திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
நடு நாடி
naṭu nāṭi
பொது நிலை அருள்வது
potu nilai aruḷvatu
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

138. தங்குறுவம்பு
taṅkuṟuvampu

  சிந்து
  திருச்சிற்றம்பலம்
 • 1. தம்குறுவம்பு மங்கநிரம்பு சங்கம்இயம்பும் நம்கொழுகொம்பு
  சங்கரசம்பு சங்கரசம்பு சங்கரசம்பு சங்கரசம்பு.
 • 2. சந்தம்இயன்று அந்தணர்நன்று சந்ததம்நின்று வந்தனம்என்று
  சந்திசெய்மன்று மந்திரம்ஒன்று சங்கரசம்பு சங்கரசம்பு.
 • 3. நனந்தலைவீதி நடந்திடுசாதி நலம்கொளும்ஆதி நடம்புரிநீதி
  தினங்கலைஓதி சிவம்தரும்ஓதி சிதம்பரஜோதி சிதம்பரஜோதி.
 • 4. நகப்பெருஞ்சோதி சுகப்பெருஞ்சோதி
  நவப்பெருஞ்சோதி சிவப்பெருஞ்சோதி
  அகப்பெருஞ்சோதி நடப்பெருஞ்சோதி
  அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி.
 • 5. உமைக்கொருபாதி கொடுத்தருள்நீதி உவப்புறுவேதி நவப்பெருவாதி
  அமைத்திடுபூதி அகத்திடும்ஆதி அருட்சிவஜோதி அருட்சிவஜோதி.
 • 6. ஓதஅடங் காதுமடங் காதுதொடங் காது
  ஓகைஒடுங் காதுதடுங் காதுநடுங் காது
  சூதமலங் காதுவிலங் காதுகலங் காது
  ஜோதிபரஞ் ஜோதிசுயஞ் ஜோதிபெருஞ் ஜோதி.
 • 7. ஏதமுயங் காதுகயங் காதுமயங் காது
  ஏறிஇறங் காதுஉறங் காதுகறங் காது
  சூதமிணங் காதுபிணங் காதுவணங் காது
  ஜோதிபரஞ் ஜோதிசுயஞ் ஜோதிபெருஞ் ஜோதி.
 • 8. அகரசபாபதி சிகரசபாபதி அனகசபாபதி கனகசபாபதி
  மகரசபாபதி உகரசபாபதி வரதசபாபதி சரதசபாபதி.
 • 9. அமலசபாபதி அபயசபாபதி அமுதசபாபதி அகிலசபாபதி
  நிமலசபாபதி நிபுணசபாபதி நிலயசபாபதி நிபிடசபாபதி.
 • 10. பரமநடம்சிவ சிதம்பரநடமே பதிநடம்சிவ சபாபதிநடமே
  திருநடனம்பர குருநடமே சிவநடம்அம்பர நவநடமே.
 • 11. அம்பலத்தொருநடம் உருநடமே அருநடம் ஒருநடம் திருநடமே
  எம்பலத்தொருநடம் பெருநடமே இதன்பரத்திடுநடம் குருநடமே.
 • 12. அஞ்சோடஞ்சவை ஏலாதே அங்கோடிங்கெனல் ஆகாதே
  அந்தோவெந்துயர் சேராதே அஞ்சோகஞ்சுகம் ஓவாதே
  தஞ்சோபம்கொலை சாராதே சந்தோடம்சிவ மாம்ஈதே
  சம்போசங்கர மாதேவா சம்போசங்கர மாதேவா.
 • 13. எந்தாய் என்றிடில் இந்தா நம்பதம் என்றீ யும்பர மன்றா டும்பத
  என்றோ டிந்தன நன்றா மங்கண வெங்கோ மங்கள வெஞ்சா நெஞ்சக
  சந்தே கங்கெட நந்தா மந்திர சந்தோ டம்பெற வந்தா ளந்தண
  சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர.
 • 14. நஞ்சோ என்றிடு நங்கோ பங்கெட நன்றே தந்தனை நந்தா மந்தண
  நம்பா நெஞ்சில் நிரம்பா நம்பர நம்பா நம்பதி யம்பா தம்பதி
  தஞ்சோ வென்றவர் தஞ்சோ பந்தெறு தந்தா வந்தன நுந்தாள் தந்திடு
  சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர.
 • 15. பொதுநிலை அருள்வது பொதுவினில் நிறைவது
  பொதுநலம் உடையது பொதுநடம் இடுவது
  அதுபரம் அதுபதி அதுபொருள் அதுசிவம்
  அரஅர அரஅர அரஅர அரஅர.
 • 16. நவநிலை தருவது நவவடி வுறுவது
  நவவெளி நடுவது நவநவ நவமது
  சிவமெனும் அதுபதம் அதுகதி அதுபொருள்
  சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ.
 • 17. சந்திர தரசிர சுந்தர சுரவர
  தந்திர நவபத மந்திர புரநட
  சங்கர சிவசிவ சங்கர சிவசிவ
  சங்கர சிவசிவ சங்கர சிவசிவ.
 • 18. வானசிற்கன மந்திரதந்திர வாதசிற்குண மந்தணவந்தண
  வாரசற்சன வந்திதசிந்தித வாமஅற்புத மங்கலைமங்கல
  ஞானசிற்சுக சங்கரகங்கர ஞாயசற்குண வங்கணஅங்கண
  நாதசிற்பர வம்பரநம்பர நாததற்பர விம்பசிதம்பர.
 • 19. பாரதத்துவ பஞ்சகரஞ்சக பாதசத்துவ சங்கஜபங்கஜ
  பாலநித்திய வம்பகநம்பக பாசபுத்தக பண்டிதகண்டித
  நாரவித்தக சங்கிதவிங்கித நாடகத்தவ நம்பதிநங்கதி
  நாதசிற்பர நம்பரஅம்பர நாததற்பர விம்பசிதம்பர.
 • 20. பதநம்புறு பவர்இங்குறு பவசங்கடம் அறநின்றிடு
  பரமம்பொது நடம்என்தன துளம்நம்புற அருள்அம்பர
  சிதகுஞ்சித பதரஞ்சித சிவசுந்தர சிவமந்திர
  சிவசங்கர சிவசங்கர சிவசங்கர சிவசங்கர.
 • 21. கலகந்தரும் அவலம்பன கதிநம்பல நிதமும்
  கனகந்தரு மணிமன்றுறு கதிதந்தருள் உடலஞ்
  சலசந்திரன் எனநின்றவர் தழுவும்பத சரணம்
  சரணம்பதி சரணம்சிவ சரணம்குரு சரணம்.
 • 22. எனதென்பதும் நினதென்பதும் இதுஎன்றுணர் தருணம்
  இனம்ஒன்றது பிறிதன்றென இசைகின்றது பரமம்
  தனதென்பது மனதென்பது ஜகமென்றனை சரணம்
  சரணம்பதி சரணம்சிவ சரணம்குரு சரணம்.

சம்போ சங்கர // தங்குறுவம்பு