திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
திருவடி நிலை
tiruvaṭi nilai
அருட்ஜோதி நிலை
aruṭjōti nilai
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

045. அச்சோப் பத்து
achsōp pattu

  அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  திருச்சிற்றம்பலம்
 • 1. கருத்தனைஎன் கண்மணியைக் கண்ணுதலைப்
  பெருங்கருணைக் கடலை வேதத்
  திருத்தனைஎன் சிவபதியைத் தீங்கனியைத்
  தெள்ளமுதத் தெளிவை வானில்
  ஒருத்தனைஎன் உயிர்த்துணையை உயிர்க்குயிரை
  உயிர்க்குணர்வை உணர்த்த னாதி
  அருத்தனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
  தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
 • 2. மெய்யனைஎன் துயர்தவிர்த்த விமலனைஎன்
  இதயத்தே விளங்கு கின்ற
  துய்யனைமெய்த் துணைவனைவான் துரியநிலைத்
  தலைவனைச்சிற் சுகந்தந் தானைச்
  செய்யனைவெண் நிறத்தனைஎன் சிவபதியை
  ஒன்றான தெய்வந் தன்னை
  அய்யனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
  தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
 • 3. எப்பொருளும் எவ்வுயிரும் எவ்வுலகும்
  விளங்கவிளக் கிடுவான் தன்னைச்
  செப்பரிய பெரியஒரு சிவபதியைச்
  சிவகதியைச் சிவபோ கத்தைத்
  துப்புரவு பெறஎனக்கே அருளமுதம்
  துணிந்தளித்த துணையை என்றன்
  அப்பனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
  தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
 • 4. பிறிவெனைத்துந் தோற்றாதென் உளங்கலந்த
  பெருந்தகைஎம் பெருமான் தன்னைச்
  செறிவனைத்தும் என்மனத்துக் களித்தெனக்குப்
  பெருங்களிப்புச் செய்தான் தன்னை
  முறிவெனைத்தும் இன்றிஅருள் அமுதுணவு
  கொடுத்தெனக்கு முன்னின் றானை
  அறிவனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
  தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
 • 5. பொன்புனைஉள் ளொளிக்கொளியைப் பூரணமாம்
  பெரும்பொருளைப் புனிதந் தன்னை
  என்பிழையைப் பொறுத்தெனையும் ஏன்றுகொண்ட
  பெருங்கருணை இயற்கை தன்னை
  இன்பினைஎன் இதயத்தே இருந்தருளும்
  பெருவாழ்வை என்னுள் ஓங்கும்
  அன்பினைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
  தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
 • 6. இத்தனைஎன் றிடமுடியாச் சத்திஎலாம்
  உடையானை எல்லாம் வல்ல
  சித்தனைஎன் சிவபதியைத் தெய்வமெலாம்
  விரித்தடக்கும் தெய்வந் தன்னை
  எத்தனையும் என்பிழைகள் பொறுத்ததனிப்
  பெருந்தாயை என்னை ஈன்ற
  அத்தனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
  தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
 • 7. எம்மையும்என் தனைப்பிரியா தென்னுளமே
  இடங்கொண்ட இறைவன் தன்னை
  இம்மையில்என் தனக்கழியாத் திருவடிவம்
  தந்தானை எல்லாம் வல்ல
  செம்மைதரு சித்தனைஎன் சிவபதியைத்
  தெள்ளமுதத் திரளை என்றன்
  அம்மையைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
  தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
 • 8. என்னையும்என் பொருளையும்என் ஆவியையும்
  தான்கொண்டிங் கென்பால் அன்பால்
  தன்னையும்தன் பொருளையும்தன் ஆவியையும்
  களித்தளித்த தலைவன் தன்னை
  முன்னையும்பின் னையும்எனக்கே முழுத்துணையாய்
  இருந்தமுழு முதல்வன் தன்னை
  அன்னையைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
  தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
 • 9. எண்ணலைவே றிரங்கலைநின் எண்ணமெலாம்
  தருகின்றோம்324 இன்னே என்றென்
  கண்நிரம்ப ஒளிகாட்டிக் கருத்தில்அமர்ந்
  திருக்கின்ற கருத்தன் தன்னைப்
  புண்ணியனை உளத்தூறும் புத்தமுதை
  மெய்இன்பப் பொருளை என்றன்
  அண்ணலைசிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
  தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
 • 10. சாதியைநீள் சமயத்தை மதத்தைஎலாம்
  விடுவித்தென் தன்னை ஞான
  நீதியிலே சுத்தசிவ சன்மார்க்க
  நிலைதனிலே நிறுத்தி னானைப்
  பாதியைஒன் றானவனைப் பரம்பரனைப்
  பராபரனைப் பதிஅ னாதி
  ஆதியைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
  தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.

  • 323. சிவபோகத்தே - முதற்பதிப்பு. பொ. சு. பதிப்பு.
  • 324. தருகின்றாம் - பி. இரா. பதிப்பு.

அச்சோப் பத்து // அச்சோப் பத்து

No audios found!