திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
கழிபகற் கிரங்கல்
kaḻipakaṟ kiraṅkal
அச்சத் திரங்கல்
achsat tiraṅkal
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

067. அர்ப்பித் திரங்கல்
arppit tiraṅkal

    பொது
    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. தம்பி ரான்தய விருக்கஇங் கெனக்கோர்
    தாழ்வுண் டோஎனத் தருக்கொடும் இருந்தேன்
    எம்பி ரான்நினக் கேழையேன் அளவில்
    இரக்கம் ஒன்றிலை என்என்ப தின்னும்
    நம்பி ரான்என நம்பிநிற் கின்றேன்
    நம்பும் என்றனை வெம்பிடச் செயினும்
    செம்பி ரான்அருள் அளிக்கினும் உனது
    சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
  • 2. துட்ட நெஞ்சக வஞ்சகக் கொடியேன்
    சொல்வ தென்னைஎன் தொல்வினை வசத்தால்
    இட்ட நல்வழி அல்வழி எனவே
    எண்ணும் இவ்வழி இரண்டிடை எனைநீ
    விட்ட தெவ்வழி அவ்வழி அகன்றே
    வேறும் ஓர்வழி மேவிடப் படுமோ
    சிட்டர் உள்ளுறும் சிவபெரு மான்நின்
    சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
  • 3. ஊட்டு கின்றனை உண்ணுகின் றனன்மேல்
    உறக்கு கின்றனை உறங்குகின் றனன்பின்
    காட்டு கின்றனை காணுகின் றனன்நீ
    களிப்பிக் கின்றனை களிப்புறு கின்றேன்
    ஆட்டு கின்றனை ஆடுகின் றனன்இவ்
    அகில கோடியும் அவ்வகை யானால்
    தீட்டும் அன்பருக் கன்பநின் தனது
    சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
  • 4. கண்ணி லான்சுடர் காணஉன் னுதல்போல்
    கருத்தி லேனும்நின் கருணையை விழைந்தேன்
    எண்ணி லாஇடை யூறடுத் ததனால்
    இளைக்கின் றேன்எனை ஏன்றுகொள் வதற்கென்
    உண்ணி லாவிய உயிர்க்குயிர் அனையாய்
    உன்னை ஒத்ததோர் முன்னவர் இலைகாண்
    தெண்ணி லாமுடிச் சிவபரம் பொருள்நின்
    சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
  • 5. மெச்சு கின்றவர் வேண்டிய எல்லாம்
    விழிஇ மைக்குமுன் மேவல்கண் டுனைநான்
    நச்சு கின்றனன் நச்சினும் கொடியேன்
    நன்மை எய்தவோ வன்மையுற் றிடவோ
    இச்சை நன்றறி வாய்அருள் செய்யா
    திருக்கின் றாய் உனக் கியான்செய்த தென்னே
    செச்சை மேனிஎம் சிவபரஞ் சுடர்நின்
    சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
  • 6. நாடுந் தாயினும் நல்லவன் நமது
    நாதன் என்றுனை நாடும்அப் பொழுதே
    வாடு நெஞ்சம் தளிர்க்கின்றேன் மற்றை
    வைகற் போதெலாம் வாடுகின் றனன்காண்
    பாடுந் தொண்டர்கள் இடர்ப்படில் தரியாப்
    பண்பென் மட்டும்நின் பால்இலை போலும்
    தேடும் பத்தர்தம் உளத்தமர் வோய்நின்
    சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
  • 7. மருள்அ ளித்தெனை மயக்கிஇவ் உலகில்
    வருத்து கின்றனை மற்றெனக் குன்றன்
    அருள்அ ளிக்கிலை ஆயினும் நினக்கே
    அடிமை யாக்கிலை ஆயினும் வேற்றுப்
    பொருள்அ ளிக்கிலை ஆயினும் ஒருநின்
    பொன்மு கத்தைஓர் போது கண் டிடவே
    தெருள்அ ளித்திடில் போதும் இங் குனது
    சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
  • 8. மாறு கின்றனன் நெஞ்சகம் அஞ்சி
    வள்ளல் இத்துணை வந்திலன் இனிமேல்
    கூறு கின்றதென் என்றயர் கின்றேன்
    குலவித் தேற்றும்அக் கொள்கையர் இன்றி
    ஏறு கின்றனன் இரக்கமுள் ளவன்நம்
    இறைவன் இன்றருள் ஈகுவன் என்றே
    தேறு கின்றனன் என்செய்கேன் நினது
    சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
  • 9. தாயி னும்பெருந் தயவுடை யவன்நந்
    தலைவன் என்றுநான் தருக்கொடும் திரிந்தேன்
    நாயி னும்கடை யேன்படும் இடரை
    நாளும் கண்டனை நல்அருள் செய்யாய்
    ஆயி னும்திரு முகங்கண்டு மகிழும்
    அன்பர் தம்பணி ஆற்றிமற் றுடலம்
    தேயி னும்மிக நன்றெனக் கருள்உன்
    சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
  • 10. வானும் வையமும் அளிக்கினும் உன்பால்
    மனம்வைத் தோங்குவர் வள்ளல்நின் அடியார்
    நானும் அவ்வகை உலகியல் ஒழுக்கில்
    நாடி நின்னருள் நலம்பெற விழைதல்
    கூனும் ஓர்முடக் கண்ணிலி வானில்
    குலவும் ஒண்சுடர் குறித்திடல் போலும்
    தேனும் கைக்கும்நின் அருளுண்டேல் உண்டுன்
    சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.

அர்ப்பித் திரங்கல் // அர்ப்பித் திரங்கல்

No audios found!