திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
நெஞ்சு நிலைக் கிரங்கல்
neñsu nilaik kiraṅkal
கழிபகற் கிரங்கல்
kaḻipakaṟ kiraṅkal
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

065. தனிமைக் கிரங்கல்
taṉimaik kiraṅkal

  திருவொற்றியூர்
  எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  திருச்சிற்றம்பலம்
 • 1. ஆக்கல் ஆதிய ஐந்தொழில் நடத்த
  அயன்முன் ஆகிய ஐவரை அளித்து
  நீக்கம் இன்றிஎவ் விடத்தினும் நிறைந்த
  நித்த நீஎனும் நிச்சயம் அதனைத்
  தாக்க எண்ணியே தாமதப் பாவி
  தலைப்பட் டான்அவன் தனைஅகற் றுதற்கே
  ஊக்கம் உற்றநின் திருவருள் வேண்டும்
  ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
 • 2. கணத்தில் என்னைவிட் டேகுகின் றவன்போல்
  காட்டு கின்றனன் மீட்டும்வந் தடுத்துப்
  பணத்தும் மண்ணினும் பாவைய ரிடத்தும்
  பரவ நெஞ்சினை விரவுகின் றனன்காண்
  குணத்தி னில்கொடுந் தாமதன் எனும்இக்
  கொடிய வஞ்சகன் ஒடியமெய்ப் போதம்
  உணர்த்து வார்இலை என்செய்கேன் எளியேன்
  ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
 • 3. இமைக்கும் அவ்வள வேனும்நெஞ் சொடுங்கி
  இருக்கக் கண்டிலேன் இழிவுகொள் மலத்தின்
  சுமைக்கு நொந்துநொந் தையவோ நாளும்
  துயர்கின் றேன்அயர் கின்றஎன் துயரைக்
  குமைக்கும் வண்ணம்நின் திருவருள் இன்னும்
  கூடப் பெற்றிலேன் கூறுவ தென்னே
  உமைக்கு நல்வரம் உதவிய தேவே
  ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
 • 4. சென்ற நாளில்ஓர் இறைப்பொழு தேனும்
  சிந்தை ஓர்வகை தெளிந்ததன் றதுபோய்
  நின்ற நாளினும் நிற்கின்ற திலைகாண்
  நெடிய பாவியேன் நிகழ்த்துவ தென்னே
  என்றன் ஆருயிர்க் கொருபெருந் துணையாம்
  எந்தை யேஎனை எழுமையும் காத்த
  உன்ற னால்இன்னும் உவகைகொள் கின்றேன்
  ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
 • 5. கோடி நாவினும் கூறிட அடங்காக்
  கொடிய மாயையின் நெடியவாழ்க் கையினை
  நாடி நெஞ்சகம் நலிகின்றேன் உனையோர்
  நாளும் எண்ணிலேன் நன்கடை வேனே
  வாடி னேன்பிழை மனங்கொளல் அழியா
  வாழ்வை ஏழையேன் வசஞ்செயல் வேண்டும்
  ஊடி னாலும்மெய் அடியரை இகவா
  ஒற்றி மேவிய உத்தமப் பொருளே.
 • 6. அன்ப தென்பதைக் கனவினும் காணேன்
  ஆடு கின்றனன் அன்பரைப் போல
  வன்ப வத்தையும் மாய்த்திட நினைத்தேன்
  வஞ்ச நெஞ்சினை வசப்படுக் கில்லேன்
  துன்ப வாழ்க்கையில் சுழல்கின்றேன் நின்னைத்
  தொழுது வாழ்த்திநல் சுகம்பெறு வேனே
  ஒன்ப தாகிய உருவுடைப் பெரியோய்
  ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
 • 7. முன்னை நான்செய்த வல்வினை இரண்டின்
  முடிவு தேர்ந்திலன் வடிவெடுத் துலகில்
  என்னை நான்கண்ட தந்தநாள் தொடங்கி
  இந்த நாள்மட்டும் இருள் என்ப தல்லால்
  பின்னை யாதொன்றும் பெற்றிலேன் இதனைப்
  பேச என்னுளம் கூசுகின் றதுகாண்
  உன்னை நம்பினேன் நின்குறிப் புணரேன்
  ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
 • 8. கண்ணி லான்சுடர் காணிய விழைந்த
  கருத்தை ஒத்தஎன் கருத்தினை முடிப்பத்
  தெண்ணி லாமுடிச் சிவபரம் பொருள்நின்
  சித்தம் எப்படி தெரிந்திலன் எளியேன்
  பண்ணி லாவிய பாடலந் தொடைநின்
  பாத பங்கயம் பதிவுறப் புனைவோர்
  உண்ணி லாவிய ஆனந்தப் பெருக்கே
  ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
 • 9. உண்மை நின்அருட் சுகம்பிற எல்லாம்
  உண்மை அன்றென உணர்த்தியும் எனது
  பெண்மை நெஞ்சகம் வெண்மைகொண் டுலகப்
  பித்தி லேஇன்னும் தொத்துகின் றதுகாண்
  வண்மை ஒன்றிலேன் எண்மையின் அந்தோ
  வருந்து கின்றனன் வாழ்வடை வேனோ
  ஒண்மை அம்பலத் தொளிசெயும் சுடரே
  ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
 • 10. நையு மாறெனைக் காமமா திகள்தாம்
  நணுகி வஞ்சகம் நாட்டுகின் றதுநான்
  செய்யு மாறிதற் கறிந்திலன் எந்தாய்
  திகைக்கின் றேன் அருள் திறம்பெறு வேனே
  வையு மாறிலா வண்கையர் உளத்தின்
  மன்னி வாழ்கின்ற மாமணிக் குன்றே
  உய்யு மாறருள் அம்பலத் தமுதே
  ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.

தனிமைக் கிரங்கல் // தனிமைக் கிரங்கல்

No audios found!