திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
திருவடிப் பெருமை
tiruvaṭip perumai
அருட்பெருஞ்சோதி அடைவு
aruṭperuñsōti aṭaivu
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

081. தோழிக் குரிமை கிளத்தல்
tōḻik kurimai kiḷattal

    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. நயந்தநட நாயகர்உன் நாயகரே எனினும்
    நாடியமந் திரங்கள்சில கூடிஉரை யிடவே
    வியந்துமற்றைத் தேவர்எலாம் வரவும்அவர் நேயம்
    விரும்பாதே இருப்பதென்நீ என்கின்றாய் தோழி
    வயந்தரும்இந் திரர்பிரமர் நாரணர்கா ரணர்கள்
    மற்றையர்கள் மற்றையர்கள் மற்றையர்கள் எவர்க்கும்
    பயந்தகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே
    பதிநடஞ்செய் அடிப்பணிக்கே பதித்தகுடி அறியே.
  • 2. நயந்தநட நாயகர்உன் நாயகரே எனினும்
    நங்கைநினைக் கண்டிடவே நாடிமற்றைத் தலைவர்
    வியந்துவரு கின்றதுகண் டுபசரியா திங்கே
    மேல்நோக்கி இருப்பதென்நீ என்கின்றாய் தோழி
    வயந்தருபார் முதல்நாத வரையுளநாட் டவர்க்கும்
    மற்றவரை நடத்துகின்ற மாநாட்டார் தமக்கும்
    பயந்தகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே
    பதிநடஞ்செய் அடிப்பணிக்கே பதித்தகுடி அறியே.
  • 3. நயந்தநட நாயகர்உன் நாயகரே எனினும்
    நாடும்மற்றைத் தலைவர்தமைக் கண்டபொழு தெனினும்
    வியந்தவர்க்கோர் நல்லுரையும் சொல்லாதே தருக்கி
    வீதியிலே நடப்பதென்நீ என்கின்றாய் தோழி
    வயந்தரும்இவ் வண்டபகி ரண்டமட்டோ நாத
    வரையோஅப் பாலும்உள மாநாட்டார் தமக்கும்
    பயந்தகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே
    பதிநடஞ்செய் அடிப்பணிக்கே பதித்தகுடி அறியே.
  • 4. கடுங்குணத்தோர் பெறற்கரிய நடத்தரசே நினக்குக்
    கணவர்எனி னும்பிறரைக் கண்டபொழு தெனினும்
    நடுங்குணத்தால் நின்றுசில நல்வார்த்தை பகராய்
    நங்காய்ஈ தென்எனநீ நவில்கின்றாய் தோழி
    ஒடுங்குபல தத்துவர்க்கும் தத்துவரை நடத்தும்
    உபயநிலைத் தலைவருக்கும் அவர்தலைவர் களுக்கும்
    நடுங்குடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே
    நடஞ்செய்அடிப் பணிக்கென்றே நாட்டியநற் குடியே.
  • 5. மடங்கலந்தார் பெறற்கரிய நடத்தரசே நினக்கு
    மணவாளர் எனினும்உன்பால் வார்த்தைமகிழ்ந் துரைக்க
    இடங்கலந்த மூர்த்திகள்தாம் வந்தால்அங் கவர்பால்
    எண்ணம்இலா திருக்கின்றாய் என்கொல்என்றாய் தோழி
    மடங்குசம யத்தலைவர் மதத்தலைவர் இவர்க்கும்
    வயங்கும்இவர்க் குபகரிக்கும் மாத்தலைவர் களுக்கும்
    அடங்குகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே
    ஆடல்அடிப் பணிக்கென்றே அமைத்தகுடி அறியே.
  • 6. அறங்குலவு தோழிஇங்கே நீஉரைத்த வார்த்தை
    அறிவறியார் வார்த்தைஎத னால்எனில்இம் மொழிகேள்
    உறங்குவதும் விழிப்பதும்பின் உண்ணுவதும் இறத்தல்
    உறுவதுடன் பிறத்தல்பல பெறுவதுமாய் உழலும்
    மறங்குலவும் அணுக்கள்பலர் செய்தவிர தத்தால்
    மதத்தலைமை பதத்தலைமை வாய்த்தனர்அங் கவர்பால்
    இறங்கலிலேன் பேசுதலால் என்பயனோ நடஞ்செய்
    இறைவர்அடிப் புகழ்பேசி இருக்கின்றேன் யானே.
  • 7. சிவமயமே வேறிலைஎல் லாம்எனநீ தானே
    தேமொழியாய் பற்பலகால் செப்பியிடக் கேட்டேன்
    தவமயத்தார் பலசமயத் தலைவர்மதத் தலைவர்
    தத்துவர்தத் துவத்தலைவர் அவர்தலைவர் தலைவர்
    இவர்அவர்என் றயல்வேறு பிரித்தவர்பால் வார்த்தை
    இயம்புவதென் என்றாய்ஈ தென்கொல்என்றாய் தோழி
    நவமயம்நீ உணர்ந்தறியாய் ஆதலில்இவ் வண்ணம்
    நவின்றனைநின் ஐயமற நான்புகல்வேன் கேளே.
  • 8. ஒளிஒன்றே அண்டபகி ரண்டமெலாம் விளங்கி
    ஓங்குகின்ற தனிஅண்ட பகிரண்டங் களிலும்
    வெளிநின்ற சராசரத்தும் அகத்தினொடு புறத்தும்
    விளம்பும்அகப் புறத்தினொடு புறப்புறத்தும் நிறைந்தே
    உளிநின்ற இருள்நீக்கி இலங்குகின்ற தன்மை
    உலகறியும் நீஅறியா தன்றுகண்டாய் தோழி
    தளிநின்ற ஒளிமயமே வேறிலைஎல் லாமும்
    தான்எனவே தாகமங்கள் சாற்றுதல்சத் தியமே.
  • 9. ஏற்றிடுவே தாகமங்கள் ஒளிமயமே எல்லாம்
    என்றமொழி தனைநினைத்தே இரவில்இருட் டறையில்
    சாற்றிடுமண் பாத்திரத்தை மரவட்டில் களைக்கல்
    சட்டிகளை வேறுபல சார்ந்தகரு விகளைத்
    தேற்றமிகு தண்­ரைச் சீவர்கள்பற் பலரைச்
    செப்பியஅவ் விருட்டறையில் தனித்தனிசேர்த் தாலும்
    ஊற்றம்உறும் இருள்நீங்கி ஒளிகாண்ப துளதோ
    உளதேல்நீ உரைத்தமொழி உளதாகும் தோழி.
  • 10. பரமதனோ டுலகுயிர்கள் கற்பனையே எல்லாம்
    பகர்சிவமே எனஉணர்ந்தோம் ஆதலினால் நாமே
    பிரமம்எனப் பிறர்க்குரைத்துப் பொங்கிவழிந் தாங்கே
    பேசுகின்ற பெரியவர்தம் பெரியமதம் பிடியேல்
    உரமிகுபேர் உலகுயிர்கள் பரமிவைகா ரியத்தால்
    உள்ளனவே காரணத்தால் உள்ளனஇல் லனவே
    தரமிகுபேர் அருள்ஒளியால் சிவமயமே எல்லாம்
    தாம்எனவே உணர்வதுசன் மார்க்கநெறி பிடியே.
  • 11. பிரமம்என்றும் சிவம்என்றும் பேசுகின்ற நிலைதான்
    பெருநிலையே இந்நிலையில் பேதமுண்டோ எனவே
    தரம்அறிய வினவுகின்றாய் தோழிஇது கேள்நீ
    சமரசசன் மார்க்கநிலை சார்திஎனில் அறிவாய்
    திரமுறவா யினும்எல்லாம் ஆகிஅல்லா தாகும்
    திருவருளாம் வெளிவிளங்க விளங்குதனிப் பொருளாம்
    சிரமுறும்ஓர் பொதுஉண்மைச் சிவம்பிரம முடியே
    திகழ்மறைஆ கமம்புகலும் திறன்இதுகண் டறியே.
  • 12. இலங்குகின்ற பொதுஉண்மை இருந்தநிலை புகல்என்
    றியம்புகின்றாய் மடவாய்கேள் யான்அறியுந் தரமோ
    துலங்கும்அதை உரைத்திடவும் கேட்டிடவும் படுமோ
    சொல்அளவோ பொருள்அளவோ துன்னும்அறி வளவோ
    விலங்குகின்ற தத்துவங்கள் அத்தனையும் கடந்த
    மேனிலைஎன் றந்தமெலாம் விளம்புகின்ற தன்றி
    வலங்கொளும்அம் மேனிலையின் உண்மைஎது என்றால்
    மவுனஞ்சா திப்பதன்றி வாய்திறப்ப திலையே.
  • 13. வாய்திறவா மவுனமதே ஆகும்எனில் தோழி
    மவுனசத்தி வெளிஏழும் பரத்தபரத் தொழியும்
    தூயபரா பரம்அதுவே என்றால்அங் கதுதான்
    துலங்குநடு வெளிதனிலே கலந்துகரை வதுகாண்
    மேயநடு வெளிஎன்றால் தற்பரமாம் வெளியில்
    விரவியிடும் தற்பரமாம் வெளிஎன்றால் அதுவும்
    ஆயபெரு வெளிதனிலே அடங்கும்இது மட்டே
    அளப்பதொரு வாறதன்மேல் அளப்பதரி தரிதே.
  • 14. கிளக்கின்ற மறைஅளவை ஆகமப்பே ரளவை
    கிளந்திடுமெய்ச் சாதனமாம் அளவைஅறி வளவை
    விளக்கும்இந்த அளவைகளைக் கொண்டுநெடுங் காலம்
    மேலவர்கள் அளந்தளந்து மெலிகின்றார் ஆங்கே
    அளக்கின்ற கருவிஎலாம் தேய்ந்திடக் கண்டாரே
    அன்றிஒரு வாறேனும் அளவுகண்டார் இலையே
    துளக்கம்உறு சிற்றறிவால் ஒருவாறென் றுரைத்தேன்
    சொன்னவெளி வரையேனும் துணிந்தளக்கப் படுமோ.

தோழிக் குரிமை கிளத்தல் // தோழிக் குரிமை கிளத்தல்

No audios found!