Home
|
vallalar.org
|
thiruarutpa.org
|
vallalarspace.org
|
திருமுறைகள்
Thirumurai
1
2
3
4
5
6
அருள் நாம விளக்கம்
aruḷ nāma viḷakkam
இரண்டாம் திருமுறை / Second Thirumurai
001. புண்ணிய விளக்கம்
puṇṇiya viḷakkam
பொது
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1.
பாடற் கினிய வாக்களிக்கும் பாலும் சோறும் பரிந்தளிக்கும்
கூடற் கினிய அடியவர்தம் கூட்டம் அளிக்கும் குணம்அளிக்கும்
ஆடற் கினிய நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
தேடற் கினிய சீர் அளிக்கும் சிவாய நமஎன் றிடுநீறே.
2.
கருமால் அகற்றும் இறப்பதனைக் களையு நெறியும் காட்டுவிக்கும்
பெருமால் அதனால் மயக்குகின்ற பேதை மடவார் நசைஅறுக்கும்
அருமால் உழந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
திருமால் அயனும் தொழுதேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே.
3.
வெய்ய வினையின் வேர்அறுக்கும் மெய்ம்மை ஞான வீட்டிலடைந்
துய்ய அமல நெறிகாட்டும் உன்னற் கரிய உணர்வளிக்கும்
ஐயம் அடைந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
செய்ய மலர்க்கண் மால்போற்றும் சிவாய நமஎன் றிடுநீறே.
4.
கோல மலர்த்தாள் துணைவழுத்தும் குலத்தொண் டடையக் கூட்டுவிக்கும்
நீல மணிகண் டப்பெருமான் நிலையை அறிவித் தருளளிக்கும்
ஆல வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
சீலம் அளிக்கும் திருஅளிக்கும் சிவாய நமஎன் றிடுநீறே.
5.
வஞ்சப் புலக்கா டெறியஅருள் வாளும் அளிக்கும் மகிழ்வளிக்கும்
கஞ்சத் தவனும் கரியவனும் காணற் கரிய கழல்அளிக்கும்
அஞ்சில் புகுந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
செஞ்சொல் புலவர் புகழ்ந்தேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே.
6.
கண்கொள் மணியை முக்கனியைக் கரும்பைக் கரும்பின் கட்டிதனை
விண்கொள் அமுதை நம்அரசை விடைமேல் நமக்குத் தோற்றுவிக்கும்
அண்கொள் வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
திண்கொள் முனிவர் சுரர்புகழும் சிவாய நமஎன் றிடுநீறே.
7.
நோயை அறுக்கும் பெருமருந்தை நோக்கற் கரிய நுண்மைதனைத்
தூய விடைமேல் வரும்நமது சொந்தத் துணையைத் தோற்றுவிக்கும்
ஆய வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
சேய அயன்மால் நாடரிதாம் சிவாய நமஎன் றிடுநீறே.
8.
எண்ண இனிய இன்னமுதை இன்பக் கருணைப் பெருங்கடலை
உண்ண முடியாச் செழுந்தேனை ஒருமால் விடைமேல் காட்டுவிக்கும்
அண்ண வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
திண்ண மளிக்கும் திறம்அளிக்கும் சிவாய நமஎன் றிடுநீறே.
9.
சிந்தா மணியை நாம்பலநாள் தேடி எடுத்த செல்வமதை
இந்தார் வேணி முடிக்கனியை இன்றே விடைமேல் வரச்செயும்காண்
அந்தோ வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
செந்தா மரையோன் தொழுதேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே.
10.
உள்ளத் தெழுந்த மகிழ்வைநமக் குற்ற துணையை உள்உறவைக்
கொள்ளக் கிடையா மாணிக்கக் கொழுந்தை விடைமேல் கூட்டுவிக்கும்
அள்ளல் துயரால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
தெள்ளக் கடலான் புகழ்ந்தேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே.
11.
உற்ற இடத்தில் உதவநமக் குடையோர் வைத்த வைப்பதனைக்
கற்ற மனத்தில் புகுங்கருணைக் கனியை விடைமேல் காட்டுவிக்கும்
அற்றம் அடைந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
செற்றம் அகற்றித் திறல் அளிக்கும் சிவாய நமஎன் றிடுநீறே.
புண்ணிய விளக்கம் // புண்ணிய விளக்கம்
0834-025-2-Punniya Vilakkam.mp3
Download