திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
நாள்எண்ணி வருந்தல்
nāḷeṇṇi varuntal
பவனிச் செருக்கு
pavaṉich serukku
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

042. ஏத்தாப் பிறவி இழிவு
ēttāp piṟavi iḻivu

  எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  திருச்சிற்றம்பலம்
 • 1. கல்லை ஒத்தஎன் நெஞ்சினை உருக்கேன்
  கடவுள் நின்அடி கண்டிட விழையேன்
  அல்லை ஒத்தகோ தையர்க்குளங் குழைவேன்
  அன்பி லாரொடும் அமர்ந்தவம் உழல்வேன்
  தில்லை அப்பன்என் றுலகெடுத் தேத்தும்
  சிவபி ரான்தருஞ் செல்வநின் தணிகை
  எல்லை உற்றுனை ஏத்திநின் றாடேன்
  என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
 • 2. மையல் நெஞ்சினேன் மதிசிறி தில்லேன்
  மாத ரார்முலை மலைஇவர்ந் துருள்வேன்
  ஐய நின்திரு அடித்துணை மறவா
  அன்பர் தங்களை அடுத்துளம் மகிழேன்
  உய்ய நின்திருத் தணிகையை அடையேன்
  உடைய நாயகன் உதவிய பேறே
  எய்ய இவ்வெறும் வாழ்க்கையில் உழல்வேன்
  என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
 • 3. புலைய மாதர்தம் போகத்தை விழைந்தேன்
  புன்மை யாவைக்கும் புகலிடம் ஆனேன்
  நிலைய மாம்திருத் தணிகையை அடையேன்
  நிருத்தன் ஈன்றருள் நின்மலக் கொழுந்தே
  விலையி லாதநின் திருவருள் விழையேன்
  வீணர் தங்களை விரும்பிநின் றலைந்தேன்
  இலைஎ னாதணு வளவும் ஒன்றீயேன்
  என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
 • 4. மருட்டு மங்கையர் புழுக்குழி ஆழ்ந்து
  வருந்தி நாள்தொறும் மனம்இளைக் கின்றேன்
  தெருட்டும் நின்திருத் தணிகையை அடையேன்
  சிவபி ரான்பெற்ற செல்வமே நினது
  அருட்டி றத்தினை நினைந்துநெக் குருகி
  அழுது கண்கள்நீர் ஆர்ந்திட நில்லேன்
  இருட்டு வாழ்க்கையில் இடறிவீழ் கின்றேன்
  என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
 • 5. நச்சி லேபழ கியகருங் கண்ணார்
  நலத்தை வேட்டுநற் புலத்தினை இழந்தேன்
  பிச்சி லேமிக மயங்கிய மனத்தேன்
  பேதை யேன்கொடும் பேயனேன் பொய்யேன்
  சச்சி12 லேசிவன் அளித்திடும் மணியே
  தங்கமே உன்றன் தணிகையை விழையேன்
  எச்சி லேவிழைந் திடர்உறு கின்றேன்
  என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
 • 6. மின்னை அன்னநுண் இடைஇள மடவார்
  வெய்ய நீர்க்குழி விழுந்திளைத் துழன்றேன்
  புன்னை யஞ்சடை முன்னவன் அளித்த
  பொன்னை அன்னநின் பூங்கழல் புகழேன்
  அன்னை என்னநல் அருள்தரும் தணிகை
  அடைந்து நின்றுநெஞ் சகம்மகிழ்ந் தாடேன்
  என்னை என்னைஇங் கென்செயல் அந்தோ
  என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
 • 7. பட்டி மாடெனத் திரிதரும் மடவார்
  பாழ்ங்கு ழிக்குள்வீழ்ந் தாழ்ந்திளைக் கின்றேன்
  தட்டி லார்புகழ் தணிகையை அடையேன்
  சம்பு என்னும்ஓர் தருஒளிர் கனியே
  ஒட்டி லேன்நினை உளத்திடை நினையேன்
  உதவு றாதுநச் சுறுமரம் ஆனேன்
  எட்டி என்முனம் இனிப்புறும் அந்தோ
  என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
 • 8. ஓங்கி நீண்டவாள் உறழ்கருங் கண்ணார்
  உவர்ப்புக் கேணியில் உழைத்தகம் இளைத்தேன்
  வீங்கி நீண்டதோர் ஓதிஎன நின்றேன்
  விழலுக் கேஇறைத் தலைந்தனன் வீணே
  தாங்கி னேன்உடற் சுமைதனைச் சிவனார்
  தனய நின்திருத் தணிகையை அடையேன்
  ஏங்கி னேன்சுழற் படுதுரும் பெனவே
  என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
 • 9. பண்அ ளாவிய மொழியினால் மயக்கும்
  படிற்று மங்கையர் பால்விழை வுற்றேன்
  தண்அ ளாவிய சோலைசூழ் தணிகைத்
  தடத்த ளாவிய தருமநல் தேவே
  பெண்அ ளாவிய புடையுடைப் பெருமான்
  பெற்ற செல்வமே அற்றவர்க் கமுதே
  எண்அ ளாவிய வஞ்சக நெஞ்சோ
  டென்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
 • 10. கான்அ றாஅள கத்தியர் அளக்கர்
  காமத் தாழ்ந்தகங் கலங்குற நின்றேன்
  வான மேவுறும் பொழில்திருத் தணிகை
  மலையை நாடிநின் மலர்ப்பதம் புகழேன்
  ஞான நாயகி ஒருபுடை அமர்ந்த
  நம்ப னார்க்கொரு நல்தவப் பேறே
  ஈனன் ஆகிஇங் கிடர்ப்படு கின்றேன்
  என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.

  • 12. வித்து - விச்சு, என்றாற்போல, சத்து - சச்சு எனப் போலியாயிற்று. தொ.வே.

ஏத்தாப் பிறவி இழிவு // ஏத்தாப் பிறவி இழிவு