திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
பிள்ளைச் சிறு விண்ணப்பம்
piḷḷaich siṟu viṇṇappam
சுத்த சன்மார்க்க வேண்டுகோள்
sutta saṉmārkka vēṇṭukōḷ
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

020. பிள்ளைப் பெரு விண்ணப்பம்
piḷḷaip peru viṇṇappam

    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. தனிப்பெருஞ் சோதித் தலைவனே எனது தந்தையே திருச்சிற்றம் பலத்தே
    கனிப்பெருங் கருணைக் கடவுளே அடியேன் கருதிநின் றுரைக்கும்விண் ணப்பம்
    இனிப்புறும் நினது திருவுளத் தடைத்தே எனக்கருள் புரிகநீ விரைந்தே
    இனிச்சிறு பொழுதும் தரித்திடேன் உன்றன் இணைமலர்ப் பொன்னடி ஆணை.
  • 2. திரிபிலாப் பொருளே திருச்சிற்றம் பலத்தே திகழ்கின்ற தெய்வமே அன்பர்
    பரிவுறுந் தோறும் விரைந்துவந் தருளும் பண்பனே பரையிடப் பாகா
    பெரியபொற் சபையில் நடம்புரி கின்ற பேரருட் சோதியே எனக்கே
    உரியநல் தந்தைவள்ளலே அடியேன் உரைக்கின்றேன் கேட்டருள் இதுவே.
  • 3. தானலா திறையும் உயிர்க்கசை வில்லாத் தலைவனே திருச்சிற்றம் பலத்தே
    வானலால் வேறொன் றிலைஎன உரைப்ப வயங்கிய மெய்யின்ப வாழ்வே
    ஊனலால் உயிரும் உளமும்உள் உணர்வும் உவப்புற இனிக்குந்தெள் ளமுதே
    ஞானநா டகஞ்செய் தந்தையே அடியேன் நவில்கின்றேன் கேட்டருள் இதுவே.
  • 4. என்னுயிர்க் குயிராம் தெய்வமே என்னை எழுமையும் காத்தருள் இறைவா
    என்னுளத் தினிக்கும் தீஞ்சுவைக் கனியே எனக்கறி வுணர்த்திய குருவே
    என்னுடை அன்பே திருச்சிற்றம் பலத்தே எனக்கருள் புரிந்தமெய் இன்பே
    என்னைஈன் றெடுத்த தந்தையே அடியேன் இசைக்கின்றேன் கேட்கஇம் மொழியே.
  • 5. கருணையார் அமுதே என்னுயிர்க் குயிரே கனிந்தசிற் றம்பலக் கனியே
    வருணமா மறையின் மெய்ப்பொருள் ஆகி வயங்கிய வள்ளலே அன்பர்
    தெருள்நிறை உளத்தே திகழ்தனித் தலைமைத் தெய்வமே திருவருட்சிவமே
    தருணம்என் ஒருமைத் தந்தையே தாயே தரித்தருள் திருச்செவிக் கிதுவே.
  • 6. என்னைஆண் டருளி என்பிழை பொறுத்த இறைவனே திருச்சிற்றம் பலத்தே
    என்னைஆண் டஞ்சேல் உனக்குநல் அருளிங் கீகுதும் என்றஎன் குருவே
    என்னைவே றெண்ணா துள்ளதே உணர்த்தி எனக்குளே விளங்குபே ரொளியே
    என்னைஈன் றளித்த தந்தையே விரைந்திங் கேற்றருள்திருச்செவிக்கிதுவே.
  • 7. இரும்புநேர் மனத்தேன் பிழையெலாம் பொறுத்தென் இதயத்தில் எழுந்திருந் தருளி
    விரும்புமெய்ப் பொருளாம் தன்னியல் எனக்கு விளங்கிடவிளக்கியுட் கலந்தே
    கரும்புமுக் கனிபால் அமுதொடு செழுந்தேன் கலந்தென இனிக்கின்றோய் பொதுவில்
    அரும்பெருஞ் சோதி அப்பனே உளத்தே அடைத்தருள் என்மொழி இதுவே.
  • 8. மலத்திலே கிடந்தேன் தனையெடுத் தருளி மன்னிய வடிவளித் தறிஞர்
    குலத்திலே பயிலுந் தரமுமிங் கெனக்குக் கொடுத்துளே விளங்குசற் குருவே
    பலத்திலே சிற்றம் பலத்திலே பொன்னம் பலத்திலே அன்பர்தம் அறிவாம்
    தலத்திலே ஓங்கும் தலைவனே எனது தந்தையே கேட்கஎன் மொழியே.
  • 9. விண்டபோ தகரும் அறிவரும் பொருளே மெய்யனே ஐயனே உலகில்
    தொண்டனேன் தன்னை அடுத்தவர் நேயர் சூழ்ந்தவர் உறவினர் தாயர்
    கொண்டுடன் பிறந்தோர் அயலவர் எனும்இக் குறிப்பினர் முகங்களில் இளைப்பைக்
    கண்டபோ தெல்லாம் மயங்கிஎன் னுள்ளம் கலங்கிய கலக்கம்நீ அறிவாய்.
  • 10. சீர்த்தசிற் சபைஎன் அப்பனே எனது தெய்வமே என்பெருஞ் சிறப்பே
    ஆர்த்தஇவ் வுலகில் அம்மையர் துணைவர் அடுத்தவர் உறவினர் நேயர்
    வேர்த்தமற் றயலார் பசியினால் பிணியால்மெய்யுளம்வெதும்பியவெதுப்பைப்
    பார்த்தபோ தெல்லாம் பயந்தென துள்ளம் பதைத்ததுன் உளம்அறி யாதோ.
  • 11. பரைத்தனி வெளியில் நடம்புரிந் தருளும் பரமனே அரும்பெரும் பொருளே
    தரைத்தலத் தியன்ற வாழ்க்கையில் வறுமைச் சங்கடப் பாவியால் வருந்தி
    நரைத்தவர் இளைஞர் முதலினோர் எனையோர் நண்பன்என் றவரவர் குறைகள்
    உரைத்தபோ தெல்லாம் நடுங்கிஎன் னுள்ளம் உடைந்ததுன் உளம்அறி யாதோ.
  • 12. அன்னையே அப்பா திருச்சிற்றம் பலத்தென் ஐயனே இவ்வுல கதிலே
    பொன்னையே உடையார் வறியவர் மடவார் புகலும்ஆடவர்இவர் களுக்குள்
    தன்னையே அறியாப் பிணியினால் ஆவி தளர்கின்றார் தருணம்ஈ தெனவே
    சொன்னபோ தெல்லாம் பயந்துநான் அடைந்த சோபத்தை நீஅறி யாயோ.
  • 13. உண்டதோ றெல்லாம் அமுதென இனிக்கும் ஒருவனே சிற்சபை உடையாய்
    விண்டபே ருலகில் அம்மஇவ் வீதி மேவும்ஓர் அகத்திலே ஒருவர்
    ஒண்டுயிர் மடிந்தார் அலறுகின் றார்என் றொருவரோ டொருவர்தாம் பேசிக்
    கொண்டபோ தெல்லாம் கேட்டென துள்ளம் குலைநடுங் கியதறிந் திலையோ.
  • 14. காவிநேர் கண்ணாள் பங்கனே206 தலைமைக் கடவுளே சிற்சபை தனிலே
    மேவிய ஒளியே இவ்வுல கதில்ஊர் வீதிஆ திகளிலே மனிதர்
    ஆவிபோ னதுகொண் டுறவினர் அழுத அழுகுரல் கேட்டபோ தெல்லாம்
    பாவியேன் உள்ளம் பகீர்என நடுங்கிப் பதைத்ததுன் உளம்அறி யாதோ.
  • 15. நாதனே என்னை நம்பிய மாந்தர் ஞாலத்தில் பிணிபல அடைந்தே
    ஏதநேர்ந் திடக்கண் டையகோ அடியேன் எய்திய சோபமும் இளைப்பும்
    ஓதநேர் உள்ள நடுக்கமும் திகைப்பும் உற்றபேர் ஏக்கமா திகளும்
    தீதனேன் இன்று நினைத்திட உள்ளம் திடுக்கிடல் நீஅறிந் திலையோ.
  • 16. கற்றவர் உளத்தே கரும்பினில் இனிக்கும் கண்ணுதற் கடவுளே என்னைப்
    பெற்றதாய் நேயர் உறவினர் துணைவர் பெருகிய பழக்கமிக் குடையோர்
    மற்றவர் இங்கே தனித்தனி பிரிந்து மறைந்திட்ட தோறும்அப் பிரிவை
    உற்றுநான் நினைக்குந் தோறும்உள் நடுங்கி உடைந்தனன் உடைகின்றேன் எந்தாய்.
  • 17. என்றும்நா டுறுவோர்க் கின்பமே புரியும் எந்தையே என்றனைச் சூழ்ந்தே
    நன்றுநா டியநல் லோர்உயிர்ப் பிரிவை நாயினேன் கண்டுகேட் டுற்ற
    அன்றுநான் அடைந்த நடுக்கமுந் துயரும் அளவிலை அளவிலை அறிவாய்
    இன்றவர் பிரிவை நினைத்திடுந் தோறும் எய்திடும் துயரும்நீ அறிவாய்.
  • 18. நிலைபுரிந் தருளும் நித்தனே உலகில் நெறியலா நெறிகளில் சென்றே
    கொலைபுரிந் திட்ட கொடியவர் இவர்என் றயலவர் குறித்தபோ தெல்லாம்
    உலைபுரிந் திடுவெந் தீவயிற் றுள்ளே உற்றென நடுநடுக் குற்றே
    துலைபுரிந்207 தோடிக் கண்களை மூடித் துயர்ந்ததும் நீஅறிந் ததுவே.
  • 19. ஓர்ந்தஉள் ளகத்தே நிறைந்தொளிர் கின்ற ஒருவனே உலகியல் அதிலே
    மாந்தர்கள் இறப்பைக் குறித்திடும் பறையின் வல்லொலி கேட்டபோ தெல்லாம்
    காந்திஎன் உள்ளம் கலங்கிய கலக்கம் கடவுள்நீ யேஅறிந் திடுவாய்
    ஏந்தும்இவ் வுலகில் இறப்பெனில் எந்தாய் என்னுளம் நடுங்குவ தியல்பே.
  • 20. மறைமுடி வயங்கும் ஒருதனித் தலைமை வள்ளலே உலகர சாள்வோர்
    உறைமுடி208 வாள்கொண் டொருவரை ஒருவர் உயிரறச் செய்தனர் எனவே
    தறையுறச் சிறியேன் கேட்டபோ தெல்லாம் தளர்ந்துள நடுங்கிநின் றயர்ந்தேன்
    இறையும்இவ் வுலகில் கொலைஎனில் எந்தாய் என்னுளம் நடுங்குவ தியல்பே.
  • 21. தாய்மொழி குறித்தே கணக்கிலே மற்றோர் தாய்க்குநால் என்பதை இரண்டாய்
    வாய்மொழி வஞ்சம் புகன்றனன் வரைந்தேன் நடுங்கினேன் நினைத்ததை மனத்தே
    தூய்மொழி நேயர் நம்பினோர் இல்லில் சூழ்ந்தனன் நினைத்தது துயர்ந்தேன்
    காய்மொழி புகன்றேன் பொய்மொழி புகன்றேன்கலங்கினேன் அதுநினைத் தெந்தாய்.
  • 22. எட்டரும் பொருளே திருச்சிற்றம் பலத்தே இலகிய இறைவனே உலகில்
    பட்டினி உற்றோர் பசித்தனர் களையால் பரதவிக் கின்றனர் என்றே
    ஒட்டிய பிறரால் கேட்டபோ தெல்லாம் உளம்பகீர் எனநடுக் குற்றேன்
    இட்டஇவ் வுலகில் பசிஎனில் எந்தாய் என்னுளம் நடுங்குவ தியல்பே.
  • 23. பல்லிகள் பலவா யிடத்தும்உச் சியினும் பகரும்நேர் முதற்பல வயினும்
    சொல்லிய தோறும் பிறர்துயர் கேட்கச் சொல்கின் றவோஎனச் சூழ்ந்தே
    மெல்லிய மனம்நொந் திளைத்தனன் கூகை வெங்குரல் செயுந்தொறும் எந்தாய்
    வல்லியக் குரல்கேட் டயர்பசுப் போல வருந்தினேன் எந்தைநீ அறிவாய்.
  • 24. காக்கைகள் கூவக் கலங்கினேன் பருந்தின் கடுங்குரல்கேட்டுளங்குலைந்தேன்
    தாக்கிய ஆந்தை குரல்செயப் பயந்தேன் சாக்குரல் பறவையால் தளர்ந்தேன்
    வீக்கிய வேறு கொடுஞ்சகு னஞ்செய் வீக்களால் மயங்கினேன் விடத்தில்
    ஊக்கிய பாம்பைக் கண்டபோ துள்ளம் ஒடுங்கினேன் நடுங்கினேன் எந்தாய்.
  • 25. வேறுபல் விடஞ்செய் உயிர்களைக் கண்டு வெருவினேன் வெய்யநாய்க் குழுவின்
    சீரிய குரலோ டழுகுரல் கேட்டுத் தியங்கினேன் மற்றைவெஞ் சகுனக்
    கூறதாம் விலங்கு பறவைஊர் வனவெங் கோள்செயும்211 ஆடவர் மடவார்
    ஊறுசெய்கொடுஞ்சொல் இவைக்கெலாம்உள்ளம்உயங்கினேன்மயங்கினேன்எந்தாய்.
  • 26. நிறமுறு விழிக்கீழ்ப் புறத்தொடு தோளும் நிறைஉடம் பிற்சில உறுப்பும்
    உறவுதோல் தடித்துத் துடித்திடுந் தோறும் உன்னிமற் றவைகளை அந்தோ
    பிறர்துயர் காட்டத் துடித்தவோ என்று பேதுற்று மயங்கிநெஞ் சுடைந்தேன்
    நறுவிய துகிலில் கறைஉறக் கண்டே நடுங்கினேன் எந்தைநீ அறிவாய்.
  • 27. மங்கையர் எனைத்தாம் வலிந்துறுந் தோறும் மயங்கிநாம் இவரொடு முயங்கி
    இங்குளங் களித்தால் களித்தவர்க் குடனே இன்னல்உற் றிடும்நமக் கின்னல்
    தங்கிய பிறர்தம் துயர்தனைக்212 காண்டல் ஆகும்அத் துயருறத் தரியேம்
    பங்கமீ தெனவே எண்ணிநான் உள்ளம் பயந்ததும் எந்தைநீ அறிவாய்.
  • 28. வலிந்தெனை அழைக்கும் மடந்தையர் தெருவில் மறைந்துவந் தடுத்தபின் நினைந்தே
    மலிந்திவர் காணில் விடுவர்அன் றிவரால் மயங்கிஉள் மகிழ்ந்தனம் எனிலோ
    நலிந்திடு பிறர்தந் துயர்தனைக் கண்டே நடுங்குற வரும்எனப் பயந்தே
    மெலிந்துடன் ஒளித்து வீதிவேறொன்றின் மேவினேன் எந்தைநீ அறிவாய்.
  • 29. களிப்புறு சுகமாம் உணவினைக் கண்ட காலத்தும் உண்டகா லத்தும்
    நெளிப்புறு மனத்தோ டஞ்சினேன் எனைத்தான் நேர்ந்தபல் சுபங்களில் நேயர்
    அளிப்புறு விருந்துண் டமர்கஎன் றழைக்க அவர்களுக் கன்பினோ டாங்கே
    ஒளிப்புறு வார்த்தை உரைத்தயல் ஒளித்தே பயத்தொடும் உற்றனன் எந்தாய்.
  • 30. இன்புறும் உணவு கொண்டபோ தெல்லாம் இச்சுகத் தால்இனி யாது
    துன்புறுங் கொல்லோ என்றுளம் நடுங்கிச்சூழ்வெறுவயிற்றொடும் இருந்தேன்
    அன்பிலே அன்பர் கொடுத்தவை எல்லாம்ஐயகோ213 தெய்வமே இவற்றால்
    வன்புறச் செய்யேல் என்றுளம் பயந்து வாங்கியுண் டிருந்தனன் எந்தாய்.
  • 31. உற்றதா ரணியில் எனக்குலக் குணர்ச்சி உற்றநாள் முதல்ஒரு சிலநாள்
    பெற்றதாய் வாட்டம் பார்ப்பதற் கஞ்சிப் பேருண வுண்டனன் சிலநாள்
    உற்றவர் நேயர் அன்புளார் வாட்டம் உறுவதற் கஞ்சினேன் உண்டேன்
    மற்றிவை அல்லால் சுகஉணாக் கொள்ள மனநடுங் கியதுநீ அறிவாய்.
  • 32. தொழுந்தகை உடைய சோதியே அடியேன் சோம்பலால் வருந்திய தோறும்
    அழுந்தஎன் உள்ளம் பயந்ததை என்னால் அளவிடற் கெய்துமோ பகலில்
    விழுந்துறு தூக்கம் வரவது தடுத்தும் விட்டிடா வன்மையால் தூங்கி
    எழுந்தபோ தெல்லாம் பயத்தொடும் எழுந்தேன் என்செய்வேன் என்செய்வேன் என்றே.
  • 33. அந்தமோ டாதி இல்லதோர் பொதுவில் அரும்பெருஞ் சோதியே அடியேன்
    சொந்தமோ அறியேன் பகலிர வெல்லாம் தூக்கமே கண்டனன் தூக்கம்
    வந்தபோ தெல்லாம் பயத்தொடு படுத்தேன் மற்றுநான் எழுந்தபோதெல்லாம்
    தொந்தமாம் பயத்தால் சிவசிவ தூக்கம் தொலைவதெக் காலம்என் றெழுந்தேன்.
  • 34. உடையஅம் பலத்தில் ஒருவனே என்றன் உயிர்க்குயிர் ஆகிய ஒளியே
    கடையன்நான் நனவில் நடுங்கிய நடுக்கம் கணக்கிலே சிறிதுறும் கனவில்
    இடையுறு நடுக்கம் கருதவும் சொலவும் எண்ணவும் எழுதவும் படுமோ
    நடையுறு சிறியேன் கனவுகண் டுள்ளம் நடுங்கிடா நாளும்ஒன் றுளதோ.
  • 35. பகலிர வடியேன் படுத்தபோ தெல்லாம் தூக்கமாம் பாவிவந் திடுமே
    இகலுறு கனவாம் கொடியவெம் பாவி எய்துமே என்செய்வோம் என்றே
    உகலுற உள்ளே நடுங்கிய நடுக்கம் உன்னுளம் அறியுமே எந்தாய்
    நகலுறச் சிறியேன் கனவுகண் டுள்ளம் நடுங்கிடா நாளும்ஒன் றுளதோ.
  • 36. தொகுப்புறு சிறுவர் பயிலுங்கால் பயிற்றும் தொழிலிலே வந்தகோ பத்தில்
    சகிப்பிலா மையினால் அடித்தனன் அடித்த தருணம்நான் கலங்கிய கலக்கம்
    வகுப்புற நினது திருவுளம் அறியும் மற்றுஞ்சில் உயிர்களில் கோபம்
    மிகப்புகுந் தடித்துப் பட்டபா டெல்லாம் மெய்யநீ அறிந்ததே அன்றோ.
  • 37. ஒடித்தஇவ் வுலகில் சிறுவர்பால் சிறிய உயிர்கள்பால் தீமைகண் டாங்கே
    அடித்திடற் கஞ்சி உளைந்தனன் என்னால் ஆற்றிடாக் காலத்தில் சிறிதே
    பொடித்துநான் பயந்த பயமெலாம் உனது புந்தியில் அறிந்ததே எந்தாய்
    வெடித்தவெஞ் சினம்என் உளமுறக் கண்டே வெதும்பிய நடுக்கம்நீ214 அறிவாய்.
  • 38. கோபமே வருமோ காமமே வருமோ கொடியமோ கங்களே வருமோ
    சாபமே அனைய தடைமதம் வருமோ தாமதப் பாவிவந் திடுமோ
    பாபமே புரியும் லோபமே வருமோ பயனில்மாற் சரியம்வந் திடுமோ
    தாபஆங் கார மேஉறு மோஎன் றையநான் தளர்ந்ததும் அறிவாய்.
  • 39. காமமா மதமாங் காரமா திகள்என் கருத்தினில் உற்றபோ தெல்லாம்
    நாமம்ஆர் உளத்தோ டையவோ நான்தான் நடுங்கிய நடுக்கம்நீ அறிவாய்
    சேமமார் உலகில் காமமா திகளைச் செறிந்தவர் தங்களைக் கண்டே
    ஆமைபோல் ஒடுங்கி அடங்கினேன் அதுவும் ஐயநின் திருவுளம் அறியும்.
  • 40. கருத்துவே றாகிக் கோயிலில் புகுந்துன் காட்சியைக் கண்டபோ தெல்லாம்
    வருத்தமே அடைந்தேன் பயத்தொடும் திரும்பி வந்துநொந் திளைத்தனன் எந்தாய்
    நிருத்தனே நின்னைத் துதித்தபோ தெல்லாம் நெகிழ்ச்சிஇல் லாமையால் நடுங்கிப்
    பருத்தஎன் உடம்பைப் பார்த்திடா தஞ்சிப் படுத்ததும் ஐயநீ அறிவாய்.
  • 41. புன்புலால் உடம்பின் அசுத்தமும் இதனில் புகுந்துநான் இருக்கின்ற புணர்ப்பும்
    என்பொலா மணியே எண்ணிநான் எண்ணி ஏங்கிய ஏக்கம்நீ அறிவாய்
    வன்புலால் உண்ணும் மனிதரைக் கண்டு மயங்கிஉள் நடுங்கிஆற் றாமல்
    என்பெலாம் கருக இளைத்தனன் அந்த இளைப்பையும் ஐயநீ அறிவாய்.
  • 42. இந்தவிர் சடைஎம் இறைவனே என்னோ டியல்கலைத் தருக்கஞ்செய் திடவே
    வந்தவர் தம்மைக் கண்டபோ தெல்லாம் மனம்மிக நடுங்கினேன் அறிவாய்
    சந்தியுற் றொருகால் படித்தசாத் திரத்தைத் தமியனேன் மீளவுங் கண்டே
    நொந்ததும் உலகப் படிப்பில்என் உள்ளம் நொந்ததும் ஐயநீ அறிவாய்.
  • 43. முனித்தவெவ் வினையோ நின்னருட் செயலோ தெரிந்திலேன் மோகமே லின்றித்
    தனித்தனி ஒருசார் மடந்தையர் தமக்குள்ஒருத்தியைக்கைதொடச்சார்ந்தேன்
    குனித்தமற் றவரைத் தொட்டனன் அன்றிக் கலப்பிலேன் மற்றிது குறித்தே
    பனித்தனன் நினைத்த தோறும்உள் உடைந்தேன் பகர்வதென் எந்தைநீ அறிவாய்.
  • 44. பதியனே பொதுவில் பரமநா டகஞ்செய் பண்பனே நண்பனே உலகில்
    ஒதியனேன் பிறர்பால் உரத்தவார்த் தைகளால் ஒருசில வாதங்கள் புரிந்தே
    மதியிலா மையினால் அகங்கரித் ததன்பின்வள்ளல்உன்அருளினால்அறிந்தே
    விதியைநான் நொந்து நடுங்கிய தெல்லாம் மெய்யனே நீஅறிந் ததுவே.
  • 45. அருளினை அளிக்கும் அப்பனே உலகில் அன்புளார் வலிந்தெனக் கீந்த
    பொருளினை வாங்கிப் போனபோ தெல்லாம் புழுங்கிய புழுக்கம்நீ அறிவாய்
    மருளும்அப் பொருளைச் சாலகத் தெறிந்து மனமிகஇளைத்ததும்பொருளால்
    இருளுரும் எனநான் உளம்நடுங் கியதும் எந்தைநின் திருவுளம் அறியும்.
  • 46. பொருளிலே உலகம் இருப்பதா தலினால் புரிந்துநாம் ஒருவர்பால் பலகால்
    மருவினால் பொருளின் இச்சையால் பலகால் மருவுகின் றான்எனக் கருதி
    வெருவுவர் எனநான் அஞ்சிஎவ் விடத்தும் மேவிலேன் எந்தைநீ அறிவாய்
    ஒருவும்அப் பொருளை நினைத்தபோ தெல்லாம் உவட்டினேன் இதுவும்நீ அறிவாய்.
  • 47. தகைத்தபே ருலகில் ஐயனே அடியேன் தடித்தஉள் ளத்தொடு களித்தே
    நகைத்தபோ தெல்லாம் நடுங்கினேன் இங்கே நல்லவா கனங்களில் ஏறி
    உகைத்தபோ தெல்லாம் நடுங்கினேன் விரைந்தே ஓட்டிய போதெலாம் பயந்தேன்
    பகைத்தபோ தயலார் பகைகளுக் கஞ்சிப் பதுங்கினேன் ஒதுங்கினேன் எந்தாய்.
  • 48. சகப்புற வாழ்வைப் பார்த்திடில் கேட்கில் சஞ்சலம் உறும்எனப் பயந்தே
    நகர்புறத் திருக்குந் தோட்டங்கள் தோறும்நண்ணியும் பிறவிடத்தலைந்தும்
    பகற்பொழு தெல்லாம் நாடொறுங் கழித்தேன் பகலன்றி இரவும்அப் படியே
    மிகப்பல விடத்தும் திரிந்தனன் அடியேன் விளம்பலென் நீஅறிந் ததுவே.
  • 49. உருவுள மடவார் தங்களை நான்கண் ணுற்றபோ துளநடுக் குற்றேன்
    ஒருவுளத் தவரே வலிந்திட வேறோர் உவளகத் தொளித்தயல் இருந்தேன்
    கருவுளச் சண்டைக் கூக்குரல் கேட்ட காலத்தில் நான்உற்ற கலக்கம்
    திருவுளம் அறியும் உரத்தசொல் எனது செவிபுகில் கனல்புகு வதுவே.
  • 50. பண்ணிகா ரங்கள் பொசித்தஅப் போதும் பராக்கிலே செலுத்திய போதும்
    எண்ணிய மடவார் தங்களை விழைந்தே இசைந்தனு பவித்தஅப் போதும்
    நண்ணிய தயிலம் முழுக்குற்ற போதும் நவின்றசங் கீதமும் நடமும்
    கண்ணுறக் கண்டு கேட்டஅப் போதும் கலங்கிய கலக்கம்நீ அறிவாய்.
  • 51. நயந்தபொற் சரிகைத் துகில்எனக் கெனது நண்பினர் உடுத்திய போது
    பயந்தஅப் பயத்தை அறிந்தவர் எல்லாம் பயந்தனர் வெய்யிலிற் கவிகை
    வியந்துமேற் பிடித்த போதெலாம் உள்ளம் வெருவினேன் கைத்துகில் வீசி
    அயந்தரு தெருவில் நடப்பதற் கஞ்சி அரைக்குமேல் வீக்கினன் எந்தாய்.
  • 52. கையுற வீசி நடப்பதை நாணிக் கைகளைக் கட்டியே நடந்தேன்
    மெய்யுறக் காட்ட வெருவிவெண் துகிலால் மெய்எலாம் ஐயகோ215 மறைத்தேன்
    வையமேல் பிறர்தங் கோலமும் நடையும் வண்ணமும் அண்ணலே சிறிதும்
    பையநான் ஊன்றிப் பார்த்ததே இல்லைப் பார்ப்பனேல் பயமிகப் படைப்பேன்.
  • 53. வைகிய நகரில் எழிலுடை மடவார் வலிந்தெனைக் கைபிடித் திழுத்தும்
    சைகைவே றுரைத்தும் சரசவார்த் தைகளால் தனித்தெனைப் பலவிசை அறிந்தும்
    பொய்கரைந் தாணை புகன்றுமேல் விழுந்தும் பொருள்முத லியகொடுத் திசைத்தும்
    கைகலப் பறியேன் நடுங்கினேன் அவரைக் கடிந்ததும் இல்லைநீ அறிவாய்.
  • 54. எளியரை வலியார் அடித்தபோது ஐயோ என்மனம் கலங்கிய கலக்கம்
    தெளியநான் உரைக்க வல்லவன் அல்லேன் திருவுளம் அறியுமே எந்தாய்
    களியரைக் கண்டு பயந்தஎன் பயந்தான் கடலினும் பெரியது கண்டாய்
    அளியர்பால் கொடியர் செய்தவெங் கொடுமை அறிந்தஎன் நடுக்கம்ஆர் அறிவார்.
  • 55. இரவிலே பிறர்தம் இடத்திலே இருந்த இருப்பெலாம் கள்ளர்கள் கூடிக்
    கரவிலே கவர்ந்தார் கொள்ளைஎன் றெனது காதிலே விழுந்தபோ தெல்லாம்
    விரவிலே217 நெருப்பை மெய்யிலே மூட்டி வெதுப்பல்போல் வெதும்பினேன் எந்தாய்
    உரவிலே ஒருவர் திடுக்கென வரக்கண் டுளம்நடுக் குற்றனன் பலகால்.
  • 56. உரத்தொரு வருக்கங் கொருவர் பேசியபோ துள்ளகம் நடுங்கினேன் பலகால்
    கரத்தினால் உரத்துக் கதவுதட் டியபோ தையவோ கலங்கினேன் கருத்தில்
    புரத்திலே அம்மா அப்பனே ஐயோ எனப்பிறர் புகன்றசொல் புகுந்தே
    தரத்தில்என் உளத்தைக் கலக்கிய கலக்கம் தந்தைநீ அறிந்தது தானே.
  • 57. மண்ணினீள் நடையில் வந்தவெந் துயரை மதித்துளம் வருந்திய பிறர்தம்
    கண்ணினீர் விடக்கண் டையவோ நானும் கண்ணினீர் விட்டுளங் கவன்றேன்
    நண்ணிநின் றொருவர் அசப்பிலே218 என்னை அழைத்தபோ தடியனேன் எண்ணா
    தெண்ணியா துற்ற தோஎனக் கலங்கி ஏன்எனல் மறந்தனன் எந்தாய்.
  • 58. தேட்டிலே மிகுந்த சென்னையில் இருந்தால் சிலுகுறும்219 என்றுளம் பயந்தே
    நாட்டிலே சிறிய ஊர்ப்புறங் களிலே நண்ணினேன் ஊர்ப்புறம் அடுத்த
    காட்டிலே பருக்கைக் கல்லிலே புன்செய்க் களத்திலே திரிந்துற்ற இளைப்பை
    ஏட்டிலே எழுத முடியுமோ இவைகள் எந்தைநீ அறிந்தது தானே.
  • 59. என்புடை வந்தார் தம்முகம் நோக்கி என்கொலோ என்கொலோ இவர்தாம்
    துன்புடை யவரோ இன்புடை யவரோ சொல்லுவ தென்னையோ என்றே
    வன்புடை மனது கலங்கிஅங் கவரை வாஎனல் மறந்தனன் எந்தாய்
    அன்புடை220 யவரைக் கண்டபோ தெல்லாம் என்கொலோ என்றயர்ந் தேனே.
  • 60. காணுறு பசுக்கள் கன்றுக ளாதி கதறிய போதெலாம் பயந்தேன்
    ஏணுறு மாடு முதல்பல விருகம்221 இளைத்தவை கண்டுளம் இளைத்தேன்
    கோணுறு கோழி முதல்பல பறவை கூவுதல் கேட்டுளங் குலைந்தேன்
    வீணுறு கொடியர் கையிலே வாளை விதிர்த்தல்கண் டென்என வெருண்டேன்.
  • 61. பிதிர்ந்தமண் உடம்பை மறைத்திட வலியார் பின்முன்நோக் காதுமேல் நோக்கி
    அதிர்ந்திட நடந்த போதெலாம் பயந்தேன் அவர்புகன் றிட்டதீ மொழிகள்
    பொதிந்திரு செவியில் புகுந்தொறும் பயந்தேன் புண்ணியா நின்துதி எனும்ஓர்
    முதிர்ந்ததீங் கனியைக் கண்டிலேன் வேர்த்து முறிந்தகாய் கண்டுளம் தளர்ந்தேன்.
  • 62. வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே
    வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
    நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
    ஈடின்மா222 னிகளாய் ஏழைக ளாய்நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.
  • 63. நலிதரு சிறிய தெய்வமென் றையோ நாட்டிலே பலபெயர் நாட்டிப்
    பலிதர ஆடு பன்றிகுக் குடங்கள் பலிக்கடா முதலிய உயிரைப்
    பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே புந்திநொந் துளநடுக் குற்றேன்
    கலியுறு சிறிய தெய்வவெங் கோயில் கண்டகா லத்திலும் பயந்தேன்.
  • 64. துண்ணெனக் கொடியோர் பிறவுயிர் கொல்லத் தொடங்கிய போதெலாம் பயந்தேன்
    கண்ணினால் ஐயோ பிறஉயிர் பதைக்கக் கண்டகா லத்திலும் பதைத்தேன்
    மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி வகைகளும் கண்டபோ தெல்லாம்
    எண்ணிஎன் உள்ளம் நடுங்கிய நடுக்கம் எந்தைநின் திருவுளம்223 அறியும்.
  • 65. நடுநிலை இல்லாக் கூட்டத்தைக் கருணை நண்ணிடா அரையரை நாளும்
    கெடுநிலை நினைக்கும் சிற்றதி காரக் கேடரைப் பொய்யலால் கிளத்தாப்
    படுநிலை யவரைப் பார்த்தபோ தெல்லாம் பயந்தனன் சுத்தசன் மார்க்கம்
    விடுநிலை உலக நடைஎலாங் கண்டே வெருவினேன் வெருவினேன் எந்தாய்.
  • 66. ஓங்கிய திருச்சிற் றம்பல முடைய ஒருதனித் தலைவனே என்னைத்
    தாங்கிய தாயே தந்தையே குருவே தயாநிதிக் கடவுளே நின்பால்
    நீங்கிய மனத்தார் யாவரே எனினும் அவர்தமை நினைத்தபோ தெல்லாம்
    தேங்கிய உள்ளம் பயந்தனன் அதுநின் திருவுளம் அறியுமே எந்தாய்.
  • 67. காட்டுயர் அணைமேல் இருக்கவும் பயந்தேன் காலின்மேல் கால்வைக்கப் பயந்தேன்
    பாட்டயல் கேட்கப் பாடவும் பயந்தேன் பஞ்சணை படுக்கவும் பயந்தேன்
    நாட்டிய உயர்ந்த திண்ணைமேல் இருந்து நன்குறக் களித்துக் கால்கீழே
    நீட்டவும் பயந்தேன் நீட்டிப்பே சுதலை நினைக்கவும் பயந்தனன் எந்தாய்.
  • 68. தலைநெறி ஞான சுத்தசன் மார்க்கம் சார்ந்திட முயலுறா தந்தோ
    கலைநெறி உலகக் கதியிலே கருத்தைக் கனிவுற வைத்தனர் ஆகிப்
    புலைநெறி விரும்பி னார்உல குயிர்கள் பொதுஎனக் கண்டிரங் காது
    கொலைநெறி நின்றார் தமக்குளம் பயந்தேன் எந்தைநான் கூறுவ தென்னே.
  • 69. இவ்வணஞ் சிறியேற் குலகியல் அறிவிங் கெய்திய நாளது தொடங்கி
    நைவணம் இற்றைப் பகல்வரை அடைந்த நடுக்கமும் துன்பமும் உரைக்க
    எவ்வணத் தவர்க்கும் அலகுறா224 தெனில்யான் இசைப்பதென் இசைத்ததே அமையும்
    செவ்வணத் தருணம் இது தலை வாநின் திருவுளம் அறிந்ததே எல்லாம்.
  • 70. தரைத்தலத் தெனைநீ எழுமையும் பிரியாத் தம்பிரான் அல்லையோ மனத்தைக்
    கரைத்துளே புகுந்தென் உயிரினுட் கலந்த கடவுள்நீ அல்லையோ எனைத்தான்
    இரைத்திவ ணளித்தோர் சிற்சபை விளங்கும் எந்தைநீ அல்லையோ நின்பால்
    உரைத்தல்என் ஒழுக்கம் ஆதலால் உரைத்தேன் நீஅறி யாததொன் றுண்டோ.
  • 71. கைதலத் தோங்கும் கனியின்225 என் னுள்ளே கனிந்தஎன் களைகண்நீ அலையோ
    மெய்தலத் தகத்தும் புறத்தும்விட் டகலா மெய்யன்நீ அல்லையோ எனது
    பைதல்தீர்த் தருளுந் தந்தைநீ அலையோ பரிந்துநின் திருமுன்விண் ணப்பம்
    செய்தல்என் ஒழுக்கம் ஆதலால் செய்தேன் திருவுளம் தெரிந்ததே226 எல்லாம்.
  • 72. இன்னவா றடியேன் அச்சமுந் துயரும் எய்திநின் றிளைத்தனன் அந்தோ
    துன்னஆ ணவமும் மாயையும் வினையும் சூழ்ந்திடும் மறைப்பும்இங் குனைத்தான்
    உன்னவா சற்றே உரைக்கவா ஒட்டேம் என்பவால் என்செய்வேன் எனது
    மன்னவா ஞான மன்றவா எல்லாம் வல்லவா இதுதகு மேயோ.
  • 73. எள்ளலாம் பயத்தால் துயரினால் அடைந்த இளைப்பெலாம் இங்குநான் ஆற்றிக்
    கொள்ளவே அடுத்தேன் மாயையா திகள்என் கூடவே அடுத்ததென் அந்தோ
    வள்ளலே எனது வாழ்முதற் பொருளே மன்னவா நின்னலால் அறியேன்
    உள்ளல்வே றிலைஎன் உடல்பொருள்ஆவி உன்னதே என்னதன் றெந்தாய்.
  • 74. என்சுதந் தரம்ஓர் எட்டுணை யேனும் இல்லையே எந்தைஎல் லாம்உன்
    தன்சுதந் தரமே அடுத்தஇத் தருணம் தமியனேன் தனைப்பல துயரும்
    வன்சுமை மயக்கும் அச்சமும் மறைப்பும் மாயையும் வினையும்ஆ ணவமும்
    இன்சுவைக் கனிபோல் உண்கின்ற தழகோ இவைக்கெலாம் நான்இலக் கலவே.
  • 75. அறிவொரு சிறிதிங் கறிந்தநாள் முதல்என் அப்பனே நினைமறந் தறியேன்
    செறிவிலாச் சிறிய பருவத்தும் வேறு சிந்தைசெய் தறிந்திலேன் உலகில்
    பிறிதொரு பிழையுஞ் செய்திலேன் அந்தோ பிழைத்தனன் ஆயினும்என்னைக்
    குறியுறக் கொண்டே குலங்குறிப் பதுநின் குணப்பெருங் குன்றினுக் கழகோ.
  • 76. ஐயநான் ஆடும் பருவத்திற் றானே அடுத்தநன் னேயனோ டப்பா
    பொய்யுல காசை எனக்கிலை உனக்கென் புகல்என அவனும்அங் கிசைந்தே
    மெய்யுறத் துறப்போம் என்றுபோய் நினது மெய்யருள் மீட்டிட மீண்டேம்
    துய்யநின் உள்ளம் அறிந்ததே எந்தாய் இன்றுநான் சொல்லுவ தென்னே.
  • 77. தேர்விலாச் சிறிய பருவத்திற் றானே தெய்வமே தெய்வமே எனநின்
    சார்வுகொண் டெல்லாச் சார்வையும் விடுத்தேன் தந்தையும் குருவும்நீ என்றேன்
    பேர்விலா துளத்தே வந்தவா பாடிப் பிதற்றினேன் பிறர்மதிப் பறியேன்
    ஓர்விலாப் பிழைகள் ஒன்றையும் அறியேன் இன்றுநான் உரைப்பதிங் கென்னே.
  • 78. பொறித்துனைப் பதியாப் பெற்றநாள் அடிமை புரிந்தது போலவே இன்றும்
    செறித்துநிற் கின்றேன் அன்றிஎன் உரிமைத் தெய்வமும் குருவும்மெய்ப் பொருளும்
    நெறித்தநற் றாயுந் தந்தையும் இன்பும் நேயமும் நீஎனப் பெற்றே
    குறித்தறிந் ததன்பின் எந்தைநான் ஏறிக் குதித்ததென் கூறுக நீயே.
  • 79. பரிந்துனைப் பதியாப் பெற்றநாள் அடிமை பணிபுரிந் தாங்கிது வரையில்
    புரிந்துறு கின்றேன் அன்றிஎன் உயிரும் பொருளும்என் புணர்ப்பும்என் அறிவும்
    விரிந்தஎன் சுகமும் தந்தையுங் குருவும் மெய்ம்மையும் யாவும்நீ என்றே
    தெரிந்தபின் அந்தோ வேறுநான் செய்த செய்கைஎன் செப்புக நீயே.
  • 80. மைதவழ் விழிஎன் அம்மைஓர் புடைகொள்227 வள்ளலே நின்னைஅன் பாலும்
    வைதவர் தமைநான் மதித்திலேன் அன்பால் வாழ்த்துகின் றோர்தமை வாழ்த்தி
    உய்தவர் இவர்என் றுறுகின்றேன் அல்லால் உன்அருள் அறியநான் வேறு
    செய்ததொன் றிலையே செய்தனன் எனினும் திருவுளத் தடைத்திடல் அழகோ.
  • 81. ஆரணம் உரைத்த வரைப்பெலாம் பலவாம் ஆகமம் உரைவரைப் பெல்லாம்
    காரண நினது திருவருட் செங்கோல் கணிப்பருங் களிப்பிலே ஓங்கி
    நாரணர் முதலோர் போற்றிட விளங்கி நடக்கின்ற பெருமைநான் அறிந்தும்
    தாரணி யிடைஇத் துன்பமா திகளால் தனையனேன் தளருதல் அழகோ.
  • 82. பார்முதல் நாதப் பதிஎலாங் கடந்தப் பாலும்அப் பாலும்அப் பாலும்
    ஓர்முதல் ஆகித் திருவருட் செங்கோல் உரைப்பரும் பெருமையின் ஓங்கிச்
    சீர்பெற விளங்க நடத்திமெய்ப் பொதுவில் சிறந்தமெய்த் தந்தைநீ இருக்க
    வார்கடல் உலகில் அச்சமா திகளால் மகன்மனம் வருந்துதல் அழகோ.
  • 83. ஆர்ந்தவே தாந்தப் பதிமுதல் யோகாந் தப்பதி வரையும்அப் பாலும்
    தேர்ந்தருள் ஆணைத் திருநெறிச் செங்கோல் செல்லஓர் சிற்சபை இடத்தே
    சார்ந்தபே ரின்பத் தனியர சியற்றும் தந்தையே தனிப்பெருந் தலைவா
    பேர்ந்திடேன் எந்த விதத்திலும் நினக்கே பிள்ளைநான் வருந்துதல் அழகோ.
  • 84. சித்திகள் எல்லாம் வல்லதோர் ஞானத் திருச்சபை தன்னிலே திகழும்
    சத்திகள் எல்லாம் சத்தர்கள் எல்லாம் தழைத்திடத் தனிஅருட் செங்கோல்
    சத்திய ஞானம் விளக்கியே நடத்தும் தனிமுதல் தந்தையே தலைவா
    பித்தியல் உடையேன் எனினும்நின் தனக்கே பிள்ளைநான் வாடுதல் அழகோ.
  • 85. சாற்றுபே ரண்டப் பகுதிகள் அனைத்தும் தனித்தனி அவற்றுளே நிரம்பித்
    தோற்றுமா பிண்டப் பகுதிகள் அனைத்தும் சோதியால் விளக்கிஆ னந்த
    ஆற்றிலே நனைத்து வளர்த்திடும் பொதுவில் அரும்பெருந் தந்தையே இன்பப்
    பேற்றிலே விழைந்தேன் தலைவநின் தனக்கே பிள்ளைநான் பேதுறல் அழகோ.
  • 86. சிறந்ததத் துவங்கள் அனைத்துமாய் அலவாய்த் திகழ்ஒளி யாய்ஒளி எல்லாம்
    பிறங்கிய வெளியாய் வெளிஎலாம் விளங்கும் பெருவெளி யாய்அதற் கப்பால்
    நிறைந்தசிற் சபையில் அருளர சியற்றும் நீதிநல் தந்தையே இனிமேல்
    பிறந்திடேன் இறவேன் நின்னைவிட் டகலேன் பிள்ளைநான் வாடுதல் அழகோ.
  • 87. எண்ணிய எல்லாம் வல்லபே ரருளாம் இணையிலாத் தனிநெடுஞ் செங்கோல்
    நண்ணிய திருச்சிற் றம்பலத் தமர்ந்தே நடத்தும்ஓர் ஞானநா யகனே
    தண்ணருள் அளிக்கும் தந்தையே உலகில் தனையன்நான் பயத்தினால் துயரால்
    அண்ணிய மலங்கள் ஐந்தினால் இன்னும் ஐயகோ வாடுதல் அழகோ.
  • 88. கலைஎலாம் புகலும் கதிஎலாம் கதியில் காண்கின்ற காட்சிகள் எல்லாம்
    நிலையெலாம் நிலையில் நேர்ந்தனு பவஞ்செய் நிறைவெலாம் விளங்கிடப் பொதுவில்
    மலைவிலாச் சோதி அருட்பெருஞ் செங்கோல் வாய்மையான் நடத்தும்ஓர் தனிமைத்
    தலைவனே எனது தந்தையே நினது தனையன்நான் தளருதல் அழகோ.
  • 89. ஆதியே நடுவே அந்தமே எனும்இவ் வடைவெலாம் இன்றிஒன் றான
    சோதியே வடிவாய்த் திருச்சிற்றம் பலத்தே தூயபே ரருள்தனிச் செங்கோல்
    நீதியே நடத்தும் தனிப்பெருந் தலைமை நிருத்தனே ஒருத்தனே நின்னை
    ஓதியே வழுத்தும் தனையன்நான் இங்கே உறுகணால் தளருதல் அழகோ.
  • 90. அத்தனே திருச்சிற் றம்பலத் தரசே அரும்பெருஞ் சோதியே அடியார்
    பித்தனே எனினும் பேயனே எனினும் பெரிதருள் புரிதனித் தலைமைச்
    சித்தனே எல்லாம் செய்திட வல்ல செல்வனே சிறப்பனே சிவனே
    சுத்தனே நினது தனையன்நான் மயங்கித் துயர்ந்துளம் வாடுதல் அழகோ.
  • 91. உற்றதோர் திருச்சிற் றம்பலத் தோங்கும் ஒருதனித் தந்தையே நின்பால்
    குற்றம்நான் புரிந்திங் கறிந்திலேன் குற்றம் குயிற்றினேன் என்னில்அக் குற்றம்
    இற்றென அறிவித் தறிவுதந் தென்னை இன்புறப் பயிற்றுதல் வேண்டும்
    மற்றய லார்போன் றிருத்தலோ தந்தை வழக்கிது நீஅறி யாயோ.
  • 92. குற்றமோ குணமோ நான்அறி யேன்என் குறிப்பெலாம் திருச்சிற்றம் பலத்தே
    உற்றதா தலினால் உலகியல் வழக்கில் உற்றன228 மற்றென தலவே
    தெற்றென229 அருட்கே குற்றம்என் பதுநான் செய்திடில் திருத்தலே அன்றி
    மற்றய லார்போன் றிருப்பதோ தந்தை மரபிது நீஅறி யாயோ.
  • 93. மாயையால் வினையால் அரிபிர மாதி வானவர் மனமதி மயங்கித்
    தீயகா ரியங்கள் செய்திடில் அந்தோ சிறியனேன் செய்வது புதிதோ
    ஆயினும் தீய இவைஎன அறியேன் அறிவித்துத் திருத்துதல் அன்றி
    நீயிவண் பிறர்போன் றிருப்பது தந்தை நெறிக்கழ கல்லவே எந்தாய்.
  • 94. கருணையும் சிவமே பொருள்எனக் காணும் காட்சியும் பெறுகமற் றெல்லாம்
    மருள்நெறி எனநீ எனக்கறி வித்த வண்ணமே பெற்றிருக் கின்றேன்
    இருள்நெறி மாயை வினைகளால் கலக்கம் எய்திய தென்செய்வேன் எந்தாய்
    தெருள்நிலை இன்றிக் கலங்கினேன் எனினும் சிறுநெறி பிடித்ததொன் றிலையே.
  • 95. கலங்கிய போதும் திருச்சிற்றம் பலத்தில் கருணையங் கடவுளே நின்பால்
    இலங்கிய நேயம் விலங்கிய திலையே எந்தைநின் உளம்அறி யாதோ
    மலங்கிய மனத்தேன் புகல்வதென் வினையால் மாயையால் வரும்பிழை எல்லாம்
    அலங்கும்என் பிழைகள் அல்லஎன் றுன்னோ டடிக்கடி அறைந்தனன் ஆண்டே.
  • 96. இரும்பினும் கொடிய மனஞ்செயும் பிழையும் என்பிழை அன்றெனப் பலகால்
    விரும்பிநின் அடிக்கே விண்ணப்பித் திருந்தேன் வேறுநான் செய்ததிங் கென்னே
    அரும்பொனே திருச்சிற் றம்பலத் தமுதே அப்பனே என்றிருக் கின்றேன்
    துரும்பினுஞ் சிறியேன் புகல்வதென் நினது தூயதாம் திருவுளம் அறியும்.
  • 97. வருமுயிர் இரக்கம் பற்றியே உலக வழக்கில்என் மனஞ்சென்ற தோறும்
    வெருவிநின் அடிக்கே விண்ணப்பித் திருந்தேன் விண்ணப்பஞ் செய்கின்றேன் இன்றும்
    உருவஎன் உயிர்தான் உயிர்இரக் கந்தான் ஒன்றதே இரண்டிலை இரக்கம்
    ஒருவில்என் உயிரும் ஒருவும்என் உள்ளத் தொருவனே நின்பதத் தாணை.
  • 98. தலைவர்கள் எல்லாம் தனித்தனி வணங்கும் தலைவனே இன்றும்என் உளமும்
    மலைவில்என் அறிவும் நானும்இவ் வுலக வழக்கிலே உயிர்இரக் கத்தால்
    இலகுகின் றனம்நான் என்செய்வேன் இரக்கம் என்னுயிர் என்னவே றிலையே
    நிலைபெறும் இரக்கம் நீங்கில்என் உயிரும் நீங்கும்நின் திருவுளம் அறியும்.
  • 99. ஆதலால் இரக்கம் பற்றிநான் உலகில் ஆடலே அன்றிஓர் விடயக்
    காதலால் ஆடல் கருதிலேன் விடயக் கருத்தெனக் கில்லைஎன் றிடல்இப்
    போதலால் சிறிய போதும்உண் டதுநின் புந்தியில் அறிந்தது தானே
    ஈதலால் வேறோர் தீதென திடத்தே இல்லைநான் இசைப்பதென் எந்தாய்.
  • 100. என்னையும் இரக்கந் தன்னையும் ஒன்றாய் இருக்கவே இசைவித் திவ்வுலகில்
    மன்னிவாழ் வுறவே வருவித்த கருணை வள்ளல்நீ நினக்கிது விடயம்
    பன்னல்என் அடியேன் ஆயினும் பிள்ளைப் பாங்கினால் உரைக்கின்றேன் எந்தாய்
    இன்னவா றெனநீ சொன்னவா றியற்றா திருந்ததோர் இறையும்இங்கிலையே.
  • 101. உறுவினை தவிர்க்கும் ஒருவனே உலகில் ஓடியும் ஆடியும் உழன்றும்
    சிறுவர்தாம் தந்தை வெறுப்பஆர்க் கின்றார் சிறியனேன் ஒருதின மேனும்
    மறுகிநின் றாடிஆர்த்ததிங் குண்டோ நின்பணி மதிப்பலால் எனக்குச்
    சிறுவிளை யாட்டில் சிந்தையே இலைநின் திருவுளம் அறியுமே எந்தாய்.
  • 102. தந்தையர் வெறுப்ப மக்கள்தாம் பயனில் சழக்குரை யாடிவெங் காமச்
    சிந்தைய ராகித் திரிகின்றார் அந்தோ சிறியனேன் ஒருதின மேனும்
    எந்தைநின் உள்ளம் வெறுப்பநின் பணிவிட் டிவ்வுல கியலில்அவ் வாறு
    தெந்தன என்றே திரிந்ததுண் டேயோ திருவுளம் அறியநான் அறியேன்.
  • 103. அம்புவி தனிலே தந்தையர் வெறுப்ப அடிக்கடி அயலவர் உடனே
    வம்புறு சண்டை விளைக்கின்றார் சிறுவர் வள்ளலே நின்பணி விடுத்தே
    இம்பர்இவ் வுலகில் ஒருதின மேனும் ஏழையேன் பிறரொடு வெகுண்டே
    வெம்புறு சண்டை விளைத்ததுண் டேயோ மெய்யநின் ஆணைநான் அறியேன்.
  • 104. வள்ளல்இவ் வுலகில் தந்தையர் வெறுப்ப மக்கள்தாம் ஒழுக்கத்தை மறந்தே
    கள்ளருந் துதல்சூ தாடுதல் காமக் கடைதொறும் மயங்குதல் பொய்யே
    விள்ளுதல் புரிவார் ஐயகோ அடியேன் மெய்யநின் திருப்பணி விடுத்தே
    எள்ளிஅவ் வாறுபுரிந்ததொன் றுண்டோ எந்தைநின் ஆணைநான் அறியேன்.
  • 105. மலைவிலாத் திருச்சிற் றம்பலத் தமர்ந்த வள்ளலே உலகினில் பெற்றோர்
    குலைநடுக் குறவே கடுகடுத் தோடிக் கொடியதீ நெறியிலே மக்கள்
    புலைகொலை களவே புரிகின்றார் அடியேன் புண்ணிய நின்பணி விடுத்தே
    உலையஅவ் வாறு புரிந்ததொன் றுண்டோ உண்பதத் தாணைநான் அறியேன்.
  • 106. தனிப்பெருஞ் சோதித் தந்தையே உலகில் தந்தையர் பற்பல காலும்
    இனிப்புறு மொழியால் அறிவுற மக்கட் கேற்கவே பயிற்றிடுந் தோறும்
    பனிப்புற ஓடிப் பதுங்கிடு கின்றார் பண்பனே என்னைநீ பயிற்றத்
    தினைத்தனை யேனும் பதுங்கிய துண்டோ திருவுளம் அறியநான் அறியேன்.
  • 107. தன்னைநே ரில்லாத் தந்தையே உலகில் தந்தையர் தங்களை அழைத்தே
    சொன்னசொல் மறுத்தே மக்கள்தம் மனம்போம் சூழலே போகின்றார் அடியேன்
    என்னைநீ உணர்த்தல் யாதது மலையின் இலக்கெனக் கொள்கின்றேன் அல்லால்
    பின்னைஓர் இறையும் மறுத்ததொன் றுண்டோபெரியநின் ஆணைநான் அறியேன்.
  • 108. போற்றுவார் போற்றும் புனிதனே மக்கள் பொருந்து தம் தந்தையர் தமையே
    வேற்றுவாழ் வடைய வீடுதா பணந்தா மெல்லிய சரிகைவத் திரந்தா
    ஏற்றஆ பரணந் தாஎனக் கேட்டே இரங்குவார் இவைகுறித் தடியேன்
    தேற்றுவாய் நின்னைக் கேட்டதொன் றுண்டோ திருவுளம் அறியநான் அறியேன்.
  • 109. குணம்புரி எனது தந்தையே உலகில் கூடிய மக்கள்தந் தையரைப்
    பணம்புரி காணி பூமிகள் புரிநற் பதிபுரி ஏற்றபெண் பார்த்தே
    மணம்புரி எனவே வருத்துகின் றார்என் மனத்திலே ஒருசிறி தேனும்
    எணம்புரிந் துனைநான் வருத்திய துண்டோ எந்தைநின் ஆணைநான் அறியேன்.
  • 110. இகத்திலே எனைவந் தாண்டமெய்ப் பொருளே என்னுயிர்த் தந்தையே இந்தச்
    சகத்திலே மக்கள் தந்தையர் இடத்தே தாழ்ந்தவ ராய்ப்புறங் காட்டி
    அகத்திலே வஞ்சம் வைத்திருக் கின்றார் ஐயவோ வஞ்சம்நின் அளவில்
    முகத்திலே என்றன் அகத்திலே உண்டோ முதல்வநின் ஆணைநான் அறியேன்.
  • 111. தன்மைகாண் பரிய தலைவனே எனது தந்தையே சகத்திலே மக்கள்
    வன்மைவார்த் தைகளால் தந்தையர் தம்மை வைகின்றார் வள்ளலே மருந்தே
    என்மனக் கனிவே என்னிரு கண்ணே என்னுயிர்க் கிசைந்தமெய்த் துணையே
    நின்மனம் வெறுப்பப் பேசிய துண்டோ நின்பதத் தாணைநான் அறியேன்.
  • 112. ஒப்பிலா மணிஎன் அப்பனே உலகில் உற்றிடு மக்கள்தந் தையரை
    வைப்பில்வே றொருவர் வைதிடக்கேட்டு மனம்பொறுத் திருக்கின்றார் அடியேன்
    தப்பிலாய்230 நினைவே றுரைத்திடக் கேட்டால் தரிப்பனோ தரித்திடேன் அன்றி
    வெப்பில்என் உயிர்தான் தரிக்குமோ யாதாய் விளையுமோ அறிந்திலேன் எந்தாய்.
  • 113. இத்தகை உலகில் இங்ஙனம் சிறியேன் எந்தைநின் திருப்பணி விடுத்தே
    சித்தம்வே றாகித் திரிந்ததே இலைநான் தெரிந்தநாள் முதல்இது வரையும்
    அத்தனே அரசே ஐயனே அமுதே அப்பனே அம்பலத் தாடும்
    சித்தனே சிவனே என்றென துளத்தே சிந்தித்தே இருக்கின்றேன் இன்றும்.
  • 114. பொய்வகை மனத்தேன் என்னினும் எந்தாய் பொய்யுல காசைசற் றறியேன்
    நைவகை தவிரத் திருச்சிற்றம் பலத்தே நண்ணிய மெய்ப்பொருள் நமது
    கைவகைப் படல்எக் கணத்திலோ எனநான் கருதினேன் கருத்தினை முடிக்கச்
    செய்வகை அறியேன் என்செய்வேன் ஐயோ தெய்வமே என்றிருக் கின்றேன்.
  • 115. அன்னையே என்றன் அப்பனே திருச்சிற் றம்பலத் தமுதனே எனநான்
    உன்னையே கருதி உன்பணி புரிந்திங் குலகிலே கருணைஎன் பதுதான்
    என்னையே நிலையாய் இருத்தஉள் வருந்தி இருக்கின்றேன் என்உள மெலிவும்
    மன்னும்என் உடம்பின் மெலிவும்நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும்.
  • 116. பொய்படாப் பயனே பொற்சபை நடஞ்செய் புண்ணியா கண்ணினுள் மணியே
    கைபடாக் கனலே கறைபடா மதியே கணிப்பருங் கருணையங் கடலே
    தெய்வமே எனநான் நின்னையே கருதித் திருப்பணி புரிந்திருக் கின்றேன்
    மைபடா உள்ள மெலிவும்நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும்.
  • 117. தன்னிகர் அறியாத் தலைவனே தாயே தந்தையே தாங்குநற் றுணையே
    என்னிறு கண்ணே என்னுயிர்க் குயிரே என்னுடை எய்ப்பினில் வைப்பே
    உன்னுதற் கினிய வொருவனே எனநான் உன்னையே நினைத்திருக் கின்றேன்
    மன்னும்என் உள்ள மெலிவும்நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும்.
  • 118. திருவளர் திருஅம் பலத்திலே அந்நாள் செப்பிய மெய்ம்மொழிப் பொருளும்
    உருவளர் திருமந் திரத்திரு முறையால் உணர்த்திய மெய்ம்மொழிப் பொருளும்
    கருவளர் அடியேன் உளத்திலே நின்று காட்டிய மெய்ம்மொழிப் பொருளும்
    மருவிஎன் உளத்தே நம்பிநான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும்.
  • 119. உவந்தென துளத்தே உணர்த்திய எல்லாம் உறுமலை இலக்கென நம்பி
    நிவந்ததோள் பணைப்ப மிகஉளங் களிப்ப நின்றதும் நிலைத்தமெய்ப் பொருள்இப்
    பவந்தனில் பெறுதல் சத்தியம் எனவே பற்பல குறிகளால் அறிந்தே
    சிவந்தபொன் மலைபோல் இருந்ததும் இந்நாள் திகைப்பதும் திருவுளம் அறியும்.
  • 120. ஏய்ந்தபொன் மலைமேல் தம்பத்தில் ஏறி ஏகவும் ஏகவும் நுணுகித்
    தேய்ந்துபோ தடியேன் பயந்தவெம் பயத்தைத் தீர்த்துமேல் ஏற்றிய திறத்தை
    வாய்ந்துளே கருதி மலைஎனப் பணைத்தே மனங்களிப் புற்றுமெய் இன்பம்
    தோய்ந்துநின் றாடிச்சுழன்றதும் இந்நாள் சுழல்வதும் திருவுளம் அறியும்.
  • 121. வாட்டமோ டிருந்த சிறியனேன் தனது வாட்டமும் மாயையா திகளின்
    ஈட்டமும் தவிர்க்கத் திருவுளத் திரங்கி என்னைஓர் பொருள்என மதித்தே
    தீட்டரும் புகழ்சேர் திருவடித் துணைகள் செலுத்திய திருச்சிலம் பொலிநான்
    கேட்டபோ திருந்த கிளர்ச்சியும் இந்நாள் கிலேசமுந் திருவுளம் அறியும்.
  • 122. கற்றவர் கல்லார் பிறர்பிறர் குரல்என் காதிலே கிடைத்தபோ தெல்லாம்
    மற்றவர் தமக்கென் உற்றதோ அவர்தம் மரபினர் உறவினர் தமக்குள்
    உற்றதிங் கெதுவோ என்றுளம் நடுங்கி ஓடிப்பார்த் தோடிப்பார்த் திரவும்
    எற்றரு பகலும் ஏங்கிநான் அடைந்த ஏக்கமுந் திருவுளம் அறியும்.
  • 123. கருணையம் பதிநங் கண்ணுள்மா மணிநம் கருத்திலே கலந்ததெள் ளமுதம்
    மருள்நெறி தவிர்க்கும் மருந்தெலாம் வல்ல வள்ளல்சிற் றம்பலம் மன்னும்
    பொருள்நிறை இன்பம் நம்மைஆண் டளித்த புண்ணியம் வருகின்ற தருணம்
    தருணம்இப் போதென் றெண்ணிநான் இருக்கும் தன்மையும் திருவுளம் அறியும்.
  • 124. இமையவர் பிரமர் நாரணர் முதலோர் எய்துதற் கரியபே ரின்பம்
    தமைஅறிந் தவருட் சார்ந்தபே ரொளிநம் தயாநிதி தனிப்பெருந் தந்தை
    அமையும்நம் உயிர்க்குத் துணைதிருப் பொதுவில் ஐயர் தாம் வருகின்ற சமயம்
    சமயம்இப் போதென் றெண்ணிநான் இருக்கும் தன்மையும் திருவுளம் அறியும்.
  • 125. அடியனேன் உள்ளம் திருச்சிற்றம் பலத்தென் அமுதநின் மேல்வைத்த காதல்
    நெடியஏழ் கடலில் பெரிதெனக் கிந்நாள் நிகழ்கின்ற ஆவலும் விரைவும்
    படியஎன் தன்னால் சொலமுடி யாது பார்ப்பறப் பார்த்திருக் கின்றேன்
    செடியனேன் இருக்கும் வண்ணங்கள் எல்லாம் திருவுளங் கண்டதே எந்தாய்.
  • 126. பன்னிரண் டாண்டு தொடங்கிநான் இற்றைப் பகல்வரை அடைந்தவை எல்லாம்
    உன்னிநின் றுரைத்தால் உலப்புறா ததனால் ஒருசில உரைத்தனன் எனினும்
    என்னுளத் தகத்தும் புறத்தும்உட் புறத்தும் இயல்புறப் புறத்தினும் விளங்கி
    மன்னிய சோதி யாவும்நீ அறிந்த வண்ணமே வகுப்பதென் நினக்கே.
  • 127. இதுவரை அடியேன் அடைந்தவெம் பயமும் இடர்களும் துன்பமும் எல்லாம்
    பொதுவளர் பொருளே பிறர்பொருட் டல்லால் புலையனேன் பொருட்டல இதுநின்
    மதுவளர் மலர்ப்பொற் பதத்துணை அறிய வகுத்தனன் அடியனேன் தனக்கே
    எதிலும்ஓர் ஆசை இலைஇலை பயமும் இடரும்மற் றிலைஇலை எந்தாய்.
  • 128. என்னள விலையே என்னினும் பிறர்பால் எய்திய கருணையால் எந்தாய்
    உன்னுறு பயமும் இடருமென் தன்னை உயிரொடும் தின்கின்ற தந்தோ
    இன்னும்என் றனக்கிவ் விடரொடு பயமும் இருந்திடில்231 என்உயிர் தரியா
    தன்னையும் குருவும் அப்பனும் ஆன அமுதனே அளித்தருள் எனையே.
  • 129. பயத்தொடு துயரும் மறைப்புமா மாயைப் பற்றொடு வினையும்ஆ ணவமும்
    கயத்தவன் மயக்கும் மருட்சியும் எனது கருத்திலே இனிஒரு கணமும்
    வியத்திடத் தரியேன் இவையெலாந் தவிர்த்துன் மெய்யருள் அளித்திடல் வேண்டும்
    உயத்தரு வாயேல் இருக்கின்றேன் இலையேல் உயிர்விடு கின்றனன் இன்றே.
  • 130. ஐயநான் பயத்தால் துயரினால் அடைந்த அடைவைஉள் நினைத்திடுந் தோறும்
    வெய்யதீ மூட்டிவிடுதல்232 ஒப் பதுநான் மிகஇவற் றால்இளைத் திட்டேன்
    வையமேல் இனிநான் இவைகளால் இளைக்க வசமிலேன் இவைஎலாம் தவிர்த்தே
    உய்யவைப் பாயேல் இருக்கின்றேன் இலையேல் உயிர்விடு கின்றனன் இன்றே.
  • 131. பயந்துயர் இடர்உள் மருட்சியா தியஇப் பகைஎலாம் பற்றறத் தவிர்த்தே
    நயந்தநின் அருளார்233 அமுதளித் தடியேன் நாடிஈண் டெண்ணிய எல்லாம்
    வியந்திடத் தருதல் வேண்டும்ஈ தெனது விண்ணப்பம் நின்திரு உளத்தே
    வயந்தரக் கருதித் தயவுசெய் தருள்க வள்ளலே சிற்சபை வாழ்வே.
  • 132. என்னுயிர் காத்தல் கடன்உனக் கடியேன் இசைத்தவிண் ணப்பம்ஏற் றருளி
    உன்னுமென் உள்ளத் துறும்பயம் இடர்கள் உறுகண்மற் றிவைஎலாம் ஒழித்தே
    நின்னருள் அமுதம் அளித்தென தெண்ணம் நிரப்பியாட் கொள்ளுதல் வேண்டும்
    மன்னுபொற் சபையில் வயங்கிய மணியே வள்ளலே சிற்சபை வாழ்வே.
  • 133. பரிக்கிலேன் பயமும் இடரும்வெந் துயரும் பற்றறத் தவிர்த்தருள் இனிநான்
    தரிக்கிலேன் சிறிதும்தரிக்கிலேன் உள்ளம்தரிக்கிலேன் தரிக்கிலேன் அந்தோ
    புரிக்கிலே சத்தை அகற்றிஆட் கொள்ளும் பொற்சபை அண்ணலே கருணை
    வரிக்கணேர் மடந்தை பாகனே சிவனே234 வள்ளலே சிற்சபை வாழ்வே.

    • 206. காவியல் கருணை வடிவனே - முதற் பதிப்பு, பொ. சு. பதிப்பு.
    • 207. தொலைபுரிந்து, 208. உறைஉறு - முதற்பதிப்பு, பொ.சு., ச. மு. க. பதிப்புகள்.
    • 209. எந்தாய் கூகை வெங்குரல் செயுந்தோறும் - முதற்பதிப்பு, பொ.சு.,பி. இரா. பதிப்புகள்.
    • 210. விடத்தின் - ச. மு. க. பதிப்பு.
    • 211. செறும் - பி. இரா. பதிப்பு.
    • 212. துயர்களை - ச. மு. க.
    • 213. ஐயவோ - படிவேறுபாடு. ஆ. பா.
    • 214. நடுக்கமும் - படிவேறுபாடு. ஆ. பா.
    • 215. ஐயவோ - படிவேறுபாடு. ஆ. பா
    • 216. அறியும் எந்தாயே - பி. இரா. பதிப்பு.
    • 217. விரைவிலே - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க., பி. இரா. பதிப்பு.
    • 218. அசைப்பிலே - படிவேறுபாடு. ஆ. பா.
    • 219. சிறுகுறும் - முதற்பதிப்பு, பொ. சு., ச.மு. க. பதிப்பு.
    • 220. இன்புடை - ச.மு க. பதிப்பு.
    • 221. மிருகம் - முதற்பதிப்பு, பொ. சு., ச.மு.க., பி. இரா. பதிப்பு.
    • 222. ஈடு - ஒப்பு, முதற் பதிப்பு.
    • 223. திருவருள் - முதற் பதிப்பு, பொ. சு. பதிப்பு.
    • 224. அலகுறாது - குறைவுபடாது. முதற் பதிப்பு.
    • 225. கனியில் - பி. இரா. பதிப்பு.
    • 226. அறிந்ததே - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க. பதிப்பு.
    • 227. மைதவழ் முகில்போன் றருள்பொழி கருணை - முதற் பதிப்பு, பொ. சு., ச. மு. க.'மைதவழ் விழியென் னம்மையோர் புடைகொள் வள்ளலே' என்றும் பாடம் எனச் ச.மு.க.அடிக்குறிப்பிடுகிறார்.
    • 228. உற்றிடின் - முதற்பதிப்பு; பொ. சு., ச. மு. க. பதிப்பு.
    • 229. தெற்றென - விரைந்து. முதற்பதிப்பு.
    • 230. தப்பிலா - முதற்பதிப்பு., பொ.சு., ச. மு. க. பதிப்பு.
    • 231. இருக்கில் - பி. இரா. பதிப்பு,
    • 232. விடுத்தல் - முதற்பதிப்பு, பொ. சு.,ச. மு. க., பி. இரா. பதிப்பு.
    • 233. அருளாம் - ச. மு. க. பதிப்பு.
    • 234. வரிக்கணேர் இன்ப வல்லியை மணந்த - முதற்பதிப்பு, பொ. சு., ச.மு.க. பதிப்பு.

பிள்ளைப் பெரு விண்ணப்பம் // பிள்ளைப் பெரு விண்ணப்பம்