திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
உலகப்பேறு
ulakappēṟu
நெஞ்சொடு கிளத்தல்
neñsoṭu kiḷattal
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

110. தனித் திருஅலங்கல்
taṉit tirualaṅkal

    ஆன்மநேய ஒருமைப்பாடு
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. எவ்வுயிரும் பொதுஎனக்கண் டிரங்கிஉப
    கரிக்கின்றார் யாவர் அந்தச்
    செவ்வியர்தம் செயல்அனைத்தும் திருவருளின்
    செயல்எனவே தெரிந்தேன் இங்கே
    கவ்வைஇலாத் திருநெறிஅத் திருவாளர்
    தமக்கேவல் களிப்பால் செய்ய
    ஒவ்வியதென் கருத்தவர்சீர் ஓதிடஎன்
    வாய்மிகவும் ஊர்வ தாலோ.
  • 2. எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
    தம்உயிர்போல் எண்ணி உள்ளே
    ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
    யாவர்அவர் உளந்தான் சுத்த
    சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
    இடம்எனநான் தெரிந்தேன் அந்த
    வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
    சிந்தைமிக விழைந்த தாலோ.
  • 3. கருணைஒன்றே வடிவாகி எவ்வுயிரும்
    தம்உயிர்போல் கண்டு ஞானத்
    தெருள்நெறியில் சுத்தசிவ சன்மார்க்கப்
    பெருநீதி செலுத்தா நின்ற
    பொருள்நெறிசற் குணசாந்தப் புண்ணியர்தம்
    திருவாயால் புகன்ற வார்த்தை
    அருள்நெறிவே தாகமத்தின் அடிமுடிசொல்
    வார்த்தைகள்என் றறைவ ராலோ.
  • சாலையப்பனை வேண்டல்
    கொச்சகக் கலிப்பா
  • 4. மன்னப்பா மன்றிடத்தே மாநடஞ்செய் அப்பாஎன்
    தன்னப்பா சண்முகங்கொள் சாமியப்பா எவ்வுயிர்க்கும்
    முன்னப்பா பின்னப்பா மூர்த்தியப்பா மூவாத
    பொன்னப்பா ஞானப் பொருளப்பா தந்தருளே.
  • கட்டளைக் கலித்துறை
  • 5. ஆதிஅப் பாநம் அனாதியப் பாநங்கள் அம்மைஒரு
    பாதிஅப் பாநிரு பாதிஅப் பாசிவ பத்தர்அனு
    பூதிஅப் பாநல் விபூதிஅப் பாபொற் பொதுநடஞ்செய்
    சோதிஅப் பாசுயஞ் சோதிஅப் பாஎனைச் சூழ்ந்தருளே.
  • 6. அண்டஅப் பாபகி ரண்டஅப் பாநஞ் சணிந்தமணி
    கண்டஅப் பாமுற்றும் கண்டஅப் பாசிவ காமிஎனும்
    ஒண்தவப் பாவையைக் கொண்டஅப் பாசடை ஓங்குபிறைத்
    துண்டஅப் பாமறை விண்டஅப் பாஎனைச் சூழ்ந்தருளே.
  • 7. வேலைஅப் பாபடை வேலைஅப் பாபவ வெய்யிலுக்கோர்
    சோலைஅப் பாபரஞ் சோதிஅப் பாசடைத் துன்றுகொன்றை
    மாலைஅப் பாநற் சமரச வேதசன் மார்க்கசங்கச்
    சாலைஅப் பாஎனைத் தந்தஅப் பாவந்து தாங்கிக்கொள்ளே.
  • 8. மெச்சிஅப் பாவலர் போற்றப் பொதுவில் விளங்கியஎன்
    உச்சிஅப் பாஎன் னுடையஅப் பாஎன்னை உற்றுப்பெற்ற
    அச்சிஅப் பாமுக்கண் அப்பாஎன் ஆருயிர்க் கானஅப்பா
    கச்சிஅப் பாதங்கக் கட்டிஅப் பாஎன்னைக் கண்டுகொள்ளே.
  • 9. எக்கரை யும்மின்றி ஓங்கும் அருட்கடல் என்றுரைக்கோ
    செக்கரை வென்றபொன் என்கோ படிகத் திரளதென்கோ
    திக்கரை அம்பரன் என்கோஎன் உள்ளத்தில் தித்திக்கின்ற
    சக்கரைக் கட்டிஎன் கோநினைத் தான்மன்றில் தாண்டவனே.
  • 10. ஒட்டிஎன் கோதறுத் தாட்கொண் டனைநினை ஓங்கறிவாம்
    திட்டிஎன் கோஉயர் சிற்றம் பலந்தனில் சேர்க்கும்நல்ல
    வெட்டிஎன் கோஅருட் பெட்டியில் ஓங்கி விளங்கும்தங்கக்
    கட்டிஎன் கோபொற் பொதுநடஞ் செய்யுமுக் கண்ணவனே.
  • மாயை நீக்கம்
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • 11. அருட்பெருங் கடலே என்னை ஆண்டசற் குருவே ஞானப்
    பொருட்பெருஞ் சபையில் ஆடும் பூரண வாழ்வே நாயேன்
    மருட்பெரு மாயை முற்றும் மடிந்தன வினைக ளோடே
    இருட்பெருந் தடையை நீக்கி இரவியும் எழுந்த தன்றே.
  • 12. மாணவ நிலைக்கு மேலே வயங்கிய ஒளியே மன்றில்
    தாணவ நடஞ்செய் கின்ற தனிப்பெருந் தலைவ னேஎன்
    கோணவ மாயை எல்லாம் குலைந்தன வினைக ளோடே
    ஆணவ இருளை நீக்கி அலரியும் எழுந்த தன்றே.
  • 13. தற்பரம் பொருளே வேதத் தலைநின்ற ஒளியே மோனச்
    சிற்பர சுகமே மன்றில் திருநடம் புரியுந் தேவே
    வற்புறு மாயை எல்லாம் மடிந்தன வினைக ளோடே
    இற்படும் இருளை நீக்கி இரவியும் எழுந்த தன்றே.
  • சிதம்பரேசன் அருள்
    கலி விருத்தம்
  • 14. சிற்றறி வுடையநான் செய்த தீமைகள்
    முற்றவும் பொறுத்தருள் முனிந்திடேல் இன்றே
    தெற்றென அருட்பெருஞ் சோதிச் செல்வமும்
    மற்றவும் வழங்குக வரதனே என்றேன்.
  • 15. என்றசொல் செவிமடுத் திறையும் அஞ்சிடேல்
    இன்றுனக் கருட்பெருஞ் சோதி ஈந்தனம்
    நன்றுற மகிழ்கஎந் நாளுஞ் சாவுறா
    வென்றியும் அளித்தனம் என்று மேவினான்.
  • 16. மேவிஎன் உள்ளகத் திருந்து மேலும்என்
    ஆவியிற் கலந்திவன் அவன்என் றோதும்ஓர்
    பூவியற் பேதமும் போக்கி ஒன்றதாய்த்
    தேவியற் புரிந்தனன் சிதம்ப ரேசனே.
  • போற்றிச் சந்த விருத்தம்
    சந்த விருத்தம்
  • 17. போற்றி நின்அருள் போற்றி நின்பொது
    போற்றி நின்புகழ் போற்றி நின்உரு
    போற்றி நின்இயல் போற்றி நின்நிலை
    போற்றி நின்நெறி போற்றி நின்சுகம்
    போற்றி நின்உளம் போற்றி நின்மொழி
    போற்றி நின்செயல் போற்றி நின்குணம்
    போற்றி நின்முடி போற்றி நின்நடு
    போற்றி நின்அடி போற்றி போற்றியே.
  • 18. போற்றி நின்இடம் போற்றி நின்வலம்
    போற்றி நின்நடம் போற்றி நின்நலம்
    போற்றி நின்திறம் போற்றி நின்தரம்
    போற்றி நின்வரம் போற்றி நின்கதி
    போற்றி நின்கலை போற்றி நின்பொருள்
    போற்றி நின்ஒளி போற்றி நின்வெளி
    போற்றி நின்தயை போற்றி நின்கொடை
    போற்றி நின்பதம் போற்றி போற்றியே.
  • 19. போற்று கின்றஎன் புன்மை யாவையும்
    பொறுத்த நின்பெரும் பொறுமை போற்றிஎன்
    ஆற்று வேன்உனக் கறிகி லேன்எனக்
    கறிவு தந்தபே ரறிவ போற்றிவான்
    காற்று நீடழல் ஆதி ஐந்துநான்
    காணக் காட்டிய கருத்த போற்றிவன்
    கூற்று தைத்துநீத் தழிவி லாஉருக்
    கொள்ள வைத்தநின் கொள்கை போற்றியே.
  • பாடமும் படிப்பும்
    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • 20. அம்பலம் சேர்ந்தேன் எம்பலம் ஆர்ந்தேன்
    அப்பனைக் கண்டேன் செப்பமுட் கொண்டேன்
    உம்பர் வியப்ப இம்பர் இருந்தேன்
    ஓதா துணர்ந்தேன் மீதானம் உற்றேன்
    நம்பிடில் அணைக்கும் எம்பெரு மானை
    நாயகன் தன்னைத் தாயவன் தன்னைப்
    பம்புறப் பாடிப் படிக்கின்றேன் மேலும்
    படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே.
  • 21. கள்ளத்தை அற்ற உள்ளத்தைப் பெற்றேன்
    கன்றிக் கனிந்தே மன்றில் புகுந்தேன்
    தெள்ளத் தெளிந்த வெள்ளத்தை உண்டேன்
    செய்வகை கற்றேன் உய்வகை உற்றேன்
    அள்ளக் குறையா வள்ளற் பொருளை
    அம்பலச் சோதியை எம்பெரு வாழ்வை
    பள்ளிக்குட் பாடிப் படிக்கின்றேன் மேலும்
    படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே.
  • 22. காட்டைக் கடந்தேன் நாட்டை அடைந்தேன்
    கவலை தவிர்ந்தேன் உவகை மிகுந்தேன்
    வீட்டைப் புகுந்தேன் தேட்டமு துண்டேன்
    வேதாக மத்தின் விளைவெலாம் பெற்றேன்
    ஆட்டைப் புரிந்தே அம்பலத் தோங்கும்
    ஐயர் திருவடிக் கானந்த மாகப்
    பாட்டைப் படித்தேன் படிக்கின்றேன் மேலும்
    படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே.
  • பாட்டும் திருத்தமும்
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • 23. தேன்பாடல் அன்புடையார் செயப்பொதுவில் நடிக்கின்ற சிவமே ஞானக்
    கான்பாடிச் சிவகாம வல்லிமகிழ் கின்றதிருக் கணவா நல்ல
    வான்பாட மறைபாட என்னுளத்தே வயங்குகின்ற மன்னா நின்னை
    யான்பாட நீதிருத்த என்னதவஞ் செய்தேனோ எந்தாய் எந்தாய்.
  • 24. ஆன்பாலும் நறுந்தேனும் சர்க்கரையும் கூட்டியதெள் ளமுதே என்றன்
    ஊன்பாலும் உளப்பாலும் உயிர்ப்பாலும் ஒளிர்கின்ற ஒளியே வேதம்
    பூம்பாடல் புனைந்தேத்த என்னுளத்தே ஆடுகின்ற பொன்னே நின்னை
    யான்பாட நீதிருத்த என்னதவஞ் செய்தேனோ எந்தாய் எந்தாய்.
  • அம்பலத்தரசே அபயம்
    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • 25. பொருட்பெருந் தனிமெய்ப் போகமே என்னைப்
    புறத்தினும் அகத்தினும் புணர்ந்த
    தெருட்பெருஞ் சிவமே சுத்தசன் மார்க்கச்
    செல்வமே நான்பெற்ற சிறப்பே
    மருட்பெருங் கடலைக் கடத்திஎன் தன்னை
    வாழ்வித்த என்பெரு வாழ்வே
    அருட்பெருஞ் சோதி அம்பலத் தரசே
    அம்மையே அப்பனே அபயம்.
  • 26. பொருட்பெரு மறைகள் அனந்தம்ஆ கமங்கள்
    புகலும்ஓர் அனந்தம்மேற் போந்த
    தெருட்பெரு வெளிமட் டளவிலாக் காலம்
    தேடியும் காண்கிலாச் சிவமே
    மருட்பெரும் பகைதீர்த் தென்னைஆட் கொண்ட
    வள்ளலே தெள்ளிய அமுதே
    அருட்பெருஞ் சோதி அம்பலத் தரசே
    அம்மையே அப்பனே அபயம்.
  • 27. பொருட்பெருஞ் சுடர்செய் கலாந்தயோ காந்தம்
    புகன்றபோ தாந்த நாதாந்தம்
    தெருட்பெரு வேதாந் தம்திகழ் சித்தாந்
    தத்தினும் தித்திக்கும் தேனே
    மருட்பெரு இருளைத் தீர்த்தெனை வளர்க்கும்
    மாபெருங் கருணையா ரமுதே
    அருட்பெருஞ் சோதி அம்பலத் தரசே
    அம்மையே அப்பனே அபயம்.
  • அருட்பெருஞ்சோதி அபயம்
    நேரிசை வெண்பா
  • 28. அருட்பெருஞ் சோதி அபயம் அபயம்
    அருட்பெருஞ் சோதி அபயம் - அருட்பெருஞ்
    சோதி அபயம்சிற் சோதி அபயம்பொற்
    சோதி அபயம் துணை.
  • 29. துணைவா அபயம் துயர்அகல என்பால்
    அணைவா அபயம் அபயம் - பணைவாய்
    வடலா அபயம் வரதா அபயம்
    நடநாய காஅபயம் நான்.
  • 30. நானாகித் தானாய் நடித்தருள்கின் றாய்அபயம்
    தேனாய் இனிக்கும் சிவஅபயம் - வானாடு
    மெய்யா அபயம் விமலா அபயமென்றன்
    ஐயா அபயமப யம்.
  • 31. அபயம் பதியே அபயம் பரமே
    அபயம் சிவமே அபயம் - உபய
    பதத்திற் கபயம் பரிந்தென்உளத் தேநல்
    விதத்தில் கருணை விளை.
  • 32. கருணா நிதியே அபயம் கனிந்த
    அருணா டகனே அபயம் - மருணாடும்
    உள்ளக் கவலை ஒழிப்பாய்என் வன்மனத்துப்
    பொள்ளற் பிழைகள் பொறுத்து.
  • எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • 33. இணக்கறியீர் இதம்அறியீர் இருந்தநிலை அறியீர்
    இடம்அறியீர் தடம்அறியீர் இவ்வுடம்பை எடுத்த
    கணக்கறியீர் வழக்கறியீர் அம்பலத்தே மாயைக்
    கலக்கம்அற நடிக்கின்ற துலக்கம்அறி வீரோ
    பிணக்கறிவீர் புரட்டறிவீர்348 பிழைசெயவே அறிவீர்
    பேருணவைப் பெருவயிற்றுப் பிலத்தில்இட அறிவீர்
    மணக்கறியே பிணக்கறியே வறுப்பேபேர்ப் பொரிப்பே
    வடைக்குழம்பே சாறேஎன் றடைக்க அறிவீரே.
  • 34. உழக்கறியீர் அளப்பதற்கோர் உளவறியீர் உலகீர்
    ஊர்அறியீர் பேர்அறியீர் உண்மைஒன்றும் அறியீர்
    கிழக்கறியீர் மேற்கறியீர் அம்பலத்தே மாயைக்
    கேதம்அற நடிக்கின்ற பாதம்அறி வீரோ
    வழக்கறிவீர் சண்டையிட்டே வம்பளக்க அறிவீர்
    வடிக்கும்முன்னே சோறெடுத்து வயிற்றடைக்க அறிவீர்
    குழக்கறியே349 பழக்கறியே கூட்டுவர்க்கக் கறியே
    குழம்பேசா றேஎனவும் கூறஅறி வீரே.
  • அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • 35. உணிக்கும் மூட்டுக்கும் கொதுகுக்கும் பேனுக்கும் உவப்புறப் பசிக்கின்றீர்
    துணிக்கும் காசுக்கும் சோற்றுக்கும் ஊர்தொறும் சுற்றிப்போய் அலைகின்றீர்
    பிணிக்கும் பீடைக்கும் உடலுளம் கொடுக்கின்றீர் பேதையீர் நல்லோர்கள்
    பணிக்கும் வேலைசெய் துண்டுடுத் தம்பலம் பரவுதற் கிசையீரே.
  • 36. மழவுக்கும் ஒருபிடிசோ றளிப்பதன்றி இருபிடிஊண் வழங்கில் இங்கே
    உழவுக்கு முதல்குறையும் எனவளர்த்தங் கவற்றைஎலாம் ஓகோ பேயின்
    விழவுக்கும் புலால்உண்ணும் விருந்துக்கும் மருந்துக்கும் மெலிந்து மாண்டார்
    இழவுக்கும் இடர்க்கொடுங்கோல் இறைவரிக்கும் கொடுத்திழப்பர் என்னே என்னே.
  • 37. கடுகாட்டுக் கறிக்கிடுக தாளிக்க எனக்கழறிக் களிக்கா நின்ற
    சுடுகாட்டுப் பிணங்காள்இச் சுகமனைத்தும் கணச்சுகமேசொல்லக் கேண்மின்
    முடுகாட்டுக் கூற்றுவரும் சாவீரால் சாவதற்கு முன்னே நீவீர்
    இடுகாட்டுப்பிணங்கண்டால் ஏத்துமினோ எமையும்இவ்வா றிடுகஎன்றே.
  • 38. மதிப்பாலை அருட்பாலை ஆனந்தப் பாலைஉண்ண மறந்தார் சில்லோர்
    விதிப்பாலை அறியேம்தாய்ப் பாலைஉண்டு கிடந்தழுது விளைவிற் கேற்பக்
    கொதிப்பாலை உணர்வழிக்கும் குடிப்பாலை மடிப்பாலைக் குடிப்பார்அந்தோ
    துதிப்பாலை அருள்தருநம் தேவசிகா மணித்தேவைத் துதியார் அன்றே.
  • எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • 39. சிரிப்பிலே பொழுது கழிக்கும்இவ் வாழ்க்கைச்
    சிறியவர் சிந்தைமாத் திரமோ
    பொருப்பிலே தவஞ்செய் பெரியர்தம் மனமும்
    புளிப்பிலே துவர்ப்பிலே உவர்ப்புக்
    கரிப்பிலே கொடிய கயப்பிலே கடிய
    கார்ப்பிலே கார்ப்பொடு கலந்த
    எரிப்பிலே புகுவ தன்றிஎள் அளவும்
    இனிப்பிலே புகுகின்ற திலையே.
  • கலிநிலைத்துறை
  • 40. பூவார் கொன்றைச் செஞ்சடை யாளர் புகழாளர்
    ஈவார் போல்வந் தென்மனை புக்கார் எழில்காட்டி
    தேவார் தில்லைச் சிற்சபை மேவும் திருவாளர்
    ஆவா என்றார் என்னடி அம்மா அவர்சூதே.
  • எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • 41. நல்வினை சிறிதும் நயந்திலேன் என்பாள்
    நான்செயத் தக்கதே தென்பாள்
    செல்வினை ஒன்றுந் தெரிந்திலன் ஐயோ
    தெய்வமே தெய்வமே என்பாள்
    வெல்வினை மன்றில் நடம்புரி கின்றார்
    விருப்பிலர் என்மிசை என்பாள்
    வல்வினை உடையேன் என்றுளம் பதைப்பாள்
    வருந்துவாள் நான்பெற்ற மகளே.
  • எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • 42. நாதரருட் பெருஞ்சோதி நாயகர்என் தனையே
    நயந்துகொண்ட தனித்தலைவர் ஞானசபா பதியார்
    வாதநடம் புரிகருணை மாநிதியார் வரதர்
    வள்ளல்எலாம் வல்லவர்மா நல்லவர்என் இடத்தே
    காதலுடன் வருகின்றார் என்றுபர நாதம்
    களிப்புறவே தொனிக்கின்ற தந்தரதுந் துபிதான்
    ஏதமற முழங்குகின்ற தென்றுசொல்லிக் கொண்டே
    எழுகின்றாள் தொழுகின்றாள் என்னுடைய மகளே.
  • அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • 43. அன்பாடு திருப்பொதுவில் ஆடுகின்ற அடிமேல் ஆணை
    என்பாடென் றிலைஎன்னால் துரும்பும் அசைத் திடமுடியா திதுகால் தொட்டுப்
    பொன்பாடெவ் விதத்தானும் புரிந்துகொண்டு நீதானே புரத்தல் வேண்டும்
    உன்பாடு நான்உரைத்தேன் நீஇனிச்சும் மாஇருக்க ஒண்ணா தண்ணா.
  • 44. முன்பாடு பின்பயன்தந் திடும்எனவே உரைக்கின்றோர் மொழிகள் எல்லாம்
    இன்பாடும் இவ்வுலகில் என்னறிவில் இலைஅதனால் எல்லாம் வல்லோய்
    அன்பாடு திருப்பொதுவில் ஆடுகின்றோய் அருட்சோதி அளித்துக் காத்தல்
    உன்பாடு நான்உரைத்தேன் எனக்கொருபா டுண்டோநீ உரைப்பாய் அப்பா.
  • 45. உன்ஆணை உன்னைவிட உற்றதுணை வேறிலைஎன் உடையாய் அந்தோ
    என்நாணைக் காத்தருளி இத்தினமே அருட்சோதி ஈதல் வேண்டும்
    அந்நாள்நை யாதபடி அருள்புரிந்த பெருங்கருணை அரசே என்னை
    முன்னாள்நின் அடியவன்என் றுலகறிந்த இந்நாள்என் மொழிந்தி டாதே.
  • 46. தூங்காதே விழித்திருக்கும் சூதறிவித் தெனைஆண்ட துரையே என்னை
    நீங்காதே என்னுயிரில் கலந்துகொண்ட பதியேகால் நீட்டிப் பின்னே
    வாங்காதே விரைந்திவண்நீ வரல்வேண்டும் தாழ்த்திடில்என் மனந்தான் சற்றும்
    தாங்காதே இதுநினது தனித்ததிரு வுளமறிந்த சரிதம் தானே.
  • 47. இயங்காளி புலிகரடி எனப்பெயர்கேட் டுளம்நடுங்கி இருந்தேன் ஊரில்
    சயங்காளிக் கோயிலைக்கண் டஞ்சிமனம் தழுதழுத்துத் தளர்ந்தேன் இந்தப்
    பயங்காளிப் பயல்போலப் பயந்தவர்கள் எங்குளர்காண் பதியே என்னை
    வயங்காளில் ஒருவன்என நினையேல்கைப் பிள்ளைஎன மதித்தி டாயே.
  • 48. சிறுசெயலைச் செயும்உலகச் சிறுநடையோர் பலபுகலத் தினந்தோ றுந்தான்
    உறுசெயலை அறியாஇச் சிறுபயலைப் பிடித்தலைத்தல் உவப்போ கண்டாய்
    தெறுசெயலைத் தவிர்த்தெல்லாச் சித்தியும்பெற் றிடஅழியாத் தேகன் ஆகப்
    பெறுசெயலை எனக்களித்தே மறுசெயலைப் புரிகஎனைப் பெற்ற தேவே.
  • கலிநிலைத்துறை
  • 49. அங்கே உன்றன் அன்பர்கள் எல்லாம் அமர்கின்றார்
    இங்கே நீதான் என்னள வின்னும் இரங்காயேல்
    எங்கே போகேன் யாரொடு நோகேன் எதுசெய்கேன்
    செங்கேழ் வேணித் திங்கள் அணிந்தருள் சிவனேயோ.
  • 50. ஈயோ டுறழும் சிறியேன் அளவில் எந்தாய்நின்
    சேயோ டுறழும் பேரருள் வண்ணத் திருவுள்ளம்
    காயோ பழமோ யாதோ அறியேன் கவல்கின்றேன்
    தீயோ டுறழும் திருவருள் வடிவச் சிவனேயோ.
  • அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • 51. உடைய நாயகன் பிள்ளைநான் ஆகில்எவ் வுலகமும் ஒருங்கின்பம்
    அடைய நான்அருட் சோதிபெற் றழிவிலா யாக்கைகொண் டுலகெல்லாம்
    மிடைய அற்புதப் பெருஞ்செயல் நாடொறும் விளைத்தெங்கும் விளையாடத்
    தடைய தற்றநல் தருணம்இத் தருணமாத் தழைக்கஇத் தனியேற்கே.
  • 52. கோது கொடுத்த மனச்சிறியேன் குற்றம் குணமாக் கொண்டேஇப்
    போது கொடுத்த நின்அருளாம் பொருளை நினைக்கும் போதெல்லாம்
    தாது கொடுத்த பெருங்களிப்பும் சாலா தென்றால் சாமிநினக்
    கேது கொடுப்பேன் கேட்பதன்முன் எல்லாம் கொடுக்க வல்லாயே.
  • 53. கன்றுடைய பசுப்போலே கசிந்துருகும் அன்பரெலாம் காணக் காட்டும்
    என்றுடைய நாயகனே எல்லாஞ்செய் வல்லவனே இலங்குஞ் சோதி
    மன்றுடைய மணவாளா மன்னவனே என்னிருகண் மணியே நின்னை
    அன்றுடையேன் இன்றுவிடேன் ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஆணை ஐயா.
  • 54. திருநி லைத்துநல் அருளொடும் அன்பொடும் சிறப்பொடும் செழித்தோங்க
    உருநி லைத்திவண் மகிழ்வொடு வாழ்வுற உவந்துநின் அருள்செய்வாய்
    இருநி லத்தவர் இன்புறத் திருவருள் இயல்வடி வொடுமன்றில்
    குருநி லைத்தசற் குருஎனும் இறைவநின் குரைகழற் பதம்போற்றி.
  • 55. குற்றம் புரிதல் எனக்கியல்பே குணமாக் கொள்ளல் உனக்கியல்பே
    சிற்றம் பலவா இனிச்சிறியேன் செப்பும் முகமன் யாதுளது
    தெற்றென் றடியேன் சிந்தைதனைத் தெளிவித் தச்சந் துயர்தீர்த்தே
    இற்றைப் பொழுதே அருட்சோதி ஈக தருணம் இதுவாமே.
  • 56. அருளா ரமுதே என்னுடைய அன்பே என்றன் அறிவேஎன்
    பொருளாய் அகத்தும் புறத்தும்என்னைப் புணர்ந்த கருணைப் பொருப்பேமெய்த்
    தெருளாம் ஒளியே வெளியாகச் சிற்றம் பலத்தே நடிக்கின்றோய்
    இருளா யினஎல் லாம்தவிர்த்தென் எண்ணம் முடிப்பாய் இப்போதே.
  • 57. மந்திரம் அறியேன் மற்றை மணிமருந் தறியேன் வேறு
    தந்திரம் அறியேன் எந்தத் தகவுகொண் டடைவேன் எந்தாய்
    இந்திரன் முதலாம் தேவர் இறைஞ்சப்பொன் மன்றில் வேணிச்
    சந்திரன் ஆட இன்பத் தனிநடம் புரியும் தேவே.
  • 58. கருணைக் கடலே அதில்எழுந்த கருணை அமுதே கனியமுதில்
    தருணச் சுவையே சுவைஅனைத்தும் சார்ந்த பதமே தற்பதமே
    பொருண்மெய்ப் பரமே சிதம்பரமாம் பொதுவில் நடிக்கும் பரம்பரமே
    தெருண்மெய்க் கருத்தில் கலந்தெனையும் சித்தி நிலைகள் தெரித்தருளே.
  • 59. கலக்கம் அற்றுநான் நின்றனைப் பாடியே களிக்கின்ற நாள்எந்நாள்
    இலக்கம் உற்றறிந் திடஅருள் புரிகுவாய் எந்தைஇவ் விரவின்கண்
    துலக்க முற்றசிற் றம்பலத் தாடுமெய்ச் சோதியே சுகவாழ்வே
    அலக்கண் அற்றிடத் திருவருள் புரியும்என் அப்பனே அடியேற்கே.
  • கட்டளைக் கலிப்பா
  • 60. பண்டு நின்திருப் பாதம லரையே
    பாடி யாடிய பத்திமை யோரைப்போல்
    தொண்டு கொண்டெனை ஆண்டனை இன்றுதான்
    துட்டன் என்றுது ரத்திடல் நன்றுகொல்
    குண்டு நீர்க்கடல் சூழுல கத்துளோர்
    குற்றம் ஆயிரங் கோடிசெய் தாலும்முன்
    கொண்டு பின்குலம் பேசுவ ரோஎனைக்
    குறிக்கொள் வாய்எண் குணந்திகழ் வள்ளலே.
  • எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • 61. கண்ணெலாம் நிரம்பப் பேரொளி காட்டிக்
    கருணைமா மழைபொழி முகிலே
    விண்ணெலாம் நிறைந்த விளக்கமே என்னுள்
    மேவிய மெய்ம்மையே மன்றுள்
    எண்ணெலாம் கடந்தே இலங்கிய பதியே
    இன்றுநீ ஏழையேன் மனத்துப்
    புண்ணெலாம் தவிர்த்துப் பொருளெலாம் கொடுத்துப்
    புகுந்தென துளங்கலந் தருளே.
  • 62. அன்பிலேன் எனினும் அறிவிலேன் எனினும்
    அன்றுவந் தாண்டனை அதனால்
    துன்பிலேன் எனஇவ் வுலகெலாம் அறியச்
    சொல்லினேன் சொல்லிய நானே
    இன்பிலேன் எனஇன் றுரைத்திடல் அழகோ
    எனைஉல கவமதித் திடில்என்
    என்பிலே கலந்தாய் நினக்கும்வந் திடுமே
    எய்துக விரைந்தென திடத்தே.
  • கட்டளைக் கலித்துறை
  • 63. வான்வேண்டு சிற்றம் பலத்தே வயங்கி வளரமுதத்
    தேன்வேண்டி னேன்இத் தருணத் தருள்செய்க செய்திலையேல்
    ஊன்வேண்டும் என்னுயிர் நீத்துநின் மேற்பழி யோவிளைப்பேன்
    நான்வேண்டு மோபழி தான்வேண்டு மோசொல்க நாயகனே.
  • எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • 64. செவ்வணத் தவரும் மறையும்ஆ கமமும்
    தேவரும் முனிவரும் பிறரும்
    இவ்வணத் ததுஎன் றறிந்திடற் கரிதாம்
    எந்தைநின் திருவருள் திறத்தை
    எவ்வணத் தறிவேன் எங்ஙனம் புகல்வேன்
    என்தரத் தியலுவ தேயோ
    ஒவ்வணத் தரசே எனக்கென இங்கோர்
    உணர்ச்சியும் உண்டுகொல் உணர்த்தே.
  • 65. உணர்ந்துணர்ந் தாங்கே உணர்ந்துணர்ந் துணரா
    உணர்ந்தவர் உணர்ச்சியான் நுழைந்தே
    திணர்ந்தனர் ஆகி வியந்திட விளங்கும்
    சிவபதத் தலைவநின் இயலைப்
    புணர்ந்தநின் அருளே அறியும்நான் அறிந்து
    புகன்றிடும் தரஞ்சிறி துளனோ
    கொணர்ந்தொரு பொருள்என் கரங்கொளக் கொடுத்த
    குருஎனக் கூறல்என் குறிப்பே.
  • எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • 66. அயலறியேன் நினதுமலர் அடிஅன்றிச் சிறிதும்
    அம்பலத்தே நிதம்புரியும் ஆனந்த நடங்கண்
    டுயலறியேன் எனினும்அது கண்டுகொளும் ஆசை
    ஒருகடலோ எழுகடலோ உரைக்கவொணா துடையேன்
    மயலறியா மனத்தமர்ந்த மாமணியே மருந்தே
    மதிமுடிஎம் பெருமான்நின் வாழ்த்தன்றி மற்றோர்
    செயலறியேன் எனக்கருளத் திருவுளஞ்செய் திடுவாய்
    திருஎழுத்தைந் தாணைஒரு துணைசிறிதிங் கிலனே.
  • 67. கொழுந்தேனும் செழும்பாகும் குலவுபசும் பாலும்
    கூட்டிஉண்டாற் போல்இனிக்குங் குணங்கொள்சடைக் கனியே
    தொழுந்தேவ மடந்தையர்க்கு மங்கலநாண் கழுத்தில்
    தோன்றவிடம் கழுத்தினுளே தோன்றநின்ற சுடரே
    எழுந்தேறும் அன்பருளத் தேற்றுதிரு விளக்கே
    என்உயிர்க்குத் துணையேஎன் இருகண்ணுள் மணியே
    அழுந்தேற அறியாதென் அவலநெஞ்சம் அந்தோ
    அபயம்உனக் கபயம்எனை ஆண்டருள்க விரைந்தே.
  • 68. என்னால்ஓர் துரும்பும்அசைத் தெடுக்கமுடி யாதே
    எல்லாஞ்செய் வல்லவன்என் றெல்லாரும் புகலும்
    நின்னால்இவ் வுலகிடைநான் வாழ்கின்றேன் அரசே
    நின்அருள்பெற் றழியாத நிலையைஅடைந் திடஎன்
    தன்னால்ஓர் சுதந்தரமும் இல்லைகண்டாய் நினது
    சகலசுதந் தரத்தைஎன்பால் தயவுசெயல் வேண்டும்
    பின்நாள்என் றிடில்சிறிதும் தரித்திருக்க மாட்டேன்
    பேராணை உரைத்தேன்என் பேராசை இதுவே.
  • 69. இச்சைஎலாம் புகன்றேன்என் இலச்சைஎலாம் விடுத்தேன்
    இனிச்சிறிதும் தரியேன்இங் கிதுதருணத் தடைந்தே
    அச்சைஎலாம் வெளிப்படுத்தி அச்சம்எலாம் அகற்றி
    அருட்சோதித் தனிஅரசே ஆங்காங்கும் ஓங்க
    விச்சைஎலாம் எனக்களித்தே அவிச்சைஎலாம் தவிர்த்து
    மெய்யுறஎன் னொடுகலந்து விளங்கிடுதல் வேண்டும்
    பச்சைஎலாம் செம்மைஎலாம் பொன்மைஎலாம் படர்ந்த
    படிகமணி விளக்கேஅம் பலம்விளங்கும் பதியே.
  • 70. தருவகைஇத் தருணம்நல்ல தருணம்இதில் எனக்கே
    தனித்தஅருட் பெருஞ்சோதி தந்தருள்க இதுதான்
    ஒருவகைஈ திலைஎனில்வே றொருவகைஎன் னுடைய
    உடல்உயிரை ஒழித்திடுக உவப்பினொடே இந்த
    இருவகையும் சம்மதமே திருவடிசாட் சியதாய்
    இயம்பினன்என் இதயம்உன்றன் இதயம்அறிந் ததுவே
    அருவகையோ உருவகையும் ஆகிஎன்னுள் அமர்ந்தாய்
    அம்மேஎன் அப்பாஎன் அய்யாஎன் அரசே.
  • 71. வருமுன் வந்ததாக் கொள்ளுதல் எனக்கு
    வழக்கம் வள்ளல்நீ மகிழ்ந்தருட் சோதி
    தருமுன் தந்தனை என்றிருக் கின்றேன்
    தந்தை நீதரல் சத்தியம் என்றே
    குருமுன் பொய்யுரை கூறலேன் இனிஇக்
    குவலை யத்திடைக் கவலையைத் தரியேன்
    திருமுன் விண்ணப்பம் செய்தனன் கருணை
    செய்க வாழ்கநின் திருவருட் புகழே.
  • 72. வினைத்தடைதீர்த் தெனைஆண்ட மெய்யன்மணிப் பொதுவில்
    மெய்ஞ்ஞான நடம்புரிந்து விளங்குகின்ற விமலன்
    எனைத்தனிவைத் தருளொளிஈந் தென்னுள்இருக் கின்றான்
    எல்லாஞ்செய் வல்லசித்தன் இச்சையருட் சோதி
    தினைத்தனைபெற் றவரேனும் சாலுமுன்னே உலகில்
    செத்தவர்கள் எல்லாரும் திரும்பவரு கென்று
    நினைத்தவுடன் எதிர்வந்து நிற்பர்கண்டாய் எனது
    நெஞ்சேநீ அஞ்சேல்உள் அஞ்சேல்அஞ் சேலே.
  • குறட்டாழிசை
  • 73. அணியே எனதுமெய் யறிவே பொதுவளர் அரசே திருவளர் அமுதே
    இனிதருள் வாய்இது தருணம் அமுதரு ளாய்இது தருணம்
    மணியே எனதுகண் மணியே பொதுவளர் மதியே திருவருண் மதியே
    அருள்புரி வாய்இது தருணம் அருள்புரி வாய்இது தருணம்.
  • நேரிசை வெண்பா
  • 74. இதுவே தருணம் எனைஅணைதற் கிங்கே
    பொதுவே நடிக்கும் புனிதா - விதுவேய்ந்த
    சென்னியனே சுத்த சிவனே உனக்கடியேன்
    அன்னியனே அல்லேன் அறிந்து.
  • கலித்துறை
  • 75. ஆதி யேதிரு அம்பலத் தாடல்செய் அரசே
    நீதி யேஎலாம் வல்லவா நல்லவா நினைந்தே
    ஓதி யேஉணர் தற்கரி தாகிய ஒருவான்
    சோதி யேஎனைச் சோதியேல் சோதியேல் இனியே.
  • கட்டளைக் கலித்துறை
  • 76. போதோ விடிந்த தருளரசேஎன் பொருட்டுவந்தென்
    தாதோர் எழுமையும் நன்மையுற் றோங்கத் தருவதுதான்
    மாதோட நீக்கும் கனிரச மோவந்த வான்கனியின்
    கோதோ அறிந்திலன் யாதோ திருவுளம் கூறுகவே.
  • 77. அப்பனை இப்பனை ஆக்கிச் சிவிகை அமர்ந்தவன்சொல்
    அப்பனை என்னுயிர்க் கானசெந் தேனை அமுதைஅந்நாள்
    அப்பனை ஆழி கடத்திக் கரைவிட் டளித்தசடை
    அப்பனைச் சிற்றம் பலவனை நான்துதித் தாடுவனே.
  • 78. மாதோர் புடைவைத்த மாமருந் தேமணி யேஎன் மட்டில்
    யாதோ திருவுளம் யானறி யேன்இதற் கென்னசெய்வேன்
    போதோ கழிகின்ற தந்தோநின் தன்னைப் பொருந்துகின்ற
    சூதோர் அணுவும் தெரியேன்நின் பாதத் துணைதுணையே.
  • தரவு கொச்சகக் கலிப்பா
  • 79. ஆர்ந்தஅருட் பெருஞ்சோதி அப்பாநான் அடுத்தவர்தம்
    சோர்ந்தமுகம் பார்க்கஇனித் துணியேன் நின்அருள்ஆணை
    நேர்ந்தவர்கள் நேர்ந்தபடி நெகிழ்ந்துரைக்கும் வார்த்தைகளும்
    ஓர்ந்துசெவி புகத்துணியேன் உன்ஆணை உன்ஆணை.
  • 80. அழியா நிலையாதது மேவிநின் அன்பினோடும்
    ஒழியா துனைப்பாடி நின்றாடி உலகினூடே
    வழியாம் உயிர்க்கின்பம் புரிந்து வயங்கல்வேண்டும்
    இழியா தருள்வாய் பொதுமேவிய எந்தைநீயே.
  • 81. கரும்பசைக்கும் மொழிச்சிறியார் கல்மனத்தில் பயின்றுபயின்
    றிரும்பசைக்கும் மனம்பெற்றேன் யானோஇவ் வேழைகள்தம்
    அரும்பசிக்கு மருந்தளிப்பேன் அந்தோஇங் கென்னாலே
    துரும்பசைக்க முடியாதே சோதிநடப் பெருமானே.
  • அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • 82. மதிக்களவா மணிமன்றில் திருநடஞ்செய் திருத்தாளை வழுத்தல் இன்று
    பதிக்களவா நலந்தருவல் என்றுநினை ஏத்துதற்குப் பணிக்கின் றேன்நீ
    விதிக்களவாச் சித்திகள்முன் காட்டுகஇங் கென்கின்றாய் விரைந்த நெஞ்சே
    பொதிக்களவா முன்னர்இங்கே சத்தத்துக் களவென்பார் போன்றாய் அன்றே.
  • 83. ஆடியகால் மலர்களுக்கே அன்புடையார் யாவரிங்கே அவர்க்கே இன்பம்
    கூடியதென் றாரணமும் ஆகமமும் ஆணையிட்டுக் கூறும்வார்த்தை
    ஓடியதோ நெஞ்சேநீ உன்னுவதென் பற்பலவாய் உன்னேல் இன்னே
    பாடிஅவன் திருப்பாட்டைப் படிகண்டாய் இன்புகலப் படிகண் டாயே.
  • எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • 84. ஒன்றுமுன் எண்பால் எண்ணிடக் கிடைத்த
    வுவைக்குமேற் றனைஅருள் ஒளியால்
    நன்றுகண் டாங்கே அருட்பெருஞ் சோதி
    நாதனைக் கண்டவன் நடிக்கும்
    மன்றுகண் டதனில் சித்தெலாம் வல்ல
    மருந்துகண் டுற்றது வடிவாய்
    நின்றுகொண் டாடுந் தருணம்இங் கிதுவே
    நெஞ்சமே அஞ்சலை நீயே.
  • 85. கலைவளர் முடிய தென்னைஆட் கொண்ட
    கருணையங் கண்ணது ஞான
    நிலைவளர் பொருள துலகெலாம் போற்ற
    நின்றது நிறைபெருஞ் சோதி
    மலைவளர் கின்றது அருள்வெளி நடுவே
    வயங்குவ தின்பமே மயமாய்த்
    தலைவளர் திருச்சிற் றம்பலந் தனிலே
    தனித்தெனக் கினித்ததோர் கனியே.
  • 86. மன்றுள்நின் றாடும் வள்ளலே எனது
    வள்ளல்என் றெனக்குளே தெரிந்த
    அன்றுதான் தொடங்கி அம்மையே அப்பா
    ஐயனே அன்பனே அரசே
    என்றுநின் தனையே நினைத்திருக் கின்றேன்
    எட்டுணை எனினும்வே றிடத்தில்
    சென்றுநின் றறியேன் தெய்வமே இதுநின்
    திருவுளம் தெரிந்தது தானே.
  • 87. உள்ளலேன் உடையார் உண்ணவும் வறியார்
    உறுபசி உழந்துவெந் துயரால்
    வள்ளலே நெஞ்சம் வருந்தவும் படுமோ
    மற்றிதை நினைத்திடுந் தோறும்
    எள்ளலேன் உள்ளம் எரிகின்ற துடம்பும்
    எரிகின்ற தென்செய்வேன் அந்தோ
    கொள்ளலேன் உணவும் தரிக்கிலேன் இந்தக்
    குறையெலாம் தவிர்த்தருள் எந்தாய்.
  • அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • 88. ஐவகைத் தொழிலும் என்பால் அளித்தனை அதுகொண் டிந்நாள்
    செய்வகை தெரிவித் தென்னைச் சேர்ந்தொன்றாய் இருத்தல் வேண்டும்
    பொய்வகை அறியேன் வேறு புகலிலேன் பொதுவே நின்று
    மெய்வகை உரைத்தேன் இந்த விண்ணப்பம் காண்க நீயே.
  • 89. உருவ ராகியும் அருவின ராகியும் உருஅரு வினராயும்
    ஒருவ ரேஉளார் கடவுள்கண் டறிமினோ உலகுளீர் உணர்வின்றி
    இருவ ராம்என்றும் மூவரே யாம்என்றும் இயலும்ஐ வர்கள்என்றும்
    எருவ ராய்உரைத் துழல்வதென் உடற்குயிர் இரண்டுமூன் றெனலாமே.
  • கட்டளைக் கலித்துறை
  • 90. சேய்போல் உலகத் துயிரைஎல் லாம்எண்ணிச் சேர்ந்துபெற்ற
    தாய்போல் உரைப்பர்சன் மார்க்கசங் கத்தவர் சாற்றும்எட்டிக்
    காய்போல் பிறர்தமைக் கண்டால் கசந்து கடுகடுத்தே
    நாய்போல் குரைப்பர்துன் மார்க்கசங் கத்தவர் நானிலத்தே.
  • எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • 91. வண்டணிபூங் குழல்அம்மை எங்கள்சிவ காம
    வல்லியொடு மணிமன்றில் வயங்கியநின் வடிவம்
    கண்டவரைக் கண்டவர்தம் கால்மலர்முத் தேவர்
    கனமுடிக்கே முடிக்கின்ற கடிமலராம் என்றால்
    பண்டகுநின் திருத்தொண்டர் அடிப்பெருமை எவரே
    பகர்ந்திடுவர் மறைகளெலாம் பகர்ந்திடுவான் புகுந்தே
    விண்டுலர்ந்து வெளுத்தஅவை வெளுத்தமட்டோ அவற்றை
    வியந்தோதும் வேதியரும் வெளுத்தனர்உள் உடம்பே.
  • 92. கிழக்குவெளுத் ததுகருணை அருட்சோதி உதயம்
    கிடைத்ததென துளக்கமலம் கிளர்ந்ததென தகத்தே
    சழக்குவெளுத் ததுசாதி ஆச்சிரமா சாரம்
    சமயமதா சாரம்எனச் சண்டையிட்ட கலக
    வழக்குவெளுத் ததுபலவாம் பொய்ந்நூல்கற் றவர்தம்
    மனம்வெளுத்து வாய்வெளுத்து வாயுறவா தித்த
    முழுக்குவெளுத் ததுசிவமே பொருள்எனும்சன் மார்க்க
    முழுநெறியில் பரநாத முரசுமுழங் கியதே.
  • நிலைமண்டில ஆசிரியப்பா
  • 93. சிற்சபைக் கண்ணும் பொற்சபைக் கண்ணும்
    திருநடம் புரியும் திருநட ராஜ
    எனக்கருள் புரிந்த நினக்கடி யேன்கைம்
    மாற்றை அறிந்திலன் போற்றிநின் அருளே.
  • 94. நாயினும் சிறியேன் ஆயினும் பெரியேன்
    யாதிற் பெரியேன் தீதிற் பெரியேன்
    என்னைஆண் டருளினை என்னைஆண் டவனே
    அம்பலத் தாடல்செய் எம்பெரும் பொருளே.
  • நேரிசை வெண்பா
  • 95. உண்மைஉரைத் தருள்என் றோதினேன் எந்தைபிரான்
    வண்மையுடன் என்அறிவில் வாய்ந்துரைத்தான் - திண்மையுறு
    சித்திநிலை எல்லாம் தெரிவித் தருள்கின்றேம்
    இத்தருணம் சத்தியமே என்று.
  • 96. உலகமெலாம் போற்ற ஒளிவடிவ னாகி
    இலகஅருள் செய்தான் இசைந்தே - திலகன்என
    நானேசன் மார்க்கம் நடத்துகின்றேன் நம்பெருமான்
    தானே எனக்குத் தனித்து.
  • 97. தனித்துணையாய் என்றன்னைத் தாங்கிக்கொண் டென்றன்
    மனித்த உடம்பழியா வாறே - கனித்துணையாம்
    இன்னமுதம் தந்தெனக்கே எல்லாமும் வல்லசித்தி
    தன்னையுந்தந் துட்கலந்தான் றான்.
  • 98. சர்க்கரைஒத் தான்எனக்கே தந்தான் அருளென்மனக்
    கற்கரையச் செய்தே களிப்பித்தான் - கற்க
    இனியான் அருட்சோதி எந்தைஎன்னுள் உற்றான்
    இனியான் மயங்கேன் இருந்து.
  • 99. உன்னைவிட மாட்டேன்நான் உன்ஆணை எம்பெருமான்
    என்னைவிட மாட்டாய் இருவருமாய் - மன்னிஎன்றும்
    வண்மை எலாம்வல்ல வாய்மைஅரு ளால்உலகுக்
    குண்மைஇன்பம் செய்தும் உவந்து.
  • கட்டளைக் கலித்துறை
  • 100. நஞ்சுண் டுயிர்களைக் காத்தவ னேநட நாயகனே
    பஞ்சுண்ட சிற்றடிப் பாவைபங் காநம் பராபரனே
    மஞ்சுண்ட செஞ்சடை மன்னாபொன் அம்பல வாவலவா
    பிஞ்சுண்ட வாய்க்குப் பழம்அளித் தாண்ட பெரியவனே.
  • 101. அப்பூறு செஞ்சடை அப்பாசிற் றம்பலத் தாடுகின்றோய்
    துப்பூறு வண்ணச் செழுஞ்சுட ரேதனிச் சோதியனே
    வெப்பூறு நீக்கிய வெண்­று பூத்தபொன் மேனியனே
    உப்பூறு வாய்க்குத்தித் திப்பூறு காட்டிய உத்தமனே.
  • 102. நான்செய்த புண்ணியம் என்னுரைக் கேன்பொது நண்ணியதோர்
    வான்செய்த மாமணி என்கையில் பெற்றுநல் வாழ்வடைந்தேன்
    ஊன்செய்த தேகம் ஒளிவடி வாகநின் றோங்குகின்றேன்
    கோன்செய்த விச்சை குணிக்கவல் லார்எவர் கூறுமினே.
  • 103. பண்ணிய பூசை நிறைந்தது சிற்றம் பலநடங்கண்
    டெண்ணிய எண்ணம் பலித்தன மெய்இன்பம் எய்தியதோர்
    தண்ணியல் ஆரமு துண்டனன் கண்டனன் சாமியைநான்
    நண்ணிய புண்ணியம் என்னுரைக் கேன்இந்த நானிலத்தே.
  • 104. அருட்பெருஞ் சோதிஎன் அம்மையி னோடறி வானந்தமாம்
    அருட்பெருஞ் சோதிஎன் அப்பன்என் உள்ளத் தமர்ந்தன்பினால்
    அருட்பெருஞ் சோதித்தெள் ளாரமு தம்தந் தழிவற்றதோர்
    அருட்பெருஞ் சோதிச்செங் கோலும் கொடுத்தனன் அற்புதமே.
  • கலிவிருத்தம்
  • 105. அருட்பெருஞ் சோதிஎன் அகத்தில் ஓங்கின
    மருட்பெரும் திரைஎலாம் மடிந்து நீங்கின
    இருட்பெரு மலமுதல் யாவும் தீர்ந்தன
    தெருட்பெரும் சித்திகள் சேர்ந்த என்னையே.
  • 106. ஓவுறாத் துயர்செயும் உடம்புதான் என்றும்
    சாவுறா தின்பமே சார்ந்து வாழலாம்
    மாவுறாச் சுத்தசன் மார்க்க நன்னெறி
    மேவுறார் தங்களை விடுக நெஞ்சமே.
  • 107. பொத்திய மலப்பிணிப் புழுக்கு ரம்பைதான்
    சித்தியல் சுத்தசன் மார்க்கச் சேர்ப்பினால்
    நித்திய மாகியே நிகழும் என்பது
    சத்தியம் சத்தியம் சகத்து ளீர்களே.
  • கொச்சகக் கலிப்பா
  • 108. வானாகி வானடுவே மன்னும்ஒளி யாகிஅதில்
    தானாடு வானாகிச் சன்மார்க்கர் உள்ளினிக்கும்
    தேனாகித் தெள்ளமுதாய்த் தித்திக்கும் தேவேநீ
    யானாகி என்னுள் இருக்கின்றாய் என்னேயோ.
  • 109. ஞானா கரச்சுடரே ஞான மணிவிளக்கே
    ஆனா அருட்பெருஞ்சிற் றம்பலத்தே ஆனந்தத்
    தேனார் அமுதாம் சிவமே சிவமேநீ
    நானாகி என்னுள் நடிக்கின்றாய் என்னேயோ.
  • 110. என்தரத்துக் கேலாத எண்ணங்கள் எண்ணுகின்றேன்
    முன்தரத்தின் எல்லாம் முடித்துக் கொடுக்கின்றாய்
    நின்தரத்தை என்புகல்வேன் நின்இடப்பால்350 மேவுபசும்
    பொன்தரத்தை என்உரைக்கேன் பொற்பொதுவில் நடிக்கின்றோய்.
  • 111. என்னுடைய விண்ணப்பம் இதுகேட்க எம்பெருமான்
    நின்னுடைய பெருங்கருணை நிதிஉடையேன் ஆதலினால்
    பொன்னுடையான் அயன்முதலாம் புங்கவரை வியவேன்என்
    தன்னுடைய செயலெல்லாம் தம்பிரான் செயலன்றே.
  • 112. ஓங்கும்அன்பர் எல்லாரும் உள்ளே விழித்துநிற்கத்
    தூங்கிய என்தன்னை எழுப்பிஅருள் தூயபொருள்
    வாங்குகஎன் றென்பால் வலியக் கொடுத்தமுதும்
    பாங்குறநின் றூட்டினையே எந்தாய்நின் பண்பிதுவே.
  • 113. நாட்பாரில் அன்பரெலாம் நல்குகஎன் றேத்திநிற்ப
    ஆட்பாரில் அன்போர் அணுத்துணையும் இல்லேற்கே
    நீட்பாய் அருளமுதம் நீகொடுத்தாய் நின்னை இங்கே
    கேட்பார் இலைஎன்று கீழ்மேல தாக்கினையே.
  • 114. எல்லார்க்கும் கடையாகி இருந்தேனுக் கருள்புரிந்தே
    எல்லார்க்கும் துணையாகி இருக்கவைத்தாய் எம்பெருமான்
    எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்றாய் இவ்வண்ணம்
    எல்லார்க்கும் செய்யாமை யாதுகுறித் திசைஎனக்கே.
  • 115. நான்ஆனான் தான்ஆனான் நானும்தா னும்ஆனான்
    தேன்ஆனான் தெள்ளமுதாய்த் தித்தித்து நிற்கின்றான்
    வான்ஆனான் ஞான மணிமன்றில் ஆடுகின்றான்
    கோன்ஆனான் என்னுட் குலாவுகின்ற கோமானே.
  • கட்டளைக் கலித்துறை
  • 116. எல்லாக் குறையும் தவிர்ந்தேன்உன் இன்னருள் எய்தினன்நான்
    வல்லாரின் வல்லவன் ஆனேன் கருணை மருந்தருந்தி
    நல்லார் எவர்க்கும் உபகரிப் பான்இங்கு நண்ணுகின்றேன்
    கொல்லா விரதத்தில் என்னைக் குறிக்கொண்ட கோலத்தனே.
  • 117. முன்னாள்செய் புண்ணியம் யாதோ உலகம் முழுதும்என்பால்
    இந்நாள் அடைந்தின்பம் எய்திட ஓங்கினன் எண்ணியவா
    றெந்நாளும் இவ்வுடம் பேஇற வாத இயற்கைபெற்றேன்
    என்னாசை அப்பனைக் கண்டுகொண் டேன்என் இதயத்திலே.
  • 118. கண்டேன் சிற்றம்பலத் தானந்த நாடகம் கண்டுகளி
    கொண்டேன் எல்லாம்வல்ல சித்தனைக் கூடிக் குலவிஅமு
    துண்டேன் மெய்ஞ்ஞான உருஅடைந் தேன்பொய் உலகொழுக்கம்
    விண்டேன் சமரச சன்மார்க்கம் பெற்ற வியப்பிதுவே.
  • 119. கண்கொண்ட பூதலம் எல்லாம்சன் மார்க்கம் கலந்துகொண்டே
    பண்கொண்ட பாடலில் பாடிப் படித்துப் பரவுகின்றார்
    விண்கொண்ட சிற்சபை ஒன்றே நிறைந்து விளங்குகின்ற
    தெண்கொண்ட மற்றை மதமார்க்கம் யாவும் இறந்தனவே.
  • 120. தாழைப் பழம்பிழி பாலொடு சர்க்கரைச் சாறளிந்த
    வாழைப் பழம்பசு நெய்நறுந் தேனும் மருவச்செய்து
    மாழைப் பலாச்சுளை மாம்பழம் ஆதி வடித்தளவி
    ஏழைக் களித்தனை யேஅரு ளாரமு தென்றொன்றையே.
  • 121. தென்பால் முகங்கொண்ட தேவேசெந் தேனில் சிறந்தபசு
    வின்பால் கலந்தளி முக்கனிச் சாறும் எடுத்தளவி
    அன்பால் மகிழ்ந்து மகனே வருகென் றழைத்தருளி
    என்பால் அளித்தனை யேஅரு ளாரமு தென்றொன்றையே.
  • 122. செத்தார் எழுந்தனர் சுத்தசன் மார்க்கம் சிறந்ததுநான்
    ஒத்தார் உயர்ந்தவர் இல்லா ஒருவனை உற்றடைந்தே
    சித்தாடு கின்றனன் சாகா வரமும் சிறக்கப்பெற்றேன்
    இத்தா ரணியில் எனக்கிணை யார்என் றியம்புவனே.
  • கலிநிலைத்துறை
  • 123. கருணை யாம்பெருங் கடல்அமு தளித்தனை எனக்கே
    தருண வாரிச மலர்ப்பதம் தந்தனை நின்னை
    அருண வண்ணஒண் சுடர்மணி மண்டபத் தடியேன்
    பொருள்ந யப்புறக் கண்டுகண் டுளமகிழ் போதே.
  • எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • 124. முந்தைநாள் அயர்ந்தேன் அயர்ந்திடேல் எனஎன்
    முன்னர்நீ தோன்றினை அந்தோ
    அந்தநாள் தொடங்கி மகிழ்ந்திருக் கின்றேன்
    அப்பனே அய்யனே அரசே
    இந்தநாள் கவலை இடர்பயம் எல்லாம்
    என்னைவிட் டொழிந்திடப் புரிந்தாய்
    எந்தநாள் புரிந்தேன் இப்பெரும் பேறிங்
    கெய்துதற் குரியமெய்த் தவமே.
  • 125. வாய்க்குறும் புரைத்துத் திரிந்துவீண் கழித்து
    மலத்திலே கிடந்துழைத் திட்ட
    நாய்க்குயர் தவிசிட் டொருமணி முடியும்
    நன்றுறச் சூட்டினை அந்தோ
    தூய்க்குணத் தவர்கள் புகழ்மணி மன்றில்
    சோதியே நின்பெருந் தயவைத்
    தாய்க்குறு தயவென் றெண்ணுகோ தாயின்
    தயவும்உன் தனிப்பெருந் தயவே.
  • 126. பேரிடர் தவிர்த்துப் பேரருள் புரிந்த
    பெருமநின் தன்னைஎன் றனக்கே
    சாருறு தாயே என்றுரைப் பேனோ
    தந்தையே என்றுரைப் பேனோ
    சீருறு குருவே என்றுரைப் பேனோ
    தெய்வமே என்றுரைப் பேனோ
    யாரென உரைப்பேன் என்னெனப் புகழ்வேன்
    யாதுமொன் றறிந்திலேன் அந்தோ.
  • 127. சிறுநெறிக் கெனைத்தான் இழுத்ததோர் கொடிய
    தீமன மாயையைக் கணத்தே
    வெறுவிய தாக்கித் தடுத்தெனை ஆண்ட
    மெய்யநின் கருணைஎன் புகல்வேன்
    உறுநறுந் தேனும் அமுதும்மென் கரும்பில்
    உற்றசா றட்டசர்க் கரையும்
    நறுநெயுங் கலந்த சுவைப்பெரும் பழமே
    ஞானமன் றோங்கும்என் நட்பே.
  • 128. புல்லிய நெறிக்கே இழுத்தெனை அலைத்த
    பொய்ம்மன மாயையைக் கணத்தே
    மெல்லிய தாக்கித் தடுத்தெனை ஆண்ட
    மெய்யநின் கருணைஎன் புகல்வேன்
    வல்லிநின் அம்மை மகிழமன் றோங்கும்
    வள்ளலே மறைகள்ஆ கமங்கள்
    சொல்லிய பதியே மிகுதயா நிதியே
    தொண்டனேன் உயிர்க்குமெய்த் துணையே.
  • 129. அருந்தவர் காண்டற் கரும்பெருங்கருணை
    அருட்பெருஞ் சோதிஎன் உளத்தே
    இருந்தனன் அம்மா நான்செய்த தவந்தான்
    என்னையோ என்னையோ என்றாள்
    திருந்துதெள் ளமுதுண் டழிவெலாந் தவிர்த்த
    திருவுரு அடைந்தனன் ஞான
    மருந்துமா மணியும் மந்திர நிறைவும்
    வாய்த்தன வாய்ப்பின்என் றாளே.
  • 130. இன்பிலே வயங்கும் சிவபரம் பொருளே
    என்உயிர்க் கமுதமே என்தன்
    அன்பிலே பழுத்த தனிப்பெரும் பழமே
    அருள்நடம் புரியும்என் அரசே
    வன்பிலே விளைந்த மாயையும் வினையும்
    மடிந்தன விடிந்ததால் இரவும்
    துன்பிலேன் இனிநான் அருட்பெருஞ் சோதிச்
    சூழலில் துலங்குகின் றேனே.
  • 131. உயிரெலாம் ஒருநீ திருநடம் புரியும்
    ஒருதிருப் பொதுஎன அறிந்தேன்
    செயிரெலாம் தவிர்ந்தேன் திருவெலாம் அடைந்தேன்
    சித்தெலாம் வல்லதொன் றறிந்தேன்
    மயிரெலாம் புளகித் துளமெலாம் கனிந்து
    மலர்ந்தனன் சுத்தசன் மார்க்கப்
    பயிரெலாம் தழைக்கப் பதியெலாம் களிக்கப்
    பாடுகின் றேன்பொதுப் பாட்டே.
  • 132. படித்தஎன் படிப்பும் கேள்வியும் இவற்றின்
    பயனதாம் உணர்ச்சியும் அடியேன்
    பிடித்தநல் நிலையும் உயிரும்மெய் இன்பும்
    பெருமையும் சிறப்பும்நான் உண்ணும்
    வடித்ததெள் ளமுதும் வயங்குமெய் வாழ்வும்
    வாழ்க்கைநன் முதலும்மன் றகத்தே
    நடித்தபொன் னடியும் திருச்சிற்றம் பலத்தே
    நண்ணிய பொருளும்என் றறிந்தேன்.
  • 133. கலையனே எல்லாம் வல்லஓர் தலைமைக்
    கடவுளே என்இரு கண்ணே
    நிலையனே ஞான நீதிமன் றிடத்தே
    நிருத்தஞ்செய் கருணைமா நிதியே
    புலையனேன் பொருட்டுன் திருவடி அவனி
    பொருந்திய புதுமைஎன் புகல்வேன்
    சிலையைநேர் மனத்தேன் செய்தவம் பெரிதோ
    திருவருட் பெருந்திறல் பெரிதே.
  • 134. தரம்பிறர் அறியாத் தலைவஓர் முக்கண்
    தனிமுதல் பேரருட் சோதிப்
    பரம்பர ஞான சிதம்பர நடஞ்செய்
    பராபர நிராமய நிமல
    உரம்பெறும் அயன்மால் முதற்பெருந் தேவர்
    உளத்ததி சயித்திட எனக்கே
    வரந்தரு கின்றாய் வள்ளல்நின் கருணை
    மாகடற் கெல்லைகண் டிலனே.
  • 135. யான்முனம் புரிந்த பெருந்தவம் யாதோ
    என்சொல்வேன் என்சொல்வேன் அந்தோ
    ஊன்மனம் உருக என்தனைத் தேற்றி
    ஒளிஉருக் காட்டிய தலைவா
    ஏன்மனம் இரங்காய் இன்றுநீ என்றேன்
    என்றசொல் ஒலிஅடங் குதன்முன்
    ஆன்மகிழ் கன்றின் அணைத்தெனை எடுத்தாய்
    அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
  • 136. பனிப்பறுத் தெல்லாம் வல்லசித் தாக்கிப்
    பரம்பரம் தருகின்ற தென்றோர்
    தனிப்பழம் எனக்கே தந்தைதான் தந்தான்
    தமியனேன் உண்டனன் அதன்தன்
    இனிப்பைநான் என்என் றியம்புவேன் அந்தோ
    என்னுயிர் இனித்ததென் கரணம்
    சனிப்பற இனித்த தத்துவம் எல்லாம்
    தனித்தனி இனித்தன தழைத்தே.
  • 137. விண்ணெலாம் கலந்த வெளியில்ஆ னந்தம்
    விளைந்தது விளைந்தது மனனே
    கண்ணெலாம் களிக்கக் காணலாம்
    பொதுவில் கடவுளே என்றுநம் கருத்தில்
    எண்ணலாம் எண்ணி எழுதலாம் எழுதி
    ஏத்தலாம் எடுத்தெடுத் துவந்தே
    உண்ணலாம் விழைந்தார்க் குதவலாம் உலகில்
    ஓங்கலாம் ஓங்கலாம் இனியே.
  • 138. வள்ளலாம் கருணை மன்றிலே அமுத
    வாரியைக் கண்டனம் மனமே
    அள்ளலாம் எடுத்துக் கொள்ளலாம் பாடி
    ஆடலாம் அடிக்கடி வியந்தே
    உள்எலாம் நிரம்ப உண்ணலாம் உலகில்
    ஓங்கலாம் உதவலாம் உறலாம்
    கள்எலாம் உண்டவண்டென இன்பம்
    காணலாம் களிக்கலாம் இனியே.
  • 139. சனிதொ லைந்தது தடைத விர்ந்தது தயைமி குந்தது சலமொடே
    துனிதொ லைந்தது சுமைத விர்ந்தது சுபமி குந்தது சுகமொடே
    கனிஎ திர்ந்தது களைத விர்ந்தது களிமி குந்தது கனிவொடே
    புனித மன்றிறை நடம லிந்தது புகழ்உ யர்ந்தது புவியிலே.
  • 140. உரையும் உற்றது ஒளியும் உற்றது உணர்வும் உற்றது உண்மையே
    பரையும் உற்றது பதியும் உற்றது பதமும் உற்றது பற்றியே
    புரையும் அற்றது குறையும் அற்றது புலையும் அற்றது புன்மைசேர்
    திரையும் அற்றது நரையும் அற்றது திரையும் அற்றவி ழுந்ததே.
  • எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • 141. அம்பலத்தே ஆடுகின்ற ஆரமுதே அரசே
    ஆனந்த மாகடலே அறிவேஎன் அன்பே
    உம்பர்கட்கே அன்றிஇந்த உலகர்கட்கும் அருள்வான்
    ஒளிர்கின்ற ஒளியேமெய் உணர்ந்தோர்தம் உறவே
    எம்பலத்தே வாகிஎனக் கெழுமையும்நற் றுணையாய்
    என்உளத்தே விளங்குகின்ற என்இறையே நினது
    செம்பதத்தே மலர்விளங்கக் கண்டுகொண்டேன் எனது
    சிறுமைஎலாம் தீர்ந்தேமெய்ச் செல்வமடைந் தேனே.
  • 142. அடிவிளங்கக் கனகசபைத் தனிநடனம் புரியும்
    அருட்சுடரே என்உயிருக் கானபெருந் துணையே
    துடிவிளங்கக் கரத்தேந்தும் சோதிமலை மருந்தே
    சொற்பதம்எல் லாம்கடந்த சிற்சொருபப் பொருளே
    பொடிவிளங்கத் திருமேனிப் புண்ணியனே ஞானப்
    போனகரைச் சிவிகையின்மேல் பொருந்தவைத்த புனிதா
    படிவிளங்கச் சிறியேன்நின் பதமலர்கண் டுவந்தேன்
    பரிவொழிந்தேன் அருட்செல்வம் பரிசெனப்பெற் றேனே.
  • 143. அன்புடை யவரேஎல் லாம்உடை யவரே
    அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ ரேஎன்
    வன்புடை மனத்தைநன் மனமாக்கி எனது
    வசஞ்செய்வித் தருளிய மணிமன்றத் தவரே
    இன்புடை யவரேஎன் இறையவ ரேஎன்
    இருகணுள் மணிகளுள் இசைந்திருந் தவரே
    என்புடை எனைத்தூக்கி எடுத்தீர்இங் கிதனை
    எண்ணுகின் றேன்அமு துண்ணுகின் றேனே.
  • 144. கலக்கம் நீங்கினேன் களிப்புறு கின்றேன்
    கனக அம்பலம் கனிந்தசெங் கனியே
    துலக்கம் உற்றசிற் றம்பலத் தமுதே
    தூய சோதியே சுகப்பெரு வாழ்வே
    விலக்கல் இல்லதோர் தனிமுதல் அரசே
    வேத ஆகமம் விளம்புமெய்ப் பொருளே
    அலக்கண் அற்றமெய் அன்பர்தம் உளத்தே
    அமர்ந்த தோர்சச்சி தானந்த சிவமே.
  • 145. ஓங்கார அணைமீது நான்இருந்த தருணம்
    உவந்தெனது மணவாளர் சிவந்தவடி வகன்றே
    ஈங்காரப் பளிக்குவடி வெடுத்தெதிரே நின்றார்
    இருந்தருள்க எனஎழுந்தேன் எழுந்திருப்ப தென்நீ
    ஆங்காரம் ஒழிஎன்றார் ஒழிந்திருந்தேன் அப்போ
    தவர்நானோ நான்அவரோ அறிந்திலன்முன் குறிப்பை
    ஊங்கார இரண்டுருவும் ஒன்றானோம் அங்கே
    உறைந்தஅனு பவம்தோழி நிறைந்தபெரு வெளியே.
  • 146. சொல்லுகின்றேன் பற்பலநான் சொல்லுகின்ற வெல்லாம்
    துரிசலவே சூதலவே தூய்மையுடை யனவே
    வெல்லுகின்ற வார்த்தைஅன்றி வெறும்வார்த்தை என்வாய்
    விளம்பாதென் ஐயர்நின்று விளம்புகின்ற படியால்
    செல்லுகின்ற படியேநீ காண்பாய்இத் தினத்தே
    தேமொழிஅப் போதெனைநீ தெளிந்துகொள்வாய் கண்டாய்
    ஒல்லுகின்ற வகைஎல்லாம் சொல்லுகின்றே னடிநான்
    உண்மைஇது உண்மைஇது உண்மைஇது தானே.
  • 147. தந்தை தன்மையே தனையன்தன் தன்மை
    என்று சாற்றுதல் சத்தியம் கண்டீர்
    எந்தை எம்பிரான் ஐந்தொழில் புரியும்
    இறைவன் மன்றுளே இயல்நடம் புரிவான்
    மைந்தன் என்றெனை ஆண்டவன் எல்லாம்
    வல்ல நாயகன் நல்லசீர் உடையான்
    அந்த ணாளன்மெய் அறிவுடை யவன்என்
    அப்பன் தன்மைஎன் தன்மைஎன் றறிமின்.
  • அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • 148. என்உடலும் என்உயிரும் என்பொருளும்
    நின்னஎன இசைந்தஞ் ஞான்றே
    உன்னிடைநான் கொடுத்தனன்மற் றென்னிடைவே
    றொன்றும்இலை உடையாய் இங்கே
    புன்னிகரேன் குற்றமெலாம் பொறுத்ததுவும்
    போதாமல் புணர்ந்து கொண்டே
    தன்னிகர்என் றெனவைத்தாய் இஞ்ஞான்றென்
    கொடுப்பேன்நின் தன்மைக் கந்தோ.
  • 149. என்னுரைக்கேன் என்னுரைக்கேன் இந்தஅதி
    சயந்தன்னை எம்ம னோர்காள்
    பொன்னுரைக்கும் மணிமன்றில் திருநடனம்
    புரிகின்ற புனிதன் என்னுள்
    மின்உரைக்கும் படிகலந்தான் பிரியாமல்
    விளங்குகின்றான் மெய்ம்மை யான
    தன்னுரைக்கும் என்னுரைக்கும் சமரசம்செய்
    தருள்கின்றான் சகத்தின் மீதே.
  • 150. ஆடுகின்ற சேவடிக்கே ஆளானேன்
    மாளாத ஆக்கை பெற்றேன்
    கூடுகின்ற சன்மார்க்க சங்கத்தே
    நடுவிருந்து குலாவு கின்றேன்
    பாடுகின்றேன் எந்தைபிரான் பதப்புகழை
    அன்பினொடும் பாடிப் பாடி
    நீடுகின்றேன் இன்பக்கூத் தாடுகின்றேன்
    எண்ணமெலாம் நிரம்பி னேனே.
  • 151. ஆணை ஆணைநீ அஞ்சலை அஞ்சலை
    அருள்ஒளி தருகின்றாம்
    கோணை மாநிலத் தவரெலாம் நின்னையே
    குறிக்கொள்வர் நினக்கேஎம்
    ஆணை அம்பலத் தரசையும் அளித்தனம்
    வாழ்கநீ மகனேஎன்
    றேணை பெற்றிட எனக்கருள் புரிந்தநின்
    இணைமலர்ப் பதம்போற்றி.
  • கட்டளைக் கலிப்பா
  • 152. நாய்க்கும் ஓர்தவி சிட்டுப்பொன் மாமுடி
    நன்று சூட்டினை என்றுநின் அன்பர்கள்
    வாய்க்கு வந்த படிபல பேசவே
    மதியி லேனையும் மன்னருட் சத்தியாம்
    தாய்க்குக் காட்டிநல் தண்ணமு தூட்டிஓர்
    தவள மாடப்பொன் மண்டபத் தேற்றியே
    சேய்க்கு நேரஎன் கையில்பொற் கங்கணம்
    திகழக் கட்டினை என்னைநின் செய்கையே.
  • எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • 153. தன்னைவிடத் தலைமைஒரு தகவினும்இங் கியலாத்
    தனித்தலைமைப் பெரும்பதியே தருணதயா நிதியே
    பொன்னடிஎன் சிரத்திருக்கப் புரிந்தபரம் பொருளே
    புத்தமுதம் எனக்களித்த புண்ணியனே நீதான்
    என்னைவிட மாட்டாய்நான் உன்னைவிட மாட்டேன்
    இருவரும்ஒன் றாகிஇங்கே இருக்கின்றோம் இதுதான்
    நின்னருளே அறிந்ததெனில் செயுஞ்செய்கை அனைத்தும்
    நின்செயலோ என்செயலோ நிகழ்த்திடுக நீயே.
  • 154. கடல்கடந்தேன் கரையடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில்
    கதவுதிறந் திடப்பெற்றேன் காட்சியெலாம் கண்டேன்
    அடர்கடந்த திருஅமுதுண் டருள்ஒளியால் அனைத்தும்
    அறிந்துதெளிந் தறிவுருவாய் அழியாமை அடைந்தேன்
    உடல்குளிர்ந்தேன் உயிர்கிளர்ந்தேன் உள்ளமெலாம் தழைத்தேன்
    உள்ளபடி உள்ளபொருள் உள்ளனவாய் நிறைந்தேன்
    இடர்தவிர்க்கும் சித்திஎலாம் என்வசம்ஓங் கினவே
    இத்தனையும் பொதுநடஞ்செய் இறைவன்அருட் செயலே.
  • 155. காற்றாலே புவியாலே ககனமத னாலே
    கனலாலே புனலாலே கதிராதி யாலே
    கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே
    கோளாலே பிறஇயற்றும் கொடுஞ்செயல்க ளாலே
    வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
    மெய்அளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே
    ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர்
    எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே.
  • 156. எல்லா உலகமும் என்வசம் ஆயின
    எல்லா உயிர்களும் என்உயிர் ஆயின
    எல்லா ஞானமும் என்ஞானம் ஆயின
    எல்லா வித்தையும் என்வித்தை ஆயின
    எல்லா போகமும் என்போகம் ஆயின
    எல்லாஇன்பமும் என்இன்பம் ஆயின
    எல்லாம் வல்லசிற் றம்பலத் தென்னப்பர்
    எல்லாம் நல்கிஎன் உள்ளத்துள் ளாரே.
  • 157. சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது
    தாள்வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர்
    என்மார்க்கத் தெனைநுமக்குள் ஒருவனெனக் கொள்வீர்
    எல்லாம்செய் வல்லநம திறைவனையே தொழுவீர்
    புன்மார்க்கத் தவர்போலே வேறுசில புகன்றே
    புந்திமயக் கடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்த்
    தன்மார்க்க மாய்விளங்கும் சுத்தசிவம் ஒன்றே
    தன்ஆணை என்ஆணை சார்ந்தறிமின் ஈண்டே.
  • எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • 158. ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா
    அருட்பெருஞ் சோதிஎன் உளத்தே
    நீதியில் கலந்து நிறைந்தது நானும்
    நித்தியன் ஆயினேன் உலகீர்
    சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே
    சத்தியச் சுத்தசன் மார்க்க
    வீதியில் உமைத்தான் நிறுவுவல் உண்மை
    விளம்பினேன் வம்மினோ விரைந்தே.
  • 159. வாது பேசிய மனிதர் காள்ஒரு
    வார்த்தை கேண்மீன்கள் வந்துநும்
    போது போவதன் முன்ன ரேஅருட்
    பொதுவி லேநடம் போற்றுவீர்
    தீது பேசினீர் என்றி டாதுமைத்
    திருவு ளங்கொளும் காண்மினோ
    சூது பேசிலன் நன்மை சொல்கின்றேன்
    சுற்றம் என்பது பற்றியே.
  • 160. தூக்கமும் துயரும் அச்சமும் இடரும்
    தொலைந்தன தொலைந்தன எனைவிட்
    டேக்கமும் வினையும் மாயையும் இருளும்
    இரிந்தன ஒழிந்தன முழுதும்
    ஆக்கமும் அருளும் அறிவும்மெய் அன்பும்
    அழிவுறா உடம்பும்மெய் இன்ப
    ஊக்கமும் எனையே உற்றன உலகீர்
    உண்மைஇவ் வாசகம் உணர்மின்.
  • கலிப்பா
  • 161. பிச்சுலகர் மெச்சப் பிதற்றிநின்ற பேதையனேன்
    இச்சைஎலாம் எய்த இசைந்தருளிச் செய்தனையே
    அச்சமெலாம் தீர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன்
    நிச்சலும்பே ரானந்த நித்திரைசெய் கின்றேனே.

    • 346. இத்தலைப்பின் கீழ்த் தொகுக்கப்பெற்றுள்ள 161 பாக்களும் தனிப்பாடல்கள்.ஆறாந் திருமுறைக் காலத்தில் பல சமயங்களிற் பாடப் பெற்றவை. முன் பதிப்புகளில்இவை தனிப்பாடல்கள் என்ற தலைப்பில் ஆறாந் திருமுறையின் பிற்பகுதியில்உள்ளன. ஆ. பா. இவற்றைத் தனித்திருஅலங்கல், தனித்திருத் தொடை,தனித்திரு மாலை என மூன்று கூறாக்கி முறையே ஆறாந்திருமுறை முன், இடை,முடிந்த பகுதிகளின் ஈற்றில் வைத்துள்ளனர். இப்பதிப்பில் இவை ஒருவாறு பொருள்வரிசையில் முன் பின்னாக அமைக்கப்பெற்று இவண் வைக்கப்பட்டுள்ளன.
    • 347. இஃதும் இதுபோன்று பின்வரும் சிறுதலைப்புகளும் யாம் இட்டவை.
    • 348. பிரட்டறிவீர் - பொ. சு. பதிப்பு.
    • 349. குழைக்கறியே - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா., ச. மு. க.
    • 350. வலப்பால் - முதற்பதிப்பு., பொ. சு. ச. மு. க.
    • 351. தாழைப்பழம் - தேங்காய்.

தனித் திருஅலங்கல் // தனித் திருஅலங்கல்