திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
ஆற்றா விண்ணப்பம்
āṟṟā viṇṇappam
காதல் விண்ணப்பம்
kātal viṇṇappam
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

051. இரங்கல் விண்ணப்பம்
iraṅkal viṇṇappam

    திருவொற்றியூர்
    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. பற்று நோக்கிய பாவியேன் தனக்குப்
    பரிந்து நீஅருட் பதம்அளித் திலையே
    மற்று நோக்கிய வல்வினை அதனால்
    வஞ்ச மாயையின் வாழ்க்கையின் மனத்தின்
    அற்று நோக்கிய நோய்களின் மூப்பின்
    அலைதந் திவ்வுல கம்படும் பாட்டை
    உற்று நோக்கினால் உருகுதென் உள்ளம்
    ஒற்றி மேவிய உலகுடை யோனே.
  • 2. கொடிய நெஞ்சினேன் கோபமே அடைந்தேன்
    கோடி கோடியாம் குணப்பழு துடையேன்
    கடிய வஞ்சகக் கள்வனேன் தனக்குன்
    கருணை ஈந்திடா திருந்திடில் கடையேன்
    அடியன் ஆகுவ தெவ்வணம் என்றே
    ஐய ஐயநான் அலறிடு கின்றேன்
    ஒடிய மும்மலம் ஒருங்கறுத் தவர்சேர்
    ஒற்றி மேவிய உலகுடை யோனே.
  • 3. காமம் என்பதோர் உருக்கொடிவ் வுலகில்
    கலங்கு கின்றஇக் கடையனேன் தனக்குச்
    சேமம் என்பதாம் நின்அருள் கிடையாச்
    சிறுமை யேஇன்னும் செறிந்திடு மானால்
    ஏம நெஞ்சினர் என்றனை நோக்கி
    ஏட நீகடை என்றிடில் அவர்முன்
    ஊமன் ஆகுவ தன்றிஎன் செய்வேன்
    ஒற்றி மேவிய உலகுடை யோனே.
  • 4. மண்ணில் நின்றவர் வாழ்வதும் கணத்தில்
    வருந்தி மாய்வதும் மற்றிவை எல்லாம்
    கண்ணின் நேர்நிதங் கண்டும்இவ் வாழ்வில்
    காதல் நீங்கிலாக் கல்மனக் கொடியேன்
    எண்ணி நின்றஓர் எண்ணமும் முடியா
    தென்செய் கேன்வரும் இருவினைக் கயிற்றால்
    உண்ணி ரம்பநின் றாட்டுகின் றனைநீ
    ஒற்றி மேவிய உலகுடை யோனே.
  • 5. வெருட்சி யேதரும் மலஇரா இன்னும்
    விடியக் கண்டிலேன் வினையினேன் உள்ளம்
    மருட்சி மேவிய தென்செய்கேன் உன்பால்
    வருவ தற்கொரு வழியும்இங் கறியேன்
    தெருட்சி யேதரும் நின்அருள் ஒளிதான்
    சேரில் உய்குவேன் சேர்ந்தில தானால்
    உருட்சி ஆழிஒத் துழல்வது மெய்காண்
    ஒற்றி மேவிய உலகுடை யோனே.
  • 6. யாதும் உன்செய லாம்என அறிந்தும்
    ஐய வையமேல் அவர்இவர் ஒழியாத்
    தீது செய்தனர் நன்மைசெய் தனர்நாம்
    தெரிந்து செய்வதே திறம்என நினைத்துக்
    கோது செய்மலக் கோட்டையைக் காவல்
    கொண்டு வாழ்கிறேன் கண்டிட இனிநீ
    ஓது செய்வதொன் றென்னுயிர்த் துணையே
    ஒற்றி மேவிய உலகுடை யோனே.
  • 7. பந்த மட்டின்ஆம் பாவிநெஞ் சகத்தால்
    பவப்பெ ருங்கடல் படிந்துழன் றயர்ந்தேன்
    இந்த மட்டில்நான் உழன்றதே அமையும்
    ஏற வேண்டும்உன் எண்ணமே தறியேன்
    அந்த மட்டினில் இருத்தியோ அன்றி
    அடிமை வேண்டிநின் அருட்பெரும் புணையை
    உந்த மட்டினால் தருதியோ உரையாய்
    ஒற்றி மேவிய உலகுடை யோனே.
  • 8. ஞான மென்பதின் உறுபொருள் அறியேன்
    ஞானி அல்லன்நான் ஆயினும் கடையேன்
    ஆன போதிலும் எனக்குநின் அருள்ஓர்
    அணுவில் பாதியே ஆயினும் அடைந்தால்
    வான மேவிய அமரரும் அயனும்
    மாலும் என்முனம் வலியிலர் அன்றே
    ஊனம் நீக்கிநல் அருள்தரும் பொருளே
    ஒற்றி மேவிய உலகுடை யோனே.
  • 9. அளிய நெஞ்சம்ஓர் அறிவுரு வாகும்
    அன்பர் தம்புடை அணுகிய அருள்போல்
    எளிய நெஞ்சினேற் கெய்திடா தேனும்
    எள்ளில் பாதிமட் டீந்தருள் வாயேல்
    களிய மாமயல் காடற எறிந்தாங்
    கார வேரினைக் களைந்துமெய்ப் போத
    ஒளிய வித்தினால் போகமும் விளைப்பேன்
    ஒற்றி மேவிய உலகுடை யோனே.
  • 10. நாக நாட்டதின் நலம்பெற வேண்டேன்
    நரகில் ஏகென நவிலினும் அமைவேன்
    ஆகம் நாட்டிடை விடுகெனில் விடுவேன்
    அல்லல் ஆம்பவம் அடைஎனில் அடைவேன்
    தாகம் நாட்டிய மயல்அற அருள்நீர்
    தருதல் இல்எனச் சாற்றிடில் தரியேன்
    ஓகை நாட்டிய யோகியர் பரவும்
    ஒற்றி மேவிய உலகுடை யோனே.

இரங்கல் விண்ணப்பம் // இரங்கல் விண்ணப்பம்

No audios found!