176. இதன் பொருள் : ஆவி - ஆன்மவக்கரமென்னும், ஈரைந்து - பத்தாகிய யகரத்தை, ஐ - சிவத்திற்கு, அபரத்தே - பின்னாக, வைத்து - பொருத்தி, ஓதில் - செபிக்கில், ஆவியீ ரைந்தை - ஆ என்னும் ஆபத்துகளையும் வி என்னும் விபத்துகளையும், அகற்றலாம் - நீக்கிக் கொள்ளலாம். ஆவி - ஆன்மவியற்கையை, ஈர் - கெடுக்கும், ஐந்து - பஞ்சமலங்களையும், அறலாம் - களைந்து விடலாம், ஆவி - ஆன்மாவுக் குறுதியாய், ஈரைந்து - பத்தியை, உறலாம் - பொருந்தலாம், ஆய்ந்து - சேர்க்கும் வகை தெரிந்து, ஆவி - பிராணனது கலைகள், ஈரைந்து - பத்துடன், ஓர் - ஒரு, இரண்டோடு - இரண்டையுங் கழியாமல், இடலாம் - சேர்த்துக் கட்டிக் கொள்ளலாம்.
- ஆறாம் திருமுறை முதற் பதிப்பு
இப்பதிகத்துள் கலித்துறைகளும் விரவி நிற்கவும், விருத்தமெனக் குறியிட்டாளப் பட்டமைக் கீண்டு விதியெழுதப் புகின் மிகப் பெருகுமாதலின் விடுக்கப்பட்டது. சைவம் பன்னிரண்டு திருமுறைகளுள் ஆளுடைய வரசாகிய அப்பர் சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய திருமுறையில் "குலம்பலம்பாவரும்" என்றற் றொடக்கத் திலக்கியங்களாற் கண்டுகொள்க. - தொ. வே.