திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
தலைவி தலைவன் செயலைத் தாய்க் குரைத்தல்
talaivi talaivaṉ seyalait tāyk kuraittal
நற்றாய் செவிலிக்குக் கூறல்
naṟṟāy sevilikkuk kūṟal
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

078. தலைவி வருந்தல்
talaivi varuntal

  எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  திருச்சிற்றம்பலம்
 • 1. பருவமிலாக் குறையாலோ பகுதிவகை யாலோ
  பழக்கமிலா மையினாலோ படிற்றுவினை யாலோ
  இருவகைமா யையினாலோ ஆணவத்தி னாலோ
  என்னாலோ பிறராலோ எதனாலோ அறியேன்
  சருவல்ஒழிந் தென்மனமாம் பாங்கிபகை யானாள்
  தனித்தபரை எனும்வளர்த்த தாயும்முகம் பாராள்
  நிருவமடப் பெண்களெலாம் வலதுகொழிக் கின்றார்
  நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே.
 • 2. அம்பலத்தே திருநடஞ்செய் அடிமலர்என் முடிமேல்
  அணிந்திடமுன் சிலசொன்னேன் அதனாலோ அன்றி
  எம்பலத்தே எம்மிறைவன் என்னைமணம் புரிவான்
  என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
  வம்பிசைத்தேன் எனஎனது பாங்கிபகை யானாள்
  வளர்த்தெடுத்த தனித்தாயும் மலர்ந்துமுகம் பாராள்
  நிம்பமரக் கனியானார் மற்றையர்கள் எல்லாம்
  நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே.
 • 3. கண்ணுறங்கேன் உறங்கினும்என் கணவரொடு கலக்கும்
  கனவன்றி இலைஎன்றேன் அதனாலோ அன்றி
  எண்ணுறங்கா நிலவில்அவர் இருக்குமிடம் புகுவேன்
  என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
  பெண்ணடங்காள் எனத்தோழி பேசிமுகங் கடுத்தாள்
  பெருந்தயவால் வளர்த்தவளும் வருந்தயலாள் ஆனாள்
  மண்ணடங்காப் பழிகூறி மற்றவர்கள் இருந்தார்
  வள்ளல்நட ராயர்திரு வுள்ளம்அறிந் திலனே.
 • 4. எல்லாஞ்செய் வல்லதுரை என்கணவர் என்றால்
  எனக்கும்ஒன்று நினக்கும்ஒன்றா என்றஅத னாலோ
  இல்லாமை எனக்கில்லை எல்லார்க்குந் தருவேன்
  என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
  கல்லார்போல் என்னைமுகம் கடுத்துநின்றாள் பாங்கி
  களித்தெடுத்து வளர்த்தவளும் கலந்தனள்அங் குடனே
  செல்லாமை சிலபுகன்று சிரிக்கின்றார் மடவார்
  சித்தர்நட ராயர்திருச் சித்தமறிந் திலனே.
 • 5. இச்சைஎலாம் வல்லதுரை என்னைமணம் புரிந்தார்
  ஏடிஎனக் கிணைஎவர்கள் என்றஅத னாலோ
  எச்சமயத் தேவரையும் இனிமதிக்க மாட்டேன்
  என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
  நச்சுமரக் கனிபோலே பாங்கிமனங் கசந்தாள்
  நயந்தெடுத்து வளர்த்தவளும் கயந்தெடுப்புப் புகன்றாள்
  அச்சமிலாள் இவள்என்றே அலர்உரைத்தார் மடவார்
  அண்ணல்நட ராயர்திரு எண்ணம்அறிந் திலனே.
 • 6. வஞ்சமிலாத் தலைவருக்கே மாலையிட்டேன் எல்லா
  வாழ்வும்என்றன் வாழ்வென்றேன் அதனாலோ அன்றி
  எஞ்சலுறேன் மற்றவர்போல் இறந்துபிறந் துழலேன்
  என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
  அஞ்சுமுகங் காட்டிநின்றாள் பாங்கிஎனை வளர்த்த
  அன்னையும்அப் படியாகி என்னைமுகம் பாராள்
  நெஞ்சுரத்த பெண்களெலாம் நீட்டிநகைக் கின்றார்
  நிருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.
 • 7. அன்னமுண அழைத்தனர்நான் ஆடும்மல ரடித்தேன்
  அருந்துகின்றேன் எனஉரைத்தேன் அதனாலோ அன்றி
  என்னுயிர்நா யகனொடுநான் அணையும்இடம் எங்கே
  என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
  துன்னுநெறிக் கொருதுணையாம் தோழிமனங் கசந்தாள்
  துணிந்தெடுத்து வளர்த்தவளும் சோர்ந்தமுகம் ஆனாள்
  நென்னல்ஒத்த பெண்களெலாங் கூடிநகைக் கின்றார்
  நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே.
 • 8. பொதுநடஞ்செய் துரைமுகத்தே தளதளஎன் றொளிரும்
  புன்னகைஎன் பொருள்என்றேன் அதனாலோ அன்றி
  இதுவரையும் வரக்காணேன் தடைசெய்தார் எவரோ
  எனப்புகன்றேன் இதனாலோ எதனாலோ அறியேன்
  புதுமுகங்கொண் டெனதுதனித் தோழிமனந் திரிந்தாள்
  புரிந்தெடுத்து வளர்த்தவளும் புதுமைசில புகன்றாள்
  மதுவுகந்து களித்தவர்போல் பெண்கள்நொடிக் கின்றார்
  வள்ளல்நட ராயர்திரு வுள்ளமறிந் திலனே.
 • 9. கண்கலந்த கள்வர்என்னைக் கைகலந்த தருணம்
  கரணம்அறிந் திலன்என்றேன் அதனாலோ அன்றி
  எண்கலந்த போகமெலாம் சிவபோகந் தனிலே
  இருந்ததென்றேன் இதனாலோ எதனாலோ அறியேன்
  விண்கலந்த மதிமுகந்தான் வேறுபட்டாள் பாங்கி
  வியந்தெடுத்து வளர்த்தவளும் வேறுசில புகன்றாள்
  பண்கலந்த மொழிமடவார் பழிகூற லானார்
  பத்தர்புகழ் நடராயர் சித்தம்அறிந் திலனே.
 • 10. மாடமிசை ஓங்குநிலா மண்டபத்தே மகிழ்ந்தேன்
  வள்ளலொடு நானென்றேன் அதனாலோ அன்றி
  ஈடறியாச் சுகம்புகல என்னாலே முடியா
  தென்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
  ஏடவிழ்பூங் குழற்கோதைத் தோழுமுகம் புலர்ந்தாள்
  எனைஎடுத்து வளர்த்தவளும் இரக்கமிலாள் ஆனாள்
  நாடறியப் பெண்களெலாங் கூடிநகைக் கின்றார்
  நல்லநட ராயர்கருத் தெல்லைஅறிந் திலனே.
 • 11. கற்பூரம் மணக்கின்ற தென்மேனி முழுதும்
  கணவர்மணம் அதுவென்றேன் அதனாலோ அன்றி
  இற்பூவை அறியுமடி நடந்தவண்ணம் எல்லாம்
  என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
  பொற்பூவின் முகம்வியர்த்தாள் பாங்கிஅவ ளுடனே
  புரிந்தெடுத்து வளர்த்தவளும் கரிந்தமுகம் படைத்தாள்
  சொற்பூவைத் தொடுக்கின்றார் கால்கள்களை யாதே
  துன்னுநட ராயர்கருத் தெல்லைஅறிந் திலனே.
 • 12. மன்னுதிருச் சபைநடுவே மணவாள ருடனே
  வழக்காடி வலதுபெற்றேன் என்றஅத னாலோ
  இன்னும்அவர் வதனஇள நகைகாணச் செல்வேன்
  என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
  மின்னும்இடைப் பாங்கிஒரு விதமாக நடந்தாள்
  மிகப்பரிவால் வளர்த்தவளும் வெய்துயிர்த்துப் போனாள்
  அன்னநடைப் பெண்களெலாம் சின்னமொழி புகன்றார்
  அத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.
 • 13. கள்ளுண்டாள் எனப்புகன்றீர் கனகசபை நடுவே
  கண்டதலால் உண்டதிலை என்றஅத னாலோ
  எள்ளுண்ட மற்றவர்போல் என்னைநினை யாதீர்
  என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
  உள்ளுண்ட மகிழ்ச்சிஎலாம் உவட்டிநின்றாள் பாங்கி
  உவந்துவளர்த் தவளும்என்பால் சிவந்தகண்ணள் ஆனாள்
  துள்ளுண்ட பெண்களெலாம் சூழ்ந்துநொடிக் கின்றார்
  சுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.
 • 14. காரிகையீர் எல்லீரும் காணவம்மின் எனது
  கணவர்அழ கினைஎன்றேன் அதனாலோ அன்றி
  ஏரிகவாத் திருவுருவை எழுதமுடி யாதே
  என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
  காரிகவாக் குழல்சோரக் கடுத்தெழுந்தாள் பாங்கி
  கண்பொறுத்து வளர்த்தவளும் புண்பொறுத்தாள் உளத்தே
  நேரிகவாப் பெண்கள்மொழிப் போர்இகவா தெடுத்தார்
  நிருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.
 • 15. கண்ணேறு படும்எனநான் அஞ்சுகின்றேன் எனது
  கணவர்வடி வதுகாணற் கென்றஅத னாலோ
  எண்ணாத மனத்தவர்கள் காணவிழை கின்றார்
  என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
  நண்ணாரில் கடுத்தமுகம் தோழிபெற்றாள் அவளை
  நல்கிஎனை வளர்த்தவளும் மல்கியவன் படுத்தாள்
  பெண்ணாயம் பலபலவும் பேசுகின்றார் இங்கே
  பெரியநட ராயர்உள்ளப் பிரியம்அறிந் திலனே.
 • 16. கற்பூரம் கொணர்ந்துவம்மின் என்கணவர் வந்தால்
  கண்ணெச்சில் கழிக்கஎன்றேன் அதனாலோ அன்றி
  எற்பூத நிலையவர்தம் திருவடித்தா மரைக்கீழ்
  என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
  வற்பூத வனம்போன்றாள் பாங்கியவள் தனைமுன்
  மகிழ்ந்துபெற்றிங் கெனைவளர்த்தாள் வினைவளர்த்தாள் ஆனாள்
  விற்பூஒள் நுதல்மடவார் சொற்போர்செய் கின்றார்
  விண்ணிலவு நடராயர் எண்ணம்அறிந் திலனே.
 • 17. மனைஅணைந்த மலரணைமேல் எனைஅணைந்த போது
  வடிவுசுக வடிவானேன் என்றஅத னாலோ
  இனைவறியேன் முன்புரிந்த பெருந்தவம்என் புகல்வேன்
  என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
  புனைமுகம்ஓர் கரிமுகமாய்ப் பொங்கிநின்றாள் பாங்கி
  புழுங்குமனத் தவளாகி அழுங்குகின்றாள் செவிலி
  பனையுலர்ந்த ஓலைஎனப் பெண்கள்ஒலிக் கின்றார்
  பண்ணவர்என் நடராயர் எண்ணம்அறிந் திலனே.
 • 18. தாழ்குழலீர் எனைச்சற்றே தனிக்கவிட்டால் எனது
  தலைவரைக்காண் குவல்என்றேன் அதனாலோ அன்றி
  ஏழ்கடலிற் பெரிதன்றோ நான்பெற்ற இன்பம்
  என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
  கூழ்கொதிப்ப தெனக்கொதித்தாள் பாங்கிஎனை வளர்த்த
  கோதைமருண் டாடுகின்ற பேதைஎனல் ஆனாள்
  சூழ்மடந்தை மார்களெலாம் தூற்றிநகைக் கின்றார்
  சுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.
 • 19. தனித்தலைவர் வருகின்ற தருணம்இது மடவீர்
  தனிக்கஎனை விடுமின்என்றேன் அதனாலோ அன்றி
  இனித்தசுவை எல்லாம்என் கணவர்அடிச் சுவையே
  என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
  பனித்தகுளிர் காலத்தே சனித்தசலம் போன்றாள்
  பாங்கிஎனை வளர்த்தவளும் தூங்குமுகங் கொண்டாள்
  கனித்தபழம் விடுத்துமின்னார் காய்தின்னு கின்றார்
  கருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.
 • 20. அரும்பொன்அனை யார்எனது துரைவரும்ஓர் சமயம்
  அகலநின்மின் அணங்கனையீர் என்றஅத னாலோ
  இரும்புமணம் ஆனாலும் இளகிவிடுங் கண்டால்
  என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
  கரும்பனையாள் பாங்கியும்நாய்க் கடுகனையாள் ஆனாள்
  களித்தென்னை வளர்த்தவளும் புளித்தின்றாள் ஒத்தாள்
  விரும்புகின்ற பெண்களெலாம் அரும்புகின்றார் அலர்தான்
  வித்தகர்என் நடராயர் சித்தம்அறிந் திலனே.
 • 21. மணவாளர் வருகின்ற தருணம்இது மடவீர்
  மறைந்திருமின் நீவிர்என்றேன் அதனாலோ அன்றி
  எணமேது நுமக்கெனைத்தான் யார்தடுக்கக் கூடும்
  என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
  குணநீடு பாங்கிஅவள் எம்மிறையை நினையார்
  குணங்கொண்டாள் வளர்த்தவளும் பணம்விண்டாள் ஆனாள்
  மணநீடு குழன்மடவார் குணநீடு கின்றார்
  வள்ளல்நட ராயர்திரு வுள்ளம்அறிந் திலனே.
 • 22. பதிவரும்ஓர் தருணம்இது நீவிர்அவர் வடிவைப்
  பார்ப்பதற்குத் தரமில்லீர் என்றஅத னாலோ
  எதிலும்எனக் கிச்சைஇல்லை அவரடிக்கண் அல்லால்
  என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
  மதிமுகத்தாள் பாங்கிஒரு விதிமுகத்தாள் ஆனாள்
  மகிழ்ந்தென்னை வளர்த்தவளும் இகழ்ந்துபல புகன்றாள்
  துதிசெய்மட மாதர்எலாம் சதிசெய்வார் ஆனார்
  சுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.
 • 23. மன்றாடுங் கணவர்திரு வார்த்தைஅன்றி உமது
  வார்த்தைஎன்றன் செவிக்கேறா தென்றஅத னாலோ
  இன்றாவி அன்னவர்க்குத் தனித்தஇடங் காணேன்
  என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
  முன்றானை அவிழ்ந்துவிழ முடுகிநடக் கின்றாள்
  முதற்பாங்கி வளர்த்தவளும் மதர்ப்புடன்செல் கின்றாள்
  ஒன்றாத மனப்பெண்கள் வென்றாரின் அடுத்தார்
  ஒருத்தநட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.
 • 24. கூடியஎன் கணவர்எனைக் கூடாமற் கலைக்கக்
  கூடுவதோ நும்மாலே என்றஅத னாலோ
  ஏடிஎனை அறியாரோ சபைக்குவரு வாரோ
  என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
  நாடியஎன் பாங்கிமன மூடிநின்று போனாள்
  நண்ணிஎனை வளர்த்தவளும் எண்ணியவா றிசைத்தாள்
  தேடியஆ யங்களெலாம் கூடிஉரைக் கின்றார்
  திருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.

தலைவி வருந்தல் // தலைவி வருந்தல்

No audios found!