திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
நெஞ்சொடு புலத்தல்
neñsoṭu pulattal
திருவடி சூட விழைதல்
tiruvaṭi sūṭa viḻaital
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

020. புன்மை நினைந் திரங்கல்
puṉmai niṉain tiraṅkal

  கட்டளைக் கலிப்பா
  திருச்சிற்றம்பலம்
 • 1. மஞ்சட் பூச்சின் மினுக்கில்இ ளைஞர்கள்
  மயங்க வேசெயும் வாள்விழி மாதர்பால்
  கெஞ்சிக் கொஞ்சி நிறைஅழிந் துன்அருட்
  கிச்சை நீத்துக் கிடந்தனன் ஆயினேன்
  மஞ்சுற் றோங்கும் பொழில்தணி காசல
  வள்ளல் என்வினை மாற்றுதல் நீதியே
  தஞ்சத் தால்வந் தடைந்திடும் அன்பர்கள்
  தம்மைக் காக்கும் தனிஅருட் குன்றமே.
 • 2. முலையைக் காட்டி மயக்கிஎன் ஆருயிர்
  முற்றும் வாங்குறும் முண்டைகள் நன்மதி
  குலையக் காட்டும் கலவிக்கி சைந்துநின்
  கோலங் காணக் குறிப்பிலன் ஆயினேன்
  நிலையைக் காட்டும்நல் ஆனந்த வெள்ளமே
  நேச நெஞ்சகம் நின்றொளிர் தீபமே
  கலையைக் காட்டும் மதிதவழ் நற்றணி
  காச லத்தமர்ந் தோங்கதி காரனே.
 • 3. வஞ்ச மேகுடி கொண்டு விளங்கிய
  மங்கை யர்க்கு மயல்உழந் தேஅவர்
  நஞ்சம் மேவு நயனத்தில் சிக்கிய
  நாயி னேன்உனை நாடுவ தென்றுகாண்
  கஞ்சம் மேவும் அயன்புகழ் சோதியே
  கடப்ப மாமலர்க் கந்தசு கந்தனே
  தஞ்ச மேஎன வந்தவர் தம்மைஆள்
  தணிகை மாமலைச் சற்குரு நாதனே.
 • 4. பாவம் ஓர்உரு வாகிய பாவையர்
  பன்னு கண்வலைப் பட்டும யங்கியே
  கோவை வாய்இதழ்க் கிச்சைய தாகிநின்
  குரைக ழற்கன்பு கொண்டிலன் ஆயினேன்
  மேவு வார்வினை நீக்கிஅ ளித்திடும்
  வேல னேதணி காசல மேலனே
  தேவர் தேடரும் சீர்அருட் செல்வனே
  தெய்வ யானை திருமண வாளனே.
 • 5. கரத்தைக் காட்டியே கண்களை நீட்டியே
  கடைய னேன்உயிர் வாட்டிய கன்னியர்
  உரத்தைக் காட்டி மயக்கம யங்கினேன்
  உன்றன் பாத உபயத்தைப் போற்றிலேன்
  புரத்தைக் காட்டு நகையின்எ ரித்ததோர்
  புண்ணி யற்குப் புகல்குரு நாதனே
  வரத்தைக் காட்டும் மலைத்தணி கேசனே
  வஞ்ச னேற்கருள் வாழ்வுகி டைக்குமோ.
 • 6. காசம் மேகம் கடும்பிணி சூலைமோ
  காதி யால்தந்து கண்கலக் கம்செயும்
  மோச மேநிசம் என்றுபெண் பேய்களை
  முன்னி னேன்நினை முன்னிலன் ஆயினேன்
  பாசம் நீக்கிடும் அன்பர்கள் போல்எனைப்
  பாது காக்கும் பரம்உனக் கையனே
  தேசம் யாவும் புகழ்தணி காசலச்
  செல்வ மேஅருட் சிற்சுக வாரியே.
 • 7. ஐயம் ஏற்றுத் திரிபவர் ஆயினும்
  ஆசை ஆம்பொருள் ஈந்திட வல்லரேல்
  குய்யம் காட்டும்ம டந்தையர் வாய்ப்பட்டுன்
  கோல மாமலர்ப் பாதம்கு றித்திலேன்
  மைஉ லாம்பொழில் சூழும்த ணிகைவாழ்
  வள்ள லேவள்ளி நாயக னேபுவிச்
  சைய றும்பர ஞானிகள் போற்றிடும்
  சாமி யேஎனைக் காப்பதுன் தன்மையே.
 • 8. கண்ணைக் காட்டி இருமுலை காட்டிமோ
  கத்தைக் காட்டி அகத்தைக்கொண் டேஅழி
  மண்ணைக் காட்டிடும் மாய வனிதைமார்
  மாலைப் போக்கிநின் காலைப் பணிவனோ
  பண்ணைக் காட்டி உருகும்அ டியர்தம்
  பத்திக் காட்டிமுத் திப்—‘ருள் ஈதென
  விண்ணைக் காட்டும் திருத்தணி காசல
  வேல னேஉமை யாள்அருள் பாலனே.
 • 9. படியின் மாக்களை வீழ்த்தும் படுகுழி
  பாவம் யாவும் பழகுறும் பாழ்ங்குழி
  குடிகொள் நாற்றக் குழிசிறு நீர்தரும்
  கொடிய ஊற்றுக் குழிபுழுக் கொள்குழி
  கடிம லக்குழி ஆகும் கருக்குழிக்
  கள்ள மாதரைக் கண்டும யங்கினேன்
  ஒடிவில் சீர்த்தணி காசல நின்புகழ்
  ஓதி லேன்எனக் குண்டுகொல் உண்மையே.
 • 10. கச்சுக் கட்டி மணங்கட்டிக் காமுகர்
  கண்ணைக் கட்டி மனங்கட்டி வஞ்சகம்
  வச்சுக் கட்டிய வன்கழற் கட்டியும்
  மண்ணின் கட்டியும் மானும்மு லைக்கட்டிக்
  கிச்சைக் கட்டிஇ டும்பைஎ னும்சுமை
  ஏறக் கட்டிய எற்கருள் வாய்கொலோ
  பிச்சைக் கட்டிய பித்தன் புதல்வனே
  பெருமை கட்டும் பெருந்தணி கேசனே.

புன்மை நினைந் திரங்கல் // புன்மை நினைந் திரங்கல்