திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
வல்லபை கணேசர் பிரசாத மாலை
vallapai kaṇēsar pirasāta mālai
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

001. சித்தி விநாயகர் பதிகம்
sitti vināyakar patikam

    நேரிசை வெண்பா
    திருச்சிற்றம்பலம்
  • 1. அஞ்சுமுகத் தான்மகன்மால் அஞ்சுமுகத் தான்அருள்வான்
    அஞ்சுமுகத் தான்அஞ் சணிகரத்தான் - அஞ்சுமுக
    வஞ்சரையான் காணா வகைவதைத்தான் ஓர்அரையோ
    டஞ்சரையான் கண்கள் அவை.
  • 2. வாதாகா வண்ண மணியேஎம் வல்லபைதன்
    நாதாகா வண்ண நலங்கொள்வான் - போதார்
    வனங்காத்து நீர்அளித்த வள்ளலே அன்பால்
    இனங்காத் தருளாய் எனை.
  • எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • 3. உலகெலாம் தழைப்ப அருள்மத அருவி ஒழுகுமா முகமும்ஐங் கரமும்
    இலகுசெம் மேனிக் காட்சியும் இரண்டோ டிரண்டென ஓங்குதிண் தோளும்
    திலகவாள் நுதலார் சித்திபுத் திகளைச் சேர்த்தணைத் திடும்இரு மருங்கும்
    விலகுறா தெளியேன் விழைந்தனன் சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
  • 4. உள்ளமும் உயிரும் உணர்ச்சியும் உடம்பும் உறுபொருள் யாவும்நின் தனக்கே
    கள்ளமும் கரிசும் நினைந்திடா துதவிக் கழல்இணை நினைந்துநின் கருணை
    வெள்ளம்உண் டிரவுபகல்அறி யாத வீட்டினில் இருந்துநின் னோடும்
    விள்ளல்இல் லாமல் கலப்பனோ சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
  • 5. நாதமும் கடந்து நிறைந்துநின் மயமே நான்என அறிந்துநான் தானாம்
    பேதமும் கடந்த மௌனராச் சியத்தைப் பேதையேன் பிடிப்பதெந் நாளோ
    ஏதமும் சமய வாதமும் விடுத்தோர் இதயமும் ஏழையேன் சிரமும்
    வேதமும் தாங்கும் பாதனே சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
  • 6. சச்சிதானந்த வடிவம்நம் வடிவம் தகும்அதிட் டானம்மற் றிரண்டும்
    பொய்ச்சிதா பாசக் கற்பனை இவற்றைப் போக்கியாங் கவ்வடி வாகி
    அச்சிதா கார போதமும் அதன்மேல் ஆனந்த போதமும் விடுத்தல்
    மெய்ச்சிதாம் வீடென் றுரைத்தனை சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
  • 7. ஒன்றல இரண்டும் அலஇரண் டொன்றோ டுருஅல அருஅல உவட்ட
    நன்றல நன்றல் லாதல விந்து நாதமும் அலஇவை அனைத்தும்
    பொன்றல்என் றறிந்துட் புறத்தினும் அகண்ட பூரண மாம்சிவம் ஒன்றே
    வென்றல்என் றறிநீ என்றனை சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
  • 8. சத்தசத் தியல்மற் றறிந்துமெய்ப் போதத் தத்துவ நிலைபெற விழைவோர்
    சித்தமுற் றகலா தொளித்தநின் கமலச் சேவடி தொழஎனக் கருள்வாய்
    சுத்தசற் குணத்தெள் ளமுதெழு கடலே சுகபரி பூரணப் பொருளே
    வித்தக முக்கண் அத்தனே சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
  • 9. மருள்உறு மனமும் கொடியவெங் குணமும் மதித்தறி யாததுன் மதியும்
    இருள்உறு நிலையும் நீங்கிநின் அடியை எந்தநாள் அடைகுவன் எளியேன்
    அருள்உறும் ஒளியாய் அவ்வொளிக் குள்ளே அமர்ந்தசிற் பரஒளி நிறைவே
    வெருள்உறு சமயத் தறியொணாச் சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
  • 10. கேவலசகல வாதனை அதனால் கீழ்ப்படும் அவக்கடல் மூழ்கி
    ஓவற மயங்கி உழலும்இச் சிறியேன் உன்அருள் அடையும்நாள் உளதோ
    பாவலர் உளத்தில் பரவிய நிறைவே பரமசிற் சுகபரம் பரனே
    மேவுறும் அடியார்க் கருளிய சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
  • 11. கானல்நீர் விழைந்த மான்என உலகக் கட்டினை நட்டுழன் றலையும்
    ஈனவஞ் சகநெஞ் சகப்புலை யேனை ஏன்றுகொண் டருளும்நாள் உளதோ
    ஊனம்ஓன் றில்லா உத்தமர் உளத்தே ஓங்குசீர்ப் பிரணவ ஒளியே
    வேல்நவில் கரத்தோர்க் கினியவா சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
  • 12. பெரும்பொருட் கிடனாம் பிரணவ வடிவில் பிறங்கிய ஒருதனிப் பேறே
    அரும்பொருள் ஆகி மறைமுடிக் கண்ணே அமர்ந்தபே ரானந்த நிறைவே
    தரும்பர போக சித்தியும் சுத்த தருமமும் முத்தியும் சார்ந்து
    விரும்பினோர்க் களிக்கும் வள்ளலே சித்தி விநாயக விக்கினேச் சுரனே.

சித்தி விநாயகர் பதிகம் // சித்தி விநாயகர் பதிகம்