திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
திருவண்ணப் பதிகம்
tiruvaṇṇap patikam
விண்ணப்பப் பதிகம்
viṇṇappap patikam
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

079. போற்றித் திருப்பதிகம்
pōṟṟit tiruppatikam

    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. அருள்தரல் வேண்டும் போற்றிஎன் அரசே
    அடியனேன் மனத்தகத் தெழுந்த
    இருள்கெடல் வேண்டும் போற்றிஎந் தாயே
    ஏழையேன் நின்றனைப் பாடும்
    தெருள்உறல் வேண்டும் போற்றிஎன் அறிவே
    சிந்தைநைந் துலகிடை மயங்கும்
    மருள்அறல் வேண்டும் போற்றிஎன் குருவே
    மதிநதி வளர்சடை மணியே.
  • 2. மணிமிடற் றமுதே போற்றிஎன் தன்னை
    வாழ்விக்க வேண்டுவல் போற்றி
    அணிமதி முடியோய் போற்றிஇவ் வேழைக்
    கருளமு தருளுக போற்றி
    பணிஅணி புயத்தோய் போற்றிநின் சீரே
    பாடுதல் வேண்டும்நான் போற்றி
    தணிவில்பே ரொளியே போற்றிஎன் தன்னைத்
    தாங்குக போற்றிநின் பதமே.
  • 3. நின்பதம் பாடல் வேண்டும்நான் போற்றி
    நீறுபூத் தொளிர்குளிர் நெருப்பே
    நின்புகழ் கேட்டல் வேண்டும்நான் போற்றி
    நெற்றியங் கண்கொளும் நிறைவே
    நின்வச மாதல் வேண்டும்நான் போற்றி
    நெடியமால் புகழ்தனி நிலையே
    நின்பணி புரிதல் வேண்டும்நான் போற்றி
    நெடுஞ்சடை முடித்தயா நிதியே.
  • 4. நிதிதரு நிறைவே போற்றிஎன் உயிர்க்கோர்
    நெறிதரு நிமலமே போற்றி
    மதிமுடிக் கனியே போற்றிஎன் தன்னை
    வாழ்வித்த வள்ளலே போற்றி
    விதிமுதற் கிறையே போற்றிமெய்ஞ் ஞான
    வியன்நெறி விளக்கமே போற்றி
    பதிபசு பதியே போற்றி நின்பாதம்
    பாடஎற் கருளுக போற்றி.
  • 5. போற்றிஎன் உயிர்க்கோர் இன்பமே அன்பர்
    புரிதவக் காட்சியே போற்றி
    போற்றிஎன் அன்பாம் தெய்வமே சைவம்
    புகல்சிவ போகமே போற்றி
    போற்றிஎன் பெரிதாஞ் செல்வமே கருணைப்
    பூரண வெள்ளமே போற்றி
    போற்றிஎன் வாழ்வுக் கொருபெரு முதலே
    போற்றிநின் சேவடிப் போதே.
  • 6. போதஆ னந்த போகமே என்னைப்
    புறம்பிட நினைத்திடேல் போற்றி
    சீதவான் பிறைசேர் செஞ்சடை யாய்என்
    சிறுமைதீர்த் தருளுக போற்றி
    பேதம்ஒன் றில்லா அருட்கட லேஎன்
    பிழைஎலாம் பொறுத்தருள் போற்றி
    வேதமெய்ப் பொருளே போற்றிநின் அல்லால்
    வேறெனக் கிலைஅருள் போற்றி.
  • 7. போற்றுவார் உள்ளம் புகுந்தொளிர் ஒளியே
    போற்றிநின் பூம்பதம் போற்றி
    ஆற்றுவார் சடைஎன் அப்பனே போற்றி
    அமலநின் அடிமலர் போற்றி
    ஏற்றுவார் கொடிகொள் எந்தையே போற்றி
    இறைவநின் இருங்கழல் போற்றி
    சாற்றுமா றரிய பெருமையே போற்றி
    தலைவநின் தாட்டுணை போற்றி.
  • 8. துணைமுலை மடந்தை எம்பெரு மாட்டி
    துணைவநின் துணையடி போற்றி
    புணைஎன இடரின் கடலினின் றேற்றும்
    புனிதநின் பொன்னடி போற்றி
    இணையில்பே ரின்ப அமுதருள் கருணை
    இறைவநின் இணையடி போற்றி
    கணைஎனக் கண்ணன் தனைக்கொளும் ஒருமுக்
    கண்ணநின் கழலடி போற்றி.
  • 9. அடியனேன் பிழைகள் பொறுத்தருள் போற்றி
    அயல்எனை விட்டிடேல் போற்றி
    கொடியனேற் கின்பந் தந்தருள் போற்றி
    குணப்பெருங் குன்றமே போற்றி
    நெடியஎன் துன்பந் துடைத்தருள் போற்றி
    நினைஅலால் பிறிதிலேன் போற்றி
    படிமிசைப் பிறர்பால் செலுத்திடேல் எங்கள்
    பரமநின் அடைக்கலம் நானே.
  • 10. நான்செயும் பிழைகள் பலவும்நீ பொறுத்து
    நலந்தரல் வேண்டுவன் போற்றி
    ஏன்செய்தாய் என்பார் இல்லைமற் றெனக்குன்
    இன்னருள் நோக்கஞ்செய் போற்றி
    ஊன்செய்நா வால்உன் ஐந்தெழுத் தெளியேன்
    ஓதநீ உவந்தருள் போற்றி
    மான்செயும் நெடுங்கண் மலைமகள் இடங்கொள்
    வள்ளலே போற்றிநின் அருளே.

போற்றித் திருப்பதிகம் // போற்றித் திருப்பதிகம்