Home
|
vallalar.org
|
thiruarutpa.org
|
vallalarspace.org
|
திருமுறைகள்
Thirumurai
1
2
3
4
5
6
சிவபதி விளக்கம்
sivapati viḷakkam
நான் ஏன் பிறந்தேன்
nāṉ ēṉ piṟantēṉ
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai
006. ஆற்றாமை
āṟṟāmai
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1.
எழுவினும் வலிய மனத்தினேன் மலஞ்சார் ஈயினும் நாயினும் இழிந்தேன்
புழுவினும் சிறியேன்பொய்விழைந் துழல்வேன்புன்மையேன் புலைத்தொழிற்கடையேன்
வழுவினும் பெரியேன் மடத்தினும் பெரியேன் மாண்பிலா வஞ்சக நெஞ்சக்
குழுவினும் பெரியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
2.
கற்றமே லவர்தம் உறவினைக் கருதேன் கலகர்தம் உறவினிற் களித்தேன்
உற்றமே தகவோர் உவட்டுற இருந்தேன் உலகியற் போகமே உவந்தேன்
செற்றமே விழையும் சிறுநெறி பிடித்தேன் தெய்வம்ஒன் றெனும்அறி வறியேன்
குற்றமே உடையேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
3.
கடுமையேன் வஞ்சக் கருத்தினேன் பொல்லாக் கண்மனக் குரங்கனேன் கடையேன்
நெடுமைஆண் பனைபோல் நின்றவெற் றுடம்பேன் நீசனேன் பாசமே உடையேன்
நடுமைஒன் றறியேன் கெடுமையிற் கிளைத்த நச்சுமா மரம்எனக்கிளைத்தேன்
கொடுமையே குறித்தேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
4.
நிலத்திலும்பணத்தும் நீள்விழிமடவார் நெருக்கிலும்பெருக்கிய நினைப்பேன்
புலத்திலும் புரைசேர் பொறியிலும் மனத்தைப் போக்கிவீண் போதுபோக் குறுவேன்
நலத்தில்ஓர் அணுவும் நண்ணிலேன் கடைய நாயினுங் கடையனேன் நவையேன்
குலத்திலும் கொடியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
5.
செடிமுடிந் தலையும்மனத்தினேன் துன்பச் செல்லினால்அரிப்புண்டசிறியேன்
அடிமுடி அறியும் ஆசைசற் றறியேன் அறிந்தவர் தங்களை அடையேன்
படிமுடி வழித்துக் கடிகொளும் கடையர்பணத்திலும் கொடியனேன் வஞ்கக்
கொடிமுடிந் திடுவேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
6.
அரங்கினிற் படைகொண் டுயிர்க்கொலை புரியும் அறக்கடை யவரினுங் கடையேன்
இரங்கில்ஓர் சிறிதும் இரக்கம்உற் றறியேன் இயலுறு நாசியுட் கிளைத்த
சிரங்கினிற் கொடியேன் சிவநெறி பிடியேன் சிறுநெறிச் சழக்கையே சிலுகுக்
குரங்கெனப் பிடித்தேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
7.
வாட்டமே உடையார் தங்களைக் காணின் மனஞ்சிறிதிரக்கமுற் றறியேன்
கோட்டமே உடையேன் கொலையனேன் புலையேன் கூற்றினும் கொடியனேன் மாயை
ஆட்டமே புரிந்தேன் அறத்தொழில் புரியேன் அச்சமும் அவலமும் இயற்றும்
கூட்டமே விழைந்தேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
8.
கலைத்தொழில் அறியேன் கள்உணுங் கொடியேன் கறிக்குழல் நாயினும் கடையேன்
விலைத்தொழில் உடையேன் மெய்எலாம் வாயாய் விளம்புறும் வீணனேன் அசுத்தப்
புலைத்தொழில் புரிவேன் பொய்யனேன் சீற்றம் பொங்கிய மனத்தினேன் பொல்லாக்
கொலைத்தொழில் புரிவேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
9.
பணமிலார்க் கிடுக்கண் புரிந்துணுஞ் சோற்றுப் பணம்பறித் துழல்கின்ற படிறேன்
எணமிலா தடுத்தார்க் குறுபெருந்தீமை இயற்றுவேன் எட்டியேஅனையேன்
மணமிலா மலரிற் பூத்தனன் இருகால் மாடெனத் திரிந்துழல் கின்றேன்
குணமிலாக் கொடியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
10.
கடியரில் கடியேன் கடையரில் கடையேன் கள்வரில் கள்வனேன் காமப்
பொடியரில் பொடியேன் புலையரில் புலையேன் பொய்யரில் பொய்யனேன் பொல்லாச்
செடியரில் செடியேன் சினத்தரில் சினத்தேன் தீயரில் தீயனேன் பாபக்
கொடியரில் கொடியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
ஆற்றாமை // ஆற்றாமை
No audios found!
Oct,12/2014: please check back again.