திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
பவனிச் செருக்கு
pavaṉich serukku
திருவருட் பேற்று விழைவு
tiruvaruṭ pēṟṟu viḻaivu
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

044. திருவருள் விலாசப் பத்து
tiruvaruḷ vilāsap pattu

    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. ஆறுமுகப் பெருங்கருணைக் கடலே தெய்வ
    யானைமகிழ் மணிக்குன்றே அரசே முக்கட்
    பேறுமுகப் பெருஞ்சுடர்க்குட் சுடரே செவ்வேல்
    பிடித்தருளும் பெருந்தகையே பிரம ஞானம்
    வீறுமுகப் பெருங்குணத்தோர் இதயத் தோங்கும்
    விளக்கமே ஆனந்த வெள்ள மேமுன்
    தேறுமுகப் பெரியஅருட் குருவாய் என்னைச்
    சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
  • 2. கண்ணிமதி புனைந்தசடைக் கனியே முக்கட்
    கரும்பேஎன் கண்ணேமெய்க் கருணை வாழ்வே
    புண்ணியநல் நிலைஉடையோர் உளத்தில் வாய்க்கும்
    புத்தமுதே ஆனந்த போக மேஉள்
    எண்ணியமெய்த் தவர்க்கெல்லாம் எளிதில் ஈந்த
    என்அரசே ஆறுமுகத் திறையாம் வித்தே
    திண்ணியஎன் மனம்உருக்கிக் குருவாய் என்னைச்
    சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவ.
  • 3. நின்னிருதாள் துணைபிடித்தே வாழ்கின் றேன்நான்
    நின்னைஅலால் பின்னைஒரு நேயம் காணேன்
    என்னைஇனித் திருவுளத்தில் நினைதி யோநான்
    ஏழையினும் ஏழைகண்டாய் எந்தாய் எந்தாய்
    பொன்னைஅன்றி விரும்பாத புல்லர் தம்பால்
    போகல்ஒழிந் துன்பதமே போற்றும் வண்ணம்
    சின்னம்அளித் தருட்குருவாய் என்னை முன்னே
    சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
  • 4. கல்விஎலாம் கற்பித்தாய் நின்பால் நேயம்
    காணவைத்தாய் இவ்வுலகம் கானல் என்றே
    ஒல்லும்வகை அறிவித்தாய் உள்ளே நின்றென்
    உடையானே நின்அருளும் உதவு கின்றாய்
    இல்லைஎனப் பிறர்பால்சென் றிரவா வண்ணம்
    ஏற்றம்அளித் தாய்இரக்கம் என்னே என்னே
    செல்வஅருட் குருவாகி நாயி னேனைச்
    சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
  • 5. எந்தைபிரான் என்இறைவன் இருக்க இங்கே
    என்னகுறை நமக்கென்றே இறுமாப் புற்றே
    மந்தஉல கினில்பிறரை ஒருகா சுக்கும்
    மதியாமல் நின்அடியே மதிக்கின் றேன்யான்
    இந்தஅடி யேனிடத்துன் திருவு ளந்தான்
    எவ்வாறோ அறிகிலேன் ஏழை யேனால்
    சிந்தைமகிழ்ந் தருட்குருவாய் என்னை முன்னே
    சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
  • 6. மாறாத பெருஞ்செல்வ யோகர் போற்றும்
    மாமணியே ஆறுமுக மணியே நின்சீர்
    கூறாத புலைவாய்மை உடையார் தம்மைக்
    கூடாத வண்ணம்அருட் குருவாய் வந்து
    தேறாத நிலைஎல்லாம் தேற்றி ஓங்கும்
    சிவஞானச் சிறப்படைந்து திகைப்பு நீங்கிச்
    சீறாத வாழ்விடைநான் வாழ என்னைச்
    சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
  • 7. கற்றறிந்த மெய்உணர்ச்சி உடையோர் உள்ளக்
    கமலத்தே ஓங்குபெருங் கடவு ளேநின்
    பொற்றகைமா மலரடிச்சீர் வழுத்து கின்ற
    புண்ணியர்தங் குழுவில்எனைப் புகுத்தி என்றும்
    உற்றவருள் சிந்தனைதந் தின்ப மேவி
    உடையாய்உன் அடியவன்என் றோங்கும் வண்ணம்
    சிறறறிவை அகற்றிஅருட் குருவாய் என்னைச்
    சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
  • 8. ஞாலம்எலாம் படைத்தவனைப் படைத்த முக்கண்
    நாயகனே வடிவேற்கை நாத னேநான்
    கோலம்எலாம் கொயேன்நற் குணம்ஒன் றில்லேன்
    குற்றமே விழைந்தேன்இக் கோது ளேனைச்
    சாலம்எலாம் செயும்மடவார் மயக்கின் நீக்கிச்
    சன்மார்க்கம் அடையஅருள் தருவாய் ஞானச்
    சீலம்எலாம் உடையஅருட் குருவாய் வந்து
    சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
  • 9. கற்பனையே எனும்உலகச் சழக்கில் அந்தோ
    கால்ஊன்றி மயங்குகின்ற கடைய னேனைச்
    சொற்பனம்இவ் வுலகியற்கை என்று நெஞ்சம்
    துணிவுகொளச் செய்வித்துன் துணைப்பொற் றாளை
    அற்பகலும் நினைந்துகனிந் துருகி ஞான
    ஆனந்த போகம்உற அருளல் வேண்டும்
    சிற்பரசற் குருவாய்வந் தென்னை முன்னே
    சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
  • 10. பன்னிருகண் மலர்மலர்ந்த கடலே ஞானப்
    பரஞ்சுடரே ஆறுமுகம் படைத்த கோவே
    என்னிருகண் மணியேஎந் தாயே என்னை
    ஈன்றானே என்அரசே என்றன் வாழ்வே
    மின்னிருவர் புடைவிளங்க மயில்மீ தேறி
    விரும்பும்அடி யார்காண மேவுந் தேவே
    சென்னியில்நின் அடிமலர்வைத் தென்னை முன்னே
    சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.

திருவருள் விலாசப் பத்து // திருவருள் விலாசப் பத்து