திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
சிவ சிதம்பர சங்கீர்த்தனம்
siva sitampara saṅkīrttaṉam
கலைமகளார் திருப்பதிகம்
kalaimakaḷār tiruppatikam
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

100. அம்மை திருப்பதிகம்
ammai tiruppatikam

    பதினான்குசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. உலகின்உயிர் வகைஉவகை யுறஇனிய அருளமுதம்
    உதவும்ஆ னந்த சிவையே
    உவமைசொல அரியஒரு பெரியசிவ நெறிதனை
    உணர்த்துபே ரின்ப நிதியே
    இலகுபர அபரநிலை இசையும்அவ ரவர்பருவம்
    இயலுற உளங்கொள் பரையே
    இருமைநெறி ஒருமையுற அருமைபெறு பெருமைதனை
    ஈந்தெனை அளித்த அறிவே
    கலகமுறு சகசமல இருளகல வெளியான
    காட்சியே கருணை நிறைவே
    கடகரட விமலகய முகஅமுதும் அறுமுகக்
    கநஅமுதும் உதவு கடலே
    அலகில்வளம் நிறையும்ஒரு தில்லையம் பதிமேவும்
    அண்ணலார் மகிழும் மணியே
    அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
    வானந்த வல்லி உமையே.
  • 2. கற்பவைஎ லாங்கற்றுள் உணர்பவைஎ லாமனக்
    கரிசற உணர்ந்து கேட்டுக்
    காண்பவைஎ லாங்கண்டு செய்பவைஎ லாஞ்செய்து
    கருநெறி அகன்ற பெரியோர்
    பொற்பவைஎ லாஞ்சென்று புகல்பவைஎ லாங்கொண்டு
    புரிபவை எலாம்பு ரிந்துன்
    புகழவைஎ லாம்புகழ்ந் துறுமவைஎ லாம்உறும்
    போதவை எலாம்அ ருளுவாய்
    நிற்பவைஎ லாம்நிற்ப அசைபவைஎ லாம்அசைய
    நிறைபவை எலாஞ்செய் நிலையே
    நினைபவைஎ லாம்நெகிழ நெறிஅவைஎ லாம்ஓங்கும்
    நித்தியா னந்த வடிவே
    அற்புடைய அடியர்புகழ் தில்லையம் பதிமருவும்
    அண்ணலார் மகிழும் மணியே
    அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
    வானந்த வல்லி உமையே.
  • 3. இக்கணம்இ ருந்தஇம் மெய்யென்ற பொய்க்கூரை
    இனிவரு கணப்போ திலே
    இடியாதி ருக்குமோ இடியுமோ என்செய்கோம்
    என்செய்கோம் இடியும் எனில்யாம்
    தெக்கணம் நடக்கவரும் அக்கணம் பொல்லாத
    தீக்கணம் இருப்ப தென்றே
    சிந்தைநைந் தயராத வண்ணம்நல் அருள்தந்த
    திகழ் பரம சிவசத்தியே
    எக்கணமும் ஏத்தும்ஒரு முக்கணி பரம்பரை
    இமாசல குமாரி விமலை
    இறைவிபை ரவிஅமலை எனமறைகள் ஏத்திட
    இருந்த ருள்தருந் தேவியே
    அக்கணுதல் எம்பிரான் தில்லையம் பதிமருவும்
    அண்ணலார் மகிழும் மணியே
    அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
    வானந்த வல்லி உமையே.
  • 4. பொய்யாத மொழியும்மயல் செய்யாத செயலும்வீண்
    போகாத நாளும் விடயம்
    புரியாத மனமும்உட் பிரியாத சாந்தமும்
    புந்திதள ராத நிலையும்
    எய்யாத வாழ்வும்வே றெண்ணாத நிறைவும்நினை
    என்றும்மற வாத நெறியும்
    இறவாத தகவும்மேற் பிறவாத கதியும்இவ்
    ஏழையேற் கருள்செய் கண்டாய்
    கொய்யாது குவியாது குமையாது மணம்வீசு
    கோமளத் தெய்வ மலரே
    கோவாத முத்தமே குறையாத மதியமே
    கோடாத மணிவி ளக்கே
    ஐயான னம்கொண்ட தில்லையம் பதிமருவும்
    அண்ணலார் மகிழும் மணியே
    அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
    வானந்த வல்லி உமையே.
  • 5. பவமான எழுகடல் கடந்துமேற் கதியான
    பதிநிலை அணைந்து வாழப்
    பகலான சகலமுடன் இரவான கேவலப்
    பகையுந் தடாத படிஓர்
    தவமான கலனில்அருள் மீகாம னால்அலது
    தமியேன் நடத்த வருமோ
    தானா நடக்குமோ என்செய்கேன் நின்திருச்
    சரணமே சரணம் அருள்வாய்
    உவமான மற்றபர சிவமான சுத்தவெளி
    உறவான முத்தர் உறவே
    உருவான அருவான ஒருவான ஞானமே
    உயிரான ஒளியின் உணர்வே
    அவமான நீக்கிஅருள் தில்லையம் பதிமருவும்
    அண்ணலார் மகிழும் மணியே
    அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
    வானந்த வல்லி உமையே.
  • 6. சூரிட்ட நடையில்என் போரிட்ட மனதைநான்
    சொல்லிட்ட முடன்அ ணைத்துத்
    துன்றிட்ட மோனம்எனும் நன்றிட்ட அமுதுண்டு
    சும்மா இருத்தி என்றால்
    காரிட்டி தற்குமுன் யாரிட்ட சாபமோ
    கண்டிலேன் அம்மம் மஓர்
    கணமேனும் நில்லாது பொல்லாது புவியில்
    கறங்கெ னச்சுழல் கின்றதே
    தாரிட்ட நீஅருள் சீரிட்டி டாய்எனில்
    தாழ்பிறவி தன்னில் அதுதான்
    தன்னைவீழ்த் துவதன்றி என்னையும் வீழ்த்தும்இத்
    தமிய னேன்என் செய்குவேன்
    ஆறிட்ட சடையாளர் தில்லையம் பதிமருவும்
    அண்ணலார் மகிழும் மணியே
    அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
    வானந்த வல்லி உமையே.
  • 7. மாயைஎனும் இரவில்என் மனையகத் தேவிடய
    வாதனைஎ னுங்கள் வர்தாம்
    வந்துமன அடிமையை எழுப்பிஅவ னைத்தமது
    வசமாக உளவு கண்டு
    மேயமதி எனும்ஒரு விளக்கினை அவித்தெனது
    மெய்ந்நிலைச் சாளி கைஎலாம்
    வேறுற உடைத்துள்ள பொருள்எலாம் கொள்ளைகொள
    மிகநடுக் குற்று நினையே
    நேயம்உற ஓவாது கூவுகின் றேன்சற்றும்
    நின்செவிக் கேற இலையோ
    நீதிஇலை யோதரும நெறியும்இலை யோஅருளின்
    நிறைவும்இலை யோஎன் செய்கேன்
    ஆயமறை முடிநின்ற தில்லையம் பதிமருவும்
    அண்ணலார் மகிழும் மணியே
    அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
    வானந்த வல்லி உமையே.
  • 8. வெவ்வினைக் கீடான காயம்இது மாயம்என
    வேத முதல்ஆ கமம்எலாம்
    மிகுபறைஅ றைந்தும்இது வெயில்மஞ்சள் நிறம்எனும்
    விவேகர் சொற்கேட் டறிந்தும்
    கவ்வைபெறு கடலுலகில் வைரமலை ஒத்தவர்
    கணத்திடை இறத்தல் பலகால்
    கண்ணுறக் கண்டும்இப் புலைஉடலின் மானம்ஓர்
    கடுஅளவும் விடுவ தறியேன்
    எவ்வம்உறு சிறியனேன் ஏழைமதி என்னமதி
    இன்னமதி என்று ணர்கிலேன்
    இந்தமதி கொண்டுநான் எந்தவகை அழியாத
    இன்பநிலை கண்டு மகிழ்வேன்
    அவ்வியம்அ கற்றிஅருள் தில்லையம் பதிமருவும்
    அண்ணலார் மகிழும் மணியே
    அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
    வானந்த வல்லி உமையே.
  • 9. ஒளிமருவும் உனதுதிரு வருள்அணுத் துணையேனும்
    உற்றிடில் சிறுது ரும்பும்
    உலகம் படைத்தல்முதல் முத்தொழில் இயற்றும்என
    உயர்மறைகள் ஓர்அ னந்தம்
    தெளிவுறமு ழக்கஅது கேட்டுநின் திருவடித்
    தியானம் இல்லா மல்அவமே
    சிறுதெய்வ நெறிசெல்லும் மானிடப் பேய்கள்பால்
    சேராமை எற்க ருளுவாய்
    களிமருவும் இமயவரை அரையன்மகள் எனவரு
    கருணைதரு கலாப மயிலே
    கருதும்அடி யவர்இதய கமலமலர் மிசைஅருட்
    கலைகி ளரவளர் அன்னமே
    அளிநறைகொள் இதழிவனை தில்லையம் பதிமருவும்
    அண்ணலார் மகிழும் மணியே
    அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
    வானந்த வல்லி உமையே.
  • 10. நீறணிந் தொளிர்அக்க மணிதரித் துயர்சைவ
    நெறிநின்று னக்கு ரியஓர்
    நிமலமுறும் ஐந்தெழுத் துள்நிலையு றக்கொண்டு
    நின்னடிப் பூசை செய்து
    வீறணிந் தென்றும்ஒரு தன்மைபெறு சிவஞான
    வித்தகர்ப தம்பர வும்ஓர்
    மெய்ச்செல்வ வாழ்க்கையில் விருப்பமுடை யேன்இது
    விரைந்தருள வேண்டும் அமுதே
    பேறணிந் தயன்மாலும் இந்திரனும் அறிவரிய
    பெருமையை அணிந்த அமுதே
    பிரசமலர் மகள்கலைசொல் மகள்விசய மகள்முதல்
    பெண்கள்சிரம் மேவும் மணியே
    ஆறணிந் திடுசடையர் தில்லையம் பதிமருவும்
    அண்ணலார் மகிழும் மணியே
    அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
    வானந்த வல்லி உமையே.

அம்மை திருப்பதிகம் // அம்மை திருப்பதிகம்

No audios found!