திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
திருவருட் பேற்று விழைவு
tiruvaruṭ pēṟṟu viḻaivu
செவி அறிவுறுத்தல்
sevi aṟivuṟuttal
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

046. செல்வச் சீர்த்தி மாலை
selvach sīrtti mālai

  பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  திருச்சிற்றம்பலம்
 • 1. அடியார்க் கெளியர் எனும்முக்கன் ஐயர் தமக்கும் உலகீன்ற
  அம்மை தனக்கும் திருவாய்முத் தளித்துக் களிக்கும் அருமருந்தே
  கடியார் கடப்ப மலர்மலர்ந்த கருணைப் பொருப்பே கற்பகமே
  கண்ணுள் மணியே அன்பர்மனக் கமலம் விரிக்கும் கதிரொளியே
  படியார் வளிவான் தீமுதல்ஐம் பகுதி யாய பரம்பொருளே
  பகர்தற் கரிய மெய்ஞ்ஞானப் பாகே அசுரப் படைமுழுதும்
  தடிவாய் என்னச் சுரர்வேண்டத் தடிந்த வேற்கைத் தனிமுதலே
  தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
 • 2. காயா தளியக் கனிந்தன்பால் கல்லால் அடிநின் றருள்ஒழுகும்
  கனியுட் சுவையே அடியர்மனக் கவலை அகற்றும் கற்பகமே
  ஓயா துயிர்க்குள் ஒளித்தெவையும் உணர்த்தி அருளும் ஒன்றேஎன்
  உள்ளக் களிப்பே ஐம்பொறியும் ஒடுக்கும் பெரியோர்க் கோர்உறவே
  தேயாக் கருணைப் பாற்கடலே தெளியா அசுரப் போர்க்கடலே
  தெய்வப் பதியே முதற்கதியே திருச்செந் தூரில் திகழ்மதியே
  தாயாய் என்னைக் காக்கவரும் தனியே பரம சற்குருவே
  தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
 • 3. நாணும் அயன்மால் இந்திரன்பொன் நாட்டுப் புலவர் மணம்வேட்ட
  நங்கை மார்கள் மங்கலப்பொன் நாண்காத் தளித்த நாயகமே
  சேணும் புவியும் பாதலமும் தித்தித் தொழுகும் செந்தேனே
  செஞ்சொற் சுவையே பொருட்சுவையே சிவன்கைப் பொருளே செங்கழுநீர்ப்
  பூணும் தடந்தோட்பெருந் தகையே பொய்யர் அறியாப் புண்ணியமே
  போகங் கடந்த யோகியர்முப் போகம் விளைக்கும் பொற்புலமே
  தாணு என்ன உலகமெலாம் தாங்கும் தலைமைத் தயாநிதியே
  தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
 • 4. முன்னைப் பொருட்கு முதற்பொருளே முடியா தோங்கும் முதுமறையே
  முக்கட் கரும்பீன் றெடுத்தமுழு முத்தே முதிர்ந்த முக்கனியே
  பொன்னைப் புயங்கொண் டவன்போற்றும் பொன்னே புனித பூரணமே
  போத மணக்கும் புதுமலரே புலவர் எவரும் புகும்பதியே
  மின்னைப் பொருவும் உலகமயல் வெறுத்தோர் உள்ள விளக்கொளியே
  மேலும் கீழும் நடுவும்என விளங்கி நிறைந்த மெய்த்தேவே
  தன்னைப் பொருவும் சிவயோகம் தன்னை உடையோர் தம்பயனே
  தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
 • 5. பித்தப் பெருமான் சிவபெருமான் பெரிய பெருமான் தனக்கருமைப்
  பிள்ளைப் பெருமான் எனப்புலவர் பேசிக் களிக்கும் பெருவாழ்வே
  மத்தப் பெருமால் நீக்கும்ஒரு மருந்தே எல்லாம் வல்லோனே
  வஞ்சச் சமண வல்இருளை மாய்க்கும் ஞான மணிச்சுடரே
  அத்தக் கமலத் தயிற்படைகொள் அரசே மூவர்க் கருள்செய்தே
  ஆக்கல் அளித்தல் அழித்தல்எனும் அம்முத் தொழிலும் தருவோனே
  சத்த உலக சராசரமும் தாளில் ஒடுக்கும் தனிப்பொருளே
  தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
 • 6. ஏதம் அகற்றும் என்அரசே என்ஆ ருயிரே என்அறிவே
  என்கண் ஒளியே என்பொருளே என்சற் குருவே என்தாயே
  காத மணக்கும் மலர்கடப்பங் கண்ணிப் புயனே காங்கெயனே
  கருணைக் கடலே பன்னிருகண் கரும்பே இருவர் காதலனே
  சீத மதியை முடித்தசடைச் சிவனார் செல்வத் திருமகனே
  திருமா லுடன்நான் முகன்மகவான் தேடிப் பணியும் சீமானே
  சாதல் பிறத்தல் தவிர்த்தருளும் சரணாம் புயனே சத்தியனே
  தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
 • 7. வன்பிற் பொதிந்த மனத்தினர்பால் வருந்தி உழல்வேன் அல்லால்உன்
  மலர்த்தாள் நினையேன் என்னேஇம் மதியி லேனும் உய்வேனோ
  அன்பிற் கிரங்கி விடமுண்டோன் அருமை மகனே ஆரமுதே
  அகிலம் படைத்தோன் காத்தோன்நின் றழித்தோன் ஏத்த அளித்தோனே
  துன்பிற் கிடனாம் வன்பிறப்பைத் தொலைக்கும் துணையே சுகோதயமே
  தோகை மயில்மேல் தோன்றுபெருஞ்சுடரே இடராற் சோர்வுற்றே
  தன்பிற் படும்அச் சுரர்ஆவி தரிக்க வேலைத் தரித்தோனே
  தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
 • 8. மாலும் அயனும் உருத்திரனும் வானத் தவரும் மானிடரும்
  மாவும் புள்ளும் ஊர்வனவும் மலையும் கடலும் மற்றவையும்
  ஆலும் கதியும் சதகோடி அண்டப் பரப்புந் தானாக
  அன்றோர் வடிவம் மேருவிற்கொண் டருளுந் தூய அற்புதமே
  வேலும் மயிலும் கொண்டுருவாய் விளையாட் டியற்றும் வித்தகமே
  வேதப் பொருளே மதிச்சடைசேர் விமலன் தனக்கோர் மெய்ப்பொருளே
  சாலும் சுகுணத் திருமலையே தவத்தோர் புகழும் தற்பரனே
  தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
 • 9. ஏதம் நிறுத்தும் இவ்வுலகத் தியல்பின் வாழ்க்கை யிடத்தெளியேன்
  எண்ணி அடங்காப் பெருந்துயர்கொண் டெந்தாய் அந்தோ இளைக்கின்றேன்
  வேதம் நிறுத்தும் நின்கமல மென்தாள் துணையே துணைஅல்லால்
  வேறொன் றறியேன் அஃதறிந்திவ் வினையேற் கருள வேண்டாவோ
  போத நிறுத்தும் சற்குருவே புனித ஞானத் தறிவுருவே
  பொய்யர் அறியாப் பரவெளியே புரம்மூன் றெரித்தோன் தரும்ஒளியே
  சாதல் நிறுத்தும் அவருள்ளத் தலம்தாள் நிறுத்தும் தயாநிதியே
  தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
 • 10. முருகா எனநின் றேத்தாத மூட ரிடம்போய் மதிமயங்கி
  முன்னும் மடவார் முலைமுகட்டின் முயங்கி அலைந்தே நினைமறந்தேன்
  உருகா வஞ்ச மனத்தேனை உருத்தீர்த் தியமன் ஒருபாசத்
  துடலும் நடுங்க விசிக்கில்அவர்க் குரைப்ப தறியேன் உத்தமனே
  பருகா துள்ளத் தினித்திருக்கும் பாலே தேனே பகர்அருட்செம்
  பாகே தோகை மயில்நடத்தும் பரமே யாவும் படைத்தோனே
  தருகா தலித்தோன் முடிகொடுத்த தரும துரையே தற்பரனே
  தணிகா சலமாந் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.

செல்வச் சீர்த்தி மாலை // செல்வச் சீர்த்தி மாலை