திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
இரேணுகை பஞ்சகம்
irēṇukai pañsakam
கண்ணமங்கைத் தாயார் துதி
kaṇṇamaṅkait tāyār tuti
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

065. வைத்தியநாதர் பதிகம்
vaittiyanātar patikam

    புள்ளிருக்குவேளூர்
    பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. ஓகைமட வார்அல்கு லேபிரம பதம்அவர்கள்
    உந்தியே வைகுந்தம்மேல்
    ஓங்குமுலை யேகைலை அவர்குமுத வாயின்இதழ்
    ஊறலே அமுதம்அவர்தம்
    பாகனைய மொழியேநல் வேதவாக் கியம்அவர்கள்
    பார்வையே கருணைநோக்கம்
    பாங்கின்அவ ரோடுவிளை யாடவரு சுகமதே
    பரமசுக மாகும்இந்த
    யூகமறி யாமலே தேகம்மிக வாடினீர்
    உறுசுவைப் பழம்எறிந்தே
    உற்றவெறு வாய்மெல்லும் வீணர்நீர் என்றுநல்
    லோரைநிந் திப்பர்அவர்தம்
    வாகைவாய் மதமற மருந்தருள்க தவசிகா
    மணிஉலக நாதவள்ளல்
    மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
    வளர்வைத் தியநாதனே.
  • 2. உண்டதே உணவுதான் கண்டதே காட்சிஇதை
    உற்றறிய மாட்டார்களாய்
    உயிருண்டு பாவபுண் ணியமுண்டு வினைகளுண்
    டுறுபிறவி உண்டுதுன்பத்
    தொண்டதே செயுநரக வாதைஉண் டின்பமுறு
    சொர்க்கமுண் டிவையும்அன்றித்
    தொழுகடவுள் உண்டுகதி உண்டென்று சிலர்சொலும்
    துர்ப்புத்தி யால்உலகிலே
    கொண்டதே சாதகம் வெறுத்துமட மாதர்தம்
    கொங்கையும் வெறுத்துக்கையில்
    கொண்டதீங் கனியைவிட் டந்தரத் தொருபழம்
    கொள்ளுவீர் என்பர்அந்த
    வண்டர்வா யறஒரு மருந்தருள்க தவசிகா
    மணிஉலக நாதவள்ளல்
    மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
    வளர்வைத் தியநாதனே.
  • 3. உம்பர்வான் அமுதனைய சொற்களாற் பெரியோர்
    உரைத்தவாய் மைகளைநாடி
    ஓதுகின் றார்தமைக் கண்டவ மதித்தெதிரில்
    ஒதிபோல நிற்பதுமலால்
    கம்பர்வாய் இவர்வாய்க் கதைப்பென்பர் சிறுகருங்
    காக்கைவாய்க் கத்தல்இவர்வாய்க்
    கத்தலில் சிறிதென்பர் சூடேறு நெய்ஒரு
    கலங்கொள்ள வேண்டும்என்பர்
    இம்பர்நாம் கேட்டகதை இதுவெண்பர் அன்றியும்
    இவர்க்கேது தெரியும்என்பர்
    இவைஎலாம் எவனோஓர் வம்பனாம் வீணன்முன்
    இட்டகட் டென்பர்அந்த
    வம்பர்வா யறஒரு மருந்தருள்க தவசிகா
    மணிஉலக நாதவள்ளல்
    மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
    வளர்வைத் தியநாதனே.
  • 4. கல்லையும் உருக்கலாம் நார்உரித் திடலாம்
    கனிந்தகனி யாச்செய்யலாம்
    கடுவிடமும் உண்ணலாம் அமுதாக்க லாம்கொடுங்
    கரடிபுலி சிங்கமுதலா
    வெல்லுமிரு கங்களையும் வசமாக்க லாம்அன்றி
    வித்தையும் கற்பிக்கலாம்
    மிக்கவா ழைத்தண்டை விறகாக்க லாம்மணலை
    மேவுதேர் வடமாக்கலாம்
    இல்லையொரு தெய்வம்வே றில்லைஎம் பால்இன்பம்
    ஈகின்ற பெண்கள்குறியே
    எங்கள்குல தெய்வம்எனும் மூடரைத் தேற்றஎனில்
    எத்துணையும் அரிதரிதுகாண்
    வல்லையவர் உணர்வற மருந்தருள்க தவசிகா
    மணிஉலக நாதவள்ளல்
    மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
    வளர்வைத் தியநாதனே.
  • 5. படிஅளவு சாம்பலைப் பூசியே சைவம்
    பழுத்தபழ மோபூசுணைப்
    பழமோ எனக்கருங் கல்போலும் அசையாது
    பாழாகு கின்றார்களோர்
    பிடிஅளவு சாதமும் கொள்ளார்கள் அல்லதொரு
    பெண்ணைஎனி னுங்கொள்கிலார்
    பேய்கொண்ட தோஅன்றி நோய்கொண்ட தோபெரும்
    பித்தேற்ற தோஅறிகிலேன்
    செடிஅளவு ஊத்தைவாய்ப் பல்லழுக் கெல்லாம்
    தெரிந்திடக் காட்டிநகைதான்
    செய்துவளை யாப்பெரும் செம்மரத் துண்டுபோல்
    செம்மாப்பர் அவர்வாய்மதம்
    மடிஅளவ தாஒரு மருந்தருள்க தவசிகா
    மணிஉலக நாதவள்ளல்
    மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
    வளர்வைத் தியநாதனே.
  • 6. பெண்கொண்ட சுகமதே கண்கண்ட பலன்இது
    பிடிக்கஅறி யாதுசிலர்தாம்
    பேர்ஊர் இலாதஒரு வெறுவெளியி லேசுகம்
    பெறவே விரும்பிவீணில்
    பண்கொண்ட உடல்வெளுத் துள்ளே நரம்பெலாம்
    பசைஅற்று மேல்எழும்பப்
    பட்டினி கிடந்துசா கின்றார்கள் ஈதென்ன
    பாவம்இவர் உண்மைஅறியார்
    கண்கொண்ட குருடரே என்றுவாய்ப் பல்எலாங்
    காட்டிச் சிரித்துநீண்ட
    கழுமரக் கட்டைபோல் நிற்பார்கள் ஐயஇக்
    கயவர்வாய் மதமுழுதுமே
    மண்கொண்டு போகஓர் மருந்தருள்க தவசிகா
    மணிஉலக நாதவள்ளல்
    மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
    வளர்வைத் தியநாதனே.
  • 7. திருத்தம்உடை யோர்கருணை யால்இந்த உலகில்
    தியங்குவீர் அழியாச்சுகம்
    சேருலக மாம்பரம பதம்அதனை அடையும்நெறி
    சேரவா ருங்கள்என்றால்
    இருத்தினிய சுவைஉணவு வேண்டும்அணி ஆடைதரும்
    இடம்வேண்டும் இவைகள் எல்லாம்
    இல்லையா யினும்இரவு பகல்என்ப தறியாமல்
    இறுகப்பி டித்தணைக்கப்
    பெருத்தமுலை யோடிளம் பருவமுடன் அழகுடைய
    பெண்ணகப் படுமாகிலோ
    பேசிடீர் அப்பரம பதநாட்டி னுக்குநும்
    பிறகிதோ வருவம்என்பார்
    வருத்தும்அவர் உறவற மருந்தருள்க தவசிகா
    மணிஉலக நாதவள்ளல்
    மகிழவரு வேளூரி அன்பர்பவ ரோகமற
    வளர்வைத் தியநாதனே.
  • 8. பேதைஉல கீர்விரதம் ஏதுதவம் ஏதுவீண்
    பேச்சிவை எலாம்வேதனாம்
    பித்தன்வாய்ப் பித்தேறு கத்துநூல் கத்திய
    பெரும்புரட் டாகும்அல்லால்
    ஓதைஉறும் உலகா யதத்தினுள உண்மைபோல்
    ஒருசிறிதும் இல்லைஇல்லை
    உள்ளதறி யாதிலவு காத்தகிளி போல்உடல்
    உலர்ந்தீர்கள் இனியாகினும்
    மேதைஉண வாதிவேண் டுவஎலாம் உண்டுநீர்
    விரைமலர்த் தொடைஆதியா
    வேண்டுவ எலாங்கொண்டு மேடைமேல் பெண்களொடு
    விளையாடு வீர்கள்என்பார்
    வாதைஅவர் சார்பற மருந்தருள்க தவசிகா
    மணிஉலக நாதவள்ளல்
    மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
    வளர்வைத் தியநாதனே.
  • 9. ஈனம் பழுத்தமன வாதைஅற நின்னருளை
    எண்ணிநல் லோர்கள்ஒருபால்
    இறைவநின் தோத்திரம் இயம்பிஇரு கண்­ர்
    இறைப்பஅது கண்டுநின்று
    ஞானம் பழுத்துவிழி யால்ஒழுகு கின்றநீர்
    நம்உலகில் ஒருவர்அலவே
    ஞானிஇவர் யோனிவழி தோன்றியவ ரோஎன
    நகைப்பர்சும் மாஅழுகிலோ
    ஊனம் குழுத்தகண் ணாம்என்பர் உலகத்தில்
    உயர்பெண்டு சாக்கொடுத்த
    ஒருவன்முகம் என்னஇவர் முகம்வாடு கின்றதென
    உளறுவார் வாய்அடங்க
    மானம் பழுத்திடு மருந்தருள்க தவசிகா
    மணிஉலக நாதவள்ளல்
    மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
    வளர்வைத் தியநாதனே.
  • 10. கற்பவை எலாம்கற் றுணர்ந்தபெரி யோர்தமைக்
    காண்பதே அருமைஅருமை
    கற்பதரு மிடியன்இவன் இடைஅடைந் தால்எனக்
    கருணையால் அவர்வலியவந்
    திற்புறன் இருப்பஅது கண்டும்அந் தோகடி
    தெழுந்துபோய்த் தொழுதுதங்கட்
    கியல்உறுதி வேண்டாது கண்கெட்ட குருடர்போல்
    ஏமாந்தி ருப்பர்இவர்தாம்
    பொற்பினறு சுவைஅறியும் அறிவுடையர் அன்றுமேற்
    புல்லாதி உணும்உயிர்களும்
    போன்றிடார் இவர்களைக் கூரைபோய்ப் பாழாம்
    புறச்சுவர் எனப்புகலலாம்
    வற்புறும் படிதரும வழிஓங்கு தவசிகா
    மணிஉலக நாதவள்ளல்
    மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
    வளர்வைத் தியநாதனே.
  • 11. மெய்யோர் தினைத்தனையும் அறிகிலார் பொய்க்கதை
    விளம்பஎனில் இவ்வுலகிலோ
    மேலுலகில் ஏறுகினும் அஞ்சாது மொழிவர்தெரு
    மேவுமண் ணெனினும்உதவக்
    கையோ மனத்தையும் விடுக்கஇசை யார்கள்கொலை
    களவுகட் காமம்முதலாக்
    கண்டதீ மைகள்அன்றி நன்மைஎன் பதனைஒரு
    கனவிலும் கண்டறிகிலார்
    ஐயோ முனிவர்தமை விதிப்படி படைத்தவிதி
    அங்கைதாங் கங்கைஎன்னும்
    ஆற்றில் குளிக்கினும் தீமூழ்கி எழினும்அவ்
    வசுத்தநீங் காதுகண்டாய்
    மையோர் அணுத்துணையும் மேவுறாத் தவசிகா
    மணிஉலக நாதவள்ளல்
    மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
    வளர்வைத் தியநாதனே.
  • 12. இளவேனில் மாலையாய்க் குளிர்சோலை யாய்மலர்
    இலஞ்சிபூம் பொய்கைஅருகாய்
    ஏற்றசந் திரகாந்த மேடையாய் அதன்மேல்
    இலங்குமர மியஅணையுமாய்த்
    தளவேயும் மல்லிகைப் பந்தராய்ப் பால்போல்
    தழைத்திடு நிலாக்காலமாய்த்
    தனிஇளந் தென்றலாய் நிறைநரம் புளவீணை
    தன்னிசைப் பாடல்இடமாய்
    களவேக லந்தகற் புடையமட வரல்புடை
    கலந்தநய வார்த்தைஉடனாய்க்
    களிகொள இருந்தவர்கள் கண்டசுக நின்னடிக்
    கழல்நிழற் சுகநிகருமே
    வளவேலை சூழுலகு புகழ்கின்ற தவசிகா
    மணிஉலக நாதவள்ளல்
    மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
    வளர்வைத் தியநாதனே.

வைத்தியநாதர் பதிகம் // வைத்தியநாதர் பதிகம்