திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
ஆனந்த மாலை
āṉanta mālai
செளந்தர மாலை
seḷantara mālai
  எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  திருச்சிற்றம்பலம்
 • 1. அருளுடையாய் அடியேன்நான் அருளருமை அறியேன்
  அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
  மருளுடையேன் தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே
  மகிழ்ந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்
  தெருளுடைய கண்களும்விட் டகலாதே இன்னும்
  தெரிகின்ற தாயினும்என் சிந்தைஉரு கிலதே
  இருளுடைய சிலையும்இதற் குருகல்அரி தலவே
  இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
 • 2. அன்புடையாய் அடியேன்நான் அருளருமை அறியேன்
  அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
  வன்புடையேன் தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே
  வலிந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்
  இன்புடைய கண்களும்விட் டகலாதே இன்னும்
  விளங்குகின்ற தாயினும்என் வெய்யமனம் உருகா
  என்புடைய உடலும்இதற் குருகல்அரி தலவே
  இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
 • 3. ஆளுடையாய் சிறியேன்நான் அருளருமை அறியேன்
  அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
  வாளுடையேன்188 தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே
  வலிந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்
  நீளுடைய கண்களும்விட் டகலாதே இன்னும்
  நிகழ்கின்ற தாயினும்என் நெஞ்சம்உரு கிலதே
  ஏளுடைய மலையும்இதற் குருகல்அரி தலவே
  இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
 • 4. ஆரமுதே அடியேன்நான் அருளருமை அறியேன்
  அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
  வாரமுற எனையழைத்துத் திரும்பவும்என் கரத்தே
  மகிழ்ந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்
  சீருடைய கண்களும்விட் டகலாதே இன்னும்
  தெரிகின்ற தாயினும்என் சிந்தைஉரு கிலதே
  ஈரமிலா மரமும்இதற் குருகல்அரி தலவே
  இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
 • 5. அற்புதநின் அருளருமை அறியேன்நான் சிறிதும்
  அறியாதே மறுத்தபிழை ஆயிரமும் பொறுத்து
  வற்புறுவேன் தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே
  வலிந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்
  கற்புடைய கண்களும்விட் டகலாதே இன்னும்
  காண்கின்ற தென்னினும்என் கன்மனமோ உருகா
  இற்புடைய இரும்பும்இதற் குருகல்அரி தலவே
  இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
 • 6. ஆண்டவநின் அருளருமை அறியாதே திரிந்தேன்
  அன்றிரவின் மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
  வேண்டிஎனை அருகழைத்துத் திரும்பவும்என் கரத்தே
  மிகஅளித்த அருள்வண்ணம் வினையுடையேன் மனமும்
  காண்தகைய கண்களும்விட் டகலாதே இன்னும்
  காண்கின்ற தாயினும்என் கருத்துருகக் காணேன்
  ஈண்டுருகாக் கரடும்இதற் குருகல்அரி தலவே
  இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
 • 7. அரசேநின் திருவருளின் அருமைஒன்றும் அறியேன்
  அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
  விரவும்அன்பில் எனைஅழைத்து வலியவும்என் கரத்தே
  வியந்தளித்த பெருங்கருணை விளக்கம்என்றன் மனமும்
  உரவுமலர்க் கண்களும்விட் டகலாதே இன்னும்
  ஒளிர்கின்ற தாயினும்என் உள்ளம்உரு கிலதே
  இரவுநிறத் தவரும்இதற் குருகல்அரி தலவே
  இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
 • 8. ஐயாநின் அருட்பெருமை அருமைஒன்றும் அறியேன்
  அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
  மெய்யாஅன் றெனைஅழைத்து வலியவுமென் கரத்தே
  வியந்தளித்த பெருங்கருணை விளக்கம்என்றன் மனமும்
  கையாது கண்களும்விட் டகலாதே இன்னும்
  காண்கின்ற தாயினும்என் கருத்துருகக் காணேன்
  எய்யாவன் பரலும்இதற் குருகல்அரி தலவே
  இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
 • 9. அப்பாநின் திருவருட்பேர் அமுதருமை அறியேன்
  அன்றிரவின் மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
  இப்பாரில் எனைஅழைத்து வலியவும்என் கரத்தே
  இனிதனித்த பெருங்கருணை இன்பமென்றன் மனமும்
  துப்பாய கண்களும்விட் டகலாதே இன்னும்
  தோன்றுகின்ற தாயினும்இத் துட்டநெஞ்சம் உருகா
  எப்பாவி நெஞ்சுமிதற் குருகல்அரி தலவே
  இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
 • 10. அம்மான்நின் அருட்சத்தி அருமைஒன்றும் அறியேன்
  அன்றிரவின் மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
  வெம்மாயை அகற்றிஎனை அருகழைத்தென் கரத்தே
  மிகஅளித்த பெருங்கருணை விளக்கம்என்றன் மனமும்
  மைம்மாழை விழிகளும்விட் டகலாதே இன்னும்
  வதிகின்ற தாயினும்என் வஞ்சநெஞ்சம் உருகா
  எம்மாய நெஞ்சும்இதற் குருகல்அரி தலவே
  இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.

  • 188. வாள் - ஒளி, பட்டயம். ச.மு.க.

பக்தி மாலை // பத்தி மாலை