திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
குறைஇரந்த பத்து
kuṟaiiranta pattu
ஆற்றா முறை
āṟṟā muṟai
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

009. ஜீவசாட்சி மாலை
jīvasāṭsi mālai

    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. பண்ஏறும் மொழிஅடியர் பரவி வாழ்த்தும்
    பாதமலர் அழகினைஇப் பாவி பார்க்கில்
    கண்ஏறு படும்என்றோ கனவி லேனும்
    காட்டென்றால் காட்டுகிலாய் கருணை ஈதோ
    விண்ஏறும் அரிமுதலோர்க் கரிய ஞான
    விளக்கேஎன் கண்ணேமெய் வீட்டின் வித்தே
    தண்ஏறு பொழில்தணிகை மணியே ஜீவ
    சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
  • 2. பண்டுமன துவந்துகுணம் சிறிதும் இல்லாப்
    பாவியேன் தனைஆண்டாய் பரிவால் இன்று
    கொண்டுகுலம் பேசுதல்போல் எளியேன் குற்றம்
    குறித்துவிடில் என்செய்கேன் கொடிய னேனைக்
    கண்டுதிருத் தொண்டர்நகை செய்வார் எந்தாய்
    கைவிடேல் உன்ஆணை காண்முக் காலும்
    தண்துளவன் புகழ்தணிகை மணியே ஜீவ
    சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
  • 3. புன்புலைய வஞ்சகர்பால் சென்று வீணே
    புகழ்ந்துமனம் அயர்ந்துறுகண் பொருந்திப் பொய்யாம்
    வன்புலைய வயிறோம்பிப் பிறவி நோய்க்கு
    மருந்தாய நின்அடியை மறந்தேன் அந்தோ
    இன்புலைய உயிர்கொள்வான் வரில்என் பால்அவ்
    வியமனுக்கிங் கென்சொல்கேன் என்செய் கேனே
    தன்புகழ்காண் அருந்தணிகை மணியே ஜீவ
    சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
  • 4. பெருங்களப முலைமடவார் என்னும் பொல்லாப்
    பேய்க்கோட்பட் டாடுகின்ற பித்த னேனுக்
    கிரும்புலவர்க் கரியதிரு அருள்ஈ வாயேல்
    என்சொலார்4 அடியர்அதற் கெந்தாய் எந்தாய்
    கரும்பின்இழிந் தொழுகும்அருள் சுவையே முக்கண்
    கனிகனிந்த தேனேஎன் கண்ணே ஞானம்
    தரும்புனிதர் புகழ்தணிகை மணியே ஜீவ
    சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
  • 5. கல்அளவாம் நெஞ்சம்என வஞ்ச மாதர்
    கண்மாயம் எனும்கயிற்றால் கட்டு வித்துச்
    சொல்அளவாத் துன்பம்எனும் கடலில் வீழ்த்தச்
    சோர்கின்றேன் அந்தோநல் துணைஓன் றில்லேன்
    மல்அளவாய்ப் பவம்மாய்க்கும் மருந்தாம் உன்றன்
    மலர்ப்பாதப் புணைதந்தால் மயங்கேன் எந்தாய்
    சல்லம்5 உலாத் தரும்தணிகை மணியே ஜீவ
    சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
  • 6. அன்னைமுத லாம்பந்தத் தழுங்கி நாளும்
    அலைந்துவயி றோம்பிமனம் அயர்ந்து நாயேன்
    முன்னைவினை யாற்படும்பா டெல்லாம் சொல்லி
    முடியேன்செய் பிழைகருதி முனியேல் ஐயா
    பொன்னைநிகர் அருட்குன்றே ஒன்றே முக்கட்
    பூமணமே நறவேநற் புலவர் போற்றத்
    தன்னைநிகர் தரும்தணிகை மணியே ஜீவ
    சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
  • 7. பன்னரும்வன் துயரால்நெஞ் சழிந்து நாளும்
    பதைத்துருகி நின்அருட்பால் பருகக் கிட்டா
    துன்னரும்பொய் வாழ்க்கைஎனும் கானத் திந்த
    ஊர்நகைக்கப் பாவிஅழல் உணர்ந்தி லாயோ
    என்னருமை அப்பாஎன் ஐயா என்றன்
    இன்னுயிர்க்குத் தலைவாஇங் கெவர்க்கும் தேவா
    தன்னியல்சீர் வளர்தணிகை மணியே ஜீவ
    சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
  • 8. கோவேநின் பதம்துதியா வஞ்ச நெஞ்சக்
    கொடியோர்பால் மனவருத்தம் கொண்டாழ் கின்றேன்
    சாவேனும் அல்லன்நின்பொன் அருளைக் காணேன்
    தமியேனை உய்யும்வண்ணம் தருவ தென்றோ
    சேவேறும் சிவபெருமான் அரிதின் ஈன்ற
    செல்வமே அருள்ஞானத் தேனே அன்பர்
    தாவேதம் தெறும்தணிகை மணியே ஜீவ
    சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
  • 9. ஓயாது வரும்மிடியான் வஞ்சர் பால்சென்
    றுளங்கலங்கி நாணிஇரந் துழன்றெந் நாளும்
    மாயாத துயரடைந்து வருந்தித் தெய்வ
    மருந்தாய நின்அடியை மறந்திட் டேனே
    தாயாகித் தந்தையாய்த் தமராய் ஞான
    சற்குருவாய்த் தேவாகித் தழைத்த ஒன்றே
    சாயாத புகழ்த்தணிகை மணியே ஜீவ
    சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
  • 10. மின்னாளும் இடைமடவார் அல்கு லாய
    வெங்குழியில் வீழ்ந்தாழ்ந்து மெலிந்தேன் அல்லால்
    எந்நாளும் உனைப்போற்றி அறியேன் என்னே
    ஏழைமதி கொண்டேன்இங் கென்செய் கேனே
    அன்னாய்என அப்பாஎன் றரற்றும் அன்பர்க்
    காரமுதே அருட்கடலே அமரர் கோவே
    தன்னார்வத் தமர்தணிகை மணியே ஜீவ
    சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
  • 11. வன்சொலினார் இடைஅடைந்து மாழ்கும் இந்த
    மாபாவி யேன்குறையை வகுத்து நாளும்
    என்சொலினும் இரங்காமல் அந்தோ வாளா
    இருக்கின்றாய் என்னேநின் இரக்கம் எந்தாய்
    இன்செல்அடி யவர்மகிழும் இன்ப மேஉள்
    இருள்அகற்றும் செழுஞ்சுடரே எவர்க்கும் கோவே
    தன்சொல்வளர் தரும்தணிகை மணியே ஜீவ
    சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
  • 12. மீளாத வன்துயர்கொண் டீனர் தம்மால்
    மெலிந்துநினை அழைத்தலறி விம்மா நின்றேன்
    கேளாத கேள்விஎலாம் கேட்பிப் பாய்நீ
    கேட்கிலையோ என்அளவில் கேள்வி இன்றோ
    மாளாத தெண்டர்அக இருளை நேக்கும்
    மதியேசிற் சுகஞான மழைபெய் விண்ணே
    தாளாளர் புகழ்தணிகை மணியே ஜீவ
    சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
  • 13. மண்ணினால் மங்கையரால் பொருளால் அந்தோ
    வருந்திமனம் மயங்கிமிக வாடி நின்றேன்
    புண்ணியா நின்அருளை இன்னும் காணேன்
    பொறுத்துமுடி யேன்துயரம் புகல்வ தென்னே
    எண்ணினால் அளப்பரிய பெரிய மோன
    இன்பமே அன்பர்தம திதயத் தோங்கும்
    தண்ணினால் பொழில்தணிகை மணியே ஜீவ
    சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
  • 14. வஞ்சகராம் கானின்இடை அடைந்தே நெஞ்சம்
    வருந்திஉறு கண்வெயிலால் மாழாந் தந்தோ
    தஞ்சம்என்பார் இன்றிஒரு பாவி நானே
    தனித்தருள்நீர்த் தாகம்உற்றேன் தயைசெய் வாயோ
    செஞ்சொல்மறை முடிவிளக்கே உண்மை ஞானத்
    தேறலே முத்தொழில்செய் தேவர் தேவே
    சஞ்சலம்நீத் தருள்தணிகை மணியே ஜீவ
    சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
  • 15. வாழாத வண்ணம்எனைக் கெடுக்கும் பொல்லா
    வஞ்சகநெஞ் சால்உலகில் மாழாந் தந்தோ
    பாழான மடந்தையர்பால் சிந்தை வைக்கும்
    பாவியேன் முகம்பார்க்கப் படுவ தேயோ
    ஏழாய வன்பவத்தை நீக்கும் ஞான
    இன்பமே என்அரசே இறையே சற்றும்
    தாழாத புகழ்த்தணிகை மணியே ஜீவ
    சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
  • 16. உளந்தளர விழிசுருக்கும் வஞ்சர் பால்சென்
    றுத்தமநின் அடியைமறந் தோயா வெய்யில்
    இளந்தளிர்போல் நலிந்திரந்திங் குழலும் இந்த
    ஏழைமுகம் பார்த்திரங்காய் என்னே என்னே
    வளந்தருசற் குணமலையே முக்கட் சோதி
    மணியின்இருந் தொளிர்ஒளியே மயிலூர் மன்னே
    தளந்தரும்பூம் பொழில்தணிகை மணியே ஜீவ
    சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
  • 17. கல்லாத வஞ்சகர்பால் சென்று வீணாள்
    கழித்து நிற்கும் கடையன்இவன் கருணை இல்லாப்
    பொல்லாத பாவிஎன எண்ணி என்னைப்
    புறம்போக்கில் ஐயாயான் புரிவ தென்னே
    எல்லாம்செய் வல்லவனே தேவர் யார்க்கும்
    இறைவனே மயில்ஏறும் எம்பி ரானே
    சல்லாப வளத்தணிகை மணியே ஜீவ
    சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
  • 18. கன்னேய நெஞ்சகர்மாட் டணுகி ஐயோ
    கரைந்துருகி எந்தாய்நின் கருணை காணா
    தென்னேஎன் றேங்கிஅழும் பாவி யேனுக்
    கிருக்கஇடம் இலையோநின் இதயங் கல்லோ
    பொன்னேஎன் உயிர்க்குயிராய்ப் பொருந்து ஞான
    பூரணமே புண்ணியமே புனித வைப்பே
    தன்னேரில் தென்தணிகை மணியே ஜீவ
    சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
  • 19. பாவவினைக் கோர்இடமாம் மடவார் தங்கள்
    பாழ்ங்குழிக்கண் வீழமனம் பற்றி அந்தோ
    மாவல்வினை யுடன்மெலிந்திங் குழல்கின் றேன்நின்
    மலர்அடியைப் போற்றேன்என் மதிதான் என்னே
    தேவர்தொழும் பொருளேஎன் குலத்துக் கெல்லாம்
    தெய்வமே அடியர்உளம் செழிக்கும் தேனே
    தாவகன்றோர் புகழ்தணிகை மணியே ஜீவ
    சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
  • 20. கன்னியர்தம் மார்பிடங்கொண் டலைக்கும் புன்சீழ்க்
    கட்டிகளைக் கருதிமனம் கலங்கி வீணே
    அன்னியனாய் அலைகின்றேன் மயக்கம் நீக்கி
    அடிமைகொளல் ஆகாதோ அருட்பொற் குன்றே
    சென்னிமிசைக் கங்கைவைத்தோன் அரிதில் பெற்ற
    செல்வமே என்புருக்கும் தேனே எங்கும்
    தன்னியல்கொண் டுறும்தணிகை மணியே ஜீவ
    சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
  • 21. உள்ளமனக் குரங்காட்டித் திரியும் என்றன்
    உளவறிந்தோ ஐயாநீ உன்னைப் போற்றார்
    கள்ளமனக் குரங்குகளை ஆட்ட வைத்தாய்
    கடையனேன் பொறுத்துமுடி கில்லேன் கண்டாய்
    தெள்ளமுதப் பெருங்கடலே தேனே ஞானத்
    தெளிவேஎன் தெய்வமே தேவர் கோவே
    தள்ளரிய புகழ்த்தணிகை மணியே ஜீவ
    சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
  • 22. வந்தாள்வாய் ஐயாவோ வஞ்சர் தம்பால்
    வருந்துகின்றேன் என்றலறும் மாற்றம் கேட்டும்
    எந்தாய்நீ இரங்காமல் இருக்கின் றாயால்
    என்மனம்போல் நின்மனமும் இருந்த தேயோ
    கந்தாஎன் றுரைப்பவர்தம் கருத்துள் ஊறும்
    கனிரசமே கரும்பேகற் கண்டே நற்சீர்
    தந்தாளும் திருத்தணிகை மணியே ஜீவ
    சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
  • 23. ஊர்ஆதி இகழ்மாயக் கயிற்றால் கட்டுண்
    டோய்ந்தலறி மனம்குழைந்திங் குழலு கின்றேன்
    பார்ஆதி அண்டம்எலாம் கணத்தில் காண்போய்
    பாவியேன் முகவாட்டம் பார்த்தி லாயோ
    சீர்ஆதி பகவன்அருட் செல்வ மேஎன்
    சிந்தைமலர்ந் திடஊறுந் தேனே இன்பம்
    சார்ஆதி மலைத்தணிகை மணியே ஜீவ
    சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
  • 24. வாஎன்பார் இன்றிஉன தன்பர் என்னை
    வஞ்சகன்என் றேமறுத்து வன்க ணாநீ
    போஎன்பார் ஆகில்எங்குப் போவேன் அந்தோ
    பொய்யனேன் துணைஇன்றிப் புலம்பு வேனே
    கோஎன்பார்க் கருள்தருமக் குன்றே ஒன்றே
    குணங்குறிஅற் றிடஅருளும் குருவே வாழ்க்கைத்
    தாஎன்பார் புகழ்த்தணிகை மணியே ஜீவ
    சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
  • 25. மாயைநெறி யாம்உலக வாழ்க்கை தன்னில்
    வருந்திநினை அழைத்தலறி மாழ்கா நின்றேன்
    தாயைஅறி யாதுவரும் சூல்உண் டோஎன்
    சாமிநீ அறியாயோ தயைஇல் லாயோ
    பேயைநிகர் பாவிஎன நினைந்து விட்டால்
    பேதையேன் என்செய்கேன் பெருஞ்சீர்க் குன்றே
    சாயைகடல் செறிதணிகை மணியே ஜீவ
    சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
  • 26. மின்னைநிகர்ந் தழிவாழ்க்கைத் துயரால் நெஞ்சம்
    மெலிந்துநின தருள்பருக வேட்டுநின்றேன்
    என்னைஇவன் பெரும்பாவி என்றே தள்ளில்
    என்செய்கேன் தான்பெறும்சேய் இயற்றும் குற்றம்
    அன்னைபொறுத் திடல்நீதி அல்ல வோஎன்
    ஐயாவே நீபொறுக்கல் ஆகா தோதான்
    தன்னைநிகர் தரும்தணிகை மணியே ஜீவ
    சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
  • 27. முந்தைவினை யால்நினது வழியில் செல்லா
    மூடனேன் தனைஅன்பர் முனிந்து பெற்ற
    தந்தைவழி நில்லாத பாவி என்றே
    தள்ளிவிடில் தலைசாய்த்துத் தயங்கு வேனே
    எந்தைநின தருள்சற்றே அளித்தால் வேறோர்
    எண்ணமிலேன் ஏகாந்தத் திருந்து வாழ்வேன்
    சந்தனவான் பொழில்தணிகை மணியே ஜீவ
    சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
  • 28. பன்னகநொந் துறுவஞ்ச உலகில் நின்று
    பரதவித்துன் அருட்கெதிர்போய்ப் பார்க்கின் றேன்நின்
    பொன்னருளைப் புணர்ந்துமன மகிழ்ந்து வாழப்
    புண்ணியனே நாயேற்குப் பொருத்தம் இன்றோ
    பின்னைஒரு துணைஅறியேன் தனியே விட்டால்
    பெருமநினக் கழகேயோ பேதை யாம்என்
    தன்னைஅளித் தருள்தணிகை மணியே ஜீவ
    சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

    • 4. சொல்வார். தொ.வே. முதற்பதிப்பு.

ஜீவசாட்சி மாலை // ஜீவசாட்சி மாலை