திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
நற்றாய் செவிலிக்குக் கூறல்
naṟṟāy sevilikkuk kūṟal
தோழிக் குரிமை கிளத்தல்
tōḻik kurimai kiḷattal
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

080. திருவடிப் பெருமை
tiruvaṭip perumai

  எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  திருச்சிற்றம்பலம்
 • 1. திருவாளர் கனகசபைத் திருநடஞ்செய் தருள்வார்
  தேவர்சிகா மணிஎனக்குத் திருமாலை கொடுத்தார்
  உருவாளர் அருவாகி ஒளியாகி வெளியாய்
  ஓங்குகின்றார் என்னுடைய உயிர்த்துணைவர் அவர்தம்
  பெருவாய்மைத் திறம்சிறிதும் பேசமுடி யாதே
  பேசுவதார் மறைகளெலாம் கூசுகின்ற என்றால்
  துருவாமல் இங்கெனக்குக் கிடைத்ததைஎன் சொல்வேன்
  சொல்லளவல் லாதசுகம் தோன்றுவதென் தோழி.
 • 2. அருளாளர் பொற்பொதுவில் அற்புதநா டகஞ்செய்
  ஆனந்த வண்ணர்எனை ஆளுடையார் சிறியேன்
  தெருளாத பருவத்தே தெருட்டிமணம் புரிந்த
  சீராளர் அவர்பெருமைத் திறத்தைஎவர் புகல்வார்
  மருளாத ஆகமங்கள் மாமறைகள் எல்லாம்
  மருண்டனவே என்னடிஎன் மனவாக்கின் அளவோ
  இருளாமை என்றுறுமோ அன்றுசிறி துரைப்பேன்
  என்னவும்நாண் ஈர்ப்பதிதற் கென்புரிவேன் தோழி.
 • 3. செம்பவளத் திருமலையோ மாணிக்க விளக்கோ
  செழுஞ்சோதித் தனிப்பிழம்போ செவ்வண்ணத் திரளோ
  அம்பதுமத் திருவிளங்கும் அகலத்தான் பிரமன்
  அரன்முதலோர் ஐவர்களும் அப்பால்நின் றோரும்
  எம்பரம்என் றெம்பெருமான் புறவண்ணம் எதுவோ
  என்பாரேல் அகவண்ணம் யார்உரைக்க வல்லார்
  தம்பரம்என் றென்னைஅன்று மணம்புரிந்தார் கனக
  சபைநாதர் அவர்பெருமை சாற்றுவதென் தோழி.
 • 4. தேவர்களோ சித்தர்களோ சீவன்முத்தர் தாமோ
  சிறந்தமுனித் தலைவர்களோ செம்பொருள்கண் டோரோ
  மூவர்களோ அறுவர்களோ முதற்சத்தி அவளோ
  முன்னியநம் பெருங்கணவர் தம்இயலை உணர்ந்தோர்
  யாவர்களும் அல்லஎன்றால் யான்உணர்ந்து சொல்ல
  அமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய்
  ஆவலொடும் அன்பர்தொழக் கனகசபை நடிப்பார்
  அவர்பெருமை எவ்விதத்தும் அவர்அறிவார் தோழி.
 • 5. பதிஉடையார் கனகசபா பதிஎனும்பேர் உடையார்
  பணம்பரித்த360 வரையர்என்னை மணம்புரிந்த கணவர்
  விதியுடையார் ஏத்தநின்ற துதிஉடையார் ஞான
  விளக்கனைய மெய்உடையார் வெய்யவினை அறுத்த
  மதிஉடையார் தமக்கருளும் வண்கைபெரி துடையார்
  மங்கைசிவ காமவல்லி மணவாளர் முடிமேல்
  நதிஉடையார் அவர்பெருமை மறைக்கும்எட்டா தென்றால்
  நான்உரைக்க மாட்டுவனோ நவிலாய்என் தோழி.
 • 6. வெடித்தளிந்த முக்கனியின் வடித்தரசந் தனிலே
  விரும்புறநின் றோங்கியசெங் கரும்பிரதம் கலந்து
  தடித்தசெழும் பாற்பெய்து கோற்றேன்விட் டதனைத்
  தனித்தபரா அமுதத்தில் தான்கலந்துண் டாற்போல்
  இடித்திடித்தென் உளமுழுதும் தித்திக்கும் வார்த்தை
  இனிதுரைத்து மணம்புரிந்த என்னுயிர்நா யகர்வான்
  பொடித்திருமே னியர்நடனம் புரிகின்றார் அவர்தம்
  புகழ்உரைக்க வல்லேனோ அல்லேன்காண் தோழி.
 • 7. திருச்சிற்றம் பலத்தின்பத் திருஉருக்கொண் டருளாம்
  திருநடஞ்செய் தருளுகின்ற திருவடிகள் இரண்டும்
  அருச்சிக்கும் பேரன்பர் அறிவின்கண் அறிவாய்
  அவ்வறிவில் விளைந்தசிவா னந்தஅமு தாகி
  உருச்சிக்கும் பரநாதத் தலங்கடந்தப் பாற்சித்
  துருவுகடந் திருக்கும்என உணர்ந்தோர்சொல் வாரேல்
  பெருச்சித்தெல் லாம்வல்ல நடராஜப் பெருமான்
  பெருமையையாம் பேசுவதென் பேசாய்என் தோழி.
 • 8. நாதவரை சென்றுமறை ஓர்அனந்தம் கோடி
  நாடிஇளைத் திருந்தனஆ கமங்கள் பரநாத
  போதவரை போந்துபல முகங்கொண்டு தேடிப்
  புணர்ப்பறியா திருந்தனஎன் றறிஞர்புகல் வாரேல்
  பாதவரை வெண்­று படிந்திலங்கச் சோதிப்
  படிவம்எடுத் தம்பலத்தே பரதநடம் புரியும்
  போதவரைக் காண்பதலால் அவர்பெருமை என்னால்
  புகலவச மாமோநீ புகலாய்என் தோழி.
 • 9. பரைஇருந்த வெளிமுழுதும் பரவிஅப்பால் பரையின்
  பரமாகி அப்பரத்தில் பரம்பரமாய் விளங்கித்
  திரைகடந்த திருவெளியில் ஆனந்தா தீதத்
  திருநடஞ்செய் யாதுசெயும் திருவடிகள் என்றே
  புரைகடந்தோர் புகல்கின்றார் கேட்கின்றோம் என்றால்
  புண்ணியர்என் தனித்தலைவர் புனிதநட ராஜர்
  வரைகடந்த திருத்தோள்மேல் திருநீற்றர் அவர்தம்
  வாய்மைசொல வல்லேனோ அல்லேன்காண் தோழி.
 • 10. ஏய்ப்பந்தி வண்ணர்என்றும் படிகவண்ணர் என்றும்
  இணையில்ஒளி உருவர்என்றும் இயல்அருவர் என்றும்
  வாய்ப்பந்தல் இடுதலன்றி உண்மைசொல வல்லார்
  மண்ணிடத்தும் விண்ணிடத்தும் மற்றிடத்தும் இலையே
  காய்ப்பந்த மரம்என்று கண்டுசொல்வ தன்றிக்
  காய்த்தவண்ணம் பூத்தவண்ணம் கண்டுகொள மாட்டாத்
  தாய்ப்பந்த உணர்வுடையேன் யானோசிற் சபையில்
  தனிமுதல்வர் திருவண்ணம் சாற்றவல்லேன் தோழி.
 • 11. கலைக்கடலைக் கடந்தமுனிக் கணங்களும்மும் மலமாம்
  கரிசகன்ற யோகிகளும் கண்டுகொள மாட்டா
  தலைக்கடலில் துரும்பாகி அலைகின்றார் மன்றுள்
  ஆடுகின்றார் என்பதலால் அவர்வண்ணம் அதுவும்
  நிலைக்குரிய திருச்சபையின் வண்ணமும்அச் சபைக்கண்
  நிருத்தத்தின் வண்ணமும்இந் நீர்மையன என்றே
  மலைக்குநிறை கண்டாலும் காணவொணா தம்ம
  வாய்ப்பதர்கள் தூற்றுவதில் வரும்பயன்என் தோழி.
 • 12. சிதமலரோ சுகமலரும் பரிமளிக்க ஓங்கும்
  திருச்சிற்றம் பலநடுவே திருநடனம் புரியும்
  பதமலரோ பதமலரில் பாதுகையோ அவையில்
  படிந்ததிருப் பொடியோஅப் பொடிபடிந்த படியோ
  இதமலரும் அப்படிமேல் இருந்தவரோ அவர்பேர்
  இசைத்தவரும் கேட்டவரும் இலங்குமுத்தர் என்றால்
  நிதமலரும் நடராஜப் பெருமான்என் கணவர்
  நிலைஉரைக்க வல்லார்ஆர் நிகழ்த்தாய்என் தோழி.
 • 13. சுத்தமுற்ற ஐம்பூத வெளிகரண வெளிமேல்
  துலங்குவெளி துரியவெளி சுகவெளியே முதலாம்
  இத்தகைய வெளிகளுள்ளே எவ்வெளியோ நடனம்
  இயற்றுவெளி என்கின்றார் என்றால்அவ் வெளியில்
  நித்தபரி பூரணமாய் ஆனந்த மயமாய்
  நிருத்தமிடும் எம்பெருமான் நிபுணநட ராயர்
  சித்துருவாம் திருவடியின் உண்மைவண்ணம் அறிந்து
  செப்புவதார் என்வசமோ செப்பாய்என் தோழி.
 • 14. காற்றுருவோ கனல்உருவோ கடவுள்உரு என்பார்
  காற்றுருவும் கனல்உருவும் கண்டுரைப்பீர் என்றால்
  வேற்றுருவே புகல்வர்அதை வேறொன்றால் மறுத்தால்
  விழித்துவிழித் தெம்போல்வார் மிகவும்மருள் கின்றார்
  தோற்றும்அந்தத் தத்துவமும் தோற்றாத்தத் துவமும்
  துரிசாக அவைகடந்த சுகசொருபம் ஆகி
  மாற்றமனம் உணர்வுசெல்லாத் தலத்தாடும் பெருமான்
  வடிவுரைக்க வல்லவரார் வழுத்தாய்என் தோழி.
 • 15. நாதமட்டும் சென்றனம்மேல் செல்லவழி அறியேம்
  நவின்றபர விந்துமட்டும் நாடினம்மேல் அறியேம்
  ஏதமிலாப் பரநாத எல்லைமட்டும் சென்றேம்
  இனிச்செல்ல வழிகாணேம் இலங்குபெருவெளிக்கே
  ஆதரவில் சென்றனம்மேல் செல்லவழி தெரியேம்
  அம்மம்ம என்றுமறை ஆகமங்கள் எல்லாம்
  ஓதநின்ற திருநடனப் பெருமானார் வடிவின்
  உண்மைசொல வல்லவரார் உரையார்என் தோழி.
 • 16. தோன்றுசத்தி பலகோடி அளவுசொல ஒண்ணாத்
  தோற்றுசத்தி பலகோடித் தொகைஉரைக்க முடியா
  சான்றுலகம் தோற்றுவிக்கும் சத்திபல கோடி
  தனைவிளம்பல் ஆகாஅச் சத்திகளைக் கூட்டி
  ஏன்றவகை விடுக்கின்ற சத்திபல கோடி
  இத்தனைக்கும் அதிகாரி என்கணவர் என்றால்
  ஆன்றமணி மன்றில்இன்ப வடிவாகி நடிக்கும்
  அவர்பெருமை எவர்உரைப்பார் அறியாய்என் தோழி.
 • 17. தோற்றம்ஒன்றே வடிவொன்று வண்ணம்ஒன்று விளங்கும்
  சோதிஒன்று மற்றதனில் துலங்கும்இயல் ஒன்று
  ஆற்றஅதில் பரமாய அணுஒன்று பகுதி
  அதுஒன்று பகுதிக்குள் அமைந்தகரு ஒன்று
  ஏற்றமிக்க அக்கருவுள் சத்திஒன்று சத்திக்
  கிறைஒன்றாம் இத்தனைக்கும் என்கணவர் அல்லால்
  ஆற்றமற்றோர் அதிகாரி இல்லையடி மன்றில்
  ஆடும்அவர் பெருந்தகைமை யார்உரைப்பார் தோழி.
 • 18. ஒருமைபெறு தோற்றம்ஒன்று தத்துவம்பல் வேறு
  ஒன்றின்இயல் ஒன்றிடத்தே உற்றிலஇங் கிவற்றை
  இருமையினும் மும்மைமுதல் எழுமையினும் கூட்டி
  இலங்கியசிற் சத்திநடு இரண்டொன்றென் னாத
  பெருமைபெற்று விளங்கஅதின் நடுஅருள்நின் றிலங்கப்
  பெரியஅருள் நடுநின்று துரியநடம் புரியும்
  அருமைஎவர் கண்டுகொள்வர் அவர்பெருமை அவரே
  அறியாரே என்னடிநீ அறைந்தவண்ணம் தோழி.
 • 19. படைத்தபடைப் பொன்றதிலே பரம்அதிற்கா ரணமாம்
  பகுதிஅதில் பகுக்கின்ற பணிகள்பல பலவாம்
  புடைத்தஅவை புகுந்துலவும் புரம்ஒன்றப் புரத்தில்
  பூபதிஒன் றவர்க்குணர்த்தும் பூரணசித் தொன்று
  மிடைத்தஇவை எல்லாஞ்சிற் றம்பலத்தே நடிக்கும்
  மென்பதத்தோர் சிற்றிடத்து விளங்கிநிலை பெறவே
  அடைத்துமற்றிங் கிவைக்கெல்லாம் அப்புறத்தே நிற்பார்
  அவர்பெருமை எவர்அறிவார் அறியாய்நீ தோழி.
 • 20. சிருட்டிஒன்று சிற்றணுவில் சிறிததனில் சிறிது
  சினைத்தகர ணக்கருஅச் சினைக்கருவில் சிறிது
  வெருட்டியமான் அம்மானில் சிறிதுமதி மதியின்
  மிகச்சிறிது காட்டுகின்ற வியன்சுடர்ஒன் றதனில்
  தெருட்டுகின்ற சத்திமிகச் சிறிததனில் கோடித்
  திறத்தினில்ஓர் சிறிதாகும் திருச்சிற்றம் பலத்தே
  அருட்டிறத்தின் நடிக்கின்ற என்னுடைய தலைவர்
  அருட்பெருமை எவர்உரைப்பார் அறியாய்என் தோழி.
 • 21. நான்முகர்கள் மிகப்பெரியர் ஆங்கவரில் பெரியர்
  நாரணர்கள் மற்றவரின்361 நாடின்மிகப் பெரியர்
  வான்முகத்த உருத்திரர்கள் மற்றவரில் பெரியர்
  மயேச்சுரர்கள் சதாசிவர்கள் மற்றவரில் பெரியர்
  மீன்முகத்த விந்ததனில் பெரிததனில் நாதம்
  மிகப்பெரிது பரைஅதனில் மிகப்பெரியள் அவளின்
  ஆன்முகத்தில் பரம்பரந்தான் பெரிததனில் பெரிதாய்
  ஆடுகின்ற சேவடியார் அறிவார்காண் தோழி.
 • 22. மண்அனந்தங் கோடிஅள வுடையதுநீர் அதனில்
  வயங்கியநூற் றொருகோடி மேல்அதிகம் வன்னி
  எண்ணியஆ யிரம்அயுதம் கோடியின்மேல் இலக்கம்
  எண்பத்து நான்கதின்மேல் அதிகம்வளி யொடுவான்
  விண்ணளவு மூலமுயிர் மாமாயை குடிலை
  விந்தளவு சொலமுடியா திந்தவகை எல்லாம்
  அண்ணல்அடிச் சிறுநகத்தில் சிற்றகத்தாம் என்றால்
  அவர்பெருமை எவர்உரைப்பார் அறியாய்நீ தோழி.
 • 23. மண்ணாதி ஐம்பூத வகைஇரண்டின் ஒன்று
  வடிவுவண்ணம் இயற்கைஒரு வாலணுச்சத் தியலாய்க்
  கண்ணென்னும் உணர்ச்சிசெலாக் காட்சியவாய்க் நிற்பக்
  கருதும்அவைக் குட்புறங்கீழ் மேற்பக்கம் நடுவில்
  நண்ணிஒரு மூன்றைந்து நாலொடுமூன் றெட்டாய்
  நவமாகி மூலத்தின் நவின்றசத்திக் கெல்லாம்
  அண்ணுறும்ஓர் ஆதார சத்திகொடுத் தாடும்
  அடிப்பெருமை யார்அறிவார் அவர்அறிவார் தோழி.
 • 24. மண்பூத முதற்சத்தி வால்அணுவில் அணுவாய்
  மதித்தஅதன் உள்ஒளியாய் அவ்வொளிக்குள் ஒளியாய்
  எண்பூதத் தவ்வொளிக்குள் இலங்குவெளி யாய்அவ்
  வியல்வெளிக்குள் ஒருவெளியாய் இருந்தவெளி362 நடுவே
  பண்பூத நடம்புரியும் பதப்பெருமை எவரும்
  பகுத்துணர முடியாதேல் பதமலர்என் தலைமேல்
  நண்பூற வைத்தருளும் நடராஜப் பெருமான்
  நல்லசெயல் வல்லபம்ஆர் சொல்லுவர்காண் தோழி.
 • 25. வண்கலப்பில் சந்திசெயும் சத்தியுளே ஒருமை
  வயங்கொளிமா சத்திஅத னுள்ஒருகா ரணமாம்
  விண்கரண சத்திஅத னுள்தலைமை யாக
  விளங்குகுருச் சத்திஅதின் மெய்ம்மைவடி வான
  எண்குணமா சத்தி இந்தச் சத்திதனக் குள்ளே
  இறையாகி அதுஅதுவாய் இலங்கிநடம் புரியும்
  தண்கருணைத் திருவடியின் பெருமைஅறி வரிதேல்
  சாமிதிரு மேனியின்சீர் சாற்றுவதென் தோழி.
 • 26. பெரியஎனப் புகல்கின்ற பூதவகை எல்லாம்
  பேசுகின்ற பகுதியிலே வீசுகின்ற சிறுமை
  உரியபெரும் பகுதியும்அப் பகுதிமுதல் குடிலை
  உளங்கொள்பரை முதல்சத்தி யோகமெலாம் பொதுவில்
  துரியநடம் புரிகின்ற சோதிமலர்த் தாளில்
  தோன்றியதோர் சிற்றசைவால் தோன்றுகின்ற என்றால்
  அரியபெரும் பொருளாக நடிக்கின்ற தலைவர்
  அருட்பெருமை என்அளவோ அறியாய் என்தோழி.
 • 27. பொன்வண்ணப் பூதமுதல் தன்மைஉண்மை அகத்தே
  பொற்புறமாக் கருவிளக்கம் பொருந்தவெண்மை செம்மை
  தன்வண்ணப் பசுமையொடு கருமைகலப் பாகும்
  தன்மையினில் தன்மையதாய்த் தனித்ததற்கோர் முதலாய்
  மனவண்ணத் தொளிஉருவம் உயிர்ப்பினொடு தோன்ற
  வால்அணுக்கூட் டங்களைஅவ் வகைநிறுவி நடத்தும்
  மின்வண்ணத் திருச்சபையில் ஆடுகின்ற பதத்தின்
  மெய்வண்ணம் புகலுவதார் விளம்பாய்என் தோழி.
 • 28. பொற்புடைய ஐங்கருவுக் காதார கரணம்
  புகன்றஅறு கோடிஅவைக் காறிலக்கம் அவற்றுக்
  கற்புறும்ஓர் அறுபதினா யிரம்அவற்றுக் கடையா
  றாயிரமாங் கவற்றுக்கோர் அறுநூறிங் கிவைக்கே
  விற்பொலியும் அறுபதுமற் றிவைக்காறிங் கிந்த
  வியன்கரண சத்திகளை விரித்துவிளக் குவதாய்ச்
  சிற்பரமாய் மணிமன்றில் திருநடனம் புரியும்
  திருவடியின் பெருமைஎவர் செப்புவர்காண் தோழி.
 • 29. ஏற்றமுறும் ஐங்கருவுக் காதார கரணம்
  எழுகோடி ஈங்கிவற்றுக் கேழ்இலக்கம் இவைக்கே
  தோற்றமுறும் எழுபதினா யிரமிவற்றுக் கெழுமை
  துன்னியநூ றிவற்றினுக்குச் சொல்லும் எழுபதுதான்
  ஆற்றலுறும் இவைதமக்கோர் ஏழாம்இக் கரணம்
  அனைத்தினையும் தனித்தனியே தோற்றிநிலை பொருத்திச்
  சாற்றரிய வடிவுவண்ணம் சுவைப்பயன்உண் டாக்கும்
  சாமிதிரு வடிப்பெருமை சாற்றுவதார் தோழி.
 • 30. விளங்கியஐங் கருச்சத்தி ஓர்அனந்தங் கருவில்
  விளைகின்ற சத்திகள்ஓர் அனந்தம்விளை வெல்லாம்
  வளம்பெறவே தருகின்ற சத்திகள்ஓர் அனந்தம்
  மாண்படையத் தருவிக்கும் சத்திகள்ஓர் அனந்தம்
  உளங்கொளநின் றதிட்டிக்கும் சத்திகள்ஓர் அனந்தம்
  ஓங்கியஇச் சத்திகளைத் தனித்தனியே இயக்கித்
  தளங்கொளஈண் டவ்வவற்றிற் குட்புறம்நின் றொளிரும்
  சாமிதிரு வடிப்பெருமை சாற்றுவதார் தோழி.
 • 31. காணிகின்ற ஐங்கருவின் வித்தின்இயல் பலவும்
  கருதுறும்அங் குரத்தின்இயல் பற்பலவும் அடியின்
  மாணுகின்ற இயல்கள்பல பலப்பலவும் நடுவில்
  மன்னும்இயல் பலபலவும் பலப்பலவும் முடியின்
  பூணும்இயல் அனந்தவகை புரிந்தபல பலவும்
  பொருந்துவதாய் அவ்வவற்றின் புணர்க்கையுந்தான் ஆகி
  ஏணுகின்ற அவைகளுக்குட் பற்றாமல் நடிக்கும்
  எழிற்கருணைப் பதப்பெருமை இயம்புவதார் தோழி.
 • 32. விண்ணிடத்தே முதன்முப்பூ விரியஅதில் ஒருபூ
  வாயங்குசத்திக் கூட்டத்தால் வந்தனஓர் அனந்தம்
  பண்ணுறும்அத் தன்மையுளே திண்மை363 ஒருகோடி
  பலித்தசத்திக் கூட்டத்தால் பணித்தனஓர் அனந்தம்
  எண்ணுறும்இத் திண்மைகளும் இவற்றினது விகற்பம்
  எல்லாமும் தனித்தனிநின் றிலங்கநிலை புரிந்தே
  விண்ணென்னும் படிஅவற்றில் கலந்துகல வாது
  விளையாடும் அடிப்பெருமை விளம்புவதார் தோழி.
 • 33. விண்ணிடத்தே முதன்முப்பூ விரியஅதில் ஒருபூ
  விரியஅதின் மற்றொருபூ விரிந்திடஇவ் வைம்பூக்
  கண்ணிடத்தே பிறிதொருபூ கண்மலர அதிலே
  கட்டவிழ வேறொருபூ விட்டஎழு பூவும்
  பெண்ணிடத்தே நான்காகி ஆணிடத்தே மூன்றாய்ப்
  பிரிவிலவாய்ப் பிரிவுளவாய்ப் பிறங்கியுடல் கரணம்
  நண்ணிடத்தேர்ந் தியற்றிஅதின் நடுநின்று விளங்கும்
  நல்லதிரு வடிப்பெருமை சொல்லுவதார் தோழி.
 • 34. வண்பூவில் வடிவுபல வண்ணங்கள் பலமேல்
  மதிக்கும்இயல் பலஒளியின் வாய்மைபல ஒளிக்குள்
  நண்பூறும் சத்திபல சத்திகளுள் வயங்கும்
  நாதங்கள் பலநாத நடுவணைஓர் கலையில்
  பண்பாய நடங்கள்பல பலபெயர்ப்பும் காட்டும்
  பதிகள்பல இவைக்கெல்லாம் பதியாகிப் பொதுவில்
  கண்பாய இவற்றினொடு கலந்துகல வாமல்
  காணுகின்ற திருவடிச்சீர் கழறுவதார் தோழி.
 • 35. ஓங்கியஐம் பூஇவைக்குள் ஒன்றின்ஒன்று திண்மை
  உற்றனமற் றதுஅதுவும் பற்றுவன பற்றத்
  தாங்கியமா சத்திகளின் பெருங்கூட்டம் கலையாத்
  தன்மைபுரிந் தாங்காங்குத் தனித்தனிநின் றிலங்கித்
  தேங்கியபோ தவைகலையச் செய்கைபல புரிந்து
  திகழ்ஒளியாய் அருள்வெளியாய்த் திறவில்ஒளி364 வெளியில்
  பாங்குறநேர் விளங்குகின்ற திருவடியின் பெருமை
  பகுத்துரைத்து வல்லவரார் பகராய்என் தோழி.
 • 36. விரிந்திடும்ஐங் கருவினிலே விடயசத்தி அனந்த
  விதமுகங்கொண் டிலகஅவை விகிதவிகற் பாகிப்
  பிரிந்திடுமான் இலக்கணங்கள் பலகோடி பிரியாப்
  பெருஞ்சத்தி இலக்கணங்கள் பற்பலகோ டிகளாய்த்
  தெரிந்திடுநா னிலக்குள்ளே இருந்துவெளிப் படவும்
  செய்கைபல புரிகின்ற திறல்உடைத்தா ரகமேல்
  எரிந்திடுதீ நடுவெளிக்கண் இருந்ததிரு வடியின்
  எல்லையையார் சொல்லவல்லார் இயம்பாய்என் தோழி.
 • 37. தோன்றியஐங் கருவினிலே சொல்லரும்ஓர் இயற்கைத்
  துலங்கும்அதில் பலகோடிக் குலங்கொள்குருத் துவிகள்
  ஆன்றுவிளங் கிடும்அவற்றின் அசலைபல கோடி
  அமைந்திடும்மற் றவைகளுளே அமலைகள் ஓர்அனந்தம்
  ஏன்றுநிறைந் திடும்அவற்றிற் கணிப்பதனுக் கரிதாய்
  இலங்குபிர காசிகள்தாம் இருந்தனமற் றிவற்றில்
  ஊன்றியதா ரகசத்தி ஓங்குமதின் நடுவே
  உற்றதிரு வடிப்பெருமை உரைப்பவரார் தோழி.
 • 38. உறைந்திடும்ஐங் கருவினிலே உருவசத்தி விகற்பம்
  உன்னுதற்கும் உணர்வதற்கும் ஒண்ணாஎண் ணிலவே
  நிறைந்தஅவை தனித்தனியே நிகழ்ந்திலங்க அவைக்குள்
  நேர்மைஒண்மை உறுவித்தந் நேர்மைஒண்மை அகத்தே
  குறைந்திலவாம் பலவேறு குணங்கள்உறப் புரிந்து
  குணங்களுளே குறிகள்பல கூட்டுவித்தாங் கமர்ந்தே
  மறைந்தமணம் வெளிப்படுத்தும் மலரடியின் பெருமை
  வகுத்துரைக்க வல்லவரார் வழுத்தாய்என் தோழி.
 • 39. சூழ்ந்திடும்ஐங் கருவினிலே சொருபசத்தி பேதம்
  சொல்லினொடு மனங்கடந்த எல்லையிலா தனவே
  தாழ்ந்திலவாய் அவைஅவையும் தனித்தனிநின் றிலங்கத்
  தகும்அவைக்குள் நவவிளக்கம் தரித்தந்த விளக்கம்
  வாழ்ந்திடஓர் சத்திநிலை வயங்கியுறப் புரிந்து
  மதிக்கும்அந்தச் சத்திதனில் மன்னுசத்தர் ஆகி
  ஆழ்ந்திடும்ஓர் பரம்பரத்தை அசைத்துநின்று நடிக்கும்
  அடிப்பெருமை உரைப்பவரார் அறியாய்என் தோழி.
 • 40. பசுநிறத்த ஐங்கருவில் பகர்ந்தசுவைத் தன்மை
  பற்பலகோ டிகளாம்அவ் வுற்பவசத் திகளில்
  வசுநிறத்த விவிதநவ சத்திபல கோடி
  வயங்கும்அவைக் குள்ஆதி வயங்குவள்அவ் வாதி
  தசநிறத்த வாகஅதில் தனித்தனிஓங் காரி
  சார்ந்திடுவள் அவள்அகத்தே தனிப்பரைசார்ந் திடுவள்
  திசைநிறத்தப் பரைநடுவில் திருநடனம் புரியும்
  திருவடியின் பெருவடியைச் செப்புவதார் தோழி.
 • 41. பூத்தசுடர்ப் பூஅகத்தே புறத்தேசூழ் இடத்தே
  பூத்துமிகக் காய்த்துமதி அமுதொழுகப் பழுத்து
  மாத்தகைய பெருஞ்ஜோதி மணிமன்றுள் விளங்கும்
  வண்ணம்ஒரு சிறிதறிய மாட்டாமல் மறைகள்
  ஏத்துவதும் ஏறுவதும் இறங்குவதும் ஆகி
  இருக்கின்ற என்றுணர்ந்தோர் இயம்பிடில்இச் சிறியேன்
  தோத்திரஞ்செய் தம்மைகண்டு மகிழ்ந்திடஅம் மன்றில்
  துலங்கும்அடிப் பெருமையைஎன் சொல்லுவது தோழி.
 • 42. வளம்பெறுவின் அணுக்குள்ளேஒரு மதிஇரவி அழலாய்
  வயங்கியதா ரகையாய்இவ் வகைஅனைத்தும் தோற்றும்
  தளம்பெறுசிற் சொலிதபரா சத்திமயம் ஆகித்
  தனித்தசத்தி மான்ஆகித் தத்துவம்எல் லாம்போய்
  உளம்புகுத மணிமன்றில் திருநடம்செய் தருளும்
  ஒருதலைவன் சேவடிச்சிர் உரைப்பவர்எவ் வுலகில்
  அளந்தறியும் எனமறைகள் அரற்றும்எனில் சிறிய
  அடிச்சியுரைத் திடப்படுமோ அறியாய்என் தோழி.
 • 43. பரவியஐங் கருவினிலே பருவசத்தி வயத்தே
  பரைஅதிட்டித் திடநாத விந்துமயக் கத்தே
  விரவியதத் துவஅணுக்கள் ஒன்றோடொன் றாய்ஒன்றி
  விளங்கஅவற் றடிநடுவீ றிவற்றினில்மூ விதமாய்
  உரவியலுற் றுயிர்இயக்கி அறிவைஅறி வித்தே
  ஓங்குதிரு அம்பலத்தில் ஒளிநடனம் புரியும்
  தரவியலிற் றிதுஎனயார் தெரிந்துரைப்பார் சிறிய
  தமியள்உரைத் திடுந்தரமோ சாற்றாய்என் தோழி.
 • 44. சோதிமலை ஒருதலையில் சோதிவடி வாகிச்
  சூழ்ந்தமற்றோர் தலைஞான சொரூபமய மாகி
  ஓதியவே றொருதலையில் உபயவண்ணம் ஆகி
  உரைத்திடும்ஐங் கருவகைக்கோர் முப்பொருளும் உதவி
  ஆதிநடு அந்தம்இலா ஆனந்த உருவாய்
  அம்பலத்தே ஆடுகின்ற அடிஇணையின் பெருமை
  வேதியனும் திருமாலும் உருத்திரளும் அறியார்
  விளைவறியேன் அறிவேனோ விளம்பாய்என் தோழி.
 • 45. பூஒன்றே முப்பூஐம் பூஎழுபூ நவமாம்
  பூஇருபத் தைஐம்பூவாய்ப் பூத்துமலர்ந் திடவும்
  நான்ஒன்று மணம்வேறு வணம்வேறு வேறா
  நண்ணிவிளங் குறவும்அதின் நற்பயன்மாத் திரையில்
  மேவொன்றா இருப்பஅதின் நடுநின்று ஞான
  வியன்நடனம் புரிகின்ற விரைமலர்ச்சே வடியின்
  பாஒன்று பெருந்தகைமை உரைப்பவர்ஆர் சிறியேன்
  பகர்ந்திடவல் லுநள் அல்லேன் பாராய்என் தோழி.

  • 360. பணம்புரிந்த - பி. இரா. பதிப்பு.
  • 361. மற்றவர்கள் - ச. மு. க. பதிப்பு.
  • 362. இந்தவெளி - பி. இரா. பதிப்பு.
  • 363. திண்மையுளே திண்மை - முதற்பதிப்பு, பொ. சு. பதிப்பு.தண்மையுளே திண்மை - பி. இரா. பதிப்பு.திண்மையுளே தண்மை - ச. மு. க. பதிப்பு.
  • 364. திருவில்ஒளி - பி. இரா. திருவிலொளி என்றும் பாடம் - ச. மு. க. அடிக்குறிப்பு.

திருவடிப் பெருமை // திருவடிப் பெருமை

No audios found!