திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
பிரிவாற்றாமை
pirivāṟṟāmai
சிவபுண்ணியப் பேறு
sivapuṇṇiyap pēṟu
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

069. ஆனந்தானுபவம்
āṉantāṉupavam

  நேரிசை வெண்பா
  திருச்சிற்றம்பலம்
 • 1. கள்ளத்தை எல்லாம் கடக்கவிட்டேன் நின்அருளாம்
  வெள்ளத்தை எல்லாம் மிகஉண்டேன் - உள்ளத்தே
  காணாத காட்சிஎலாம் காண்கின்றேன் ஓங்குமன்ற
  வாணா நினக்கடிமை வாய்த்து.
 • 2. காலையிலே நின்றன்னைக் கண்டுகொண்டேன் சன்மார்க்கச்
  சாலையிலே இன்பம் தழைக்கின்றேன் - ஞாலமிசைச்
  சாகா வரம்பெற்றேன் தத்துவத்தின் மேல்நடிக்கும்
  ஏகா நினக்கடிமை ஏற்று.
 • 3. மூவர்களும் செய்ய முடியா முடிபெல்லாம்
  யாவர்களுங் காண எனக்களித்தாய் - மேவுகடை
  நாய்க்குத் தவிசளித்து நன்முடியும் சூட்டுதல்எந்
  தாய்க்குத் தனிஇயற்கை தான்.
 • 4. கொள்ளைஎன இன்பம் கொடுத்தாய் நினதுசெல்வப்
  பிள்ளைஎன எற்குப் பெயரிட்டாய் - தெள்ளமுதம்
  தந்தாய் சமரசசன் மார்க்கசங்கத் தேவைத்தாய்
  எந்தாய் கருணை இது.
 • 5. கண்டேன் களித்தேன் கருணைத் திருஅமுதம்
  உண்டேன் உயர்நிலைமேல் ஓங்குகின்றேன் - கொண்டேன்
  அழியாத் திருஉருவம் அச்சோஎஞ் ஞான்றும்
  அழியாச்சிற் றம்பலத்தே யான்.
 • 6. பார்த்தேன் பணிந்தேன் பழிச்சினேன் மெய்ப்புளகம்
  போர்த்தேன்என் உள்ளமெலாம் பூரித்தேன் - ஆர்த்தேநின்
  றாடுகின்றேன் பாடுகின்றேன் அன்புருவா னேன்அருளை
  நாடுகின்றேன் சிற்சபையை நான்.
 • 7. எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான்
  உண்ணுகின்றேன் உண்ணஉண்ண ஊட்டுகின்றான் - நண்ணுதிருச்
  சிற்றம் பலத்தே திருநடஞ்செய் கின்றான்என்
  குற்றம் பலபொறுத்துக் கொண்டு.
 • 8. கொண்டான் அடிமை குறியான் பிழைஒன்றும்
  கண்டான்265 களித்தான் கலந்திருந்தான் - பண்டாய
  நான்மறையும் ஆகமமும் நாடுந் திருப்பொதுவில்
  வான்மயத்தான் என்னை மகிழ்ந்து.
 • 9. கண்டேன் களித்தேன் கருணைத் திருஅமுதம்
  உண்டேன் அழியா உரம்266 பெற்றேன் - பண்டே
  எனைஉவந்து கொண்டான் எழில்ஞான மன்றம்
  தனைஉவந்து கொண்டான் தனை.
 • 10. தாதையாம் என்னுடைய தாயாம்என் சற்குருவாம்
  மேதையாம் இன்ப விளைவுமாம் - ஓது
  குணவாளன் தில்லைஅருட் கூத்தன் உமையாள்
  மணவாளன் பாத மலர்.
 • 11. திருவாம்என் தெய்வமாம் தெள்ளமுத ஞானக்
  குருவாம் எனைக்காக்கும் கோவாம் - பருவரையின்
  தேப்பிள்ளை யாம்எம் சிவகாம வல்லிமகிழ்
  மாப்பிள்ளை பாத மலர்.
 • 12. என்அறிவாம் என்அறிவின் இன்பமாம் என்னறிவின்
  தன்அறிவாம் உண்மைத் தனிநிலையாம் - மன்னுகொடிச்
  சேலைஇட்டான் வாழச் சிவகாம சுந்தரியை
  மாலைஇட்டான் பாதமலர்.

  • 264. ஓங்குமறை - படிவேறுபாடு. ஆ. பா.
  • 265. கண்டே - முதற்பதிப்பு. பி. இரா.
  • 266. வரம் - படிவேறுபாடு. ஆ. பா.

ஆனந்தானுபவம் // ஆனந்தானுபவம்

No audios found!