திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
பேரானந்தப் பெருநிலை
pērāṉantap perunilai
இறைவனை ஏத்தும் இன்பம்
iṟaivaṉai ēttum iṉpam
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

048. ஆண்டருளிய அருமையை வியத்தல்
āṇṭaruḷiya arumaiyai viyattal

    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. அம்பலத் தாடும் அமுதமே என்கோ
    அடியனேன் ஆருயிர் என்கோ
    எம்பலத் தெல்லாம் வல்லசித் தென்கோ
    என்னிரு கண்மணி என்கோ
    நம்பிடில் அணைக்கும் நற்றுணை என்கோ
    நான்பெற்ற பெருஞ்செல்வம் என்கோ
    இம்பர்இப் பிறப்பே மெய்ப்பிறப் பாக்கி
    என்னைஆண் டருளிய நினையே.
  • 2. அம்மையே என்கோ அப்பனே என்கோ
    அருட்பெருஞ் சோதியே என்கோ
    செம்மையே எல்லாம் வல்லசித் தென்கோ
    திருச்சிற்றம் பலத்தமு தென்கோ
    தம்மையே உணர்ந்தார் உளத்தொளி என்கோ
    தமியனேன் தனித்துணை என்கோ
    இம்மையே அழியாத் திருஉரு அளித்திங்
    கென்னைஆண் டருளிய நினையே.
  • 3. எய்ப்பிலே கிடைத்த வைப்பது என்கோ
    என்னுயிர்க் கின்பமே என்கோ
    துய்ப்பிலே நிறைந்த பெருங்களிப் பென்கோ
    சோதியுட் சோதியே என்கோ
    தப்பெலாம் பொறுத்த தயாநிதி என்கோ
    தனிப்பெருந் தலைவனே என்கோ
    இப்பிறப் பதிலே மெய்ப்பயன் அளித்திங்
    கென்னைஆண் டருளிய நினையே.
  • 4. அச்சம்நீக் கியஎன் ஆரியன் என்கோ
    அம்பலத் தெம்பிரான் என்கோ
    நிச்சலும் எனக்கே கிடைத்தவாழ் வென்கோ
    நீடும்என் நேயனே என்கோ
    பிச்சனேற் களித்த பிச்சனே என்கோ
    பெரியரிற் பெரியனே என்கோ
    இச்சகத் தழியாப் பெருநலம் அழித்திங்
    கென்னைஆண் டருளிய நினையே.
  • 5. அத்தம்நேர் கிடைத்த சுவைக்கனி என்கோ
    அன்பிலே நிறைஅமு தென்கோ
    சித்தெலாம் வல்ல சித்தனே என்கோ
    திருச்சிற்றம் பலச்சிவம் என்கோ
    மத்தனேன் பெற்ற பெரியவாழ் வென்கோ
    மன்னும்என் வாழ்முதல் என்கோ
    இத்தனிப் பிறப்பை நித்தியம் ஆக்கி
    என்னைஆண் டருளிய நினையே.
  • 6. மறப்பெலாம் தவிர்த்த மதிஅமு தென்கோ
    மயக்கநீத் தருள்மருந் தென்கோ
    பறப்பெலாம் ஒழித்த பதிபதம் என்கோ
    பதச்சுவை அனுபவம் என்கோ
    சிறப்பெலாம் எனக்கே செய்ததாய் என்கோ
    திருச்சிற்றம் பலத்தந்தை என்கோ
    இறப்பிலா வடிவம் இம்மையே அளித்திங்
    கென்னைஆண் டருளிய நினையே.
  • 7. அன்பிலே பழுத்த தனிப்பழம் என்கோ
    அறிவிலே அறிவறி வென்கோ
    இன்பிலே நிறைந்த சிவபதம் என்கோ
    என்னுயிர்த் துணைப்பதி என்கோ
    வன்பிலா மனத்தே வயங்கொளி என்கோ
    மன்னும்அம் பலத்தர சென்கோ
    என்புரி அழியாப் பொன்புரி ஆக்கி
    என்னைஆண் டருளிய நினையே.
  • 8. தடையிலா தெடுத்த அருளமு தென்கோ
    சர்க்கரைக் கட்டியே என்கோ
    அடைவுறு வயிரக் கட்டியே என்கோ
    அம்பலத் தாணிப்பொன் என்கோ
    உடைய மாணிக்கப் பெருமலை என்கோ
    உள்ளொளிக் குள்ளொளி என்கோ
    இடைதல்அற் றோங்கும் திருஅளித் திங்கே
    என்னைஆண் டருளிய நினையே.
  • 9. மறைமுடி விளங்கு பெரும்பொருள் என்கோ
    மன்னும்ஆ கமப்பொருள் என்கோ
    குறைமுடித் தருள்செய் தெய்வமே என்கோ
    குணப்பெருங் குன்றமே என்கோ
    பிறைமுடிக் கணிந்த பெருந்தகை என்கோ
    பெரியஅம் பலத்தர சென்கோ
    இறைமுடிப் பொருள்என் உளம்பெற அளித்திங்
    கென்னைஆண் டருளிய நினையே.
  • 10. என்உளம் பிரியாப் பேரொளி என்கோ
    என்உயிர்த் தந்தையே என்கோ
    என்உயிர்த் தாயே இன்பமே என்கோ
    என்உயிர்த் தலைவனே என்கோ
    என்உயிர் வளர்க்கும் தனிஅமு தென்கோ
    என்னுடை நண்பனே என்கோ
    என்ஒரு275 வாழ்வின் தனிமுதல் என்கோ
    என்னைஆண் டருளிய நினையே.

    • 275. என்பெரு - பி. இரா. பதிப்பு.

ஆண்டருளிய அருமையை வியத்தல் // ஆண்டருளிய அருமையை வியத்தல்

No audios found!