திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
பிரியேன் என்றல்
piriyēṉ eṉṟal
அருட்பெருஞ்ஜோதி என் ஆண்டவர்
aruṭperuñjōti eṉ āṇṭavar
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

031. திருவருட் பேறு
tiruvaruṭ pēṟu

  எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  திருச்சிற்றம்பலம்
 • 1. படிகள்எலாம் ஏற்றுவித்தீர் பரமநடம் புரியும்
  பதியைஅடை வித்தீர்அப் பதிநடுவே விளங்கும்
  கொடிகள்நிறை மணிமாடக் கோயிலையும் காட்டிக்
  கொடுத்தீர்அக் கோயிலிலே கோபுரவா யிலிலே
  செடிகள்இலாத் திருக்கதவம் திறப்பித்துக் காட்டித்
  திரும்பவும்நீர் மூடுவித்தீர் திறந்திடுதல் வேண்டும்
  அடிகள்இது தருணம்இனி அரைக்கணமும் தரியேன்
  அம்பலத்தே நடம்புரிவீர் அளித்தருள்வீர் விரைந்தே.
 • 2. பெட்டிஇதில் உலவாத பெரும்பொருள்உண் டிதுநீ
  பெறுகஎன அதுதிறக்கும் பெருந்திறவுக் கோலும்
  எட்டிரண்டும் தெரியாதேன் என்கையிலே கொடுத்தீர்
  இதுதருணம் திறந்ததனை எடுக்கமுயல் கின்றேன்
  அட்டிசெய நினையாதீர் அரைக்கணமும் தரியேன்
  அரைக்கணத்துக் காயிரம்ஆ யிரங்கோடி ஆக
  வட்டிஇட்டு நும்மிடத்தே வாங்குவன்நும் ஆணை
  மணிமன்றில் நடம்புரிவீர் வந்தருள்வீர் விரைந்தே.
 • 3. கைக்கிசைந்த பொருள்எனக்கு வாய்க்கிசைந்துண் பதற்கே
  காலம்என்ன கணக்கென்ன கருதும்இடம் என்ன
  மெய்க்கிசைந்தன் றுரைத்ததுநீர் சத்தியம் சத்தியமே
  விடுவேனோ இன்றடியேன் விழற்கிறைத்தேன் அலவே
  செய்க்கிசைந்த சிவபோகம் விளைத்துணவே இறைத்தேன்
  தினந்தோறும் காத்திருந்தேன் திருவுளமே அறியும்
  மைக்கிசைந்த விழிஅம்மை சிவகாம வல்லி
  மகிழநடம் புரிகின்றீர் வந்தருள்வீர் விரைந்தே.
 • 4. பரிகலத்தே திருஅமுதம் படைத்துணவே பணித்தீர்
  பணித்தபின்னோ என்னுடைய பக்குவம்பார்க் கின்றீர்
  இருநிலத்தே பசித்தவர்க்குப் பசிநீக்க வல்லார்
  இவர்பெரியர் இவர்சிறியர் என்னல்வழக் கலவே
  உரிமையுற்றேன் உமக்கேஎன் உள்ளம்அன்றே அறிந்தீர்
  உடல்பொருள்ஆ விகளைஎலாம் உம்மதெனக் கொண்டீர்
  திரிவகத்தே நான்வருந்தப் பார்த்திருத்தல் அழகோ
  சிவகாம வல்லிமகிழ் திருநடநா யகரே.
 • 5. பொய்கொடுத்த மனமாயைச் சேற்றில்விழா தெனக்கே
  பொன்மணிமே டையில்ஏறிப் புந்திமகிழ்ந் திருக்கக்
  கைகொடுத்தீர் உலகம்எலாம் களிக்கஉல வாத
  கால்இரண்டும் கொடுத்தீர்எக் காலும்அழி யாத
  மெய்கொடுக்க வேண்டும்உமை விடமாட்டேன் கண்டீர்
  மேல்ஏறி னேன்இனிக்கீழ் விழைந்திறங்கேன் என்றும்
  மைகொடுத்த விழிஅம்மை சிவகாம வல்லி
  மகிழநடம் புரிகின்றீர் வந்தருள்வீர் விரைந்தே.
 • 6. மின்போலே வயங்குகின்ற விரிசடையீர் அடியேன்
  விளங்கும்உம திணைஅடிகள் மெய்அழுந்தப் பிடித்தேன்
  முன்போலே ஏமாந்து விடமாட்டேன் கண்டீர்
  முனிவறியீர் இனிஒளிக்க முடியாது நுமக்கே
  என்போலே இரக்கம்விட்டுப் பிடித்தவர்கள் இலையே
  என்பிடிக்குள் இசைந்ததுபோல் இசைந்ததிலை பிறர்க்கே
  பொன்போலே முயல்கின்ற மெய்த்தவர்க்கும் அரிதே
  பொய்தவனேன் செய்தவம்வான் வையகத்திற் பெரிதே.
 • 7. எதுதருணம் அதுதெரியேன் என்னினும்எம் மானே
  எல்லாஞ்செய் வல்லவனே என்தனிநா யகனே
  இதுதருணம் தவறும்எனில் என்உயிர்போய் விடும்இவ்
  வெளியேன்மேல் கருணைபுரிந் தெழுந்தருளல் வேண்டும்
  மதுதருண வாரிசமும் மலர்ந்ததருள் உதயம்
  வாய்த்ததுசிற் சபைவிளக்கம் வயங்குகின்ற துலகில்
  விதுதருண அமுதளித்தென் எண்ணம்எலாம் முடிக்கும்
  வேலைஇது காலைஎன விளம்பவும்வேண் டுவதோ.
 • 8. கோள்அறிந்த பெருந்தவர்தம் குறிப்பறிந்தே உதவும்
  கொடையாளா சிவகாமக் கொடிக்கிசைந்த கொழுநா
  ஆள்அறிந்திங் கெனைஆண்ட அரசேஎன் அமுதே
  அம்பலத்தே நடம்புரியும் அரும்பெருஞ்சோ தியனே
  தாள்அறிந்தேன் நின்வரவு சத்தியம்சத் தியமே
  சந்தேகம் இல்லைஅந்தத் தனித்ததிரு வரவின்
  நாள்அறிந்து கொளல்வேண்டும் நவிலுகநீ எனது
  நனவிடையா யினும்அன்றிக் கனவிடையா யினுமே.
 • 9. அன்றெனக்கு நீஉரைத்த தருணம்இது எனவே
  அறிந்திருக்கின் றேன்அடியேன் ஆயினும்என் மனந்தான்
  கன்றெனச்சென் றடிக்கடிஉட் கலங்குகின்ற252 தரசே
  கண்ணுடைய கரும்பேஎன் கவலைமனக் கலக்கம்
  பொன்றிடப்பே ரின்பவெள்ளம் பொங்கிடஇவ் வுலகில்
  புண்ணியர்கள் உளங்களிப்புப் பொருந்திவிளங் கிடநீ
  இன்றெனக்கு வெளிப்படஎன் இதயமலர் மிசைநின்
  றெழுந்தருளி அருள்வதெலாம் இனிதருள்க விரைந்தே.
 • 10. இதுதருணம் நமையாளற் கெழுந்தருளுந் தருணம்
  இனித்தடைஒன் றிலைகண்டாய் என்மனனே நீதான்
  மதுவிழுமோர் ஈப்போலே மயங்காதே கயங்கி
  வாடாதே மலங்காதே மலர்ந்துமகிழ்ந் திருப்பாய்
  குதுகலமே இதுதொடங்கிக் குறைவிலைகாண் நமது
  குருவாணை நமதுபெருங் குலதெய்வத் தாணை
  பொதுவில்நடம் புரிகின்ற புண்ணியனார் எனக்குள்
  புணர்ந்துரைத்த திருவார்த்தை பொன்வார்த்தை இதுவே.

  • 252. கலக்குகின்ற - ச. மு. க. பதிப்பு.
  • 253. மிசையின் - ச. மு. க. பதிப்பு.

திருவருட் பேறு // திருவருட் பேறு

No audios found!