திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
நெஞ்சொடு நேர்தல்
neñsoṭu nērtal
திருச்சாதனத் தெய்வத் திறம்
tiruchsātaṉat teyvat tiṟam
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

022. திருப்புகழ் விலாசம்
tiruppukaḻ vilāsam

    திருவொற்றியூர்
    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. துங்க வெண்பொடி அணிந்துநின் கோயில்
    தொழும்பு செய்துநின் துணைப்பதம் ஏத்திச்
    செங்கண் மால்அயன் தேடியும் காணாச்
    செல்வ நின்அருள் சேர்குவ தென்றோ
    எங்கள் உள்ளுவந் தூறிய அமுதே
    இன்ப மேஇமை யான்மகட் கரசே
    திங்கள் தங்கிய சடையுடை மருந்தே
    திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
  • 2. கண்ண னோடயன் காண்பரும் சுடரே
    கந்தன் என்னும்ஓர் கனிதரும் தருவே
    எண்ண மேதகும் அன்பர்தம் துணையே
    இலங்கும் திவ்விய எண்குணப் பொருப்பே
    அண்ண லேதிரு ஆலங்காட் டுறையும்
    அம்மை அப்பனே அடியனேன் தன்னைத்
    திண்ண மேஅடித் தொழும்பனாய்ச் செய்வாய்
    திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
  • 3. விடங்க லந்தருள் மிடறுடை யவனே
    வேதன் மால்புகழ் விடையுடை யவனே
    கடங்க லந்தமா உரியுடை யவனே
    கந்த னைத்தரும் கனிவுடை யவனே
    இடங்க லந்தபெண் கூறுடை யவனே
    எழில்கொள் சாமத்தின் இசையுடை யவனே
    திடங்க லந்தகூர் மழுவுடை யவனே
    திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
  • 4. கஞ்ச னோர்தலை நகத்தடர்த் தவனே
    காமன் வெந்திடக் கண்விழித் தவனே
    தஞ்ச மானவர்க் கருள்செயும் பரனே
    சாமிக் கோர்திருத் தந்தையா னவனே
    நஞ்சம் ஆர்மணி கண்டனே எவைக்கும்
    நாத னேசிவ ஞானிகட் கரசே
    செஞ்சொல் மாமறை ஏத்துறும் பதனே
    திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
  • 5. ஏல வார்குழ லாள் இடத் தவனே
    என்னை ஆண்டவ னேஎன தரசே
    கோல மாகமால் உருக்கொண்டும் காணாக்
    குரைக ழற்பதக் கோமளக் கொழுந்தே
    ஞால மீதில்எம் போல்பவர் பிழையை
    நாடி டாதருள் நற்குணக் குன்றே
    சீல மேவிய தவத்தினர் போற்றத்
    திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
  • 6. ஆறு வாண்முகத் தமுதெழும் கடலே
    அயனும் மாலும்நின் றறிவரும் பொருளே
    ஏறு மீதுவந் தேறும்எம் அரசே
    எந்தை யேஎமை ஏன்றுகொள் இறையே
    வீறு கொன்றையம் சடையுடைக் கனியே
    வேதம் நாறிய மென்மலர்ப் பதனே
    தேறு நெஞ்சினர் நாள்தொறும் வாழ்த்தத்
    திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
  • 7. மாறு பூத்தஎன் நெஞ்சினைத் திருத்தி
    மயக்கம் நீக்கிட வருகுவ தென்றோ
    ஏறு பூத்தஎன் இன்னுயிர்க் குயிரே
    யாவு மாகிநின் றிலங்கிய பொருளே
    நீறு பூத்தொளி நிறைந்தவெண் நெருப்பே
    நித்தி யானந்தர்க் குற்றநல் உறவே
    சேறு பூத்தசெந் தாமரை முத்தம்
    திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
  • 8. மாலின் கண்மலர் மலர்திருப் பதனே
    மயிலின் மேல்வரு மகவுடை யவனே
    ஆலின் கீழ்அறம் அருள்புரிந் தவனே
    அரஎன் போர்களை அடிமைகொள் பவனே
    காலில் கூற்றுதைத் தருள்செயும் சிவனே
    கடவு ளேநெற்றிக் கண்ணுடை யவனே
    சேலின் நீள்வயல் செறிந்தெழில் ஓங்கித்
    திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
  • 9. நாட்டும் முப்புரம் நகைத்தெரித் தவனே
    நண்ணி அம்பலம் நடஞ்செயும் பதனே
    வேட்டு வெண்தலைத் தார்புனைந் தவனே
    வேடன் எச்சிலை விரும்பிஉண் டவனே
    கோட்டு மேருவைக் கோட்டிய புயனே
    குற்ற முங்குண மாக்குறிப் பவனே
    தீட்டும் மெய்ப்புகழ்த் திசைபரந் தோங்கத்
    திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
  • 10. அம்ப லத்துள்நின் றாடவல் லானே
    ஆன்இ வர்ந்துவந் தருள்புரி பவனே
    சம்பு சங்கர சிவசிவ என்போர்
    தங்கள் உள்ளகம் சார்ந்திருப் பவனே
    தும்பை வன்னியம் சடைமுடி யவனே
    தூய னேபரஞ் சோதியே எங்கள்
    செம்பொ னேசெழும் பவளமா மலையே
    திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.

திருப்புகழ் விலாசம் // திருப்புகழ் விலாசம்

No audios found!