திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
சல்லாப லகரி
sallāpa lakari
தலைமகளின் முன்ன முடிபு
talaimakaḷiṉ muṉṉa muṭipu
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

112. வேட்கைக் கொத்து
vēṭkaik kottu

    தலைமகள் பாங்கியொடு கூறல்
    எண்சீர்க் கழிநெடிலடிச் சந்த விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. விண்படைத்த பொழிற்றில்லை183 அம்பலத்தான் எவர்க்கும்
    மேலானான் அன்பருளம் மேவுநட ராஜன்
    பண்படைத்த எனைஅறியா இளம்பருவந் தனிலே
    பரிந்துவந்து மாலையிட்டான் பார்த்தறியான் மீட்டும்
    பெண்படைத்த பெண்களெல்லாம் அவமதித்தே வலது
    பேசுகின்றார் கூசுகின்றேன் பிச்சிஎனல் ஆனேன்
    கண்படைத்தும் குழியில்விழக் கணக்கும்உண்டோ அவன்றன்
    கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ.
  • 2. சீத்தமணி அம்பலத்தான் என்பிராண நாதன்
    சிவபெருமான் எம்பெருமான் செல்வநட ராஜன்
    வாய்த்தஎன்னை அறியாத இளம்பருவந் தனிலே
    மகிழ்ந்துவந்து மாலையிட்டான் மறித்தும்முகம் பாரான்
    ஆய்த்தகலை கற்றுணர்ந்த அணங்கனையார் தமக்குள்
    ஆர்செய்த போதனையோ ஆனாலும் இதுகேள்
    காய்த்தமரம் வளையாத கணக்கும்உண்டோ அவன்றன்
    கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ.
  • 3. என்னுயிரில் கலந்துகலந் தினிக்கின்ற பெருமான்
    என்இறைவன் பொதுவில்நடம் இயற்றும்நட ராஜன்
    தன்னைஅறி யாப்பருவத் தென்னைமணம் புரிந்தான்
    தனைஅறிந்த பருவத்தே எனைஅறிய விரும்பான்
    பின்னைஅன்றி முன்னும்ஒரு பிழைபுரிந்தேன் இல்லை
    பெண்பரிதா பங்காணல் பெருந்தகைக்கும் அழகோ
    கன்னல்என்றால் கைக்கின்ற கணக்கும்உண்டோ அவன்றன்
    கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ.
  • 4. தெருளமுதத் தனியோகர் சிந்தையிலும் ஞானச்
    செல்வர்அறி விடத்தும்நடஞ் செய்யும்நட ராஜன்
    அருளமுதம் அளிப்பன்என்றே அன்றுமணம் புணர்ந்தான்
    அளித்தறியான் அணுத்துணையும் அனுபவித்தும் அறியேன்
    மருளுடையான் அல்லன்ஒரு வஞ்சகனும் அல்லன்
    மனம்இரக்கம் மிகஉடையான் வல்வினையேன் அளவில்
    இருளுடையார் போலிருக்கும் இயல்பென்னை அவன்றன்
    இயல்பறிந்தும் விடுவேனோ இனித்தான்என் தோழீ.
  • 5. சின்மயமாம் பொதுவினிலே தன்மயமாய் நின்று
    திருநடஞ்செய் பெருங்ருணைச் செல்வநட ராஜன்
    என்மயம்நான் அறியாத இளம்பருவந் தனிலே
    என்னைமணம் புரிந்தனன்ஈ தெல்லாரும் அறிவார்
    இன்மயம்இல் லாதவர்போல் இன்றுமணந் தருளான்
    இறைஅளவும் பிழைபுரிந்தேன் இல்லைஅவன் இதயம்
    கன்மயமோ அன்றுசுவைக் கனிமயமே என்னும்
    கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ.
  • 6. என்குணத்தான் எல்லார்க்கும் இறைவன்எல்லாம் வல்லான்
    என்அகத்தும் புறத்தும்உளான் இன்பநட ராஜன்
    பெண்குணத்தை அறியாத இளம்பருவந் தனிலே
    பிச்சேற்றி மணம்புரிந்தான் பெரிதுகளித் திருந்தேன்
    வண்குணத்தால் அனுபவம்நான் அறியநின்ற பொழுதில்
    வந்தறியான் இன்பம்ஒன்றும் தந்தறியான் அவனும்
    வெண்குணத்தான் அல்லன்மிகு நல்லன்எனப் பலகால்
    விழித்தறிந்தும் விடுவேனோ விளம்பாய்என் தோழீ.
  • 7. பொய்யாத புகழுடையான் பொதுவில்நடம் புரிவான்
    புண்ணியர்பால் நண்ணியநற் புனிதநட ராஜன்
    கொய்யாத அரும்பனைய இளம்பருவந் தனிலே
    குறித்துமணம் புரிந்தனன்நான் மறித்தும்வரக் காணேன்
    செய்யாத செய்கைஒன்றும் செய்தறியேன் சிறிதும்
    திருவுளமே அறியும்மற்றென் ஒருஉளத்தின் செயல்கள்
    நையாத என்றன்உயிர் நாதன்அருட் பெருமை
    நானறிந்தும் விடுவேனோ நவிலாய்என் தோழீ.
  • 8. கண்ணனையான் என்னுயிரில் கலந்துநின்ற கணவன்
    கணக்கறிவான் பிணக்கறியான் கருணைநட ராஜன்
    தண்ணனையாம் இளம்பருவந் தன்னில்எனைத் தனித்துத்
    தானேவந் தருள்புரிந்து தனிமாலை புனைந்தான்
    பெண்ணனையார் கண்டபடி பேசவும்நான் கூசாப்
    பெருமையொடும் இருந்தேன்என் அருமைஎலாம் அறிந்தான்
    உண்ணனையா வகைவரவு தாழ்த்தனன்இன் றவன்றன்
    உளம்அறிந்தும் விடுவேனோ உரையாய்என் தோழீ.
  • 9. ஊன்மறந்த உயிரகத்தே ஒளிநிறைந்த ஒருவன்
    உலகமெலாம் உடையவன்என் னுடையநட ராஜன்
    பான்மறந்த சிறியஇனம் பருவமதின் மாலைப்
    பரிந்தணிந்தான் தெரிந்ததனிப் பருவமிதிற் பரியான்
    தான்மறந்தான் எனினும்இங்கு நான்மறக்க மாட்டேன்
    தவத்தேறி அவத்திழியச் சம்மதமும் வருமோ
    கோன்மறந்த குடியேபோல் மிடியேன்நான் அவன்றன்
    குணம்அறிந்தும் விடுவேனோ கூறாய்என் தோழீ.
  • 10. தனித்தபர நாதமுடித் தலத்தின்மிசைத் தலத்தே
    தலைவரெலாம் வணங்கநின்ற தலைவன்நட ராசன்
    இனித்தசுகம் அறிந்துகொளா இளம்பருவந் தனிலே
    என்புருவ நடுஇருந்தான் பின்புகண்டேன் இல்லை
    அனித்தம்இலா இச்சரிதம் யார்க்குரைப்பேன் அந்தோ
    அவன்அறிவான் நான்அறிவேன் அயலறிவார் உளரோ
    துனித்தநிலை விடுத்தொருகால் சுத்தநிலை அதனில்
    சுகங்கண்டும் விடுவேனோ சொல்லாய்என் தோழீ.

    • 183. இறுக்கம் இரத்தின முதலியார்க்கு 26-11-1866 இல் வரைந்த திருமுகத்தில் 'விண்படைத்த பொழிற்றில்லை அம்பலத்தான் எவர்க்கு மேலானா னன்பருள மேவு நடராஜன் எனல் வேண்டும் ' என வள்ளற்பெருமான் திருத்தமொன்றை அருளியுள்ளார். திரு அருட்பா உரைநடைப்பகுதி, ஊரன் அடிகள் பதிப்பு பக்கம், 399 காண்க. எனினும் 1867 தொ. வே. முதற் பதிப்பில் ' விண்படைத்த புகழ்த்தில்லை ' என்றே அச்சாகியுள்ளது. பின்வந்த பதிப்புகளிலும் அவ்வாறே. ஆ. பா. மட்டும் பெருமானின் திருத்தத்தைப் பின்பற்றி ' விண் படைத்த பொழிற்றில்லை ' எனப் பதிப்பித்துள்ளார்.

வேட்கைக் கொத்து // வேட்கைக் கொத்து

No audios found!