பக்கமும் நிறைந்து கரண முதலிய தத்துவங்களெல்லாம் குளிர்வித்துத் தேகமுழுதும் சில்லென்று தழைய முகத்தினிடமாகப் பூரித்து விளங்குகின்ற கடவுள்விளக்கத்தையும் திருப்தியின்பமாகிய கடவுளின் இன்பத்தையும் பிரத்தியட்சத்தில் தரிசித்து அனுபவிக்கின்றார்க ளாதலால், அந்தப் புண்ணியர்கள் கடவுளைக் கண்டவர்களென்றும் கடவுளின்பத்தை அனுபவிக்கின்ற முத்தரென்றும் அறியவேண்டும். பசி நீங்க உண்டு சந்தோஷ’த்தவர்கள் இந்தப் புண்ணியர்களைத் தெய்வமாகப் பாவிக்கின்றார்களாதலால், இவர்களே தெய்வமுமென்று உண்மையாக அறியவேண்டும்.

சீவகாருணிய ஒழுக்க முடையவர்களாகிச் சீவர்களைப் பசி யென்கின்ற அபாயத்தினின்றும் நீங்கச் செய்கின்ற உத்தமர்கள், எந்தச் சாதியாராயினும், எந்தச் சமயத்தாராயினும், எந்தச் செய்கையை யுடைவர்க ளாயினும், தேவர், முனிவர், சித்தர், யோகர் முதலிய யாவராலும் வணங்கத்தக்க சிறப்புடையவர்களென்று சர்வசக்தியையுடைய கடவுள்சாட்சியாக சத்தியஞ் செய்யப்படுமென்று அறிய வேண்டும்.

இன்னும் இந்தச் சீவகாருணிய ஒழுக்கத்தின் விரிவைச் சமரச வேதத்திற் கண்டு கொள்ளலாம்.

பிரபவ வருடம் சித்திரை மாதம்

_______________________________________________________________________________________________

* வீடுசிகை - வைசூரி, அம்மை

திருச்சிற்றம்பலம்

ஜீவகாருண்ய ஒழுக்கம் முதற்பிரிவு முற்றிற்று.

No audios found!