திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
திருப்பள்ளி எழுச்சி
tiruppaḷḷi eḻuchsi
அடைக்கலம் புகுதல்
aṭaikkalam pukutal
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

064. திரு உந்தியார்
tiru untiyār

  கலித்தாழிசை
  திருச்சிற்றம்பலம்
 • 1. இரவு விடிந்தது இணையடி வாய்த்த
  பரவி மகிழ்ந்தேன்என்று உந்தீபற
  பாலமுது உண்டேன்என்று உந்தீபற.
 • 2. பொழுது விடிந்தது பொற்பதம் வாய்த்த
  தொழுது மகிழ்ந்தேன்என்று உந்தீபற
  தூயவன் ஆனேன்என்று உந்தீபற.
 • 3. தூக்கம் தொலைந்தது சூரியன் தோன்றினன்
  ஏக்கம் தவிர்ந்தேன்என்று உந்தீபற
  இன்னமுது உண்டேன்என்று உந்தீபற.
 • 4. துன்பம் தவிர்ந்தது தூக்கம் தொலைந்தது
  இன்பம் கிடைத்ததென்று உந்தீபற
  எண்ணம் பலித்ததென்று உந்தீபற.
 • 5. ஞானம் உதித்தது நாதம் ஒலித்தது
  தீனந் தவிர்ந்ததென்று உந்தீபற
  சிற்சபை கண்டேன்என்று உந்தீபற.
 • 6. திரையற்று விட்டது செஞ்சுடர் தோன்றிற்று
  பரைஒளி ஓங்கிற்றென்று உந்தீபற
  பலித்தது பூசையென்று உந்தீபற.
 • 7. உள்ளிருள் நீங்கிற்றுஎன் உள்ளொளி ஓங்கிற்றுத்
  தெள்ளமுது உண்டேன்என்று உந்தீபற
  தித்திக்க உண்டேன்என்று உந்தீபற.
 • 8. எந்தையைக் கண்டேன் இடரெலாம் நீங்கினேன்
  சிந்தை மகிழ்ந்தேன்என்று உந்தீபற
  சித்திகள் பெற்றேன்என்று உந்தீபற.
 • 9. தந்தையைக் கண்டேன்நான் சாகா வரம்பெற்றேன்
  சிந்தை களித்தேன்என்று உந்தீபற
  சித்தெலாம் வல்லேன்என்று உந்தீபற.
 • 10. முத்தியைப் பெற்றேன்அம் முத்தியினால் ஞான
  சித்தியை உற்றேன்என்று உந்தீபற
  சித்தனும் ஆனேன்என்று உந்தீபற.

திரு உந்தியார் // திரு உந்தியார்