திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
போற்றித் திருப்பதிகம்
pōṟṟit tiruppatikam
தரிசனப் பதிகம்
tarisaṉap patikam
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

080. விண்ணப்பப் பதிகம்
viṇṇappap patikam

  அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  திருச்சிற்றம்பலம்
 • 1. தண்ணார் மதிபோல் சீதளவெண் தரளக் கவிகைத் தனிநிழற்கீழ்க்
  கண்ணார் செல்வச் செருக்கினர்தம் களிப்பில் சிறிய கடைநாயேன்
  பெண்ணார் பாகப் பெருந்தகைதன் பெரிய கருணைக் குரியம்என்றே
  எண்ணா நின்று களிக்கின்றேன் ஆரூர் எந்தாய் இரங்காயே.
 • 2. இரங்கா திருந்தால் சிறியேனை யாரே மதிப்பார் இழிந்தமனக்
  குரங்கால் அலைப்புண் டலைகின்ற கொடிய பாவி இவன்என்றே
  உரங்கா தலித்தோர் சிரிப்பார்நான் உலகத் துயரம் நடிக்கின்ற
  அரங்காக் கிடப்பேன் என்செய்வேன் ஆரூர் அமர்ந்த அருமணியே.
 • 3. மணியார் கண்டத் தெண்டோள்செவ் வண்ணப் பவள மாமலையே
  அணியால் விளங்கும் திருஆரூர் ஆரா அமுதே அடிச்சிறியேன்
  தணியா உலகச் சழக்கிடையே தளர்ந்து கிடந்து தவிக்கின்றேன்
  திணியார் முருட்டுக் கடைமனத்தேன் செய்வ தொன்றும் தெரியேனே.
 • 4. தெரியத் தெரியும் தெரிவுடையார் சிவாநு பவத்தில் சிறக்கின்றார்
  பிரியப் பிரியும் பெரும்பாவி அடியேன் பிழையில் பிழைக்கின்றேன்
  துரியப் பொருளே அணிஆரூர்ச் சோதி மணிநீ தூயஅருள்
  புரியப் பெறுவேன் எனில்அவர்போல் யானும் சுகத்திற் பொலிவேனே.
 • 5. பொலிவேன் கருணை புரிந்தாயேல் போதா னந்தக் கடல்ஆடி
  மலிவேன் இன்ப மயமாவேன் ஆரூர் மணிநீ வழங்காயேல்
  மெலிவேன் துன்பக் கடல்மூழ்கி மேவி எடுப்பார் இல்லாமல்
  நலிவேன் அந்தோ அந்தோநின் நல்ல கருணைக் கழகன்றே.
 • 6. கருணைக் கடலே திருஆரூர்க் கடவுட் சுடரே நின்னுடைய
  அருணக் கமல மலரடிக்கே அடிமை விழைந்தேன் அருளாயேல்
  வருணக் கொலைமா பாதகனாம் மறையோன் தனக்கு மகிழ்ந்தன்று
  தருணக் கருணை அளித்தபுகழ் என்னாம் இந்நாள் சாற்றுகவே.
 • 7. இந்நாள் அடியேன் பிழைத்தபிழை எண்ணி இரங்காய் எனில்அந்தோ
  அந்நாள் அடிமை கொண்டனையே பிழையா தொன்றும் அறிந்திலையோ
  பொன்னார் கருணைக் கடல்இன்று புதிதோ பிறர்பால் போயிற்றோ
  என்நா யகனே திருஆரூர் எந்தாய் உள்ளம் இரங்கிலையே.
 • 8. உள்ளக் கவலை ஒருசிறிதும் ஒருநா ளேனும் ஒழிந்திடவும்
  வெள்ளக் கருணை இறையேனும் மேவி யிடவும் பெற்றறியேன்
  கள்ளக் குரங்காய் உழல்கின்ற மனத்தேன் எனினும் கடையேனைத்
  தள்ளத் தகுமோ திருஆரூர் எந்தாய் எந்தாய் தமியேனே.
 • 9. எந்தாய் ஒருநாள் அருள்வடிவின் எளியேன் கண்டு களிப்படைய
  வந்தாய் அந்தோ கடைநாயேன் மறந்து விடுத்தேன் மதிகெட்டேன்
  செந்தா மரைத்தாள் இணைஅன்றே சிக்கென் றிறுகப் பிடித்தேனேல்
  இந்தார் சடையாய் திருஆரூர்இறைவா துயரற் றிருப்பேனே.
 • 10. இருப்பு மனத்துக் கடைநாயேன் என்செய் வேன்நின் திருவருளாம்
  பொருப்பில் அமர்ந்தார் அடியர்எலாம் அந்தோ உலகப் புலைஒழுக்காம்
  திருப்பில் சுழன்று நான்ஒருவன் திகைக்கின் றேன்ஓர் துணைகாணேன்
  விருப்பில் கருணை புரிவாயோ ஆரூர் தண்ணார் வியன்அமுதே.

திருவாரூர்ப் பதிகம் // விண்ணப்பப் பதிகம்