திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
நெஞ்சோடு நேர்தல் (தில்லையும் பார்வதிபுரமும்)
neñsōṭu nērtal (tillaiyum pārvatipuramum)
பாமாலை ஏற்றல்
pāmālai ēṟṟal
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

087. கைம்மாறின்மை
kaimmāṟiṉmai

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. கடையேன் புரிந்த குற்றமெலாம் கருதா தென்னுட் கலந்துகொண்டு
    தடையே முழுதும் தவிர்த்தருளித் தனித்த ஞான அமுதளித்துப்
    புடையே இருத்தி அருட்சித்திப் பூவை தனையும் புணர்த்திஅருட்
    கொடையே கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
  • 2. கடுத்த மனத்தை அடக்கிஒரு கணமும் இருக்க மாட்டாதே
    படுத்த சிறியேன் குற்றமெலாம் பொறுத்தென் அறிவைப் பலநாளும்
    தடுத்த தடையைத் தவிர்த்தென்றும் சாகா நலஞ்செய் தனிஅமுதம்
    கொடுத்த குருவே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
  • 3. மருவும் உலகம் மதித்திடவே மரண பயந்தீர்த் தெழில்உறுநல்
    உருவும் பொருள்ஒன் றெனத்தெளிந்த உணர்வும் என்றும் உலவாத
    திருவும் பரம சித்திஎனும் சிறப்பும் இயற்கைச் சிவம்எனும்ஓர்
    குருவும் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
  • 4. சேட்டித் துலகச் சிறுநடையில் பல்கால் புகுந்து திரிந்துமயல்
    நீட்டித் தலைந்த மனத்தைஒரு நிமிடத் தடக்கிச் சன்மார்க்கக்
    கோட்டிக் கியன்ற குணங்களெலாம் கூடப் புரிந்து மெய்ந்நிலையைக்
    காட்டிக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
  • 5. தோலைக் கருதித் தினந்தோறும் சுழன்று சுழன்று மயங்கும்அந்த
    வேலைக் கிசைந்த மனத்தைமுற்றும் அடக்கி ஞான மெய்ந்நெறியில்
    கோலைத் தொலைத்துக் கண்விளக்கம் கொடுத்து மேலும் வேகாத
    காலைக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
  • 6. பட்டிப் பகட்டின் ஊர்திரிந்து பணமே நிலமே பாவையரே
    தெட்டிற் கடுத்த பொய்ஒழுக்கச் செயலே என்று திரிந்துலகில்
    ஒட்டிக் குதித்துச் சிறுவிளையாட் டுஞற்றி யோடும் மனக்குரங்கைக்
    காட்டிக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
  • 7. மதியைக் கெடுத்து மரணம்எனும் வழக்கைப் பெருக்கி இடர்ப்படும்ஓர்
    விதியைக் குறித்த சமயநெறி மேவா தென்னைத் தடுத்தருளாம்
    பதியைக் கருதிச் சன்மார்க்கப் பயன்பெற் றிடஎன் உட்கலந்தோர்
    கதியைக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
  • 8. தருண நிதியே என்னொருமைத் தாயே என்னைத் தடுத்தாண்டு
    வருண நிறைவில் சன்மார்க்கம் மருவப் புரிந்த வாழ்வேநல்
    அருண ஒளியே எனச்சிறிதே அழைத்தேன் அழைக்கும் முன்வந்தே
    கருணை கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
  • 9. பொற்பங் கயத்தின் புதுநறவும் சுத்த சலமும் புகல்கின்ற
    வெற்பந் தரமா மதிமதுவும் விளங்கு329 பசுவின் தீம்பாலும்
    நற்பஞ் சகமும் ஒன்றாகக் கலந்து மரண நவைதீர்க்கும்
    கற்பங் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
  • 10. புலையைத் தவிர்த்தென் குற்றமெலாம் பொறுத்து ஞான பூரணமா
    நிலையைத் தெரித்துச் சன்மார்க்க நீதிப் பொதுவில் நிருத்தமிடும்
    மலையைக் காட்டி அதனடியில் வயங்க இருத்திச் சாகாத
    கலையைக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
  • 11. அருணா டறியா மனக்குரங்கை அடக்கத் தெரியா ததனொடுசேர்ந்
    திருணா டனைத்தும் சுழன்றுசுழன் றிளைத்துக் களைத்தேன் எனக்கந்தோ
    தெருணா டுலகில் மரணம்உறாத் திறந்தந் தழியாத் திருஅளித்த
    கருணா நிதியே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
  • 12. மண்ணுள் மயங்கிச் சுழன்றோடு மனத்தை அடக்கத் தெரியாதே
    பெண்ணுள் மயலைப் பெருங்கடல்போல் பெருக்கித் திரிந்தேன் பேயேனை
    விண்ணுள் மணிபோன் றருட்சோதி விளைவித் தாண்ட என்னுடைய
    கண்ணுள் மணியே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
  • 13. புலந்த மனத்தை அடக்கிஒரு போது நினைக்க மாட்டாதே
    அலந்த சிறியேன் பிழைபொறுத்தே அருளா ரமுதம் அளித்திங்கே
    உலந்த உடம்பை அழியாத உடம்பாப் புரிந்தென் உயிரினுளே
    கலந்த பதியே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
  • 14. தனியே கிடந்து மனங்கலங்கித் தளர்ந்து தளர்ந்து சகத்தினிடை
    இனியே துறுமோ என்செய்வேன் எந்தாய் எனது பிழைகுறித்து
    முனியேல் எனநான் மொழிவதற்கு முன்னே கருணை அமுதளித்த
    கனியே கரும்பே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
  • 15. பெண்ணே பொருளே எனச்சுழன்ற பேதை மனத்தால் பெரிதுழன்ற
    புண்ணே எனும்இப் புலைஉடம்பில் புகுந்து திரிந்த புலையேற்குத்
    தண்ணேர் மதியின் அமுதளித்துச் சாகா வரந்தந் தாட்கொண்ட
    கண்ணே மணியே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
  • 16. பொருத்திக் கொடுத்த புலைஉடம்பில் புகுந்தேன் புணைத்தற் கிணங்காத
    எருத்தில் திரிந்தேன் செய்பிழையை எண்ணா தந்தோ எனைமுற்றும்
    திருத்திப் புனித அமுதளித்துச் சித்தி நிலைமேல் சேர்வித்தென்
    கருத்தில் கலந்தோய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
  • 17. பெண்ணுக் கிசைந்தே பலமுகத்தில் பேய்போல் சுழன்ற பேதைமனத்
    தெண்ணுக் கிசைந்து துயர்க்கடலாழ்ந் திருந்தேன் தன்னை எடுத்தருளி
    விண்ணுக் கிசைந்த கதிர்போல்என் விவேகத் திசைந்து மேலும்என்தன்
    கண்ணுக் கிசைந்தோய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
  • 18. மாட்சி அளிக்கும் சன்மார்க்க மரபில் மனத்தைச் செலுத்துதற்கோர்
    சூழ்ச்சி அறியா துழன்றேனைச் சூழ்ச்சி அறிவித் தருளரசின்
    ஆட்சி அடைவித் தருட்சோதி அமுதம் அளித்தே ஆனந்தக்
    காட்சி கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே
  • 19. பொய்யிற் கிடைத்த மனம்போன போக்கில் சுழன்றே பொய்உலகில்
    வெய்யிற் கிடைத்த புழுப்போல வெதும்பிக் கிடந்த வெறியேற்கு
    மெய்யிற் கிடைத்தே சித்திஎலாம் விளைவித் திடுமா மணியாய்என்
    கையிற் கிடைத்தோய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
  • 20. போதல் ஒழியா மனக்குரங்கின் போக்கை அடக்கத் தெரியாது
    நோதல் புரிந்த சிறியேனுக் கிரங்கிக் கருணை நோக்களித்துச்
    சாதல் எனும்ஓர் சங்கடத்தைத் தவிர்த்தென் உயிரில் தான்கலந்த
    காதல் அரசே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.

    • 329. விளங்கும் - முதற்பதிப்பு., பொ, சு., பி. இரா., ச. மு. க.

அருட்கொடைப் புகழ்ச்சி // கைம்மாறின்மை

No audios found!