திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
திருநடப் புகழ்ச்சி
tirunaṭap pukaḻchsi
பொதுநடம்
potunaṭam
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

051. பெறாப் பேறு
peṟāp pēṟu

    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. ஆவாஎன் றெனையாட்கொண் டருளியதெள் ளமுதே
    அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
    சாவாத வரம்எனக்குத் தந்தபெருந் தகையே
    தயாநிதியே சிற்சபையில் தனித்தபெரும் பதியே
    ஓவாதென் உள்ளகத்தே ஊற்றெழும்பே ரன்பே
    உள்ளபடி என்னறிவில் உள்ளபெருஞ் சுகமே
    நீவாஎன் மொழிகளெலாம் நிலைத்தபயன் பெறவே
    நித்திரைதீர்ந் தேன்இரவு நீங்கிவிடிந் ததுவே
  • 2. ஆராலும் அறிந்துகொளற் கரியபெரும் பொருளே
    அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
    காராலும் கனலாலும் காற்றாலும் ககனக்
    கலையாலும் கதிராலும் கடலாலும் கடல்சூழ்
    பாராலும் படையாலும் பிறவாலும் தடுக்கப்
    படுதலிலாத் தனிவடிவம் எனக்களித்த பதியே
    சீராலும் குணத்தாலும் சிறந்தவர்சேர் ஞான
    சித்திபுரத் தமுதேஎன் நித்திரைதீர்ந் ததுவே.
  • 3. ஆதிஅந்தம் தோற்றாத அரும்பெருஞ்சோ தியனே
    அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
    ஓதிஎந்த வகையாலும் உணர்ந்துகொளற் கரிதாய்
    உள்ளபடி இயற்கையிலே உள்ளஒரு பொருளே
    ஊதியம்தந் தெனையாட்கொண் டுள்ளிடத்தும் புறத்தும்
    ஓவாமல் விளங்குகின்ற உடையவனே இந்தச்
    சாதிஇந்த மதம்எனும்வாய்ச் சழக்கைஎலாம் தவிர்த்த
    சத்தியனே உண்கின்றேன்354 சத்தியத்தெள் ளமுதே.
  • 4. அச்சமெலாம் தவிர்த்தருளி இச்சைஎலாம் அளித்த
    அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
    துச்சவுல காசாரத் துடுக்கனைத்தும் தவிர்த்தே
    சுத்தநெறி வழங்குவித்த சித்தசிகா மணியே
    உச்சநிலை நடுவிளங்கும் ஒருதலைமைப் பதியே
    உலகமெலாம் எடுத்திடினும் உலவாத நிதியே
    இச்சமயம் எழுந்தருளி இறவாத வரமும்
    எல்லாஞ்செய் வல்லசித்தின் இயற்கையுந்தந் தனையே.
  • 5. அன்புடைய என்னறிவே அருளுடைய பொருளே
    அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
    துன்புடைய உலகரெலாம் சுகமுடையார் ஆகத்
    துன்மார்க்கம் தவிர்த்தருளிச் சன்மார்க்கம் வழங்க
    இன்புடைய பேரருளிங் கெனைப்பொருள்செய் தளித்த
    என்அமுதே என்உறவே எனக்கினிய துணையே
    என்புடைநீ இருக்கின்றாய் உன்புடைநான் மகிழ்ந்தே
    இருக்கின்றேன் இவ்வொருமை யார்பெறுவார் ஈண்டே.
  • 6. அடுக்கியபே ரண்டமெலாம் அணுக்கள்என விரித்த
    அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
    நடுக்கியஎன் அச்சமெலாம் தவிர்த்தருளி அழியா
    ஞானஅமு தளித்துலகில் நாட்டியபே ரறிவே
    இடுக்கியகைப் பிள்ளைஎன இருந்தசிறி யேனுக்
    கெல்லாஞ்செய் வல்லசித்தி ஈந்தபெருந் தகையே
    முடுக்கியஅஞ் ஞானாந்த காரமெலாம் தவிர்த்து
    முத்தருளத் தேமுளைத்த சுத்தபரஞ் சுடரே.
  • 7. ஆங்காரம் தவிர்ந்தவருள் ஓங்காநின் றவனே
    அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
    ஓங்கார நிலைகாட்டி அதன்மேல்உற் றொளிரும்
    ஒருநிலையும் காட்டிஅப்பால் உயர்ந்ததனி நிலையில்
    பாங்காக ஏற்றி320 எந்தப் பதத்தலைவ ராலும்
    படைக்கவொணாச் சித்தியைநான் படைக்கவைத்த பதியே
    தூங்காது பெருஞ்சுகமே சுகித்திடஇவ் வுலகைச்
    சுத்தசன்மார்க் கந்தனிலே வைத்தருள்க விரைந்தே.
  • 8. ஆடகப்பொற் சபைநடுவே நாடகஞ்செய் தருளும்
    அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
    ஏடகத்தே எழுதாத மறைகளெலாம் களித்தே
    என்உளத்தே எழுதுவித்த என்உரிமைப் பதியே
    பாடகக்கால் மடந்தையரும் மைந்தரும்சன் மார்க்கப்
    பயன்பெறநல் அருளளித்த பரம்பரனே மாயைக்
    காடகத்தை வளஞ்செறிந்த நாடகமாப் புரிந்த
    கருணையனே சிற்சபையில் கனிந்தநறுங் கனியே.
  • 9. அடியாதென் றறிந்துகொளற் கரும்பெரிய நிலையே
    அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
    முடியாதென் றறிந்திடற்கு முடியாதென் றுணர்ந்தோர்
    மொழிந்திடவே முடியாது முடிந்ததனி முடிபே
    கடியாத பெருங்கருணைக் கருத்தேஎன் கருத்தில்
    கனிந்துகனிந் தினிக்கின்ற கனியேஎன் களிப்பே
    மடியாத வடிவெனக்கு வழங்கியநல் வரமே
    மணிமன்றில் நடம்புரியும் வாழ்க்கை இயற் பொருளே.
  • 10. அனந்தமறை ஆகமங்கள் அளப்பரிய சிவமே
    அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
    மனந்தருவா தனைதவிர்த்தோர்321 அறிவினில்ஓர் அறிவாய்
    வயங்குகின்ற குருவேஎன் வாட்டமெலாம் தவிர்த்தே
    இனந்தழுவி என்னுளத்தே இருந்துயிரில் கலந்தென்
    எண்ணமெலாம் களித்தளித்த என்னுரிமைப் பதியே
    சினந்தவிர்ந்தெவ் வுலகமும்ஓர் சன்மார்க்கம் அடைந்தே
    சிறப்புறவைத் தருள்கின்ற சித்தசிகா மணியே.

    • 320. ஏத்தி - முதற்பதிப்பு., பொ. சு. பி. இரா, ச. மு. க.
    • 321. தவிர்ந்தோர் - பி. இரா. பதிப்பு.

பெறாப் பேறு // பெறாப் பேறு

No audios found!