திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
மாயைவலிக் கழுங்கல்
māyaivalik kaḻuṅkal
அடியார் பேறு
aṭiyār pēṟu
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

009. முறையீடு
muṟaiyīṭu

    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. மருந்தறியேன் மணிஅறியேன் மந்திரம்ஒன் றறியேன்
    மதிஅறியேன் விதிஅறியேன் வாழ்க்கைநிலை அறியேன்
    திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான்
    செய்தறியேன் மனமடங்கும் திறத்தினில்ஓர் இடத்தே
    இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன்
    எந்தைபிரான் மணிமன்றம் எய்தஅறி வேனோ
    இருந்ததிசை சொலஅறியேன் எங்ஙனம்நான் புகுவேன்
    யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
  • 2. அகங்காரக் கொடுங்கிழங்கை அகழ்ந்தெறிய அறியேன்
    அறிவறிந்த அந்தணர்பால் செறியும்நெறி அறியேன்
    நகங்கானம் உறுதவர்போல் நலம்புரிந்தும் அறியேன்
    நச்சுமரக் கனிபோல இச்சைகனிந் துழல்வேன்
    மகங்காணும் புலவரெலாம் வந்துதொழ நடிக்கும்
    மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ
    இகங்காணத் திரிகின்றேன் எங்ஙனம்நான் புகுவேன்
    யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
  • 3. கற்குமுறை கற்றறியேன் கற்பனகற் றறிந்த
    கருத்தர்திருக் கூட்டத்தில் களித்திருக்க அறியேன்
    நிற்குநிலை நின்றறியேன் நின்றாரின் நடித்தேன்
    நெடுங்காமப் பெருங்கடலை நீந்தும்வகை அறியேன்
    சிற்குணமா மணிமன்றில் திருநடனம் புரியும்
    திருவடிஎன் சென்னிமிசைச் சேர்க்கஅறி வேனோ
    இற்குணஞ்செய் துழல்கின்றேன் எங்ஙனம்நான் புகுவேன்
    யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
  • 4. தேகமுறு பூதநிலைத் திறம்சிறிதும் அறியேன்
    சித்தாந்த நிலைஅறியேன் சித்தநிலைஅறியேன்
    யோகமுறு நிலைசிறிதும் உணர்ந்தறியேன் சிறியேன்
    உலகநடை யிடைக்கிடந்தே உழைப்பாரில் கடையேன்
    ஆகமுறு திருநீற்றின் ஒளிவிளங்க அசைந்தே
    அம்பலத்தில் ஆடுகின்ற அடியைஅறி வேனோ
    ஏகஅனு பவம்அறியேன் எங்ஙனம்நான் புகுவேன்
    யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
  • 5. வேதாந்த நிலைநாடி விரைந்துமுயன் றறியேன்
    மெய்வகையும் கைவகையும் செய்வகையும் அறியேன்
    நாதாந்தத் திருவீதி நடந்திடுதற் கறியேன்
    நான்ஆர்என் றறியேன்எங் கோன்ஆர்என் றறியேன்
    போதாந்தத் திருநாடு புகஅறியேன் ஞான
    பூரணா காயம்எனும் பொதுவைஅறி வேனோ
    ஏதாந்தீ யேன்சரிதம் எங்ஙனம்நான் புகுவேன்
    யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
  • 6. கலைமுடிவு கண்டறியேன் கரணமெலாம் அடக்கும்
    கதிஅறியேன் கதிஅறிந்த கருத்தர்களை அறியேன்
    கொலைபுலைகள் விடுத்தறியேன் கோபமறுத் தறியேன்
    கொடுங்காமக் கடல்கடக்கும் குறிப்பறியேன் குணமாம்
    மலைமிசைநின் றிடஅறியேன் ஞானநடம் புரியும்
    மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ
    இலைஎனும்பொய் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
    யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
  • 7. சாதிமதம் சமயம்எனும் சங்கடம்விட் டறியேன்
    சாத்திரச்சே றாடுகின்ற சஞ்சலம்விட் டறியேன்
    ஆதிஅந்த நிலையறியேன் அலைஅறியாக் கடல்போல்
    ஆனந்தப் பெரும்போகத் தமர்ந்திடவும் அறியேன்
    நீதிநெறி நடந்தறியேன் சோதிமணிப் பொதுவில்
    நிருத்தமிடும் ஒருத்தர்திருக் கருத்தைஅறி வேனோ
    ஏதிலர்சார் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
    யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
  • 8. சாகாத தலைஅறியேன் வேகாத காலின்
    தரம்அறியேன் போகாத தண்­ரை அறியேன்
    ஆகாய நிலைஅறியேன் மாகாய நிலையும்
    அறியேன்மெய்ந் நெறிதனைஓர் அணுஅளவும் அறியேன்
    மாகாத லுடையபெருந் திருவாளர் வழுத்தும்
    மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ
    ஏகாய200 உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
    யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
  • 9. தத்துவம்என் வசமாகத் தான்செலுத்த அறியேன்
    சாகாத கல்விகற்கும் தரஞ்சிறிதும் அறியேன்
    அத்தநிலை சத்தநிலை அறியேன்மெய் அறிவை
    அறியேன்மெய் அறிந்தடங்கும் அறிஞரையும் அறியேன்
    சுத்தசிவ சன்மார்க்கத் திருப்பொதுவி னிடத்தே
    தூயநடம் புரிகின்ற ஞாயமறி வேனோ
    எத்துணையும் குணமறியேன் எங்ஙனம்நான் புகுவேன்
    யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
  • 10. வரைஅபர மார்க்கமொடு பரமார்க்கம் அறியேன்
    மரணபயம் தவிர்த்திடுஞ்சன் மார்க்கமதை அறியேன்
    திரையறுதண் கடலறியேன் அக்கடலைக் கடைந்தே
    தெள்ளமுதம் உணவறியேன் சினமடக்க அறியேன்
    உரைஉணர்வு கடந்ததிரு மணிமன்றந் தனிலே
    ஒருமைநடம் புரிகின்றார் பெருமைஅறி வேனோ
    இரையுறுபொய் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
    யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

    • 200. ஏகம் - முத்தி, ஈறுதொக்கு நின்றது, முதற்பதிப்பு.

முறையீடு // முறையீடு