Home
|
vallalar.org
|
thiruarutpa.org
|
vallalarspace.org
|
திருமுறைகள்
Thirumurai
1
2
3
4
5
6
நாடக விண்ணப்பம்
nāṭaka viṇṇappam
மருட்கை விண்ணப்பம்
maruṭkai viṇṇappam
இரண்டாம் திருமுறை / Second Thirumurai
056. திருவண்ண விண்ணப்பம்
tiruvaṇṇa viṇṇappam
திருவொற்றியூர்
கொச்சகக் கலிப்பா
திருச்சிற்றம்பலம்
1.
கண்ணப்பா என்றருளும் காளத்தி யப்பாமுன்
வண்ணப்பால் வேண்டும் மதலையைப்பால் வாரிதியை
உண்ணப்பா என்றுரைத்த ஒற்றியப்பா வந்தருள
எண்ணப்பா என்றழும்இவ் ஏழைமுகம் பாராயோ.
2.
மஞ்சுபடும் செஞ்சடில வள்ளலே உள்ளுகின்றோர்
உஞ்சுபடும் வண்ணம்அருள் ஒற்றியூர் உத்தமனே
நஞ்சுபடும் கண்டம்உடை நம்பரனே வன்துயரால்
பஞ்சுபடும் பாடுபடும் பாவிமுகம் பாராயோ.
3.
கண்ணார் அமுதே கரும்பேஎன் கண்ணேஎன்
அண்ணாஉன் பொன்னருள்தான் ஆர்ந்திடுமோ அல்லதென்றும்
நண்ணாதோ யாது நணுகுமோ என்றுருகி
எண்ணாதும் எண்ணும்இந்த எழைமுகம் பாராயோ.
4.
நாடியசீர் ஒற்றி நகர்உடையாய் நின்கோயில்
நீடியநற் சந்நிதியில் நின்றுநின்று மால்அயனும்
தேடிஅறி ஒண்ணாத் திருஉருவைக் கண்டுருகிப்
பாடிஅழு தேங்கும்இந்தப் பாவிமுகம் பாராயோ.
5.
வாங்கிமலை வில்லாக்கும் மன்னவனே என்அரசே
ஓங்கி வளந்தழுவும் ஒற்றியூர் உத்தமனே
தூங்கிய துன்பச் சுமைசுமக்க மாட்டாது
ஏங்கிஅழு கின்றஇந்த ஏழைமுகம் பாராயோ.
6.
தொண்டர்க் கருளும் துணையே இணையில்விடம்
உண்டச் சுதற்கருளும் ஒற்றியூர் உத்தமனே
சண்டப் பவநோயால் தாயிலாப் பிள்ளையெனப்
பண்டைத் துயர்கொளும்இப் பாவிமுகம் பாராயோ.
7.
உட்டிகழ்ந்த மேலவனே ஒற்றியூர் உத்தமனே
மட்டிலங்கும் உன்றன் மலரடியைப் போற்றாது
தட்டிலங்கு நெஞ்சத்தால் சஞ்சலித்துன் சந்நிதிக்கண்
எட்டிநின்று பார்க்கும்இந்த ஏழைமுகம் பாராயோ.
8.
நச்சை மிடற்றணிந்த நாயகனே ஓர்பாகம்
பச்சைநிறம் கொண்ட பவளத் தனிமலையே
மிச்சை தவிர்க்கும்ஒற்றி வித்தகனே நின்அருட்கே
இச்சைகொடு வாடும்இந்த ஏழைமுகம் பாராயோ.
9.
மால்அயர்ந்தும் காணா மலரடியாய் வஞ்சவினைக்
கால்அயர்ந்து வாடஅருட் கண்ணுடையாய் விண்ணுடையாய்
சேல்அயர்ந்த கண்ணார் தியக்கத்தி னால்உன்அருட்
பால்அயர்ந்து வாடும்இந்தப் பாவிமுகம் பாராயோ.
10.
சொந்தமுற எண்ணித் தொழுகின்ற மெய்யடியர்
சந்தமுறும் நெஞ்சத் தலத்தமர்ந்த தத்துவனே
நந்தவனஞ் சூழ்ஒற்றி நாயகனே வாழ்க்கைஎனும்
பந்தமதில் வாடும்இந்தப் பாவிமுகம் பாராயோ.
11.
தில்லையிடை மேவும்எங்கள் செல்வப் பெருவாழ்வே
ஒல்லைஅடி யார்க்கருளும் ஒற்றியூர் உத்தமனே
அல்லை நிகர்க்கும் அளகத்தார் ஆசைதனக்
கெல்லைஅறி யாதஇந்த ஏழைமுகம் பாராயோ.
12.
விதிஇழந்த வெண்தலைகொள் வித்தகனே வேதியனே
மதிஇழந்தோர்க் கேலா வளர்ஒற்றி வானவனே
நிதிஇழந்தோர் போல்அயர்ந்து நின்னுடைய வாழ்க்கைப்
பதிவிரும்பி வாடும்இந்தப் பாவிமுகம் பாராயோ.
திருவண்ண விண்ணப்பம் // திருவண்ண விண்ணப்பம்
No audios found!
Oct,12/2014: please check back again.