திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
திருப்புகழ்ச்சி
tiruppukaḻchsi
அறநிலை விளக்கம்
aṟanilai viḷakkam
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

094. தனித் திருவிருத்தம்
taṉit tiruviruttam

    கட்டளைக் கலித்துறை
    திருச்சிற்றம்பலம்
  • 1. நீர்பூத்த வேணியும் ஆனந்தம் பூத்து நிறைமதியின்
    சீர்பூத் தமுத இளநகை பூத்த திருமுகமும்
    பார்பூத்த பச்சைப் பசுங்கொடி பூத்தசெம் பாகமும்ஓர்
    கார்பூத்த கண்டமும் கண்பூத்த காலும்என் கண்விருந்தே.
  • 2. வீழாக ஞான்றசெவ் வேணிப் பிரான்என் வினைஇரண்டும்
    கீழாக நான்அதன் மேலாக நெஞ்சக் கிலேசமெல்லாம்
    பாழாக இன்பம் பயிராக வாய்க்கில்அப் பாற்பிறவி
    ஏழாக அன்றிமற் றெட்டாக இங்கென்னை என்செயுமே.
  • 3. ஆயிரங் கார்முகில் நீர்விழி நீர்தர ஐயநின்பால்
    சேயிரங் கார்எனக் கென்றேநின் பொற்பதம் சிந்திக்கின்றேன்
    நீஇரங் காய்எனில் என்செய்கு வேன்இந் நிலத்திற்பெற்ற
    தாய்இரங் காள்என்ப துண்டோதன் பிள்ளை தளர்ச்சிகண்டே.
  • எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • 4. செம்பவளத் தனிக்குன்றே அருளா னந்தச்
    செழுங்கனியே முக்கணுடைத் தேவே மூவா
    அம்புவிநீர் அனல்வளிவான் ஆதி யாய
    அரசேஎன் ஆருயிர்க்கோர் அரண மாகும்
    சம்புசிவ சயம்புவே சங்க ராவெண்
    சைலம்வளர் தெய்வதவான் தருவே மிக்க
    வம்பவிழ்மென் குழல்ஒருபால் விளங்க ஓங்கும்
    மழவிடைமேல் வருங்காட்சி வழங்கு வாயே.
  • அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • 5. நீடுகின்ற மாமறையும் நெடுமாலும் திசைமுகனும் நிமல வாழ்க்கை
    நாடுகின்ற முனிவரரும் உருத்திரரும் தேடஅருள் நாட்டங் கொண்டு
    பாடுகின்ற மெய்யடியர் உளம்விரும்பி ஆநந்தப் படிவ மாகி
    ஆடுகின்ற மாமணியை ஆரமுதை நினைந்துநினைந் தன்பு செய்வாம்.
  • வேறு
  • 6. மறைமுடி விளக்கே போற்றி மாணிக்க மலையே போற்றி
    கறைமணி கண்ட போற்றி கண்ணுதற் கரும்பே போற்றி
    பிறைமுடிச் சடைகொண் டோங்கும் பேரருட் குன்றே போற்றி
    சிறைதவிர்த் தெனையாட் கொண்ட சிவசிவ போற்றி போற்றி.
  • எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • 7. செய்வகை அறியேன் மன்றுண்மா மணிநின்
    திருவுளக் குறிப்பையுந் தெரியேன்
    உய்வகை அறியேன் உணர்விலேன் அந்தோ
    உறுகண்மேல் உறுங்கொல்என் றுலைந்தேன்
    மெய்வகை அடையேன் வேறெவர்க் குரைப்பேன்
    வினையனேன் என்செய விரைகேன்
    பொய்வகை உடையேன் எங்ஙனம் புகுகேன்
    புலையனேன் புகல்அறி யேனே.
  • அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • 8. நிதியைநினைந் துனைமறந்த மதியைநினைந் தழுகேனோ நிமலா னந்தக்
    கதியைஇகழ்ந் திருள்விழைந்த விதியைநினைந் தழுகேனோ கண்போல் வாய்ந்த
    பதியைஉனைப் பாடாத பாட்டைநினைந் தழுகேனோ படிற்று நெஞ்சச்
    சதியைநினைந் தழுகேனோ யாதுகுறித் தழுகேன்இத் தமிய னேனே.
  • வேறு
  • 9. தாய்தடை என்றேன் பின்னர்த் தாரமே தடைஎன் றேன்நான்
    சேய்தடை என்றேன் இந்தச் சிறுதடை எல்லாந் தீர்ந்தும்
    தோய்தடைச் சிறியேன் இன்னுந் துறந்திலேன் எனைத் தடுக்க
    ஏய்தடை யாதோ எந்தாய் என்செய்கேன் என்செய் கேனே.
  • எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • 10. எண்கடந்த உயிர்கள்தொறும் ஒளியாய் மேவி
    இருந்தருளும் பெருவாழ்வே இறையே நின்றன்
    விண்கடந்த பெரும்பதத்தை விரும்பேன் தூய்மை
    விரும்புகிலேன் நின்அருளை விழைந்தி லேன்நான்
    பெண்கடந்த மயல்எனும்ஓர் முருட்டுப் பேயாற்
    பிடிஉண்டேன் அடிஉண்ட பிஞ்சு போன்றேன்
    கண்கடந்த குருட்டூமர் கதைபோல் நின்சீர்
    கண்டுரைப்பல் என்கேனோ கடைய னேனே.
  • வேறு
  • 11. மின்னைப் போல்இடை மெல்இய லார்என்றே
    விடத்தைப் போல்வரும் வெம்மனப் பேய்களைப்
    பொன்னைப் போல்மிகப் போற்றி இடைநடுப்
    புழையி லேவிரல் போதப்பு குத்திஈத்
    தன்னைப் போல்முடை நாற்றச்ச லத்தையே
    சந்த னச்சலந் தான்எனக் கொள்கின்றேன்
    என்னைப் போல்வது நாய்க்குலம் தன்னிலும்
    இல்லை அல்ல தெவற்றினும் இல்லையே.
  • அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • 12. கள்உருகும் மலர்மணம்போல் கலந்தெங்கும் நிறைந்தோய்நின் கருணைக் கந்தோ
    முள்உருகும் வலியபராய் முருடுருகும் உருகாத முறைசேர் கல்லும்
    வள்உருகும் மலைஉருகும் மண்உருகும் மரம்உருகும் மதியி லேன்றன்
    உள்உருகும் வகையிலைஎன் செய்கேன்நான் ஏன்பிறந்தேன் ஒதிய னேனே.
  • 13. மன்உயிர்க்குத் தாய்தந்தை குருதெய்வம் உறவுமுதல் மற்றும் நீயே
    பின்உயிர்க்கோர் துணைவேறு பிறிதிலைஎன் றியான்அறிந்த பின்பொய்யான
    மின்உடற்குத் தாய்தந்தை யாதியரை மதித்தேனோ விரும்பி னேனோ
    என்உயிர்க்குத் துணைவாநின் ஆணைஒன்றும் அறியேன்நான் இரங்கி டாயே.
  • 14. மாற்றரிய பசும்பொன்னே மணியேஎன் கண்ணேகண் மணியே யார்க்குந்
    தோற்றரிய சுயஞ்சுடரே ஆனந்தச் செழுந்தேனே சோதி யேநீ
    போற்றரிய சிறியேனைப் புறம்விடினும் வேற்றவர்பாற் போகேன் வேதம்
    தேற்றரிய திருவடிக்கண் பழிவிளைப்பேன் நின்ஆணைச் சிறிய னேனே.
  • 15. உள்உணர்வோர் உளத்துநிறைந் தூற்றெழுந்த தெள்ளமுதே உடையாய் வஞ்ச
    நள்உணர்வேன் சிறிதேனும் நலமறியேன் வெறித்துழலும் நாயிற் பொல்லேன்
    வெள்உணர்வேன் எனினும்என்னை விடுதியோ விடுதியேல் வேறென் செய்கேன்
    தள்உணர்வோன் எனினும்மகன் தனைஈன்றோர் புறம்பாகத் தள்ளார் அன்றே.
  • 16. கலைபயின்று நெறிஒழுகும் கருத்துடையேன் அலன்நின்னைக் கனவி லேனும்
    மலைபயின்ற பெருங்குணத்தெம் வள்ளலே எனத்துதியேன் வஞ்ச மில்லா
    நிலைபயின்ற நல்லோர்தம் நேசமிலேன் கைதவமே நினைப்பேன் அந்தோ
    உலைபயின்ற அரக்கெனநெஞ் சுருகேன்நான் ஏன்பிறந்தேன் ஒதிய னேனே.
  • 17. இரும்புன்னை மலர்ச்சடையாய் இவ்வுலகில் சிலர்தங்கட் கென்று வாய்த்த
    அரும்பின்னை மார்பகத்தோன் அயனாதி சிறுதெய்வ மரபென் றோதும்
    கரும்பொன்னைச் செம்பொன்னில் கைவிடா திருக்கின்றார் கடைய னேற்கே
    தரும்பொன்னை மாற்றழிக்கும் அரும்பொன்நீ கிடைத்தும்உனைத் தழுவி லேனே.
  • 18. கஞ்சமலர்த் தவிசிருந்த நான்முகனும் நெடுமாலும் கருதிப் போற்ற
    அஞ்சநடை அம்மைகண்டு களிக்கப்பொன் அம்பலத்தில் ஆடு கின்ற
    எஞ்சல்இலாப் பரம்பொருளே என்குருவே ஏழையினே னிடத்து நீயும்
    வஞ்சம்நினைத் தனையாயில் என்செய்வேன் என்செய்வேன் மதியி லேனே.
  • கட்டளைக் கலித்துறை
  • 19. வேம்புக்கும் தண்ணிய நீர்விடு கின்றனர் வெவ்விடஞ்சேர்
    பாம்புக்கும் பாலுண வீகின் றனர்இப் படிமிசையான்
    வீம்புக்கும் தீம்புக்கும் ஆனேன் எனினும் விடேல்எனைநீ
    தேம்புக்கும் வார்சடைத் தேவே கருணைச் சிவக்கொழுந்தே.
  • 20. அடமுடி யாதுபல் ஆற்றாலும் ஏழைக் கடுத்ததுன்பம்
    படமுடி யாதென்னை செய்கேன்என் தன்முகம் பார்த்திரங்காய்
    திடமுடி யால்அயன் மால்வணங் குந்துணைச் சேவடியாய்
    தடமுடி யாய்செஞ் சடைமுடி யாய்நந் தயாநிதியே.
  • அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • 21. பொல்லா வாழ்க்கைத் துயரம்எனும் புணரிப் பெருக்கில் வீழ்ந்தழுந்திப்
    பல்லார் நகைக்கப் பாவிபடும் பாட்டை முழுதும் பார்த்திருந்தும்
    கல்லால் அமர்ந்தீர் என்னிரண்டு கண்கள் அனையீர் கறைமிடற்றீர்
    எல்லாம் உடையீர் மால்விடையீர் என்னே இரங்கி அருளீரே.
  • 22. பொன்னை உடையார் மிகுங்கல்விப் பொருளை உடையார் இவர்முன்னே
    இன்னல் எனும்ஓர் கடல்வீழ்ந்திவ் வேழை படும்பா டறிந்திருந்தும்
    மின்னை நிகரும் சடைமுடியீர் விடங்கொள் மிடற்றீர் வினைதவிர்ப்பீர்
    என்னை உடையீர் வெள்விடையீர் என்னே இரங்கி அருளீரே.
  • கலித்துறை
  • 23. ஆயும் வஞ்சக நெஞ்சன்இவ் அடியனேன் ஐயா
    நீயும் வஞ்சக நெஞ்சன்என் றால்இந்த நிலத்தே
    ஏயும் இங்கிதற் கென்செய்வேன் என்செய்வேன் எவைக்கும்
    தாயும் தந்தையும் ஆகிஉள் நிற்கின்றோய் சாற்றாய்.
  • 24. நானும் பொய்யன்நின் அடியனேன் தண்ணருள் நிதிநீ
    தானும் பொய்யன்என் றால்இதற் கென்செய்வேன் தலைவா
    தேனும் பாலுந்தீங் கட்டியும் ஆகிநிற் றெளிந்தோர்
    ஊனும் உள்ளமும் உயிரும்அண் ணிக்கின்ற உரவோய்.
  • நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா
  • 25. நேசனும்நீ சுற்றமும்நீ நேர்நின் றளித்துவரும்
    ஈசனும்நீ ஈன்றாளும் எந்தையும்நீ என்றேநின்
    தேசுறுசீர் ஐந்தெழுத்தும் செப்புகின்ற நாயேனை
    ஆசகலும் வண்ணம் அருள்புரிந்தால் ஆகாதோ.
  • கட்டளைக் கலித்துறை
  • 26. ஆற்றால் விளங்கும் சடையோய்இவ் வேழை அடியனும்பல்
    ஆற்றால் வருந்தும் வருத்தம்எல் லாம்முற் றறிந்தும்இன்னம்
    ஆற்றா திருத்தல்நின் பேரருள் ஆற்றுக் கழகுகொலோ
    ஆற்றாமை மேற்கொண் டழுதால் எவர்எனை ஆற்றுவரே.
  • அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • 27. அருளார் அமுதே அரசேநின் அடியேன் கொடியேன் முறையேயோ
    இருள்சேர் மனனோ டிடர்உழந்தேன் எந்தாய் இதுதான் முறையேயோ
    மருள்சேர் மடவார் மயலாலே மாழ்கின் றேன்நான் முறையேயோ
    தெருளோர் சிறிதும் அறியாதே திகையா நின்றேன் முறையேயோ.
  • 28. ஒழியாக் கவலை உறுகின்றேன் உடையாய் முறையோ முறையேயோ
    அழியாக் கருணைக் கடலேஎன் அரசே முறையோ முறையேயோ
    பொழியாப் புயலே அனையார்பால் புகுவித் தனையே முறையேயோ
    இழியாத் திரிதந் துழல்கின்றேன் இறைவா முறையோ முறையேயோ.
  • எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • 29. மதிஒளிர் கங்கைச் சடைப்பெருங் கருணை வள்ளலே தெள்ளிய அமுதே
    நிதிஒளிர் வாழ்க்கை இந்திரன் முதலோர்நிலைத்தவான் செல்வமும் மண்ணில்
    பதிஒளிர் வாழ்க்கை மணிமுடி அரசர் படைத்திடும் செல்வமும் வேண்டேன்
    கதிஒளிர் நினது திருவருட் செல்வக் களிப்பையே கருதுகின் றனனே.
  • கட்டளைக் கலித்துறை
  • 30. வெள்ளங்கொண் டோங்கும் விரிசடை யாய்மிகு மேட்டினின்றும்
    பள்ளங்கொண் டோங்கும் புனல்போல்நின் தண்ணருட் பண்புநல்லோர்
    உள்ளங்கொண் டோங்கும் அவமே பருத்த ஒதிஅனையேன்
    கள்ளங்கொண் டோங்கும் மனத்துறு மோஉறிற் காண்குவனே.
  • 31. ஐயாமுக் கண்கொண்ட ஆரமு தேஅரு ளார்பவள
    மெய்யாமெய்ஞ் ஞான விளக்கே கருணை விளங்கவைத்த
    மையார் மிடற்று மணியேஅன் றென்னை மகிழ்ந்ததந்தோ
    பொய்யாஎன் செய்வல் அருளா யெனில்எங்குப் போதுவனே.
  • 32. நாரா யணன்திசை நான்முகன் ஆதியர் நண்ணிநின்று
    பாரா யணஞ்செயப் பட்டநின் சேவடிப் பங்கயமேல்
    சீரா யணம்பெறப் பாடுந் திறம்ஓர் சிறிதும்இலேன்
    ஆரா யணங்குற நின்றேன்பொன் மன்றத் தமர்ந்தவனே.
  • 33. பேய்கொண்ட நெஞ்சகப் பாழால் வரும்என் பெருந்துயரை
    வாய்கொண் டனந்தர் அனந்தர்க்கும் சொல்ல வராதெனில்இந்
    நாய்கொண் டுரைக்க வருமோஎன் செய்குவன் நச்சுமரக்
    காய்கொண்டு வாழைக் கனியைக்கை விட்ட கடையவனே.
  • அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • 34. வன்மானங் கரத்தேந்தும் மாமணியே மணிகண்ட மணியே அன்பர்
    நன்மானங் காத்தருளும் அருட்கடலே ஆனந்த நடஞ்செய் வாழ்வே
    பொன்மானம் பினைப்பொருந்தும் அம்பினைவைத் தாண்டருளும் பொருளேநீ இங்
    கென்மானங் காத்தருள வேண்டுதியோ வேண்டாயேல் என்செய்வேனே.
    கலிநிலைத் துறை
  • 35. வைவ மென்றெழு கின்றவர் தமக்கும்நல் வாழ்வு
    செய்வம் என்றெழு கின்றமெய்த் திருவருட் செயலும்
    சைவ மென்பதும் சைவத்திற் சாற்றிடுந் தலைமைத்
    தெய்வ மென்பதும் என்னள வில்லைஎன் செய்வேன்.
  • எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • 36. ஐய ரேஉம தடியன்நான் ஆகில் அடிகள் நீர்என தாண்டவர் ஆகில்
    பொய்ய னேன்உளத் தவலமும் பயமும்புன்கணும்தவிர்த் தருளுதல்வேண்டும்
    தைய லோர்புறம் நின்றுளங் களிப்பச் சச்சி தானந்தத் தனிநடம் புரியும்
    மெய்ய ரேமிகு துய்யரே தரும விடைய ரேஎன்றன் விழிஅமர்ந் தவரே.
    வேறு
  • 37. எழுவினும் வலிய மனத்தினேன் மலஞ்சார் ஈயினும் நாயினும் இழிந்தேன்
    புழுவினுஞ் சிறியேன் பொய்விழைந் துழல்வேன் புன்மையேன்புலைத்தொழிற்கடையேன்
    வழுவினும் பெரியேன் மடத்தினும் பெரியேன் மாண்பிலா வஞ்சக நெஞ்சக்
    குழுவினும் பெரியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
    கலி விருத்தம்
  • 38. பொன்அ ளிக்கும்நற் புத்தியுந் தந்துநின்
    தன்ன ருட்டுணைத் தாண்மலர்த் தியானமே
    மன்ன வைத்திட வேண்டும்எம் வள்ளலே
    என்னை நான்பல கால்இங்கி யம்பலே.
  • 39. தாயும் தந்தையும் சற்குரு நாதனும்
    ஆயும் தெய்வமும் நீஎன் றறிந்தனன்
    பாயும் மால்விடை ஏறும் பரமனே
    நீயும் கைவிட என்னை நினைத்தியோ.
    வேறு
  • 40. ஒழியா மயல்கொண் டுழல்வேன் அவமே
    அழியா வகையே அருள்வாய் அருள்வாய்
    பொழியா மறையின் முதலே நுதல்ஏய்
    விழியாய் விழியாய் வினைதூள் படவே.
    வெண்துறை
  • 41. உலகெ லாம்நிறைந் தோங்கு பேரருள் உருவ மாகிஎவ் உயிரும் உய்ந்திட
    இலகு வானொளி யாம்மணி மன்றிடை என்றும்நின்றே
    அலகில் ஆனந்த நாடகஞ் செய்யும் அம்பொற் சேவடிக் கபயம் என்னையும்
    திலக நீவிழை வாய்நட ராசசி காமணியே.
  • அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • 42. என்னிருகண் காள்உமது பெருந்தவம்எப் புவனத்தில் யார்தான் செய்வர்
    முன்னிருவர் காணாமல் அலைந்தனரால் இனுங்காண முயலா நின்றார்
    நன்னிருபர் தொழுதேத்தும் அம்பலத்தே ஓரிடத்தோர் நாள்ஆ தித்தர்
    பன்னிருவர் ஒளிமாற்றும் பரஒளியைப் பார்த்துயர்ந்தீர் பண்பி னீரே.
  • 43. சேணாடர் முனிவர்உயர் திசைமுகன்மால் உருத்திரன்அத் திரளோர் சற்றும்
    காணாத காட்சியைநான் கண்டேன்சிற் றம்பலத்தின் கண்ணே பன்னாள்
    ஆணாகப் பிறந்தடியேன் அருந்தவம்என் புரிந்தேனோ அறிகி லேன்முன்
    பேணாத பிறப்பெல்லாம் பிறப்பலஇப் பிறப்பேஎன் பிறப்பாம் அந்தோ.
  • எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • 44. இருளற ஓங்கும் பொதுவிலே நடஞ்செய் எங்குரு நாதன்எம் பெருமான்
    அருளெனும் வடிவங் காட்டிஒண் முகத்தே அழகுறும் புன்னகை காட்டித்
    தெருளுற அருமைத் திருக்கையால் தடவித் திருமணி வாய்மலர்ந் தருகில்
    பொருளுற இருந்தோர் வாக்களித்தென்னுள்புகுந்தனன் புதுமைஈதந்தோ.
  • அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • 45. பொன்என்கோ மணிஎன்கோ புனிதஒளித் திரள்என்கோ பொற்பின் ஓங்கும்
    மின்என்கோ விளக்கென்கோ விரிசுடர்க்கோர் சுடர்என்கோ வினையனேன்யான்
    என்என்கோ என்என்கோ எம்பெருமான் திருமேனி இருந்த வண்ணம்
    முன்என்கோ தறுதவத்தால் கண்டுகளித் திடப்பெற்றேன் முக்கண்மூர்த்தி.
  • 46. வஞ்சகர்க்கெல் லாம்முதலாய் அறக்கடையாய் மறத்தொழிலே வலிக்கும்பாவி
    நெஞ்சகத்துன் மார்க்கனைமா பாதகனைக் கொடியேனை நீச னேனை
    அஞ்சல்எனக் கருணைபுரிந் தாண்டுகொண்ட அருட்கடலை அமுதைத்தெய்வக்
    கஞ்சமல ரவன்நெடுமாற் கரும்பொருளைப் பொதுவினில்யான் கண்டுய்ந் தேனே.
  • கட்டளைக் கலித்துறை
  • 47. நாதாபொன் அம்பலத் தேஅறி வானந்த நாடகஞ்செய்
    பாதா துரும்பினும் பற்றாத என்னைப் பணிகொண்டெல்லாம்
    ஓதா துணர உணர்த்திஉள் ளேநின் றுளவுசொன்ன
    நீதா நினைமறந் தென்நினைக் கேன்இந்த நீணிலத்தே.
  • அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • 48. கந்த நாண்மலர்க் கழலிணை உளத்துறக் கருதுகின் றவர்க்கெல்லாம்
    பந்த நாண்வலை அவிழ்த்தருள் சிதம்பரை பரம்பரை யுடன்ஆடும்
    அந்த நாள்மகிழ் வடைபவர் உளர்சிலர் அவர்எவர் எனில்இங்கே
    இந்த நாள்முறை திறம்பல ராய்உயிர்க் கிதம்செயும் அவர்அன்றே.
  • எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • 49. வெட்டை மாட்டி விடாப்பெருந் துன்பநோய்
    விளைவ தெண்ணிலர் வேண்டிச்சென் றேதொழுக்
    கட்டை மாட்டிக் கொள்வார்என வேண்டிப்பெண்
    கட்டை மாட்டிக் கொள்வார்தங் கழுத்திலே
    துட்டை மாட்டின் கழுத்தடிக் கட்டையோ
    துணிக்கும் கட்டைய தாம்இந்தக் கட்டைதான்
    எட்டை மாட்டி உயிர்விடக் கட்டைமேல்
    ஏறும் போதும் இழுக்கின்ற கட்டையே.
  • 50. புண்ணைக் கட்டிக்கொண் டேஅதன் மேல்ஒரு
    புடவை கட்டிப் புதுமைகள் காட்டிடும்
    பெண்ணைக் கட்டிக்கொள் வார்இவர் கொள்ளிவாய்ப்
    பேயைக் கட்டிக்கொண் டாலும் பிழைப்பர்காண்
    மண்ணைக் கட்டிக்கொண் டேஅழு கின்றஇம்
    மடையப் பிள்ளைகள் வாழ்வினை நோக்குங்கால்
    கண்ணைக் கட்டிக்கொண் டூர்வழி போம்கிழக்
    கழுதை வாழ்வில் கடைஎனல் ஆகுமே.
    கட்டளைக் கலிப்பா
  • 51. உடுக்க வோஒரு கந்தைக்கு மேலிலை
    உண்ண வோஉண வுக்கும் வழியிலை
    படுக்க வோபழம் பாய்க்கும் கதியிலை
    பாரில் நல்லவர் பால்சென்று பிச்சைதான்
    எடுக்க வோதிடம் இல்லைஎன் பால்உனக்
    கிரக்கம் என்பதும் இல்லை உயிரைத்தான்
    விடுக்க வோமனம் இல்லைஎன் செய்குவேன்
    வெண்பி றைச்சடை வித்தக வள்ளலே.
  • 52. தொடுக்க வோநல்ல சொன்மலர் இல்லைநான்
    துதிக்கவோ பத்தி சுத்தமும் இல்லைஉள்
    ஒடுக்க வோமனம் என்வசம் இல்லைஊ
    டுற்ற ஆணவ மாதிம லங்களைத்
    தடுக்க வோதிடம் இல்லைஎன் மட்டிலே
    தயவு தான்நினக் கில்லை உயிரையும்
    விடுக்க வோமனம் இல்லைஎன் செய்குவேன்
    விளங்கு மன்றில் விளங்கிய வள்ளலே.
  • அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • 53. இறகெடுத்த அமணர்குலம் வேரறுத்த சொக்கேஈ தென்ன ஞாயம்
    அறுகடுத்த சடைமுடிமேல் மண்ணெடுக்க மாட்டாமல் அடிபட் டையோ
    பிறகெடுத்தீர் வளையல்விற்றீர் சொற்கேளாப்பிள்ளைகளைப் பெற்றதோஷம்
    விறகெடுத்தீர் என்செய்வீர் விதிவசந்தான் யாவரையும் விடாது தானே.
    கலி விருத்தம்
  • 54. சச்சிதா நந்தசிற் சபையில் நாடகம்
    பச்சிதாந் திருவுருப் பாவை நோக்கிட
    மெச்சிதா காரமா விளைப்பர் மெல்லடி
    உச்சிதாழ் குவர்நமக் குடையர் நெஞ்சமே.
  • கட்டளைக் கலித்துறை
  • 55. தத்தா தனத்தத்தைத் தாவென் றரங்கன் றனிநடிப்பா
    தத்தா தனத்தத்தைத் தாவென் றரங்கன் றனிநடிப்பா
    தத்தா தனத்தத்தைத் தாவென் றரங்கன் றனிநடிப்பா
    தத்தா தனத்தத்தைத் தாவென் றரங்கன் றனஞ்சொல்லுமே.
  • நேரிசை வெண்பா
  • 56. இம்மை யறையனைய வேசூர மாதருமா
    இம்மையுமை யிம்மையையோ என்செய்த - தம்மைமதன்
    மாமாமா மாமாமா மாமாமா மாமாமா
    மாமாமா மாமாமா மா.
  • 57. ஆவியீ ரைந்தை அபரத்தே வைத்தோதில்
    ஆவியீ ரைந்தை அகற்றலாம் - ஆவியீர்
    ஐந்துறலா மாவியீ ரைந்தறலா மாவியீ
    ரைந்திடலா மோரிரண்டோ டாய்ந்து.1
  • திருச்சிற்றம்பலம்

    • 176. இதன் பொருள் : ஆவி - ஆன்மவக்கரமென்னும், ஈரைந்து - பத்தாகிய யகரத்தை, ஐ - சிவத்திற்கு, அபரத்தே - பின்னாக, வைத்து - பொருத்தி, ஓதில் - செபிக்கில், ஆவியீ ரைந்தை - ஆ என்னும் ஆபத்துகளையும் வி என்னும் விபத்துகளையும், அகற்றலாம் - நீக்கிக் கொள்ளலாம். ஆவி - ஆன்மவியற்கையை, ஈர் - கெடுக்கும், ஐந்து - பஞ்சமலங்களையும், அறலாம் - களைந்து விடலாம், ஆவி - ஆன்மாவுக் குறுதியாய், ஈரைந்து - பத்தியை, உறலாம் - பொருந்தலாம், ஆய்ந்து - சேர்க்கும் வகை தெரிந்து, ஆவி - பிராணனது கலைகள், ஈரைந்து - பத்துடன், ஓர் - ஒரு, இரண்டோடு - இரண்டையுங் கழியாமல், இடலாம் - சேர்த்துக் கட்டிக் கொள்ளலாம்.
    • - ஆறாம் திருமுறை முதற் பதிப்பு
    • இப்பதிகத்துள் கலித்துறைகளும் விரவி நிற்கவும், விருத்தமெனக் குறியிட்டாளப் பட்டமைக் கீண்டு விதியெழுதப் புகின் மிகப் பெருகுமாதலின் விடுக்கப்பட்டது. சைவம் பன்னிரண்டு திருமுறைகளுள் ஆளுடைய வரசாகிய அப்பர் சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய திருமுறையில் "குலம்பலம்பாவரும்" என்றற் றொடக்கத் திலக்கியங்களாற் கண்டுகொள்க. - தொ. வே.
    • next page

தனித் திருவிருத்தம் // தனித் திருவிருத்தம்

No audios found!