திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
இறைவரவு இயம்பல்
iṟaivaravu iyampal
உலகர்க்கு உய்வகை கூறல்
ulakarkku uyvakai kūṟal
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

103. தலைவி கூறல்
talaivi kūṟal

  எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  திருச்சிற்றம்பலம்
 • 1. தந்தேகம் எனக்களித்தார் தம்அருளும் பொருளும்
  தம்மையும்இங் கெனக்களித்தார் எம்மையினும் பிரியார்
  எந்தேகம் அதிற்புகுந்தார் என்உளத்தே இருந்தார்
  என்உயிரில் கலந்தநடத் திறையவர்கா லையிலே
  வந்தேஇங் கமர்ந்தருள்வர் ஆதலினால் விரைந்தே
  மாளிகையை அலங்கரித்து வைத்திடுதி இதற்குச்
  சந்தேகம் இல்லைஎன்றன் தனித்தலைவர் வார்த்தை
  சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
 • 2. நன்பாட்டு மறைகளுக்கும் மால்அயர்க்கும் கிடையார்
  நம்அளவில் கிடைப்பாரோ என்றுநினைத் தேங்கி
  என்பாட்டுக் கிருந்தேனை வலிந்துகலந் தணைந்தே
  இன்பமுறத் தனிமாலை இட்டநடத் திறைவர்
  முன்பாட்டுக் காலையிலே வருகுவர்மா ளிகையை
  முழுதும்அலங் கரித்திடுக ஐயுறவோ டொருநீ
  தன்பாட்டுக் கிருந்துளறேல் ஐயர்திரு வார்த்தை
  சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
 • 3. முன்பாட்டுக் காலையிலே வருகுவர்என் கணவர்
  மோசம்இலை மோசம்என மொழிகின்றார் மொழிக
  பின்பாட்டுக் காலையிலே நினைத்தஎலாம் முடியும்
  பிசகிலைஇம் மொழிசிறிதும் பிசகிலைஇவ் வுலகில்
  துன்பாட்டுச் சிற்றினத்தார் சிறுமொழிகேட் டுள்ளம்
  துளங்கேல்நம் மாளிகையைச் சூழஅலங் கரிப்பாய்
  தன்பாட்டுத் திருப்பொதுவில் நடத்திறைவர் ஆணை
  சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
 • 4. உள்ளுண்ட உண்மைஎலாம் நான்அறிவேன் என்னை
  உடையபெருந் தகைஅறிவார் உலகிடத்தே மாயைக்
  கள்ளுண்ட சிற்றினத்தார் யாதறிவார் எனது
  கணவர்திரு வரவிந்தக் காலையிலாம் கண்டாய்
  நள்ளுண்ட மாளிகையை மங்கலங்கள் நிரம்ப
  நன்குபுனைந் தலங்கரிப்பாய் நான்மொழிந்த மொழியைத்
  தள்ளுண்டிங் கையமுறேல் நடத்திறைவர் ஆணை
  சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
 • 5. என்னுடைய தனிக்கணவர் அருட்ஜோதி உண்மை
  யான்அறிவேன் உலகவர்கள் எங்ஙனம்கண் டறிவார்
  உன்னல்அற உண்ணுதற்கும் உறங்குதற்கும் அறிவார்
  உலம்புதல்கேட் டையமுறேல் ஓங்கியமா ளிகையைத்
  துன்னுறும்மங் கலம்விளங்க அலங்கரிப்பாய் இங்கே
  தூங்குதலால் என்னபலன் சோர்வடையேல் பொதுவில்
  தன்னுடைய நடம்புரியும் தலைவர்திரு ஆணை
  சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
 • 6. என்னைமண மாலைஇட்டார் என்னுயிரில் கலந்தார்
  எல்லாம்செய் வல்லசித்தர் எனக்கறிவித் ததனை
  இன்னஉல கினர்அறியார் ஆதலினால் பலவே
  இயம்புகின்றார் இயம்புகநம் தலைவர்வரு தருணம்
  மன்னியகா லையில்ஆகும் மாளிகையை விரைந்து
  மங்கலங்கள் புனைந்திடுக மயங்கிஐயம் அடையேல்
  தன்நிகர்தா னாம்பொதுவில் நடம்புரிவார் ஆணை
  சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
 • 7. கிளைஅனந்த மறையாலும் நிச்சயிக்கக் கூடாக்
  கிளர்ஒளியார் என்அளவில் கிடைத்ததனித் தலைவர்
  அளையஎனக் குணர்த்தியதை யான்அறிவேன் உலகர்
  அறிவாரோ அவர்உரைகொண் டையமுறேல் இங்கே
  இளைவடையேன் மாளிகையை மங்கலங்கள் நிரம்ப
  இனிதுபுனைந் தலங்கரிப்பாய் காலைஇது கண்டாய்
  தளர்வறச்சிற் றம்பலத்தே நடம்புரிவார் ஆணை
  சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
 • 8. ஆர்அறிவார் எல்லாம்செய் வல்லவர்என் உள்ளே
  அறிவித்த உண்மையைமால் அயன்முதலோர் அறியார்
  பார்அறியா தயல்வேறு பகர்வதுகேட் டொருநீ
  பையுளொடும் ஐயமுறேல் காலைஇது கண்டாய்
  நேர்உறநீ விரைந்துவிரைந் தணிபெறமா ளிகையை
  நீடஅலங் கரிப்பாய்உள் நேயமொடு களித்தே
  தாரகமிங் கெனக்கான நடத்திறைவர் ஆணை
  சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
 • 9. ஐயர்எனக் குள்ளிருந்திங் கறிவித்த வரத்தை
  யார்அறிவார் நான்அறிவேன் அவர்அறிவார் அல்லால்
  பொய்உலகர் அறிவாரோ புல்லறிவால் பலவே
  புகல்கின்றார் அதுகேட்டுப் புந்திமயக் கடையேல்
  மெய்யர்எனை ஆளுடையார் வருகின்ற தருணம்
  மேவியது மாளிகையை அலங்கரிப்பாய் விரைந்தே
  தையல்ஒரு பாலுடைய நடத்திறைவர் ஆணை
  சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
 • 10. உடையவர்என் உளத்திருந்தே உணர்வித்த வரத்தை
  உலகவர்கள் அறியார்கள் ஆதலினால் பலவே
  இடைபுகல்கின் றார்அதுகேட் டையமுறேல் இங்கே
  இரவுவிடிந் ததுகாலை எய்தியதால் இனியே
  அடைவுறநம் தனித்தலைவர் தடையறவந் தருள்வர்
  அணிபெறமா ளிகையைவிரைந் தலங்கரித்து மகிழ்க
  சடையசையப் பொதுநடஞ்செய் இறைவர்திரு வார்த்தை
  சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.

தலைவி கூறல் // தலைவி கூறல்

No audios found!