திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
அனுபவ சித்தி
aṉupava sitti
சிவயோக நிலை
sivayōka nilai
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

092. இன்பத்திறன்
iṉpattiṟaṉ

    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. உலகுபுகழ் திருவமுதம் திருச்சிற்றம் பலத்தே
    உடையவர்இன் றுதவினர்நான் உண்டுகுறை தீர்ந்தேன்
    இலகுசிவ போகவடி வாகிமகிழ் கின்றேன்
    இளைப்பறியேன் தவிப்பறியேன் இடர்செய்பசி அறியேன்
    விலகல்இலாத் திருவனையீர் நீவிர்எலாம் பொசித்தே
    விரைந்துவம்மின் அம்பலத்தே விளங்குதிருக் கூத்தின்
    அலகறியாத் திறம்பாடி ஆடுதும்நாம் இதுவே
    அருள்அடையும் நெறிஎனவே தாகமம்ஆர்ப் பனவே.
  • 2. மாதவத்தால் நான்பெற்ற வானமுதே எனது
    வாழ்வேஎன் கண்ணமர்ந்த மணியேஎன் மகிழ்வே
    போதவத்தால் கழித்தேனை வலிந்துகலந் தாண்ட
    பொன்னேபொன் னம்பலத்தே புனிதநடத் தரசே
    தீதவத்தைப் பிறப்பிதுவே சிவமாகும் பிறப்பாச்
    செய்வித்தென் அவத்தையெலாம் தீர்த்தபெரும் பொருளே
    பூதலத்தே அடிச்சிறியேன் நினதுதிரு வடிக்கே
    புகழ்மாலை சூட்டுகின்றேன் புனைந்துகலந் தருளே.
  • 3. அளந்திடுவே தாகமத்தின் அடியும்நடு முடியும்
    அப்புறமும் அப்பாலும் அதன்மேலும் விளங்கி
    வளர்ந்திடுசிற் றம்பலத்தே வயங்கியபே ரொளியே
    மாற்றறியாப் பொன்னேஎன் மன்னேகண் மணியே
    தளர்ந்தஎனை அக்கணத்தே தளர்வொழித்தா னந்தம்
    தந்தபெருந் தகையேஎன் தனித்ததனித் துணைவா
    உளந்தருசம் மதமான பணிஇட்டாய் எனக்கே
    உன்பணியே பணியல்லால் என்பணிவே றிலையே.
  • 4. நாடுகலந் தாள்கின்றோர் எல்லாரும் வியப்ப
    நண்ணிஎனை மாலைஇட்ட நாயகனே நாட்டில்
    ஈடுகரைந் திடற்கரிதாம் திருச்சிற்றம் பலத்தே
    இன்பநடம் புரிகின்ற இறையவனே எனைநீ
    பாடுகஎன் னோடுகலந் தாடுகஎன் றெனக்கே
    பணிஇட்டாய் நான்செய்பெரும் பாக்கியம்என் றுவந்தேன்
    கோடுதவ றாதுனைநான் பாடுதற்கிங் கேற்ற
    குணப்பொருளும் இலக்கியமும் கொடுத்துமகிழ்ந் தருளே.
  • 5. நண்புடையாய் என்னுடைய நாயகனே எனது
    நல்உறவே சிற்சபையில் நடம்புரியும் தலைவா
    எண்புடையா மறைமுடிக்கும் எட்டாநின் புகழை
    யாதறிவேன் பாடுகஎன் றெனக்கேவல் இட்டாய்
    பண்புடைநின் மெய்யன்பர் பாடியபே ரன்பில்
    பழுத்தபழம் பாட்டில்ஒரு பாட்டும்அறி யேனே
    தண்புடைநன் மொழித்திரளும்354 சுவைப்பொருளும் அவைக்கே
    தக்கஇயல் இலக்கியமும் தந்தருள்வாய் எனக்கே.
  • 6. பணிந்தடங்கும் மனத்தவர்பால் பரிந்தமரும் பதியே
    பாடுகின்றோர் உள்ளகத்தே கூடுகின்ற குருவே
    கணிந்தமறை பலகோடி ஆகமம்பல் கோடி
    கடவுள்நின தருட்புகழைக் கணிப்பதற்குப் பலகால்
    துணிந்துதுணிந் தெழுந்தெழுந்து தொடர்ந்துதொடர்ந் தடிகள்
    சுமந்துசுமந் திளைத்திளைத்துச் சொல்லியவல் லனவென்
    றணிந்தமொழி மாற்றிவலி தணிந்தஎன்றால் அந்தோ
    அடியேன்நின் புகழ்உரைக்கல் ஆவதுவோ அறிந்தே.
  • 7. விதிப்பவர்கள் பலகோடி திதிப்பவர்பல் கோடி
    மேலவர்கள் ஒருகோடி விரைந்துவிரைந் துனையே
    மதிப்பவர்கள் ஆகிஅவர் மதியாலே பலகால்
    மதித்துமதித் தவர்மதிபெண் மதியாகி அலந்தே
    துதிப்பதுவே நலம்எனக்கொண் டிற்றைவரை ஏற்ற
    சொற்பொருள்கள் காணாதே சுழல்கின்றார் என்றால்
    குதிப்பொழியா மனச்சிறிய குரங்கொடுழல் கின்றேன்
    குறித்துரைப்பேன் என்னஉளம் கூசுகின்ற தரசே.
  • 8. ஒளியாகி உள்ஒளியாய் உள்ஒளிக்குள் ஒளியாய்
    ஒளிஒளியின் ஒளியாய்அவ் ஒளிக்குளும்ஓர் ஒளியாய்
    வெளியாகி வெளிவெளியாய் வெளியிடைமேல் வெளியாய்
    மேல்வெளிமேல் பெருவெளியாய்ப் பெருவெளிக்கோர் வெளியாய்
    அளியாகி அதுஆகி அதுவும்அல்லா தாகி
    அப்பாலாய் அப்பாலும் அல்லதுவாய் நிறைவாம்
    தளியாகி எல்லாமாய் விளங்குகின்ற ஞான
    சபைத்தலைவா நின்இயலைச் சாற்றுவதெவ் வணமே.
  • 9. வாக்கொழிந்து மனம்ஒழிந்து மதிஒழிந்து மதியின்
    வாதனையும் ஒழிந்தறிவாய் வயங்கிநின்ற இடத்தும்
    போக்கொழிந்தும் வரவொழிந்தும் பூரணமாய் அதுவும்
    போனபொழு துள்ளபடி புகலுவதெப் படியோ
    நீக்கொழிந்த நிறைவேமெய்ந் நிலையேஎன் னுடைய
    நேயமே ஆனந்த நிருத்தமிடும் பதியே
    ஏக்கொழிந்தார் உளத்திருக்கும் இறையேஎன் குருவே
    எல்லாமாய் அல்லதுமாய் இலங்கியமெய்ப் பொருளே.
  • 10. என்இயலே யான்அறியேன் இவ்வுலகின் இயல்ஓர்
    எள்அளவும் தான்அறியேன் எல்லாமும் உடையோய்
    நின்இயலை அறிவேனோ அறிந்தவனே போல
    நிகழ்த்துகின்றேன் பிள்ளைஎன நிலைப்பெயர்பெற் றிருந்தேன்
    தன்இயலாம் தனிஞான சபைத்தலைமைப் பதியே
    சத்தியனே நித்தியனே தயாநிதியே உலகம்
    பின்இயல்மா னிடப்பிள்ளை பேச்சினும்ஓர் பறவைப்
    பிறப்பின்உறும் கிளிப்பிள்ளைப் பேச்சுவக்கின் றதுவே.

    • 354. மொழித்திறனும் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.

இன்பத்திறன் // இன்பத்திறன்

No audios found!