திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
அருட்ஜோதி நிலை
aruṭjōti nilai
ஆண்டருளிய அருமையை வியத்தல்
āṇṭaruḷiya arumaiyai viyattal
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

047. பேரானந்தப் பெருநிலை
pērāṉantap perunilai

    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. அணிவளர் திருச்சிற் றம்பலத் தாடும்
    ஆனந்த போகமே அமுதே
    மணிவளர் ஒளியே ஒளியினுள் ஒளியே
    மன்னும்என் ஆருயிர்த் துணையே
    துணிவுறு சித்தாந் தப்பெரும் பொருளே
    தூயவே தாந்தத்தின் பயனே
    பணிவுறும் உளத்தே இனித்திட எனக்கே
    பழுத்தபே ரானந்தப் பழமே.
  • 2. திருவளர் திருச்சிற் றம்பலத் தாடும்
    தெய்வமே மெய்ப்பொருட் சிவமே
    உருவளர் ஒளியே ஒளியினுள் ஒளியே
    ஓங்கும்என் உயிர்ப்பெருந் துணையே
    ஒருதனித் தலைமை அருள்வெளி நடுவே
    உவந்தர சளிக்கின்ற அரசே
    பருவரல் நீக்கி இனித்திட எனக்கே
    பழுத்தபே ரானந்தப் பழமே.
  • 3. துதிவளர் திருச்சிற் றம்பலத் தாடும்
    சோதியுட் சோதியே எனது
    மதிவளர் மருந்தே மந்திர மணியே
    மன்னிய பெருங்குண மலையே
    கதிதரு துரியத் தனிவெளி நடுவே
    கலந்தர சாள்கின்ற களிப்பே
    பதியுறும் உளத்தே இனித்திட எனக்கே
    பழுத்தபே ரானந்தப் பழமே.
  • 4. சீர்வளர் திருச்சிற் றம்பலத் தோங்குஞ்
    செல்வமே என்பெருஞ் சிறப்பே
    நீர்வளர் நெருப்பே நெருப்பினுள் ஒளியே
    நிறைஒளி வழங்கும்ஓர் வெளியே
    ஏர்தரு கலாந்த மாதிஆ றந்தத்
    திருந்தர சளிக்கின்ற பதியே
    பாருறும் உளத்தே இனித்திட எனக்கே
    பழுத்தபே ரானந்தப் பழமே.
  • 5. உரைவளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
    ஒள்ளிய தெள்ளிய ஒளியே
    வரைவளர் மருந்தே மவுனமந் திரமே
    மந்திரத் தாற்பெற்ற மணியே
    நிரைதரு சுத்த நிலைக்குமேல் நிலையில்
    நிறைந்தர சாள்கின்ற நிதியே
    பரையுறும் உளத்தே இனித்திட எனக்கே
    பழுத்தபே ரானந்தப் பழமே.
  • 6. மேல்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
    மெய்யறி வானந்த விளக்கே
    கால்வளர் கனலே கனல்வளர் கதிரே
    கதிர்நடு வளர்கின்ற கலையே
    ஆலுறும் உபசாந் தப்பர வெளிக்கப்
    பால்அர சாள்கின்ற அரசே
    பாலுறும் உளத்தே இனித்திட எனக்கே
    பழுத்தபே ரானந்தப் பழமே.
  • 7. இசைவளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
    இன்பமே என்னுடை அன்பே
    திசைவளர் அண்ட கோடிகள் அனைத்தும்
    திகழுறத் திகழ்கின்ற சிவமே
    மிசையுறு மௌன வெளிகடந் ததன்மேல்
    வெளிஅர சாள்கின்ற பதியே
    பசையுறும் உளத்தே இனித்திட எனக்கே
    பழுத்தபே ரானந்தப் பழமே.
  • 8. அருள்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
    அரும்பெருஞ் சோதியே எனது
    பொருள்வளர் அறிவுக் கறிவுதந் தென்னைப்
    புறம்விடா தாண்டமெய்ப் பொருளே
    மருவும்ஓர் நாத வெளிக்குமேல் வெளியில்
    மகிழ்ந்தர சாள்கின்ற வாழ்வே
    பருவரல் நீக்கி இனித்திட எனக்கே
    பழுத்தபே ரானந்தப் பழமே.
  • 9. வான்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
    மாபெருங் கருணைஎம் பதியே
    ஊன்வளர் உயிர்கட் குயிரதாய் எல்லா
    உலகமும் நிறைந்தபே ரொளியே
    மான்முதன் மூர்த்தி மானிலைக் கப்பால்
    வயங்கும்ஓர் வெளிநடு மணியே
    பான்மையுற் றுளத்தே இனித்திட எனக்கே
    பழுத்தபே ரானந்தப் பழமே.
  • 10. தலம்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
    தனித்தமெய்ப் பொருட்பெருஞ் சிவமே
    நலம்வளர் கருணை நாட்டம்வைத் தெனையே
    நண்புகொண் டருளிய நண்பே
    வலமுறு நிலைகள் யாவையுங் கடந்து
    வயங்கிய தனிநிலை வாழ்வே
    பலமுறும் உளத்தே இனித்திட எனக்கே
    பழுத்தபே ரானந்தப் பழமே.

பேரானந்தப் பெருநிலை // பேரானந்தப் பெருநிலை

No audios found!