திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
இராமநாம சங்கீர்த்தனம்
irāmanāma saṅkīrttaṉam
வீரராகவர் போற்றிப் பஞ்சகம்
vīrarākavar pōṟṟip pañsakam
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

062. இராமநாமப் பதிகம்
irāmanāmap patikam

  எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  திருச்சிற்றம்பலம்
 • 1. திருமகள்எம் பெருமாட்டி மகிழும் வண்ணச்
  செழுங்கனியே கொழும்பாகே தேனே தெய்வத்
  தருமகனைக் காத்தருளக் கரத்தே வென்றித்
  தனுஎடுத்த ஒருமுதலே தருமப் பேறே
  இருமையும்என் னுளத்தமர்ந்த ராம நாமத்
  தென்அரசே என்அமுதே என்தா யேநின்
  மருமலர்ப்பொன் அடிவழுத்தும் சிறியேன் அந்தோ
  மனந்தளர்ந்தேன் அறிந்தும்அருள் வழங்கி லாயே.
 • 2. கலைக்கடலே கருணைநெடுங் கடலே கானங்
  கடந்ததடங் கடலேஎன் கருத்தே ஞான
  மலைக்கண்எழுஞ் சுடரேவான் சுடரே அன்பர்
  மனத்தொளிரும் சுயஞ்சுடரே மணியே வானோர்
  தலைக்கண்உறு மகுடசிகா மணியே வாய்மைத்
  தசரதன்தன் குலமணியே தமியேன் உள்ள
  நிலைக்கண்உறும் ஸ்ரீராம வள்ள லேஎன்
  நிலைஅறிந்தும் அருளஇன்னும் நினைந்தி லாயே.
 • 3. மண்ணாளா நின்றவர்தம் வாழ்வு வேண்டேன்
  மற்றவர்போல் பற்றடைந்து மாள வேண்டேன்
  விண்ணாளா நின்றஒரு மேன்மை வேண்டேன்
  வித்தகநின் திருவருளே வேண்டி நின்றேன்
  புண்ணாளா நின்றமன முடையேன் செய்த
  பொய்அனைத்தும் திருவுளத்தே பொறுப்பாய் அன்றிக்
  கண்ணாளா சுடர்க்கமலக் கண்ணா என்னைக்
  கைவிடில்என் செய்வேனே கடைய னேனே.
 • 4. தெவ்வினையார் அரக்கர்குலம் செற்ற வெற்றிச்
  சிங்கமே எங்கள்குல தெய்வ மேயோ
  வெவ்வினைதீர்த் தருள்கின்ற ராம நாம
  வியன்சுடரே இவ்வுலக விடயக் காட்டில்
  இவ்வினையேன் அகப்பட்டேன் புலனாம் கள்வர்க்
  கிலக்கானேன் துணைஒன்றும் இல்லேன் அந்தோ
  செய்வினைஒன் றறியேன்இங் கென்னை எந்தாய்
  திருவுளத்தில் சேர்த்திலையேல் செய்வ தென்னே.
 • 5. வான்வண்ணக் கருமுகிலே மழையே நீல
  மணிவண்ணக் கொழுஞ்சுடரே மருந்தே வானத்
  தேன்வண்ணச் செழுஞ்சுவையே ராம நாமத்
  தெய்வமே நின்புகழைத் தெளிந்தே ஓதா
  ஊன்வண்ணப் புலைவாயார் இடத்தே சென்றாங்
  குழைக்கின்றேன் செய்வகைஒன் றுணரேன் அந்தோ
  கான்வண்ணக் குடும்பத்திற் கிலக்கா என்னைக்
  காட்டினையே என்னேநின் கருணை ஈதோ.
 • 6. பொன்னுடையார் வாயிலில்போய் வீணே காலம்
  போக்குகின்றேன் இவ்வுலகப் புணர்ப்பை வேண்டி
  என்னுடையாய் நின்னடியை மறந்தேன் அந்தோ
  என்செய்கேன் என்செய்கேன் ஏழை யேன்நான்
  பின்னுடையேன் பிழைஉடையேன் அல்லால் உன்றன்
  பேரருளும் உடையேனோ பிறந்தேன் வாளா
  உன்னுடைய திருவுளத்தென் நினைதி யோஎன்
  ஒருமுதல்வா ஸ்ரீராமா உணர்கி லேனே.
 • 7. அறம்பழுக்கும் தருவேஎன் குருவே என்றன்
  ஆருயிருக் கொருதுணையே அரசே பூவை
  நிறம்பழுக்க அழகொழுகும் வடிவக் குன்றே
  நெடுங்கடலுக் கணையளித்த நிலையே வெய்ய
  மறம்பழுக்கும் இலங்கைஇரா வணனைப் பண்டோர்
  வாளினாற் பணிகொண்ட மணியே வாய்மைத்
  திறம்பழுக்கும் ஸ்ரீராம வள்ள லேநின்
  திருவருளே அன்றிமற்றோர் செயலி லேனே.
 • 8. கல்லாய வன்மனத்தர் தம்பால் சென்றே
  கண்கலக்கங் கொள்கின்றேன் கவலை வாழ்வை
  எல்லாம்உள் இருந்தறிந்தாய் அன்றோ சற்றும்
  இரங்கிலைஎம் பெருமானே என்னே என்னே
  பொல்லாத வெவ்வினையேன் எனினும் என்னைப்
  புண்ணியனே புரப்பதருட் புகழ்ச்சி அன்றோ
  அல்ஆர்ந்த துயர்க்கடல்நின் றெடுத்தி டாயேல்
  ஆற்றேன்நான் பழிநின்பால் ஆக்கு வேனே.
 • 9. மையான நெஞ்சகத்தோர் வாயில் சார்ந்தே
  மனம்தளர்ந்தேன் வருந்துகின்ற வருத்தம் எல்லாம்
  ஐயாஎன் உளத்தமர்ந்தாய் நீதான் சற்றும்
  அறியாயோ அறியாயேல் அறிவா ர்யாரே
  பொய்யான தன்மையினேன் எனினும் என்னைப்
  புறம்விடுத்தல் அழகேயோ பொருளா எண்ணி
  மெய்யாஎன் றனைஅந்நாள் ஆண்டாய் இந்நாள்
  வெறுத்தனையேல் எங்கேயான் மேவு வேனே.
 • 10. கூறுவதோர் குணமில்லாக் கொடிதாம் செல்வக்
  குருட்டறிவோர் இடைப்படும்என் குறைகள் எல்லாம்
  ஆறுவதோர் வழிகாணேன் அந்தோ அந்தோ
  அவலமெனும் கருங்கடலில் அழுந்து கின்றேன்
  ஏறுவதோர் வகைஅறியேன் எந்தாய் எந்தாய்
  ஏற்றுகின்றோர் நின்னைஅன்றி இல்லேன் என்னைச்
  சீறுவதோ இரங்குவதோ யாதோ உன்றன்
  திருவுளத்தைத் தெரியேனே சிறிய னேனே.

  • * கொந்தமூர் ஸ்ரீநிவாச வரதாசாரிய சுவாமிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அருளிச் செய்தது.வீரராகவர் போற்றிப் பஞ்சகம்

இராமநாமப் பதிகம் // இராமநாமப் பதிகம்

No audios found!