6. நாயேன் துன்பக் கடல்வீழ்ந்து நலிதல் அழகோ நல்லோர்க்கிங்
கீயேன் ஒன்றும் இல்லேன்நான் என்செய் கேனோ என்னுடைய
தாயே அனையாய் சிறிதென்மேல் தயவு புரிந்தால் ஆகாதோ
சேயேன் தன்னை விடுப்பாயோ விடுத்தால் உலகஞ் சிரியாதோ.
7. சிரிப்பார் நின்பேர் அருள்பெற்றோர் சிவனே சிவனே சிவனேயோ
விரிப்பார் பழிச்சொல் அன்றிஎனை விட்டால் வெள்ளை விடையோனே
தரிப்பாய் இவனை அருளிடத்தே என்று நின்று தகும்வண்ணம்
தெரிப்பார் நினக்கும் எவர்கண்டாய் தேவர் தேடற் கரியானே.
8. அரிய பெருமான் எளியோமை ஆளும் பெருமான் யாவர்கட்கும்
பெரிய பெருமான் சிவபெருமான் பித்தப் பெருமான் என்றுன்னை
உரிய பெருமா தவர்பழிச்சல் உண்மை எனில்என் உடையானே
கரிய பெருமால் உடையேற்கும் அருளல் உன்றன் கடன்அன்றே.
9. அன்றும் சிறியேன் அறிவறியேன் அதுநீ அறிந்தும் அருள்செய்தாய்
இன்றும் சிறியேன் அறிவறியேன் இதுநீ அறிந்தும் அருளாயேல்
என்றும் ஒருதன் மையன்எங்கள் இறைவன் எனமா மறைகள்எலாம்
தொன்று மொழிந்த தூமொழிதான் சூது மொழியோ சொல்லாயே.