திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
சிவ தரிசனம்
siva tarisaṉam
அனுபோக நிலயம்
aṉupōka nilayam
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

024. வாதனைக் கழிவு
vātaṉaik kaḻivu

  அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  திருச்சிற்றம்பலம்
 • 1. பொழுது விடிந்த தினிச்சிறிதும் பொறுத்து முடியேன் எனநின்றே
  அழுது விழிகள் நீர்துளும்பக் கூவிக் கூவி அயர்கின்றேன்
  பழுது தவிர்க்கும் திருச்செவிக்குள் பட்ட திலையோ பலகாலும்
  உழுது களைத்த மாடனையேன் துணைவே றறியேன் உடையானே.
 • 2. உடையாய் திருஅம் பலத்தாடல் ஒருவா ஒருவா உலவாத
  கொடையாய் எனநான் நின்றனையே கூவிக் கூவி அயர்கின்றேன்
  தடையா யினதீர்த் தருளாதே தாழ்க்கில் அழகோ புலைநாயிற்
  கடையாய்த் திரிந்தேன் கலங்குதல்சம் மதமோ கருணைக் கருத்தினுக்கே.
 • 3. கருணைக் கருத்து மலர்ந்தெனது கலக்க மனைத்துந் தவிர்த்தேஇத்
  தருணத் தருளா விடில்அடியேன் தரியேன் தளர்வேன் தளர்வதுதான்
  அருணச் சுடரே நின்னருளுக் கழகோ அழகென் றிருப்பாயேல்
  தெருணற் பதஞ்சார் அன்பரெலாம்236 சிரிப்பார் நானும் திகைப்பேனே.
 • 4. திகைப்பார் திகைக்க நான்சிறிதும் திகையேன் எனநின் திருவடிக்கே
  வகைப்பா மாலை சூட்டுகின்றேன் மற்றொன் றறியேன் சிறியேற்குத்
  தகைப்பா ரிடைஇத் தருணத்தே தாராய் எனிலோ பிறரெல்லாம்
  நகைப்பார் நகைக்க உடம்பினைவைத் திருத்தல் அழகோ நாயகனே.
 • 5. நாயிற் கடையேன் கலக்கமெலாம் தவிர்த்து நினது நல்லருளை
  ஈயிற் கருணைப் பெருங்கடலே என்னே கெடுவ தியற்கையிலே
  தாயிற் பெரிதும்237 தயவுடையான் குற்றம் புரிந்தோன் தன்னையும்ஓர்
  சேயிற் கருதி அணைத்தான்என் றுரைப்பா ருனைத்தான் தெரிந்தோரே.
 • 6. தெரிந்த பெரியர்க் கருள்புரிதல் சிறப்பென் றுரைத்த தெய்வமறை
  திரிந்த சிறியர்க் கருள்புரிதல் சிறப்பிற் சிறப்பென் றுரைத்தனவே
  புரிந்தம் மறையைப் புகன்றவனும் நீயே என்றால் புண்ணியனே
  விரிந்த மனத்துச் சிறியேனுக் கிரங்கி அருளல் வேண்டாவோ.
 • 7. வேண்டார் உளரோ நின்னருளை மேலோ ரன்றிக் கீழோரும்
  ஈண்டார் வதற்கு வேண்டினரால் இன்று புதிதோ யான்வேண்டல்
  தூண்டா விளக்கே திருப்பொதுவிற் சோதி மணியே ஆறொடுமூன்
  றாண்டா வதிலே முன்னென்னை ஆண்டாய் கருணை அளித்தருளே.
 • 8. அருளே வடிவாம் அரசேநீ அருளா விடில்இவ் வடியேனுக்
  கிருளே தொலைய அருளளிப்பார் எவரே எல்லாம் வல்லோய்நின்
  பொருளேய் வடிவிற் கலைஒன்றே புறத்தும் அகத்தும் புணர்ந்தெங்குந்
  தெருளே யுறஎத் தலைவருக்குஞ் சிறந்த அருளாய்த் திகழ்வதுவே.
 • 9. திகழ்ந்தார் கின்ற திருப்பொதுவில் சிவமே நின்னைத் தெரிந்துகொண்டு
  புகழ்ந்தார் தம்மைப் பொறுத்திடவும் புன்மை அறிவால் பொய்உரைத்தே
  இகழ்ந்தேன் தனைக்கீழ் வீழ்த்திடவும் என்னே புவிக்கிங் கிசைத்திலைநீ
  அகழ்ந்தார் தமையும் பொறுக்கஎன அமைத்தாய் எல்லாம் அமைத்தாயே.
 • 10. எல்லாம் வகுத்தாய் எனக்கருளில் யாரே தடுப்பார் எல்லாஞ்செய்
  வல்லான் வகுத்த வண்ணம்என மகிழ்வார் என்கண் மணியேஎன்
  சொல்லா னவையும் அணிந்துகொண்ட துரையே சோதித் திருப்பொதுவில்
  நல்லாய் கருணை நடத்தரசே தருணம் இதுநீ நயந்தருளே.
 • 11. நயந்த கருணை நடத்தரசே ஞான அமுதே நல்லோர்கள்
  வியந்த மணியே மெய்யறிவாம் விளக்கே என்னை விதித்தோனே
  கயந்த மனத்தேன் எனினும்மிகக் கலங்கி நரகக் கடுங்கடையில்
  பயந்த பொழுதும் தாழ்த்திருத்தல் அழகோ கடைக்கண் பார்த்தருளே.
 • 12. பார்த்தார் இரங்கச் சிறியேன்நான் பாவி மனத்தால் பட்டதுயர்
  தீர்த்தாய் அந்நாள் அதுதொடங்கித் தெய்வந் துணைஎன் றிருக்கின்றேன்
  சேர்த்தார்238 உலகில் இந்நாளில் சிறியேன் தனைவெந் துயர்ப்பாவி
  ஈர்த்தால் அதுகண் டிருப்பதுவோ கருணைக் கழகிங் கெந்தாயே.
 • 13. தாயே எனைத்தான் தந்தவனே தலைவா ஞான சபாபதியே
  பேயேன் செய்த பெருங்குற்றம் பொறுத்தாட் கொண்ட பெரியோனே
  நீயே இந்நாள் முகமறியார் நிலையில் இருந்தால் நீடுலகில்
  நாயே அனையேன் எவர்துணைஎன் றெங்கே புகுவேன் நவிலாயே.
 • 14. ஆயேன் வேதா கமங்களைநன் கறியேன் சிறியேன் அவலமிகும்
  பேயேன் எனினும் வலிந்தென்னைப் பெற்ற கருணைப் பெருமானே
  நீயே அருள நினைத்தாயேல் எல்லா நலமும் நிரம்புவன்நான்
  காயே எனினும் கனிஆகும் அன்றே நினது கருணைக்கே.
 • 15. கருணா நிதியே என்இரண்டு கண்ணே கண்ணிற் கலந்தொளிரும்
  தெருணா டொளியே வெளியேமெய்ச் சிவமே சித்த சிகாமணியே
  இருணா டுலகில் அறிவின்றி இருக்கத் தரியேன் இதுதருணம்
  தருணா அடியேற் கருட்சோதி தருவாய் என்முன் வருவாயே.
 • 16. வருவாய் என்கண் மணிநீஎன் மனத்திற் குறித்த வண்ணமெலாம்
  தருவாய் தருணம் இதுவேமெய்த் தலைவா ஞான சபாபதியே
  உருவாய்239 சிறிது தாழ்க்கில்உயிர் ஒருவும் உரைத்தேன் என்னுடைவாய்
  இருவாய் அலநின் திருவடிப்பாட் டிசைக்கும் ஒருவாய் இசைத்தேனே.
 • 17. தேனே திருச்சிற் றம்பலத்தில் தெள்ளா ரமுதே சிவஞான
  வானே ஞான சித்தசிகா மணியே என்கண் மணியேஎன்
  ஊனே புகுந்தென் உளங்கலந்த உடையாய் அடியேன் உவந்திடநீ
  தானே மகிழ்ந்து தந்தாய்இத் தருணம் கைம்மா றறியேனே.
 • 18. அறியேன் சிறியேன் செய்தபிழை அனைத்தும் பொறுத்தாய் அருட்சோதிக்
  குறியே குணமே பெறஎன்னைக் குறிக்கொண் டளித்தாய் சன்மார்க்க
  நெறியே விளங்க எனைக்கலந்து நிறைந்தாய் நின்னை ஒருகணமும்
  பிறியேன் பிறியேன் இறவாமை பெற்றேன் உற்றேன் பெருஞ்சுகமே.
 • 19. சுகமே நிரம்பப் பெருங்கருணைத் தொட்டில் இடத்தே எனைஅமர்த்தி
  அகமே விளங்கத் திருஅருளா ரமுதம் அளித்தே அணைத்தருளி
  முகமே மலர்த்திச் சித்திநிலை முழுதும் கொடுத்து மூவாமல்
  சகமேல்240 இருக்கப் புரிந்தாயே தாயே என்னைத் தந்தாயே.
 • 20. தந்தாய் இன்றும் தருகின்றாய் தருவாய் மேலுந் தனித்தலைமை
  எந்தாய் நினது பெருங்கருணை என்என் றுரைப்பேன் இவ்வுலகில்
  சிந்தா குலந்தீர்த் தருள்எனநான் சிறிதே கூவு முன்என்பால்
  வந்தாய் கலந்து மகிழ்கின்றாய் எனது பொழுது வான்பொழுதே.

  • 235. பலநாளும் - ச. மு. க. பதிப்பு.
  • 236. அடியரெலாம் - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க., பி. இரா.
  • 237. தாயிற் பெரிய - முதற்பதிப்பு, பொ. சு., பி. இரா.
  • 238. சேர்த்தாய் - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க., பி. இரா.
  • 239. ஒருவா - ச. மு. க.
  • 240. சகமே - முதற்பதிப்பு, பொ. சு., ச.மு.க.

வாதனைக் கழிவு // வாதனைக் கழிவு

No audios found!