திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
குறை நேர்ந்த பத்து
kuṟai nērnta pattu
நெஞ்சவலங் கூறல்
neñsavalaṅ kūṟal
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

028. முறையிட்ட பத்து
muṟaiyiṭṭa pattu

  அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  திருச்சிற்றம்பலம்
 • 1. பொன்னைப் பொருளா நினைப்போர்பால் போந்து மிடியால் இரந்தலுத்தேன்
  நின்னைப் பொருள்என் றுணராத நீசன் இனிஓர் நிலைகாணேன்
  மின்னைப் பொருவும் சடைப்பவள வெற்பில் விளைந்த வியன்கரும்பே
  முன்னைப் பொருளே தணிகையனே முறையோ முறையோ முறையேயோ.
 • 2. மக்கட் பிறவி எடுத்தும்உனை வழுத்தாக் கொடிய மரம்அனையேன்
  துக்கக் கடலில் வீழ்ந்துமனம் சோர்கின் றேன்ஓர் துணைகாணேன்
  செக்கர்ப் பொருவு வடிவேற்கைத் தேவே தெவிட்டாத் தெள்ளமுதே
  முக்கட் கரும்பின் முழுமுத்தே முறையோ முறையோ முறையேயோ.
 • 3. அன்பின் உனது திருஅடிக்கே ஆளாய்த் தொண்டொன் றாற்றாதே
  துன்பின் உடையோர் பால்அணுகிச் சோர்ந்தேன் இனிஓர் துணைகாணேன்
  என்பில் மலிந்த மாலைபுனை எம்மான் தந்த பெம்மானே
  முன்பின் நடுவாய் முளைத்தோனே முறையோ முறையோ முறையேயோ.
 • 4. அருகா மலத்தின் அலைந்திரக்கம் அறியா வஞ்ச நெஞ்சகர்பால்
  உருகா வருந்தி உழன்றலைந்தேன் உன்தாள் அன்றித் துணைகாணேன்
  பெருகா தரவில் சிவன்பெறும்நற் பேறே தணிகைப் பெருவாழ்வே
  முருகா முகம்மூ விரண்டுடையாய் முறையோ முறையோ முறையேயோ.
 • 5. பொன்னின் றொளிரும் மார்பன்அயன் போற்றும் உன்தாள் புகழ்மறந்தே
  கன்னின் றணங்கும் மனத்தார்பால் கனிந்தேன் இனிஓர் துணைகாணேன்
  மின்னின் றிலங்கு சடைக்கனியுள் விளைந்த நறவே மெய்அடியார்
  முன்னின் றருளும் தணிகையனே முறையோ முறையோ முறையேயோ.
 • 6. வெதிர்உள் ளவரின் மொழிகேளா வீண ரிடம்போய் மிகமெலிந்தே
  அதிரும் கழற்சே வடிமறந்தேன் அந்தோ இனிஓர் துணைகாணேன்
  எதிரும் குயில்மேல் தவழ்தணிகை இறையே முக்கண் இயற்கனியின்
  முதிரும் சுவையே முதற்பொருளே முறையோ முறையோ முறையேயோ.
 • 7. ஈனத் திவறும் மனக்கொடியோர் இடம்போய் மெலிந்து நாள்தோறும்
  ஞானத் திருத்தாள் துணைசிறிதும் நாடேன் இனிஓர் துணைகாணேன்
  தானத் தறுகண் மலைஉரியின் சட்டை புனைந்தோன் தரும்பேறே
  மோனத் தவர்த்ம் அகவிளக்கே முறையோ முறையோ முறையேயோ.
 • 8. தேவே எனநிற் போற்றாத சிறிய ரிடம்போய்த் தியங்கிஎன்றன்
  கோவே நின்றன் திருத்தாளைக் குறிக்க மறந்தேன் துணைகாணேன்
  மாவே ழத்தின் உரிபுனைந்த வள்ளற் கினிய மகப்பேறே
  மூவே தனையை அறுத்தருள்வோய் முறையோ முறையோ முறையேயோ.
 • 9. வேதா நந்த னொடுபோற்றி மேவப் படும்நின் பதம்மறந்தே
  ஈதா னம்தந் திடுவீர்என் றீன ரிடம்போய் இரந்தலைந்தேன்
  போதா னந்தப் பரசிவத்தில் போந்த பொருளே பூரணமே.
  மூதா னந்த வாரிதியே முறையோ முறையோ முறையேயோ.
 • 10. வடியாக் கருணை வாரிதியாம் வள்ளல் உன்தாள் மலர்மறந்தே
  கொடியா ரிடம்போய்க்குறையிரந்தேன் கொடியேன் இனிஓர் துணைகாணேன்
  அடியார்க் கெளிய முக்கணுடை அம்மான் அளித்த அருமருந்தே
  முடியா முதன்மைப் பெரும்பொருளே முறையோ முறையோ முறையேயோ.

முறையிட்ட பத்து // முறையிட்ட பத்து