திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
சித்தி விநாயகர் பதிகம்
sitti vināyakar patikam
கணேசத் திருஅருள் மாலை
kaṇēsat tiruaruḷ mālai
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

002. வல்லபை கணேசர் பிரசாத மாலை
vallapai kaṇēsar pirasāta mālai

    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. திருநெடு மால்அன் றால்இடை நினது சேவடித் துணைமலர்த் துகளான்
    பெருநெடு மேனி தனிற்படப்165 பாம்பின் பேருரு அகன்றமை மறவேன்
    கருநெடுங் கடலைக் கடத்து166 நற் றுணையே கண்கள்மூன் றுடையசெங் கரும்பே
    வருநெடு மருப்பொன் றிலகுவா ரணமே வல்லபைக் கணேசமா மணியே.
  • 2. நளினமா மலர்வாழ் நான்முகத் தொருவன் நண்ணிநின் துணையடிவழுத்திக்
    களிநலன் உடன் இவ்வுலகெலாம்படைக்கக்கடைக்கணித்ததைஉளம்மறவேன்
    அளிநலன் உறுபே ரானந்தக் கடலே அருமருந் தேஅருள் அமுதே
    வளிநிறை உலகுக் கொருபெருந் துணையே வல்லபைக் கணேசமா மணியே.
  • 3. சீர்உருத் திரமூர்த் திகட்குமுத் தொழிலும் செய்தருள் இறைமைதந் தருளில்
    பேர்உருத் திரங்கொண் டிடச்செயும் நினது பெருமையை நாள்தொறும் மறவேன்
    ஆர்உருத் திடினும் அஞ்சுதல் செய்யா ஆண்மைஎற் கருளிய அரசே
    வார்உருத் திடுபூண் மணிமுகக் கொங்கை வல்லபைக் கணேசமா மணியே.
  • 4. விண்ணவர் புகழும் மெய்கண்ட நாதன் வித்தகக் கபிலன்ஆ தியர்க்கே
    கண்அருள் செயும்நின் பெருமையை அடியேன் கனவிலும் நனவிலும் மறவேன்
    தண்அருட் கடலே அருட்சிவ போக சாரமே சராசர நிறைவே
    வண்ணமா மேனிப் பரசிவ களிறே வல்லபைக் கணேசமா மணியே.
  • 5. நாரையூர் நம்பி அமுதுகொண் டூட்ட நற்றிரு வாய்மலர்ந் தருளிச்
    சீரைமே வுறச்செய் தளித்திடும் நினது திருவருள் நாள்தொறும் மறவேன்
    தேரைஊர் வாழ்வும் திரம்அல எனும்நற் றிடம்எனக் கருளிய வாழ்வே
    வாரைஊர் முலையாள் மங்கைநா யகிஎம் வல்லபைக் கணேசமா மணியே.
  • 6. கும்பமா முனியின் கரகநீர் கவிழ்த்துக் குளிர்மலர் நந்தனம் காத்துச்
    செம்பொன்நாட் டிறைவற் கருளிய நினது திருவருட் பெருமையை மறவேன்
    நம்பனார்க் கினிய அருள்மகப் பேறே நற்குணத் தோர்பெரு வாழ்வே
    வம்பறா மலர்த்தார் மழைமுகில் கூந்தல் வல்லபைக் கணேசமா மணியே.
  • 7. அயன்தவத் தீன்ற சித்திபுத் திகள்ஆம் அம்மையர் இருவரை மணந்தே
    இயன்றஅண் டங்கள் வாழ்வுறச் செயும்நின் எழில்மணக் கோலத்தை மறவேன்
    பயன்தரும் கருணைக் கற்பகத் தருவே பரசிவத் தெழுபரம் பரமே
    வயன்தரு நிமல நித்தியப் பொருளே வல்லபைக் கணேசமா மணியே.
  • 8. முன்அருந் தவத்தோன் முற்கலன் முதலா முனிவர்கள் இனிதுவீ டடைய
    இன்னருள் புரியும் நின்அருட் பெருமை இரவினும் பகலினும் மறவேன்
    என்அரும் பொருளே என்உயிர்க் குயிரே என்அர சேஎன துறவே
    மன்அரு நெறியில் மன்னிய அறிவே வல்லபைக் கணேசமா மணியே.
  • 9. துதிபெறும் காசி நகரிடத் தனந்தம் தூயநல் உருவுகொண் டாங்கண்
    விதிபெறும் மனைகள் தொறும்விருந் தினனாய் மேவிய கருணையை மறவேன்
    நதிபெறும் சடிலப் பவளநற் குன்றே நான்மறை நாடரு நலமே
    மதிபெறும் உளத்தில் பதிபெறும் சிவமே வல்லபைக் கணேசமா மணியே.
  • 10. தடக்கைமா முகமும் முக்கணும் பவளச் சடிலமும் சதுர்ப்புயங் களும்கை
    இடக்கைஅங் குசமும் பாசமும் பதமும் இறைப்பொழு தேனும்யான் மறவேன்
    விடக்களம் உடைய வித்தகப் பெருமான் மிகமகிழ்ந் திடஅருட் பேறே
    மடக்கொடி நங்கை மங்கைநா யகிஎம் வல்லபைக் கணேசமா மணியே.
  • 11. பெருவயல் ஆறு முகன்நகல் அமர்ந்துன் பெருமைகள் பேசிடத் தினமும்
    திருவளர் மேன்மைத் திறமுறச் சூழும் திருவருட் பெருமையை மறவேன்
    மருவளர் தெய்வக் கற்பக மலரே மனமொழி கடந்தவான் பொருளே
    வருமலை வல்லிக் கொருமுதற் பேறே வல்லபைக் கணேசமா மணியே.

    • 165. தளிர்பட - தொ. வே.
    • 166. கடற்று - தொ. வே.

வல்லபை கணேசர் பிரசாத மாலை // வல்லபை கணேசர் பிரசாத மாலை