திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
மெய்யருள் வியப்பு
meyyaruḷ viyappu
அம்பலவாணர் அணையவருகை
ampalavāṇar aṇaiyavarukai
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

113. அம்பலவாணர் வருகை
ampalavāṇar varukai

  சிந்து
  திருச்சிற்றம்பலம்
  பல்லவி
 • 1. வாரீர் சிதம்பர வல்லி சிவகாம
  வல்லி மணாளரே வாரீர்
  மணிமன்ற வாணரே வாரீர்.
 • கண்ணிகள்
 • 2. அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ ரேதிரு
  அம்பல வாணரே வாரீர்
  அன்புடை யாளரே வாரீர். வாரீர்
 • 3. அச்சம் தவிர்த்தென்னை ஆட்கொண் டருளிய
  அந்தண ரேஇங்கு வாரீர்
  அம்பலத் தையரே வாரீர். வாரீர்
 • 4. அன்புரு வானவர் இன்புற உள்ளே
  அறிவுரு வாயினீர் வாரீர்
  அருட்பெருஞ் ஜோதியீர் வாரீர். வாரீர்
 • 5. அண்டங்கள் எல்லாம் அணுவில் அடக்கும்
  அரும்பெருஞ் சித்தரே வாரீர்
  அற்புத ரேஇங்கு வாரீர். வாரீர்
 • 6. அம்மையு மாய்எனக் கப்பனு மாகிஎன்
  அன்பனு மாயினீர் வாரீர்
  அங்கண ரேஇங்கு வாரீர். வாரீர்
 • 7. அல்லல் அறுத்தென் அறிவை விளக்கிய
  அம்பல வாணரே வாரீர்
  அங்கண ரேஇங்கு வாரீர். வாரீர்
 • 8. அப்பணி பொன்முடி அப்பனென் றேத்துமெய்
  அன்பருக் கன்பரே வாரீர்
  இன்பம் தரஇங்கு வாரீர். வாரீர்
 • 9. அச்சுதர் நான்முகர் உச்சியில் மெச்சும்
  அடிக்கம லத்தீரே வாரீர்
  நடிக்கவல் லீர்இங்கு வாரீர். வாரீர்
 • 10. அண்டர்க் கரும்பதந் தொண்டர்க் கெளிதில்
  அளித்திட வல்லீரே வாரீர்
  களித்தென்னை ஆண்டீரே வாரீர். வாரீர்
 • 11. அம்பர மானசி தம்பர நாடகம்
  ஆடவல் லீர்இங்கு வாரீர்
  பாடல்உ வந்தீரே298 வாரீர். வாரீர்
 • 12. ஆதிஅ னாதிஎன் றாரணம் போற்றும்
  அரும்பெருஞ் ஜோதியீர் வாரீர்
  ஆனந்த நாடரே வாரீர். வாரீர்
 • 13. ஆகம வேதம் அனேக முகங்கொண்
  டருச்சிக்கும் பாதரே வாரீர்
  ஆருயிர் நாதரே வாரீர். வாரீர்
 • 14. ஆசறும் அந்தங்கள் ஆறும் புகன்றநல்
  ஆரிய ரேஇங்கு வாரீர்
  ஆனந்தக் கூத்தரே வாரீர். வாரீர்
 • 15. ஆல நிழற்கண் அமர்ந்தறஞ் சொன்னநல்
  ஆரிய ரேஇங்கு வாரீர்
  ஆனந்தக் கூத்தரே வாரீர். வாரீர்
 • 16. ஆரமு தாகிஎன் ஆவியைக் காக்கின்ற
  ஆனந்த ரேஇங்கு வாரீர்
  ஆடல்வல் லீர்இங்கு வாரீர். வாரீர்
 • 17. ஆதர வாய்என் அறிவைத் தெளிவித்
  தமுதம் அளித்தீரே வாரீர்
  ஆடிய பாதரே வாரீர். வாரீர்
 • 18. ஆதார மீதானத் தப்பாலும் காண்டற்
  கரும்பெருஞ் ஜோதியீர் வாரீர்
  கரும்பினில் இனிக்கின்றீர் வாரீர். வாரீர்
 • 19. ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
  ஜோதிய ரேஇங்கு வாரீர்
  வேதிய ரேஇங்கு வாரீர். வாரீர்
 • 20. ஆடல்கொண் டீர்திரு வம்பலத் தேஎன்றன்
  பாடல்கொண் டீர்இங்கு வாரீர்
  கூடவல் லீர்இங்கு வாரீர். வாரீர்
 • 21. ஆக்கம் கொடுத்தென்றன் தூக்கம் தடுத்தஎன்
  ஆண்டவ ரேஇங்கு வாரீர்
  தாண்டவ ரேஇங்கு வாரீர். வாரீர்
 • 22. ஆபத்தை நீக்கிஓர் தீபத்தை ஏற்றிஎன்
  ஆணவம் போக்கினீர் வாரீர்
  காணவந் தேன்இங்கு வாரீர். வாரீர்
 • 23. இதுதரு ணம்தரு ணம்தரு ணம்என்
  இறையவ ரேஇங்கு வாரீர்
  காணவந் தேன்இங்கு வாரீர். வாரீர்
 • 24. இச்சையின் வண்ணம் எனக்கருள் செய்ய
  இதுதரு ணம்இங்கு வாரீர்
  இன்னமு தாயினீர் வாரீர். வாரீர்
 • 25. இன்பம் கொடுத்தேஎன் துன்பம் கெடுத்துள்
  இருக்கின்ற நாதரே வாரீர்
  இருக்கின் பொருளானீர் வாரீர். வாரீர்
 • 26. இரவும் பகலும் இதயத்தி லூறி
  இனிக்கும் அமுதரே வாரீர்
  இனித்தரி யேன்இங்கு வாரீர். வாரீர்
 • 27. இன்னும்தாழ்த் தங்கே இருப்ப தழகன்று
  இதுதரு ணம்இங்கு வாரீர்
  இருமையும் ஆயினீர் வாரீர். வாரீர்
 • 28. இடர்தவிர்த் தின்பம் எனக்களித் தாளற்
  கிதுதரு ணம்இங்கு வாரீர்
  இனியவ ரேஇங்கு வாரீர். வாரீர்
 • 29. இறையும் பொறுப்பரி தென்னுயிர் நாதரே
  இத்தரு ணம்இங்கு வாரீர்
  இதநடஞ் செய்கின்றீர் வாரீர். வாரீர்
 • 30. இம்மையி லேஎனக் கம்மையின் இன்பம்
  இதுஎன் றளித்தீரே வாரீர்
  இதயத் திருந்தீரே வாரீர். வாரீர்
 • 31. இங்கங்கென் னாமலே எள்ளுக்குள் எண்ணெய்போல்
  எங்கும் நிறைந்தீரே வாரீர்
  இந்தெழில் வண்ணரே வாரீர். வாரீர்
 • 32. இணைஒன்றும் இல்லா இணையடி என்தலை
  ஏறவைத் தீர்இங்கு வாரீர்
  இறுதியி லீர்இங்கு வாரீர். வாரீர்
 • 33. ஈன்றாளும் எந்தையும் என்குரு வும்எனக்
  கின்பமும் ஆயினீர் வாரீர்
  அன்பருக் கன்பரே வாரீர். வாரீர்
 • 34. ஈனம் அறுத்துமெய்ஞ் ஞான விளக்கென்
  இதயத்தில் ஏற்றினீர் வாரீர்
  உதயச் சுடரினீர் வாரீர். வாரீர்
 • 35. ஈடறி யாதமெய் வீடுதந் தன்பரை
  இன்புறச் செய்கின்றீர் வாரீர்
  வன்பர்க் கரியீரே வாரீர். வாரீர்
 • 36. ஈதியல் என்றுநின் றோதிய வேதத்திற்
  கெட்டா திருந்தீரே வாரீர்
  நட்டார்க் கெளியீரே வாரீர். வாரீர்
 • 37. ஈசர் எனும்பல தேசர்கள் போற்றும்ந
  டேசரே நீர்இங்கு வாரீர்
  நேசரே நீர்இங்கு வாரீர். வாரீர்
 • 38. ஈசர் பலிக்குழல்299 நேசர்என் றன்பர்கள்
  ஏசநின் றீர்இங்கு வாரீர்
  நாசமில் லீர்இங்கு வாரீர். வாரீர்
 • 39. ஈறறி யாமறை யோன்என் றறிஞர்
  இயம்பநின் றீர்இங்கு வாரீர்
  வயந்தரு வீர்இங்கு வாரீர் வாரீர்
 • 40. ஈதல்கண் டேமிகக் காதல்கொண் டேன்எனக்
  கீதல்செய் வீர்இங்கு வாரீர்
  ஓதரி யீர்இங்கு வாரீர். வாரீர்
 • 41. ஈடணை அற்றநெஞ் சூடணை உற்றுமற்
  றீடணை யீர்இங்கு வாரீர்
  ஆடவல் லீர்இங்கு வாரீர். வாரீர்
 • 42. ஈண்டறி வோங்கிடத் தூண்டறி வாகிஉள்
  ஈண்டுகின் றீர்இங்கு வாரீர்
  ஆண்டவ ரேஇங்கு வாரீர். வாரீர்
 • 43. உள்ளதே உள்ளது விள்ளது வென்றெனக்
  குள்ள துரைசெய்தீர் வாரீர்
  வள்ளல் விரைந்திங்கு வாரீர். வாரீர்
 • 44. உருவாய் அருவாய் உருவரு வாய்அவை
  ஒன்றுமல் லீர்இங்கு வாரீர்
  என்றும்நல் லீர்இங்கு வாரீர். வாரீர்
 • 45. உறவும் பகையும் உடைய நடையில்
  உறவும்எண் ணேன்இங்கு வாரீர்
  பிறவுநண் ணேன்இங்கு வாரீர். வாரீர்
 • 46. உள்ளக் கருத்தைநான் வள்ளற் குரைப்பதென்
  உள்ளத் திருந்தீரே வாரீர்
  விள்ளற் கரியீரே வாரீர். வாரீர்
 • 47. உய்யவல் லார்க்கருள் செய்யவல் லீர்நானும்
  உய்யவல் லேன்இங்கு வாரீர்
  செய்யவல் லீர்இங்கு வாரீர். வாரீர்
 • 48. உடையவ ரார்இக் கடையவ னேனுக்
  குடையவ ரேஇங்கு வாரீர்
  சடையவ ரே300 இங்கு வாரீர். வாரீர்
 • 49. உறங்கி இறங்கும் உலகவர் போலநான்
  உறங்கமாட் டேன்இங்கு வாரீர்
  இறங்கமாட் டேன்இங்கு வாரீர். வாரீர்
 • 50. உண்டுடுத் தின்னும் உழலமாட் டேன்அமு
  துண்டி விரும்பினேன் வாரீர்
  உண்டி தரஇங்கு வாரீர். வாரீர்
 • 51. உன்னுதோ றுன்னுதோ றுள்ளே இனிக்கின்ற
  உத்தம ரேஇங்கு வாரீர்
  உற்ற துணையானீர் வாரீர். வாரீர்
 • 52. உம்மாணை உம்மாணை உம்மைஅல் லால்எனக்
  குற்றவர் மற்றிலை வாரீர்
  உற்றறிந் தீர்இங்கு வாரீர். வாரீர்
 • 53. ஊன நடந்தவிர்த் தான நடங்காட்டு
  மோன நடேசரே வாரீர்
  ஞான நடேசரே வாரீர். வாரீர்
 • 54. ஊருமில் லீர்ஒரு பேருமில் லீர்அறி
  வோருமில் லீர்இங்கு வாரீர்
  யாருமில் லீர்இங்கு வாரீர். வாரீர்
 • 55. ஊறு சிவானந்தப் பேறு தருகின்ற
  வீறுடை யீர்இங்கு வாரீர்
  நீறுடை யீர்இங்கு வாரீர். வாரீர்
 • 56. ஊன்றுநும் சேவடி சான்று தரிக்கிலேன்
  ஏன்றுகொள் வீர்இங்கு வாரீர்
  ஆன்றவ ரேஇங்கு வாரீர். வாரீர்
 • 57. ஊற்றை உடம்பிது மாற்றுயர் பொன்னென
  ஏற்றம் அருள்செய்வீர் வாரீர்
  தேற்றம் அருள்செய்வீர் வாரீர். வாரீர்
 • 58. ஊடல்இல் லீர்எனைக் கூடல்வல் லீர்என்னுள்
  பாடல்சொல் வீர்இங்கு வாரீர்
  ஆடல்நல் லீர்இங்கு வாரீர். வாரீர்
 • 59. ஊக்கம் கொடுத்தென்றன் ஏக்கம் கெடுத்தருள்
  ஆக்க மடுத்தீரே வாரீர்
  தூக்கம் தவிர்த்தீரே வாரீர். வாரீர்
 • 60. ஊமை எழுத்தினுள் ஆமை எழுத்துண்டென்
  றோமை அறிவித்தீர் வாரீர்
  சேமஞ் செறிவித்தீர் வாரீர். வாரீர்
 • 61. ஊக மிலேன்பெற்ற தேகம் அழியாத
  யோகம் கொடுத்தீரே வாரீர்
  போகம் கொடுத்தீரே வாரீர். வாரீர்
 • 62. ஊதியம் தந்தநல் வேதிய ரேஉண்மை
  ஓதிய நாதரே வாரீர்
  ஆதிஅ னாதியீர் வாரீர். வாரீர்
 • 63. என்குறை தீர்த்தென்னுள் நன்குறை வீர்இனி
  என்குறை என்முன்னீர் வாரீர்
  தன்குறை இல்லீரே வாரீர். வாரீர்
 • 64. என்னுயிர் ஆகிஎன் றன்உயிர்க் குள்ளேஓர்
  இன்னுயிர் ஆயினீர் வாரீர்
  என்னுயிர் நாதரே வாரீர். வாரீர்
 • 65. என்கண் அருள்செய்தென் புன்கண் விலக்கிய
  என்கண் ணனையீரே வாரீர்
  என்கண் ணுதலீரே வாரீர். வாரீர்
 • 66. எல்லா உயிர்களும் நல்லார் எனத்தொழும்
  எல்லாம்வல் லீர்இங்கு வாரீர்
  சொல்லா நிலையினீர் வாரீர். வாரீர்
 • 67. எட்டும் இரண்டுமென் றிட்டு வழங்குதல்
  எட்டும் படிசெய்தீர் வாரீர்
  எட்டுரு வாயினீர் வாரீர்.301 வாரீர்
 • 68. என்று கண்டாய்இது302 நன்றுகொண் டாளுக
  என்றுதந் தீர்இங்கு வாரீர்
  அன்றுவந் தீர்இன்று வாரீர். வாரீர்
 • 69. எச்சம யங்களும் பொய்ச்சம யமென்றீர்
  இச்சம யம்இங்கு வாரீர்
  மெய்ச்சம யந்தந்தீர் வாரீர். வாரீர்
 • 70. என்பாற் களிப்பொடும் அன்பால்ஒன் றீந்திதை
  இன்பால் பெறுகின்றீர் வாரீர்
  தென்பால் முகங்கொண்டீர் வாரீர். வாரீர்
 • 71. எச்ச உரையன்றென் இச்சைஎல் லாம்உம
  திச்சைகண் டீர்இங்கு வாரீர்
  அச்சம்த விர்த்தீரே வாரீர். வாரீர்
 • 72. எண்ணமெல் லாம்உம தெண்ணமல் லால்வேறோர்
  எண்ணம் எனக்கில்லை வாரீர்
  வண்ணம் அளிக்கின்றீர் வாரீர். வாரீர்
 • 73. ஏராய நான்முகர் நாராய ணர்மற்றும்
  பாராய ணம்செய்வீர் வாரீர்
  ஊராயம் ஆயினீர் வாரீர். வாரீர்
 • 74. ஏம மிகுந்திரு வாம சுகந்தரும்
  ஏம சபேசரே வாரீர்
  சோம சிகாமணி வாரீர். வாரீர்
 • 75. ஏத மிலாப்பர நாத முடிப்பொருள்
  ஏதது சொல்லுவீர் வாரீர்
  ஈதல் உடையீரே வாரீர். வாரீர்
 • 76. ஏக பராபர யோக வெளிக்கப்பால்
  ஏக வெளிநின்றீர் வாரீர்
  ஏகர் அனேகரே வாரீர். வாரீர்
 • 77. ஏறி இறங்கி இருந்தேன் இறங்காமல்
  ஏறவைத் தீர்இங்கு வாரீர்
  தேறவைத் தீர்இங்கு வாரீர். வாரீர்
 • 78. ஏகாந்த நன்னிலை யோகாந்தத் துள்ளதென்
  றேகாந்தம் சொல்லினீர் வாரீர்
  தேகாந்தம் இல்லீரே வாரீர். வாரீர்
 • 79. ஏகாத கல்விதான் சாகாத கல்வியென்
  றேகாத லாற்சொன்னீர் வாரீர்
  வேகாத காலினீர் வாரீர். வாரீர்
 • 80. ஏடா யிரமென்னை கோடா மொழிஒன்றே
  ஏடாஎன் றீர்இங்கு வாரீர்
  ஈடாவார் இல்லீரே வாரீர். வாரீர்
 • 81. ஏசாத தந்திரம் பேசாத மந்திரம்
  ஈசான மேலென்றீர் வாரீர்
  ஆசாதி இல்லீரே வாரீர். வாரீர்
 • 82. ஏனென்பார் வேறிலை நான்அன்பாற் கூவுகின்
  றேன்என்பால் ஏனென்பீர் வாரீர்
  ஆனின்பால் ஆடுவீர் வாரீர். வாரீர்
 • 83. ஐந்து மலங்களும் வெந்து விழஎழுத்
  தைந்துஞ் செயும்என்றீர் வாரீர்
  இந்து சிகாமணி வாரீர். வாரீர்
 • 84. ஐயமுற் றேனைஇவ் வையங் கரியாக
  ஐயம் தவிர்த்தீரே வாரீர்
  மெய்யம் பலத்தீரே வாரீர். வாரீர்
 • 85. ஐயர் நடம்புரி மெய்யர்என் றேஉணர்ந்
  தையர் தொழநின்றீர் வாரீர்
  துய்யர் உளநின்றீர் வாரீர். வாரீர்
 • 86. ஐவணங் காட்டுநும் மெய்வணம் வேட்டுநின்
  றைவணர் ஏத்துவீர் வாரீர்
  பொய்வணம் போக்குவீர் வாரீர். வாரீர்
 • 87. ஒன்றே சிவம்அதை ஒன்றுசன் மார்க்கமும்
  ஒன்றேஎன் றீர்இங்கு வாரீர்
  நன்றேநின் றீர்இங்கு வாரீர். வாரீர்
 • 88. ஒப்பாரில் லீர்உமக் கிப்பாரில் பிள்ளைநான்
  ஒப்பாரி அல்லகாண் வாரீர்
  முப்பாழ் கடந்தீரே வாரீர். வாரீர்
 • 89. ஒத்த இடந்தன்னில் நித்திரை செய்என்றீர்
  ஒத்த இடங்காட்ட வாரீர்
  சித்த சிகாமணி வாரீர். வாரீர்
 • 90. ஒட்டுமற் றில்லைநான் விட்டுப் பிரிகலேன்
  ஒட்டுவைத் தேனும்மேல் வாரீர்
  எட்டுக் குணத்தீரே வாரீர். வாரீர்
 • 91. ஒருமை நிலையில் இருமையும் தந்த
  ஒருமையி னீர்இங்கு வாரீர்
  பெருமையி னீர்இங்கு வாரீர். வாரீர்
 • 92. ஒண்மை விரும்பினேன் அண்மையில் ஈகுவீர்
  உண்மைசொன் னேன்இங்கு வாரீர்
  பெண்மை304 இடங்கொண்டீர் வாரீர். வாரீர்
 • 93. ஓங்கார நாடகம் பாங்காகச்305 செய்கின்ற
  ஓங்கார நாடரே வாரீர்
  ஆங்கார நீக்கினீர் வாரீர். வாரீர்
 • 94. ஓங்கும்பிண் டாண்டங்கள் தாங்கும் பெருவெளி
  ஓங்கு நடேசரே வாரீர்
  பாங்குசெய் வீர்இங்கு வாரீர். வாரீர்
 • 95. ஓசையின் உள்ளேஓர் ஆசை306 உதிக்கமெல்
  ஓசைசெய் வித்தீரே வாரீர்
  பாசம் அறுத்தீரே வாரீர். வாரீர்
 • 96. ஓரா துலகினைப் பாரா திருநினக்
  கோரா வகைஎன்றீர் வாரீர்
  பேரா நிலைதந்தீர் வாரீர். வாரீர்
 • 97. ஓடாது மாயையை நாடாது நன்னெறி
  ஊடா திருஎன்றீர் வாரீர்
  வாடா திருஎன்றீர் வாரீர். வாரீர்
 • 98. ஓலக் கபாடத்தைச் சாலத் திறந்தருள்
  ஓலக்கங் காட்டினீர் வாரீர்
  காலக் கணக்கில்லீர் வாரீர். வாரீர்
 • 99. ஓடத்தின் நின்றொரு மாடத்தில் ஏற்றிமெய்
  யூடத்தைக் காட்டினீர் வாரீர்
  வேடத்தைப் பூட்டினீர் வாரீர். வாரீர்
 • 100. ஓமத்தி லேநடுச் சாமத்தி லேஎனை
  ஓமத்தன்308 ஆக்கினீர் வாரீர்
  சாமத்த309 நீக்கினீர் வாரீர். வாரீர்
 • 101. ஓமென்ப தற்குமுன் ஆமென் றுரைத்துடன்
  ஊமென்று310 காட்டினீர் வாரீர்
  நாமென்று நாட்டினீர் வாரீர். வாரீர்
 • 102. ஔவிய மார்க்கத்தின் வெவ்வியல் நீக்கியே
  செவ்வியன் ஆக்கினீர் வாரீர்
  ஒவ்விஒன் றாக்கினீர் வாரீர். வாரீர்
 • 103. கண்ணனை யீர்உம்மைக் காணஎன் ஆசை
  கடல்பொங்கு கின்றது வாரீர்
  உடல்தங்கு கின்றது வாரீர். வாரீர்
 • 104. கண்டணைந் தால்அன்றிக் காதல் அடங்காதென்
  கண்மணி யீர்இங்கு வாரீர்
  உண்மணி யீர்இங்கு வாரீர். வாரீர்
 • 105. கட்டிக்கொண் டும்மைக் கலந்து கொளல்வேண்டும்
  காரண ரேஇங்கு வாரீர்
  பூரண ரேஇங்கு வாரீர். வாரீர்
 • 106. வாரீர் சிதம்பர வல்லி சிவகாம
  வல்லி மணாளரே வாரீர்
  மணிமன்ற வாணரே வாரீர்.

  • 298. பாடவல்லீரிங்கு - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.
  • 299. ஈசர் எளியற்கு - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா,
  • 300. தடை தவிர்ப்பீர் - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா.
  • 301. எட்டும் இரண்டும் - பத்து (ய). ய - ஆன்மா. எட்டுரு - அஷ்டமூர்த்தம்எட்டுஉரு - (எட்டு தமிழில் எழுத 'அ' ஆகும்) அகரவடிவம். எட்டுரு - அரு. ச. மு. க.
  • 302. கண்டாமிது - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா.
  • 303. 'ஒத்த இடத்தில் நித்திரை செய்' என்பது ஔவையார் அருளிய கொன்றை வேந்தன்.'ஒத்த இடம் - மேடுபள்ளமில்லாத இடம், மனம் ஒத்த இடம், நினைப்பு மறப்பு அற்றஇடம், தனித்த இடம், தத்துவாதீதநிலை,' என்பது ச. மு. க. குறிப்பு.இருவினையும் ஒத்த இடம், இருவினைஒப்புநிலை என்பதே பொருத்தமாம்.
  • 304. வண்மை - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா.,
  • 305. பாங்காரச் - பி. இரா.
  • 306. ஓசை - பிரதிபேதம். ஆ. பா. 307. மேல் - முதற்பதிப்பு., பொ. சு. பி. இரா.
  • 308. ஓமத்தன் - உருவருவ வடிவம்., பிரணவதேகம். ச. மு. க.
  • 309. சாமத்தை - பொ. சு., ச. மு. க; சாமத்தை - சாகுந்தன்மையை., ச. மு. க.
  • 310. ஓம் - ஆம் - ஊம் - ஓம் ஹாம் ஹும். பீஜாக்கரங்கள்.

அம்பலவாணர் வருகை // அம்பலவாணர் வருகை