திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
இறை எளிமையை வியத்தல்
iṟai eḷimaiyai viyattal
உண்மை கூறல்
uṇmai kūṟal
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

035. அபயம் இடுதல்
apayam iṭutal

    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. உருவாய் அருவாய் ஒளியாய் வெளியாய்
    உலவா ஒருபே ரருளா ரமுதம்
    தருவாய் இதுவே தருணம் தருணம்
    தரியேன் சிறிதுந் தரியேன் இனிநீ
    வருவாய் அலையேல் உயிர்வாழ் கலன்நான்
    மதிசேர் முடிஎம் பதியே அடியேன்
    குருவாய் முனமே மனமே இடமாக்
    குடிகொண் டவனே அபயம் அபயம்.
  • 2. என்னே செய்வேன் செய்வகை ஒன்றிங்
    கிதுஎன் றருள்வாய் இதுவே தருணம்
    மன்னே அயனும் திருமா லவனும்
    மதித்தற் கரிய பெரிய பொருளே
    அன்னே அப்பா ஐயா அரசே
    அன்பே அறிவே அமுதே அழியாப்
    பொன்னே மணியே பொருளே அருளே
    பொதுவாழ் புனிதா அபயம் அபயம்.
  • 3. கருணா நிதியே அபயம் அபயம்
    கனகா கரனே அபயம் அபயம்
    அருணா டகனே அபயம் அபயம்
    அழகா அமலா அபயம் அபயம்
    தருணா தவனே அபயம் அபயம்
    தனிநா யகனே அபயம் அபயம்
    தெருணா டுறுவாய் அபயம் அபயம்
    திருவம் பலவா அபயம் அபயம்.
  • 4. மருளும் துயரும் தவிரும் படிஎன்
    மனமன் றிடைநீ வருவாய் அபயம்
    இருளும் பவமும் பெறுவஞ் சகநெஞ்
    சினன்என் றிகழேல் அபயம் அபயம்
    வெருளும் கொடுவெம் புலையும் கொலையும்
    விடுமா றருள்வாய் அபயம் அபயம்
    அருளும் பொருளும் தெருளும் தருவாய்
    அபயம் அபயம் அபயம் அபயம்.
  • 5. இனிஓர் இறையும் தரியேன் அபயம்
    இதுநின் அருளே அறியும் அபயம்
    கனியேன் எனநீ நினையேல் அபயம்
    கனியே241 கருணைக் கடலே அபயம்
    தனியேன் துணைவே றறியேன் அபயம்
    தகுமோ தகுமோ தலைவா அபயம்
    துனியே அறவந் தருள்வாய் அபயம்
    சுகநா டகனே அபயம் அபயம்.
  • 6. அடியார் இதயாம் புயனே அபயம்
    அரசே அமுதே அபயம் அபயம்
    முடியா தினிநான் தரியேன் அபயம்
    முறையோ முறையோ முதல்வா அபயம்
    கடியேன் அலன்நான் அபயம் அபயம்
    கருணா கரனே அபயம் அபயம்
    தடியேல் அருள்வாய் அபயம் அபயம்
    தருணா தவனே அபயம் அபயம்.
  • 7. மலவா தனைநீர் கலவா அபயம்
    வலவா திருஅம் பலவா அபயம்
    உலவா நெறிநீ சொலவா அபயம்
    உறைவாய் உயிர்வாய் இறைவா அபயம்
    பலஆ குலம்நான் தரியேன் அபயம்
    பலவா பகவா பனவா அபயம்
    நலவா அடியேன் அலவா அபயம்
    நடநா யகனே அபயம் அபயம்.
  • 8. கொடியேன் பிழைநீ குறியேல் அபயம்
    கொலைதீர் நெறிஎன் குருவே அபயம்
    முடியேன் பிறவேன் எனநின் அடியே
    முயல்வேன் செயல்வே றறியேன் அபயம்
    படியே அறியும் படியே வருவாய்
    பதியே கதியே பரமே அபயம்
    அடியேன் இனிஓர் இறையும் தரியேன்
    அரசே அருள்வாய் அபயம் அபயம்.
  • 9. இடர்தீர் நெறியே அருள்வாய் அபயம்
    இனிநான் தரியேன் தரியேன் அபயம்
    விடர்போல் எனைநீ நினையேல் அபயம்
    விடுவேன் அலன்நான் அபயம் அபயம்
    உடலோ டுறுமா பொருள்ஆ வியும்இங்
    குனவே எனவே அலவே அபயம்
    சுடர்மா மணியே அபயம் அபயம்
    சுகநா டகனே அபயம் அபயம்.
  • 10. குற்றம் பலஆ யினும்நீ குறியேல்
    குணமே கொளும்என் குருவே அபயம்
    பற்றம் பலமே அலதோர் நெறியும்
    பதியே அறியேன் அடியேன் அபயம்
    சுற்றம் பலவும் உனவே எனவோ
    துணைவே றிலைநின் துணையே அபயம்
    சிற்றம் பலவா அருள்வாய் இனிநான்
    சிறிதுந் தரியேன் தரியேன் அபயம்.

    • 241. களியே - படிவேறுபாடு. ஆ. பா.

அபயம் இடுதல் // அபயம் இடுதல்

No audios found!