திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
தெய்வத் தனித் திருமாலை
teyvat taṉit tirumālai
சிவகாமவல்லி துதி
sivakāmavalli tuti
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

076. ஆனந்த நடனப் பதிகம்
āṉanta naṭaṉap patikam

    பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. பரசிவா னந்தபரி பூரண சதானந்த
    பாவனா தீதமுக்த
    பரமகை வல்யசை தன்யநிஷ் களபூத
    பௌதிகா தாரயுக்த
    சர்வமங் களசச்சி தானந்த சௌபாக்ய
    சாம்பவ விநாசரகித
    சாஸ்வத புராதர நிராதர அபேதவா
    சாமகோ சரநிரூபா
    துருவகரு ணாகர நிரந்தர துரந்தர
    சுகோதய பதித்வநிமல
    சுத்தநித் தியபரோ க்ஷாநுபவ அபரோக்ஷ
    சோமசே கரசொரூபா
    அரஹர சிவாயநம என்றுமறை ஓலமிட்
    டணுவளவும் அறிகிலாத
    அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
    ஆனந்த நடனமணியே.
  • 2. ஜோதிமணி யேஅகண் டானந்த சைதன்ய
    சுத்தமணியே அரியநல்
    துரியமணி யேதுரிய முங்கடந் தப்பால்
    துலங்குமணி யேஉயர்ந்த
    ஜாதிமணி யேசைவ சமயமணி யேசச்சி
    தானந்த மானமணியே
    சகஜநிலை காட்டிவினை யோட்டிஅருள் நீட்டிஉயர்
    சமரச சுபாவமணியே
    நீதிமணி யேநிரு விகற்பமணி யேஅன்பர்
    நினைவிலமர் கடவுண்மணியே
    நின்மல சுயம்பிர காசங்குலவும் அத்வைத
    நித்யஆ னந்தமணியே
    ஆதிமணி யேஎழில் அநாதிமணி யேஎனக்
    கன்புதவும் இன்பமணியே
    அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
    ஆனந்த நடனமணியே.
  • 3. தேனமர் பசுங்கொன்றை மாலையா டக்கவின்
    செய்யுமதி வேணியாட
    செய்யுமுப் புரிநூலு மாடநடு வரியுரி
    சிறந்தாட வேகரத்தில்
    மானிமிர்ந் தாடஒளிர் மழுவெழுந் தாடமக
    வானாதி தேவராட
    மாமுனிவர் உரகர்கின் னரர்விஞ்சை யருமாட
    மால்பிரம னாடஉண்மை
    ஞானஅறி வாளர்தின மாடஉல கன்னையாம்
    நங்கைசிவ காமியாட
    நாகமுடன் ஊகமன நாடிஒரு புறமாட
    நந்திமறை யோர்களாட
    ஆனைமுக னாடமயி லேறிவிளை யாடுமுயர்
    ஆறுமுக னாடமகிழ்வாய்
    அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
    ஆனந்த நடனமணியே.
  • 4. பொய்யான வாழ்க்கையினை மெய்யாக நம்பிவீண்
    போக்கிநன் னாளைமடவார்
    போகமே பெரிதெனக் கொண்டறி வழிந்துநின்
    பொன்னடிக் கானபணியைச்
    செய்யாத பாவியேன் என்னைநீ கைவிடில்
    செய்வதறி யேன்ஏழையேன்
    சேய்செய்த பிழையெலாம் தாய்பொறுப் பதுபோல
    சிந்தைதனில் எண்ணிடாயோ
    மெய்யான நிலைபெறக் கையா லணைத்தருள
    வேண்டுமறை யாகமத்தின்
    மேலான சுத்தசன் மார்க்கஅனு பவசாந்த
    மேதையர்கள் பரவிவாழ்த்தும்
    ஐயான னங்கொண்ட தெய்வமே கங்கைஅர
    வம்புலியு மாடமுடிமேல்
    அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
    ஆனந்த நடனமணியே.
  • 5. (போதாரு நான்முகப்) புத்தேளி னாற்பெரிய
    பூமியிடை வந்துநமனாற்
    போகுமுயிர் கள்வினையை ஒழிமின்என் றேகுரவர்
    போதிக்கும் உண்மைமொழியைக்
    காதார வேபல தரங்கேட்டும் நூற்களிற்
    கற்றும்அறி வற்றிரண்டு
    கண்கெட்ட குண்டையென வீணே யலைந்திடும்
    கடையனேன் உய்வதெந்நாள்
    மாதாவு மாய்ஞான வுருவுமாய் அருள்செயும்
    வள்ளலே உள்ளமுதலே
    மாலாதி தேவர்முனி வோர்பரவி யேதொழுது
    வாழ்த்திமுடி தாழ்த்துமுன்றன்
    ஆதார மானஅம் போருகத் தைக்காட்டி
    யாண்டருள வேண்டும்அணிசீர்
    அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
    ஆனந்த நடனமணியே.
  • 6. பண்ணாரு மூவர்சொற் பாவேறு கேள்வியிற்
    பண்படா ஏழையின்சொற்
    பாவையும் இகழ்ந்திடா தேற்றுமறை முடிவான
    பரமார்த்த ஞானநிலையை
    கண்ணார நெல்லியங் கனியெனக் காட்டிநற்
    கருணைசெய் தாளாவிடில்
    கடையனேன் ஈடேறும் வகைஎந்த நாள்அருட்
    கடவுளே கருணைசெய்வாய்
    தண்ணா ரிளம்பிறை தங்குமுடி மேன்மேனி
    தந்தஒரு சுந்தரியையும்
    தக்கவா மத்தினிடை பச்சைமயி லாம்அரிய
    சத்தியையும் வைத்துமகிழ்என்
    அண்ணாஎன் அப்பாஎன் அறிவேஎன் அன்பேஎன்
    றன்பர் (எப் பொழுதும்) வாழ்த்தும்
    அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
    ஆனந்த நடனமணியே.
  • 7. பவமான எழுவகைப் பரப்பான வேலையிற்
    பசுவான பாவிஇன்னும்
    பற்றான குற்றமதை உற்றலை துரும்பெனப்
    படராது மறையனைத்தும்
    உவமான முரைசெய்ய அரிதான சிவநிலையை
    உற்றதனை யொன்றிவாழும்
    உளவான வழியீ தெனக்காட்டி அருள்செய்யில்
    உய்குவேன் முடிவானநல்
    தவமான நெறிபற்றி ரண்டற்ற சுகவாரி
    தன்னில்நினை நாடியெல்லாம்
    தானான சுத்தசன் மார்க்கஅனு பவசாந்த
    தற்பரர்க ளகநிறைந்தே
    அவமான கருணைப்பிர காசநின் னருள்தனை
    அடியனுக் கருள்செய்குவாய்
    அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
    ஆனந்த நடனமணியே.
  • 8. சந்ததமும் அழியாமல் ஒருபடித் தாயிலகு
    சாமிசிவ காமியிடமார்
    சம்புவா மென்னுமறை ஆகமத் துணிவான
    சத்யமொழி தன்னைநம்பி
    எந்தையே என்றறிஞர் யாவரும் நின்புகழை
    ஏத்திவினை தனைமாற்றியே
    இன்பமய மாயினிது வாழ்ந்திடப் புவியினிடை
    ஏழையேன் ஒருவன்அந்தோ
    சிந்தையா னதுகலக் கங்கொண்டு வாடலென்
    செப்புவாய் வேதனாதி
    தேவர்முனி வர்கருடர் காந்தருவர் விஞ்சையர்
    சித்தர்களும் ஏவல்புரிய
    அந்தணர்கள் பலகோடி முகமனா டப்பிறங்
    கருண்முக விலாசத்துடன்
    அற்புத சிதாகாச ஞானிஅம் பலமாடும்
    ஆனந்த நடனமணியே.
  • 9. நீறணிந் தொளிர்அக்க மணிபூண்டு சன்மார்க்க
    நெறிநிற்கும் அன்பர்மனமாம்
    நிலமீது வளர்தேவ தாருவே நிலையான
    நிறைவே (மெய் யருட்சத்தியாம்)
    வீறணிந் தழியாத நிதியமே ஒழியாத
    விண்ணே அகண்டசுத்த
    வெளியே விளங்குபர ஒளியே வரைந்திடா
    வேதமே வேதமுடிவே
    தூறணிந் தலைகின்ற பாவியேன் நின்திருத்
    துணைமலர்த் தாட்குரியனாய்த்
    துயர்தீர்ந் திளைப்பாறும் இன்பஅம் போதியில்
    தோயஅருள் புரிதிகண்டாய்
    ஆறணிந் திடுவேணி அண்ணலே அணிகுலவும்
    அம்மைசிவ காமியுடனே
    அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
    ஆனந்த நடனமணியே.
  • 10. மணிகொண்ட நெடியஉல காய்அதில் தங்கும்ஆன்
    மாக்களாய் ஆன்மாக்களின்
    மலமொழித் தழியாத பெருவாழ் வினைத்தரும்
    வள்ளலாய் மாறாமிகத்
    திணிகொண்ட முப்புரா திகளெரிய நகைகொண்ட
    தேவாய் அகண்டஞானச்
    செல்வமாய் வேலேந்து சேயாய் கஜானனச்
    செம்மலாய் அணையாகவெம்
    பணிகொண்ட கடவுளாய்க் கடவுள ரெலாம்தொழும்
    பரமபதி யாய்எங்கள்தம்
    பரமேட்டி யாய்ப்பரம போதமாய் நாதமாய்
    பரமமோ க்ஷாதிக்கமாய்
    அணிகொண்ட சுத்தஅனு பூதியாய்ச் சோதியாய்
    ஆர்ந்துமங் களவடிவமாய்
    அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
    ஆனந்த நடனமணியே.

    • 169. அடிக்குறிப்பு 163 காண்க.

ஆனந்த நடனப் பதிகம் // ஆனந்த நடனப் பதிகம்

No audios found!