திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
ஆனந்தானுபவம்
āṉantāṉupavam
அந்தோ பத்து
antō pattu
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

070. சிவபுண்ணியப் பேறு
sivapuṇṇiyap pēṟu

    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. மாலிலே மயங்கி மண்ணிலே அநித்த
    வாழ்விலே வரவிலே மலஞ்சார்
    தோலிலே ஆசை வைத்துவீண் பொழுது
    தொலைக்கின்றார் தொலைக்கநான் உனது
    காலிலே ஆசை வைத்தனன் நீயும்
    கனவினும் நனவினும் எனைநின்
    பாலிலே வைத்தாய் எனக்கிது போதும்
    பண்ணிய தவம்பலித் ததுவே.
  • 2. மதத்திலே சமய வழக்கிலே மாயை
    மருட்டிலே இருட்டிலே மறவாக்
    கதத்திலே மனத்தை வைத்துவீண் பொழுது
    கழிக்கின்றார் கழிக்கநான் உன்பூம்
    பதத்திலே மனத்தை வைத்தனன் நீயும்
    பரிந்தெனை அழிவிலா நல்ல
    பதத்திலே வைத்தாய் எனக்கிது போதும்
    பண்ணிய தவம்பலித் ததுவே.
  • 3. குலத்திலே சமயக் குழியிலே நரகக்
    குழியிலே குமைந்துவீண் பொழுது
    நிலத்திலே போக்கி மயங்கிஏ மாந்து
    நிற்கின்றார் நிற்கநான் உவந்து
    வலத்திலே நினது வசத்திலே நின்றேன்
    மகிழ்ந்துநீ என்உளம் எனும்அம்
    பலத்திலே நின்றாய் எனக்கிது போதும்
    பண்ணிய தவம்பலித் ததுவே.
  • 4. கூடவும் பின்னே பிரியவும் சார்ந்த
    கொழுநரும் மகளிரும் நாண
    நீடஎன் உளத்தே கலந்துகொண் டென்றும்
    நீங்கிடா திருந்துநீ என்னோ
    டாடவும் எல்லாம் வல்லசித் தியைப்பெற்
    றறிவுரு வாகிநான் உனையே
    பாடவும் பெற்றேன் எனக்கிது போதும்
    பண்ணிய தவம்பலித் ததுவே.
  • 5. உயத்திடம் அறியா திறந்தவர் தமைஇவ்
    வுலகிலே உயிர்பெற்று மீட்டும்
    நயத்தொடு வருவித் திடும்ஒரு ஞான
    நாட்டமும் கற்பகோ டியினும்
    வயத்தொடு சாகா வரமும்என் தனக்கே
    வழங்கிடப் பெற்றனன் மரண
    பயத்தைவிட் டொழித்தேன் எனக்கிது போதும்
    பண்ணிய தவம்பலித் ததுவே.
  • 6. நாடல்செய் கின்றேன் அருட்பெருஞ் சோதி
    நாதனை என்உளே கண்டு
    கூடல்செய் கின்றேன் எண்ணிய எல்லாம்
    கூடிடக் குலவிஇன் புருவாய்
    ஆடல்செய் கின்றேன் சித்தெலாம் வல்லான்
    அம்பலம் தன்னையே குறித்துப்
    பாடல்செய் கின்றேன் எனக்கிது போதும்
    பண்ணிய தவம்பலித் ததுவே.
  • 7. துதிபெறும் அயனோ டரிஅரன் முதலோர்
    சூழ்ந்துசூழ்ந் திளைத்தொரு தங்கள்
    விதியைநொந் தின்னும் விழித்திருக் கின்றார்
    விழித்திருந் திடவும்நோ வாமே
    மதியிலேன் அருளால் சுத்தசன் மார்க்க
    மன்றிலே வயங்கிய தலைமைப்
    பதிபதம் பெற்றேன் எனக்கிது போதும்
    பண்ணிய தவம்பலித் ததுவே.
  • 8. புரிசைவான் உலகில் பூவுல கெல்லாம்
    புண்ணிய உலகமாய்ப் பொலிந்தே
    கரிசெலாம் தவிர்ந்து களிப்பெலாம் அடைந்து
    கருத்தொடு வாழவும் கருத்தில்
    துரிசெலாம் தவிர்க்கும் சுத்தசன் மார்க்கம்
    துலங்கவும் திருவருட் சோதிப்
    பரிசெலாம் பெற்றேன் எனக்கிது போதும்
    பண்ணிய தவம்பலித் ததுவே.
  • 9. வேதமே விளங்க மெய்ம்மையே வயங்க
    வெம்மையே நீங்கிட விமல
    வாதமே வழங்க வானமே முழங்க
    வையமே உய்யஓர் பரம
    நாதமே தொனிக்க ஞானமே வடிவாய்
    நன்மணி மன்றிலே நடிக்கும்
    பாதமே பிடித்தேன் எனக்கிது போதும்
    பண்ணிய தவம்பலித் ததுவே.
  • 10. கட்டமும் கழன்றேன் கவலைவிட் டொழித்தேன்
    கலக்கமும் தீர்ந்தனன் பிறவிச்
    சட்டமும் கிழித்தேன் தூக்கமும் துறந்தேன்
    சாவையும் நோவையும் தவிர்ந்தேன்
    சிட்டமும் அடைந்தேன் சிற்சபை உடையான்
    செல்வமெய்ப் பிள்ளைஎன் றொருபேர்ப்
    பட்டமும் தரித்தேன் எனக்கிது போதும்
    பண்ணிய தவம்பலித் ததுவே.

சிவபுண்ணியப் பேறு // சிவபுண்ணியப் பேறு

No audios found!