திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
கொடி விண்ணப்பம்
koṭi viṇṇappam
திருவண்ண விண்ணப்பம்
tiruvaṇṇa viṇṇappam
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

055. நாடக விண்ணப்பம்
nāṭaka viṇṇappam

  திருவொற்றியூர்
  எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  திருச்சிற்றம்பலம்
 • 1. மடுக்கும் நீர்உடைப் பாழ்ங்கிண றதனுள்
  வழுக்கி வீழ்ந்தவன் வருந்துறா வண்ணம்
  எடுக்கின் றோர்என இடையிற்கை விடுதல்
  இரக்க முள்ளவர்க் கியல்பன்று கண்டீர்
  தடுக்கி லாதெனைச் சஞ்சல வாழ்வில்
  தாழ்த்து கின்றது தருமம்அன் றுமக்கு
  நடுக்கி லார்தொழும் ஒற்றியூர் உடையீர்
  ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
 • 2. வெண்மை நெஞ்சினேன் மெய்என்ப தறியேன்
  விமல நும்மிடை வேட்கையும் உடையேன்
  உண்மை ஓதினேன் வஞ்சக வாழ்க்கை
  உவரி வீழ்வனேல் உறுதிமற் றறியேன்
  கண்மை உள்ளவர் பாழ்ங்குழி வீழக்
  கண்டி ருப்பது கற்றவர்க் கழகோ
  நண்மை ஒற்றியீர் திருச்சிற்றம் பலத்துள்
  ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
 • 3. குற்ற மேபல இயற்றினும் எனைநீர்
  கொடியன் என்பது குறிப்பல உமது
  பொற்றை நேர்புயத் தொளிர்திரு நீற்றைப்
  பூசு கின்றனன் புனிதநும் அடிக்கண்
  உற்ற தோர்சிறி தன்பும்இவ் வகையால்
  உறுதி ஈவதிங் குமக்கொரு கடன்காண்
  நற்ற வத்தர்வாழ் ஒற்றியூர் உடையீர்
  ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
 • 4. உள்ள தோதினால் ஒறுக்கிலேம் என்பர்
  உலகு ளோர்இந்த உறுதிகொண் டடியேன்
  கள்ளம் ஓதிலேன் நும்மடி அறியக்
  காம வேட்கையில் கடலினும் பெரியேன்
  வள்ள லேஉம தருள்பெறச் சிறிது
  வைத்த சிந்தையேன் மயக்கற அருள்வீர்
  நள்ளல் உற்றவர் வாழ்ஒற்றி உடையீர்
  ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
 • 5. அரந்தை யோடொரு வழிச்செல்வோன் தனைஓர்
  ஆற்று வெள்ளம்ஈர்த் தலைத்திட அவனும்
  பரந்த நீரிடை நின்றழு வானேல்
  பகைவர் ஆயினும் பார்த்திருப் பாரோ
  கரந்தை அஞ்சடை அண்ணல்நீர் அடியேன்
  கலங்கக் கண்டிருக் கின்றது கடனோ
  நரந்த மார்பொழில் ஒற்றியூர் உடையீர்
  ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
 • 6. பிறவிக் கண்ணிலான் கைக்கொளும் கோலைப்
  பிடுங்கி வீசுதல் பெரியவர்க் கறமோ
  மறவிக் கையறை மனத்தினேன் உம்மேல்
  வைக்கும் அன்பைநீர் மாற்றுதல் அழகோ
  உறஇக் கொள்கையை உள்ளிரேல் இதனை
  ஓதிக் கொள்ளிடம் ஒன்றிலை கண்டீர்
  நறவிக் கோங்கிய ஒற்றியம் பதியீர்
  ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
 • 7. வலிய வந்திடு விருந்தினை ஒழிக்கார்
  வண்கை உள்ளவர் மற்றதுபோலக்
  கலிய நெஞ்சினேன் வஞ்சக வாழ்வில்
  கலங்கி ஐயநுங் கருணையாம் அமுதை
  மலிய உண்டிட வருகின்றேன் வருமுன்
  மாற்று கிற்பிரேல் வள்ளல்நீர் அன்றோ
  நலியல் நீக்கிடும் ஒற்றியம் பதியீர்
  ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
 • 8. பொய்யன் ஆகிலும் போக்கிடம் அறியாப்
  புலையன் ஆண்டவன் புகழ்உரைப் பானேல்
  உய்ய வைப்பன்ஈ துண்மைஇவ் வுலகில்
  ஒதிய னேன்புகல் ஓரிடம் அறியேன்
  ஐய நும்மடிக் காட்செயல் உடையேன்
  ஆண்ட நீர்எனை அகற்றுதல் அழகோ
  நையல் அற்றிட அருள்ஒற்றி உடையீர்
  ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
 • 9. தந்தை ஆயவர் தனையரைக் கெடுக்கச்
  சமைவர் என்பது சற்றும்இன் றுலகில்
  எந்தை நீர்எனை வஞ்சக வாழ்வில்
  இருத்து வீர்எனில் யார்க்கிது புகல்வேன்
  பந்த மேலிட என்பரி தாபம்
  பார்ப்பி ரோஅருட் பங்கய விழியீர்
  நந்த வொண்பணை ஒற்றியூர் உடையீர்
  ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
 • 10. கல்வி வேண்டிய மகன்தனைப் பெற்றோர்
  கடுத்தல் ஓர்சிறு கதையிலும் இலைகாண்
  செல்வம் வேண்டிலேன் திருவருள் விழைந்தேன்
  சிறிய னேனைநீர் தியக்குதல் அழகோ
  பல்வி தங்களால் பணிசெயும் உரிமைப்
  பாங்கு நல்கும்அப் பரம்உமக் கன்றே
  நல்வி தத்தினர் புகழ்ஒற்றி உடையீர்
  ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
 • 11. மண்ணில் நல்லவன் நல்லவர் இடத்தோர்
  வணக்கம் இன்மையன் வணங்குவன் ஆனால்
  எண்ணி நம்புடை இருஎன உரைப்பர்
  ஏன்வ ணங்கினை என்றுரைப் பாரோ
  கண்ணின் நல்லநும் கழல்தொழ இசைந்தால்
  கலக்கம் காண்பது கடன்அன்று கண்டீர்
  நண்ணி மாதவன் தொழும்ஒற்றி உடையீர்
  ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.

நாடக விண்ணப்பம் // நாடக விண்ணப்பம்

No audios found!