திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
ஆனந்தப் பதிகம்
āṉantap patikam
போற்றித் திருப்பதிகம்
pōṟṟit tiruppatikam
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

078. திருவண்ணப் பதிகம்
tiruvaṇṇap patikam

    பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. திருவண்ண நதியும்வளை ஒருவண்ண மதியும்வளர்
    செவ்வண்ணம் நண்ணுசடையும்
    தெருள்வண்ண நுதல்விழியும் அருள்வண்ண வதனமும்
    திகழ்வண்ண வெண்ணகையும்ஓர்
    மருவண்ண மணிகுவளை மலர்வண்ண மிடறும்மலை
    மகள்வண்ண மருவும்இடமும்
    மன்வண்ண மிகுதுணைப் பொன்வண்ண அடிமலரும்
    மாணிக்க வண்ணவடிவும்
    இருவண்ண மாம்என்மன தொருவண்ணம் ஆகியே
    இடையறா தெண்ணும்வண்ணம்
    எவ்வண்ணம் அவ்வண்ணம் இவ்வண்ணம் என்றிவண்
    இயம்பல்உன் கருணைவண்ணம்
    கருவண்ணம் அறஉளம் பெருவண்ணம் உறநின்று
    கடல்வண்ணன் எண்ணும்அமுதே
    கனகஅம் பலநாத கருணையங் கணபோத
    கமலகுஞ் சிதபாதனே.
  • 2. எண்ணுறுவி ருப்பாதி வல்விலங் கினமெலாம்
    இடைவிடா துழலஒளிஓர்
    எள்அளவும் இன்றிஅஞ் ஞானஇருள் மூடிட
    இருண்டுயிர் மருண்டுமாழ்க
    நண்ணுமன மாயையாம் காட்டைக் கடந்துநின்
    ஞானஅருள் நாட்டைஅடையும்
    நாள்எந்த நாள்அந்த நாள்இந்த நாள்என்று
    நாயினேற் கருள்செய்கண்டாய்
    விண்ணுறுசு டர்க்கெலாம் சுடர்அளித் தொருபெரு
    வெளிக்குள்வளர் கின்றசுடரே
    வித்தொன்றும் இன்றியே விளைவெலாம் தருகின்ற
    விஞ்ஞான மழைசெய்முகிலே
    கண்ணுறுநு தற்பெருங் கடவுளே மன்றினில்
    கருணைநடம் இடுதெய்வமே
    கனகஅம் பலநாத கருணையங் கணபோத
    கமலகுஞ் சிதபாதனே.
  • 3. பூதநெறி யாதிவரு நாதநெறி வரையுமாப்
    புகலுமூ வுலகுநீத்துப்
    புரையுற்ற மூடம்எனும் இருள்நிலம்அ கன்றுமேல்
    போய்அருள்ஒ ளித்துணையினால்
    வேதநெறி புகல்சகல கேவலம்இ லாதபர
    வெளிகண்டு கொண்டுகண்ட
    விளைவின்றி நான்இன்றி வெளிஇன்றி வெளியாய்
    விளங்குநாள் என்றருளுவாய்
    வாதநெறி நடவாத போதநெறி யாளர்நிறை
    மதிநெறிஉ லாவும்மதியே
    மணிமிடற் றரசேஎம் வாழ்வின்முத லேஅரு
    மருந்தேபெ ருந்தெய்வமே
    காதநெறி மணம்வீசு கனிதருபொ ழிற்குலவு
    கடிமதிற் றில்லைநகர்வாழ்
    கனகஅம் பலநாத கருணையங் கணபோத
    கமலகுஞ் சிதபாதனே.
  • 4. கூர்கொண்ட வாள்கொண்டு கொலைகொண்ட வேட்டுவக்
    குடிகொண்ட சேரிநடுவில்
    குவைகொண்ட ஒருசெல்வன் அருமைகொண் டீன்றிடு
    குலங்கொண்ட சிறுவன்ஒருவன்
    நேர்கொண்டு சென்றவர்கள் கைகொண் டுறக்கண்கள்
    நீர்கொண்டு வாடல்எனவே
    நிலைகொண்ட நீஅருட் கலைகொண் டளித்தயான்
    நெறிகொண்ட குறிதவறியே
    போர்கொண்ட பொறிமுதல் புலைகொண்ட தத்துவப்
    புரைகொண்ட மறவர்குடியாம்
    பொய்கொண்ட மெய்என்னும் மைகொண்ட சேரியில்
    போந்துநின் றவர்அலைக்கக்
    கார்கொண்ட இடிஒலிக் கண்கொண்ட பார்ப்பில்
    கலங்கினேன் அருள்புரிகுவாய்
    கனகஅம் பலநாத கருணையங் கணபோத
    கமலகுஞ் சிதபாதனே.
  • 5. படமெடுத் தாடுமொரு பாம்பாக என்மனம்
    பாம்பாட்டி யாகமாயைப்
    பார்த்துக் களித்துதவு பரிசுடையர் விடயம்
    படர்ந்தபிர பஞ்சமாகத்
    திடமடுத் துறுபாம்பின் ஆட்டமது கண்டஞ்சு
    சிறுவன்யா னாகநின்றேன்
    தீரத்து ரந்தந்த அச்சந்த விர்த்திடு
    திறத்தன்நீ ஆகல்வேண்டும்
    விடமடுத் தணிகொண்ட மணிகண்ட னேவிமல
    விஞ்ஞான மாம்அகண்ட
    வீடளித் தருள்கருணை வெற்பனே அற்புத
    விராட்டுருவ வேதார்த்தனே
    கடமடுத் திடுகளிற் றுரிகொண்ட ணிந்தமெய்க்
    கடவுளே சடைகொள்அரசே
    கனகஅம் பலநாத கருணையங் கணபோத
    கமலகுஞ் சிதபாதனே.
  • 6. எழுவகைப் பிறவிகளுள் எப்பிறவி எய்துகினும்
    எய்துகபி றப்பில்இனிநான்
    எய்தாமை எய்துகினும் எய்திடுக இருமையினும்
    இன்பம்எய் தினும்எய்துக
    வழுவகைத் துன்பமே வந்திடினும் வருகமிகு
    வாழ்வுவந் திடினும்வருக
    வறுமைவரு கினும்வருக மதிவரினும் வருகஅவ
    மதிவரினும் வருகஉயர்வோ
    டிழிவகைத் துலகின்மற் றெதுவரினும் வருகஅல
    தெதுபோ கினும்போகநின்
    இணையடிகள் மறவாத மனம்ஒன்று மாத்திரம்
    எனக்கடைதல் வேண்டும்அரசே
    கழிவகைப் பவரோக நீக்கும்நல் லருள்எனும்
    கதிமருந் துதவுநிதியே
    கனகஅம் பலநாத கருணையங் கணபோத
    கமலகுஞ் சிதபாதனே.
  • 7. பற்றுவது பந்தம்அப் பற்றறுதல் வீடிஃது
    பரமவே தார்த்தம்எனவே
    பண்புளோர் நண்பினொடு பகருவது கேட்டும்என்
    பாவிமனம் விடயநடையே
    எற்றுவது செய்யாமல் எழுவதொடு விழுவதும்
    இறங்குவதும் ஏறுவதும்வீண்
    எண்ணுவதும் நண்ணுவதும் இப்புவன போகங்கள்
    யாவினும் சென்றுசென்றே
    சுற்றுவதும் ஆகிஓர் சற்றுமறி வில்லாது
    சுழல்கின்ற தென்செய்குவேன்
    தூயநின் திருவருளின் அன்றிஇவ் வேழைஅச்
    சுழல்மனம்அ டக்கவருமோ
    கற்றுவழு வற்றவர் கருத்தமர் கருத்தனே
    கண்ணுதற் கடவுள்மணியே
    கனகஅம் பலநாத கருணையங் கணபோத
    கமலகுஞ் சிதபாதனே.
  • 8. எளியனேன் சிறியன்யான் செய்பிழைகள் சிறியவோ
    எழுகடலி னும்பெரியவே
    என்செய்கேன் என்செய்கேன் இனிஆயி னும்செயா
    தெந்தைநினை ஏத்தஎன்றால்
    வளியின்வான் சுழல்கின்ற பஞ்சாக நெஞ்சால்
    மயங்குகின் றேன்அடியனேன்
    மனம்எனது வசமாக நினதுவசம் நானாக
    வந்தறிவு தந்தருளுவாய்
    ஒளியின்ஒளி யேநாத வெளியின் வெளியேவிடய
    உருவின்உரு வேஉருவினாம்
    உயிரின்உயி ரேஉயர்கொள் உணர்வின்உணர் வேஉணர்வின்
    உறவினுற வேஎம்இறையே
    களியின்நிறை வேஅளிகொள் கருணைநிதி யேமணிகொள்
    கண்டஎண் தோள்கடவுளே
    கனகஅம் பலநாத கருணையங் கணபோத
    கமலகுஞ் சிதபாதனே.
  • 9. சந்ததம்எ னக்குமகிழ் தந்தைநீ உண்டுநின்
    தன்னிடத் தேமவல்லி
    தாயுண்டு நின்அடியர் என்னும்நல் தமர்உண்டு
    சாந்தம்எனும் நேயர்உண்டு
    புந்திகொள்நி ராசையாம் மனைவிஉண் டறிவெனும்
    புதல்வன்உண் டிரவுபகலும்
    போனவிட முண்டருட் பொருளுமுண் டானந்த
    போகபோக் கியமும்உண்டு
    வந்தனைசெய் நீறெனும் கவசம்உண் டக்கமா
    மணியும்உண் டஞ்செழுத்தாம்
    மந்திரப் படைஉண்டு சிவகதிஎ னும்பெரிய
    வாழ்வுண்டு தாழ்வும்உண்டோ
    கந்தமிகு கொன்றையொடு கங்கைவளர் செஞ்சடைக்
    கடவுளே கருணைமலையே
    கனகஅம் பலநாத கருணையங் கணபோத
    கமலகுஞ் சிதபாதனே.
  • 10. நான்முகனும் மாலும்அடி முடியும்அறி வரியபர
    நாதமிசை ஓங்குமலையே
    ஞானமய மானஒரு வானநடு ஆனந்த
    நடனமிடு கின்றஒளியே
    மான்முகம்வி டாதுழலும் எனையும்உயர் நெறிமருவ
    வைத்தவண்வ ளர்த்தபதியே
    மறைமுடிவில் நிறைபரப் பிரமமே ஆகம
    மதிக்கும்முடி வுற்றசிவமே
    ஊண்முகச் செயல்விடுத் துண்முகப் பார்வையின்
    உறுந்தவர்பெ றுஞ்செல்வமே
    ஒழியாத உவகையே அழியாத இன்பமே
    ஒன்றிரண் டற்றநிலையே
    கான்முகக் கடகளிற் றுரிகொண்ட கடவுளே
    கண்கொண்ட நுதல்அண்ணலே
    கனகஅம் பலநாத கருணையங் கணபோத
    கமலகுஞ் சிதபாதனே.

குஞ்சிதபாதப் பதிகம் // திருவண்ணப் பதிகம்